முதல் பக்கம் » சினிமா » திரை விமர்சனம் » ஜெயம் கொண்டான்

Jeyam Kondaan Movie Review

ஜெயம் கொண்டான்

-

Jeyam Kondaan

Tamil Movie - Jeyam Kondaan Review - Santhanam, Vinay, Vivek, Bhavana, Lekha Washington, Balasubramaniam, Pattukkottai Prabakar, R. Kannan, V.T. Vijayan, Yugabarathi, Vidyasagar, T.G. Thyagarajan,  Tamil Movie Actor, Actress

ஒரு நல்ல திரைக்தையை கொடுத்ததற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள். பின்னே, நம்ம இயக்குனர் மணிரத்தினத்தோட சிஷ்யனாச்சே...! இந்தளவுக்கு கூட இல்லாமல் இருந்தால் எப்படி.

லண்டனில் என்ஜீனியராக வேலை பார்க்கிறார் வினய். இவரது ஒரே சொந்தமான அப்பாவும் இறந்து போக சென்னை வருகிறார். இதுவரை சம்பாதித்து வைத்த பணத்தை வைத்து கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் பெரிய இடத்தை அடையவேண்டும் என்று விரும்புகிறார். அதற்கான முதலீட்டுக்காக மதுரையில் உள்ள தனது வீட்டை விற்க முடிவு செய்கிறார். அங்கே ஆரம்பிக்கிறது பிரச்சனை.

காரணம், அந்த வீட்டில் லேகா வாஷிங்டன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். விசாரித்தால், அவர் வினயின் தங்கை என்பதும், வினய்க்கு தெரியாமலே அவரது தந்தை இன்னொரு குடும்பம் நடத்தி வந்ததும் தெரிய வருகிறது.

இதனால் வீட்டை விற்க முடியாமல் போகிறது. ஆனால் மதுரையின் பிரபல தாதா துணையுடன் அதே வீட்டை விற்க முயல்கிறார் லேகா. அப்போது ஏற்படும் மோதலில் தாதாவின் மனைவி கொல்லப்படுகிறார்.

கோபம் அடைந்த தாதா, வினய்யை பழிவாங்கப் புறப்படுகிறார். இடையில் பாவனாவுடன் காதல் வேறு. ஒரு பக்கம் வில்லன், மறு பக்கம் தங்கையுடனான சொத்து பிரச்சனை இறுதியில் யாருக்கு ஜெயம் கிட்டியது என்பதை மீதிக் கதையில் காண்க. எதார்த்தமான நடிப்பில் ஆக்ஷனையும் வெளிப்படுத்தியிருக்கிறார் வினய். வில்லனுக்கு எதிராக முஷ்டி மடக்கும் கதாநாயகர்களிடமிருந்து விலகி நிற்கும் திறமையும் இவரிடம் இருக்கவே செய்கிறது. பல்வேறு இன்னல்களில் சிக்கித் தவிக்கும் வினய் நம்மையும் சேர்ந்து உருக வைக்கிறார். வேறு சில சமயங்களில் குழந்தை பருவத்து தோழியான பாவனாவுடன் உண்டாகும் காதல் உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்துகிறார்.

ஜாலியாக வந்து செல்கிறார் பாவனா. வினயுடன் இவரது காதல் காட்சிகள் ரசனை. இவரது தங்கையாக வரும் சரண்யா மோகனும், பாவனாவும் ஆடும் அந்த பாடல் காட்சி, அழகான கவிதை.

படம் முழுக்க கோபமாகவே வரும் லேகா வாஷிங்டனுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அம்மாவின் சடலம் பார்த்து அழாமல், பிரிதொரு முறை தனியாக அமர்ந்து அழும்போது மனதை பிழிகிறார். தன் மனசை மாற்ற வரும் பாவனாவை, அப்படியே வினய்க்கு எதிராக திருப்பி விடுவது ம்... பலே!  அதிரடியாக வந்து அலட்டிக் கொள்ளாமல் சைலண்ட் வில்லனாக வரும் கிஷோர் போன்றவர்களையும் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். விவேக்கின் பழைய பஞ்சாங்கம் இந்தப் படத்தில் இல்லையென்றாலும், சந்தானத்தின் காமெடியே சிரிக்க வைக்கிறது.

பணம் சம்பாதிப்பதற்காக வேறு தேசங்களுக்கு செல்லும் இளைஞர்கள், சொந்த தகப்பன் இறப்புக்குக் கூட வரமுடியாமல் போகும் சோகத்தை வினய் பிரதிபலிக்கும்போது பொறுக்க முடியவில்லை.

தெளிவான காட்சிகளுக்கு பாலசுப்ரமணியத்தின் துல்லியமான ஒளிப்பதிவே காரணம். வித்யாசாகரின் இசையில் "நான் வரைந்து வைத்த ஓவியம்..." பாடலும் யுகபாரதியின் வரிகளும் நம்மை கவர்கின்றன. வி.டி.விஜயனின் சிறப்பான படத்தொகுப்பும் படத்திற்கு பலம். பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனத்தில் உண்மையை உணர்த்தியதற்காக பாராட்டுக்கள்.

இப்படி அத்தனை பாராட்டுக்களுக்கும் சொந்தக்காரரான இயக்குனர் ஆர். கண்ணனுக்கு மேலும் மேலும் ஜெயம் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை... 

நடிப்பு : வினய், பாவனா, லேகா வாஷிங்டன், விவேக், சந்தானம் மற்றும் பலர்
இசை : வித்யாசாகர்
தயாரிப்பு : டி.ஜி.தியாகராஜன்
இயக்கம் : ஆர்.கண்ணன்
Site Meter