மாயாண்டி குடும்பத்தார்
(Mayandi Kudumbathar)
நடிப்பு : பொன்வண்ணன், சீமான், ஜெகன்னாத், தருண்கோபி, ரவி மரியா, நந்தா பெரியசாமி, சிங்கம்புலி மற்றும் பலர்
இசை : சபேஷ்முரளி
தயாரிப்பு : எஸ்.கே.செல்வகுமார்
இயக்கம் : ராசு மதுரவன்
குடும்பங்களில் அன்பின் அவசியத்தையும், கூடி வாழ்வதன் மேன்மையையும் சொல்லியிருக்கும் படம். அதை போதனையாகச் சொல்லாமல், வாழ்வியலாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராசு மதுரவன்.
மணிவண்ணனின் நான்கு மகன்களாக பொன்வண்ணன், சீமான், ஜெகன்னாத், தருண்கோபி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மணிவண்ணனின் மாப்பிள்ளையாக ராஜ்கபூர் வருகிறார். பரம்பரையாக குடும்பத்தில் எல்லோரும் படிக்காதவர்களாக இருக்க, தன் கடைசி மகன் தருண் கோபியைப் படிக்கவைத்து அழகு பார்க்கும் மணிவண்ணனன், அவர் மீது பாசத்தைக் கொட்டுகிறார். ஒரு கட்டத்தில் மணிவண்ணன் இறந்துபோகிறார். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தருண்கோபியின் நிலைமை என்ன? இறுதிவரை தன்னுடைய பிள்ளைகள் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழவேண்டும் என விருப்பப்பட்ட மாயாண்டி மணிவண்ணனின் கனவு நிறைவேறியதா? இல்லை, கானல் நீராகிப் போனதா? என்பதே க்ளைமாக்ஸ்.
அப்பா இறந்தபிறகு அண்ணிகள் குடும்பத்தை பிரிக்க, தனிமையும், வெறுமையும் தருண்கோபியை வாட்டுகிறது. இருந்தாலும் இதற்கெல்லாம் ஆறுதலாக இருக்கும் காதலி பூங்கொடியை மாற்றானின் மனைவியாக பார்க்க நேரிடும்போது, இடிந்துபோகிறார் தருண்கோபி.
இதோடு மணிவண்ணனின் அண்ணன் ஜி.எம்.குமாருக்கும், அவர் பிள்ளைகளுக்கும் மணிவண்ணன் குடும்பத்தை ஆகாதவர்களாக்கி "தேவர்மகன்" கதையை நினைவூட்டுகிறார்கள். அது கிராமத்து வாழ்க்கையின் குறியீடாகவும், ஆக்ஷன் தேவைகளுக்கான தீனியாகவும் அமைந்துவிடுகிறது. ஜி.எம்.குமார் வாரிசுகளாக ரவி மரியா, நந்தா பெரியசாமி, சிங்கம்புலி உள்ளிட்ட இயக்குநர்கள் வரிசைகட்ட, பத்து இயக்குநர்கள் நடிக்கும் முதல் படைப்பாகவும் பெருமை தேடிக்கொள்கிறது படம்.
தருண்கோபியின் மீதுதான் மொத்த கதையும் பயணிக்கிறது. ப்ளஸ் டூ வேஷம் பொருந்தவில்லை என்றாலும், சும்மாவே சோகத்தை காட்டும் முகம் என்பதால் அண்ணிகள் அவமானப்படுத்தும்போதும், காதலியை பிரியும் போதும் காட்சியோடு ஒன்றிப் போகிறது தருணின் நடிப்பு. அழுது அரற்றுவதிலும் ஆக்ஷனில் பாய்வதிலும் மேலும் தன் பங்கை நிறைவாக்கிக்கொள்கிறார் தருண் கோபி.
மணிவண்ணனும், ஜி.எம்.குமாரும் வாழ்ந்தேயிருக்கிறார்கள். மணிவண்ணனுக்கு இப்படம் ஒரு மைல் கல் என்பதில் சந்தேகமேயில்லை. பொன்வண்ணன், ராஜ்கபூருக்கும் நடிப்பு பயின்ற கலையாகியிருக்கிறது. சீமானின் நடிப்பு இதில் முழுமை பெற்றிருக்கிறது என்றால் அது மிகையல்ல. மேலும் அவரே எழுதி பாடிய பாடலிலும் முத்திரை பதிக்கிறார். "கள்ளக் காதலுக்குக்கூட உதவி கிடைச்சிடும், ஆனா உடன்பிறப்புகளுக்கு உதவறதுதான் கஷ்டம்..." என்று சொல்லுமிடத்திலும் நம்மை நெகிழ வைக்கிறார் சீமான். சபாஷ்!
பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் இராசு மதுரவனுக்கு டாக்டரேட் தரலாம். தருண்கோபிக்கு கறி சோறு இல்லை என்பது தெரிந்து அண்ணன்கள் பணம் கொடுத்து சாப்பிடச் சொல்வதும், பிரியாணி வாங்கித் தருவதும் சின்ன உதாரணம்.
வழக்கமான முரட்டுத்தனத்தில் ரவிமரியாவும், நடிப்பில் புது முகங்களான நந்தா பெரியசாமியும், ஜெகன்னாத்தும் பாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வாய் பொருந்திப் போயிருக்கிறார்கள். தாய்மாமனாக வரும் இளவரசுவும், குடிகார மயில்சாமியும் ரசிகர்களின் பாராட்டுக்குத் தப்பவில்லை. "நீ செத்துட்டா இந்த செருப்பு எனக்குதானப்பா...?" என்றபடி குழந்தைத்தனத்துடன் அமர்க்களப்படுத்தும் சிங்கம் புலி, க்ளைமாக்ஸில் ஜி.எம்.குமாரின் மனதை மாற்றுவதிலும பங்களித்து நெகிழவும் வைக்கிறார்.
சித்தப்பா மகன்களுடன் அண்ணன்கள் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க, ஒரு குச்சி ஐஸை சாப்பிட்டபடி அவர் பண்ணும் அலப்பரை தியேட்டரையே கலகலப்பூட்டுகிறது. "குழந்தை எப்படி பிறக்கும்?" என்னும் அவரது கேள்விக்கு விடை சொல்லத் தெரியாமல் முழிக்கும் காட்சிகளுக்காக சிங்கம்புலியை தாராளமாக பாராட்டலாம்.
தருண்கோபி காதலி பூங்கொடியின் கண்கள் செய்திகள் வாசிக்க, மணிவண்ணனின் மகளாகவும், மருமகள்களாகவும் வரும் பெண்களும் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறார்கள். சபேஷ்முரளியின் இசையில் நா.முத்துக்குமாரின் "முதல் மழையே", ஏக்நாத்தின் "பூங்கொடி" பாடல்கள் நெஞ்சை வருடுகின்றன. தானும் ஒரு கேரக்டராகவே மாறியிருக்கிறது பாலபரணியின் கேமிரா.
அளவுக்கதிகமான சோகமும், இரண்டாம்பாதியில் வரும் சில தொய்வலான காட்சியும், படத்தின் குறைகள் என்றாலும், ஒரு கிராமத்தையே நேரில் கண்ட உணர்வுதான் ஏற்படுகிறது நமக்கு. இப்படிப்பட்ட உணர்வுப்பிழம்பான படத்தில் ஒரு காட்சியிலாவது கண்கலங்காதவர்கள் வறண்ட உள்ளம் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்... ஏனென்றால், அந்தளவுக்கு மாயாண்டி குடும்பத்தார் நம்மை ஆட்கொண்டு விடுகிறார்கள்.









