
ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண்ணாக ஹீரோயின் இப்படத்தில் நடித்திருப்பது கொஞ்சம் புதுமை... அப்போ படம் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்... படத்தை பார்த்துட்டு அத நீங்களே முடிவு பண்ணிக்கோங்க...
கல்லூரி மாணவர்கள் சிலர் தன்னுடன் பயிலும் மாணவிகளை கலாட்டா செய்ய அவர்களை போலீசில் பிடித்துக் கொடுக்கிறார் சட்டக்கல்லூரி மாணவியான ஹாசினி. இவரது துணிச்சல் என்ஜீனியர் மாணவர் விஷ்வாவுக்கு பிடித்துப்போக காதலிக்க ஆரம்பிக்கிறார்.
இருவருக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. இந்நிலையில் ஹாசினியால் ஜெயிலுக்குப்போன மாணவர்கள் அவளை பழிவாங்க திட்டமிடுகின்றனர். அதற்கான நேரமாக ஹாசினியின் திருமண நாள் வந்துவிட கடத்திச்சென்று பலாத்காரம் செய்துவிடுகின்றனர்.
இதனால் காதலனும் கைகழுவுகிறான். மனமுடைந்த பெற்றோரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நிர்கதியாக நிற்கும் அவள் தன் வாழ்வை கெடுத்தவர்களை பழி வாங்குகிறார். தன்னை வெறுத்த காதலனுக்கும் பாடம் கற்பித்துவிட்டு தூக்கு மேடைக்குச் செல்கிறார்.
ஆங்கிலபடத்திற்கு நிகராக கொலைகளுடன் ஆரம்பமாகிறது படம். அதேவேகம் தொடரும் என்றால் அதுதான் இல்லை. படம் செல்ல செல்ல வழக்கமான காலேஜ் காதல் போன்ற காட்சிகள் படத்திற்கு தடையாக நிற்கின்றன.
ஹீரோயினை மையமாக கொண்ட கதையில் புதுமுகம் ஹாசினி நடிப்பு எங்கே என்று கேட்க வைக்கிறார். அழுகைக்கும், சிரிப்புக்கும் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி நம்மையும் அழ வைக்கிறார். ஹீரோ விஷ்வா பரவாயில்லை.
புரட்சிகரமாக பேசும் நாயகியின் தந்தை தற்கொலை செய்வது, கொலையாளி பற்றின சஸ்பென்சை நீட்டாதது... நீளவசனங்கள் போன்றவற்றை சரி செய்யாதது படத்திற்கு தோல்விதான். புதுமுக இசை அமைப்பாளர் ஜே.கே.செல்வா பின்னணி இசை ஓ.கே. வித்யாசமான கதை என்பதற்காக அறிமுக இயக்குனர் ஜீன்ஸ் அவர்களை பாராட்டலாம்.