
காலம் காலமாக பார்த்து வரும் ஒரே மாதிரி படங்களை காட்சிக்கு காட்சி கலாய்க்கும் படம்.
சினிமாபட்டி என்ற கிராமத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றி கொல்கின்றனர். காரணம், வளர்ந்து பெரியவனாகி சினிமாவில் நடிக்க போய்விடுகிறார்கள். அடுத்த முதல்வர் என அரசியலிலும் நுழைகிறார்கள். இதனால் தங்களது கிராமத்துக்கு அரசு எந்த உதவியும் செய்வதில்லை என்பதால் பஞ்சாயத்தில் எடுத்த தீர்மானத்தின்படி ஆண் சிசு கொலை நடக்கிறது. அந்த ஊர் மொக்கை பெரியார்தாசனுக்கு பிறக்கும் ஆண் குழந்தையை அவரே மருத்துவச்சி பரவை முனியம்மா மூலம் கள்ளிப்பால் கொடுத்து கொல்லச் சொல்லி அனுப்புகிறார். கொல்லை வழியாக குழந்தையை தூக்கிக் கொண்டு கூட்ஸ் வண்டியில் தப்பிக்கும் பரவை முனியம்மா, சென்னைக்கு வந்து ஒரு குடிசைப் பகுதியில் குழந்தையை வளர்க்கிறார்.
குழந்தை வளர்ந்து ஷிவாவாகிறார். அநீதிகளை தட்டிக்கேட்டு மக்கள் மத்தியில் ஹீரோவாகிறார். அவருக்கு கட்-அவுட் வைத்து அடுத்த முதல்வர் என்று கொண்டாடுகிறார்கள். வில்லன்களை தேடிப்பிடித்து தீர்த்து கட்டுகிறார்.
ஒரு கட்டத்தில் ஷிவா போலீஸ் அதிகாரி என்பதும், அவர் நடத்திய கொலைகள் திட்டமிட்ட எண்கவுண்டர் என்றும் தெரிய வருகிறது. ரவுடிகள் கும்பலின் தலைவனை ஷிவா அழிக்கப்போவதும், தலைவன் யார் என்பதும் எதிர்பாராத இறுதிக்காட்சி!
ஆண் குழந்தையை கள்ளிப்பால் ஊற்றி கொல்ல வேண்டும். இல்லாவிட்டால் விரல் நடிகர் படத்தை நூறு தடவை பார்க்க வேண்டும் என்று சொல்லும் நாட்டாமை பொன்னம்பலத்தின் ஆரம்பமே வெடிச் சிரிப்பு!
ஒரே சண்டை காட்சியில் சைக்கிள், பெடல் சுற்ற... வளர்ந்து ஆளாகும் ஷிவா, தன் கதாபாத்திரத்துக்கு அம்சமாகப் பொருந்திப் போயிருக்கிறார். "லாலாக்கு டோல் டப்பிமாவை" உச்சரிக்கும்போது அவர் காட்டும் உடல் மொழி... சான்ஸே இல்லை... சிரிப்பொலியில் திரையரங்கமே அதிர்கிறது. நாயகி திஷா பாண்டேவுடன் ஷிவாவுக்கு காதல் மலர்ந்ததும் பாடும் "ஓ மகசியா.." செம நக்கல். பல பாடல்களில் வரும் ஹம்மிங்கையே தேடிப்பிடித்து முழுபாடலாக்கி இருக்கிறார்கள்.
வழக்கமாக தமிழ்ப் படத்தில் கதாநாயகிக்கு என்ன வேலையோ, அந்த வேலையை சரியாக செய்திருக்கிறார் அறிமுக நாயகி திஷா பாண்டே!
திஷா பாண்டேயை காதலிக்கும் ஷிவா, பெண் கேட்டு அவர் வீட்டுக்கு போகிறார். "எம் பொண்ணு கோடீஸ்வரி, நீ ஏழை. உனக்கு எப்படி அவளை கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும்?" என்று வசனம் பேசுகிறார் அழகு. பின்னால் நிற்கும் வேலைக்காரனிடம், "காபி கொண்டா" என்று ஆர்டர் செய்கிறார் அழகு. கோடீஸ்வரன் ஆகிக் காட்டுகிறேன் என்று சபதம் செய்து கிளம்பும் ஷிவா, துணிகளுக்கு இஸ்த்ரி போட்டும், பேப்பர் போட்டும், பால் விற்றும் பணக்காரனாகி அழகு வீட்டுக்கு செல்கிறார். அப்போது வேலைக்காரன், காபி கொண்டுவர "அட காபி கைக்கு வர்றதுக்குள கோடீஸ்வரனாயிட்டியே" என அழகு திகைப்பது, வயிறுகளை பதம் பார்க்கிறது.
ஷிவாவின் தோழர்களாக, கல்லூரி மாணவர்களாக பரத் எனும் பெயரில் வெ.ஆ.மூர்த்தியையும், நகுலாக எம்.எஸ்.பாஸ்கரையும், சித்தார்த்தாக மனோபாலாவையும் இளம் தமிழ் சினிமா கதாநாயகன்கள் பெயரில் புத்தகமும் கையுமாக அலைய விடுவதில் தொடங்கி, ஃபேமிலி பாட்டு என ஒரு இங்கிலீஷ் பாட்டை போட்டு பெரியார்தாசனை ஷகிலா கண்டுபிடிப்பது வரை செம நக்கல்... நையாண்டி!
கோர்ட்டில் சில வினாடிகளில் வழக்கை விசாரிக்கும் நீதிபதி வி.எஸ்.ராகவன், "தீர்ப்பை வரும் 26ம் தேதி ஒத்திவைக்கலாம் என்று நினைத்தேன். என் அக்கா வீட்டில் விசேஷம் இருப்பதால் இப்பவே தீர்ப்பு சொல்லிவிடுகிறேன்" என அவசர அவசரமாக தீர்ப்பு வழங்குவது நகைச்சுவையின் உச்சகட்டம்.
கதை என்ற எதுவுமே இல்லாமல், அதே நேரம் பழைய படங்களின் காமெடிக் காட்சிகளின் தோரணமாகவே இந்தப் படம் இருப்பதால், கடைசி வரை எந்தக் காட்சியிலும் ஒன்ற முடியவில்லைதான்.
ஆனாலும், இந்தப் படத்தில் எங்கும் ஆபாசமோ, அருவருப்போ இல்லை என்பது மிக முக்கியம்.
முதல் பாதிவரை ரசிக்க முடிந்த நையாண்டித்தனம், இரண்டாம் பாதியில் சில இடங்களில் சலிப்பு. அந்த கிராம எபிசோட் திரைக்கதைக்கு வேகத் தடையாகிறது. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் காட்சிகளில் கமர்ஷியல் கலர். கண்ணனின் இசையில் பாடல்களும் சிரிக்கும் ரகம்.
இந்தப் படத்தின் இடையில் வரும் படங்களையெல்லாம் நீங்கள் முன்பே பார்த்திருந்தால் இந்தப் படம் நிச்சயம் உங்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும்.
பல தமிழ்ப் படங்களையெல்லாம் கிண்டல் பண்ணி எடுத்திருக்கும் இயக்குனர் சி.எஸ்.அமுதன், உண்மையிலேயே வித்தியாசமானவர்தான்!