முதல் பக்கம் » சினிமா » திரை விமர்சனம் » தாம் தூம்

Dham Dhoom Movie Review

தாம் தூம்

-

Dham Dhoom

Tamil Movie - Dham Dhoom Review - Jayam Ravi, Jayaram, Nizhalgal Ravi, Anu Hassan, Kangana Ranaut, Lakshmi Rai, Thotta Dharani, Jeeva, S. Ramakrishnan, G. K. Manikandan, Jeeva, V.T. Vijayan, Harris Jayaraj, Dr. Murali Manohar, Sunanda Murali Manohar,  Tamil Movie Actor, Actress

 ஜீவா ஆரம்பித்து வைத்த இந்தப் படம் முடிக்கும் முன்னரே அவர் வாழ்வு முடிந்துவிட்டதால், அவரது உதவி இயக்குனர் மணிகண்டன் படத்தை நிறைவு செய்திருக்கிறார். ஜீவா நினைத்த மாதிரி படம் வந்திருக்கிறதா என்றால்...? படத்தை பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

மருத்துவராக வரும் ஜெயம் ரவி பொள்ளாச்சியில் இருக்கும் தன் அக்காவைப் பார்க்க வருகிறார். வந்த இடத்தில் பாவாடை தாவணியில் அழகாய் சுற்றித் திரியும் கங்கனா ரணவத்தைச் சந்திக்கிறார். சந்திச்சாச்சுல... அப்புறம் காதல்தான். காதல்னா போராட்டம் இருக்கத்தானே செய்யும். பல போராட்டங்களுக்குப் பின் அந்தக் காதல் நிச்சயதார்த்தத்தில் முடிகிறது.

இரண்டு வாரத்தில் திரும்பி வந்ததும் திருமணம் என்ற கனவோடு, மருத்துவ பயிற்சிக்காக ரஷ்யா செல்கிறார் ரவி. ஆனால், கனவைக் கலைக்கும் வகையில் கொலை வழக்கில் சிக்கி விடுகிறார். தான் நிரபராதி என நிரூபிக்க சந்தர்ப்பம் கிடைக்காததால் போலீஸிடமிருந்து தப்பிக்கிறார். ஒரு பக்கம் ரஷ்ய தாதாக்களின் துரத்தல், இன்னொரு பக்கம் போலீஸ் என ஓடிக் கொண்டே இருக்கும் ரவியின் நிலையை சுபத்துடன் முடிக்கிறார்கள் கிளைமாக்ஸில்...

சும்மா சொல்லக்கூடாதுங்க படத்திற்கு கூடுதல் அழகு சேர்த்திருப்பது நம்ம ஹீரோதான். அதிலும் ரஷ்ய காட்சியில் கோட், சூட்டில் வந்து அழகாக ஜொலிக்கிறார். சண்டைக்காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் வேகம், அசத்தல்! காதல் காட்சியிலும் விளையாண்டிருக்கிறார்.

கிராமத்து பெண்ணாக வரும் கங்கனாவின் கேரக்டர் அவ்வளவாக பொருந்தவில்லை. ஏதோ, நடித்திருக்கிறார். ஜெயம்ரவிக்கு உதவி செய்யும் ரஷ்ய அரசு வக்கீலாக வரும் லஷ்மிராய்க்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவருக்குள் இருக்கும் திறமைகளை இதுவரை யாரும் பயன்படுத்தவில்லை ஏனோ?

முதல் முறையாக வில்லன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜெயராம். இவர்தான் வில்லன் என்பது முன்னரே அனைவருக்கும் தெரிந்துவிட்டதால் அவரது கதாபாத்திரத்தில் அவ்வளவாக எதிர்பார்ப்பு இல்லாமல் போய் விடுகிறது.

இந்திய தூதரக அதிகாரியாக வரும் ஜெயராம், ரவியை கொல்ல வேண்டியதன் அவசியம்? வீட்டிற்கு தகவல் சொல்ல நினைக்கும் ஹீரோ, போலீஸிடமிருந்து தப்பித்தப் பிறகு அதை மறந்து போவது? குண்டடிப்பட்ட நிலையில் பைக்கில் கையை விரித்து காதலியின் நினைவில் மிதப்பது.... போன்ற எதார்த்தமற்ற காட்சியும், சிந்தனையும் படத்தின் பலம் குறைய காரணமாய் இருக்கிறது.

இந்தக் குறைகளையெல்லாம் மறைக்கும் விதமாக, காதிற்கு இனிமையான இசையையும், கண்களுக்கு அழகான காட்சிகளையும் தந்து ரசிகர்களை திருப்தி படுத்தியிருக்கிறார்கள் ஜீவாவும், ஹாரிஸ் ஜெயராஜும்.... ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அன்பே அன்பே... பாடல் அற்புதம். அதைப் படமாக்கியிருக்கும் விதமும் கவிதை. கூக் மலைப் பகுதியின் மொத்த அழகையும் தன் காமிராவுக்குள் அடைத்துக் கொண்டு வந்திருக்கிறார் ஜீவா.

தாம் தூம் - ரசிக்கலாம்...

நடிப்பு : ஜெயம் ரவி, கங்கணா ரணாவத், லட்சுமி ராய், ஜெயராம் மற்றும் பலர்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பு : சுனந்தா முரளி மனோகர், டாக்டர் முரளி மனோகர்
இயக்கம் : ஜீவா, மணிகண்டன்
Site Meter