எனது அரசை கவிழ்க்க சதி நடக்கிறது: மம்தா பானர்ஜி

பா.ஜனதா 35 எம்.பி. தொகுதிகளை கைப்பற்றினால் மம்தா அரசு நீடிக்காது என்று அமித்ஷா கூறியதன் மூலம், எனது அரசை கவிழ்க்க சதி நடக்கிறது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார். அப்போது, அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 35 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றால், 2025-ம் ஆண்டுக்கு மேல் மம்தா பானர்ஜி அரசு நீடிக்காது என்று அவர் கூறினார். மம்தா அரசின் பதவிக்காலம், 2026-ம் ஆண்டு மே மாதம்வரை இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இதுகுறித்து மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த வெள்ளிக்கிழமை, அமித்ஷா பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். நல்லது. ஆனால், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை கவிழ்ப்பது பற்றி நாட்டின் உள்துறை மந்திரி எப்படி பேசலாம்? அவரது பேச்சு ஜனநாயக விரோதமானது. அரசியல் சட்டத்துக்கு எதிரானது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 35 தொகுதிகளில் வெற்றி பெற்றால், மம்தா அரசு முழு பதவிக்காலமும் நீடிக்காது என்று அவர் ஒருபோதும் பேசக்கூடாது. குண்டர் போல் பேசக்கூடாது. அப்படி பேசியதற்காக அவர் பதவி விலக வேண்டும். எனது அரசை கவிழ்க்க சதி நடக்கிறது என்பது அமித்ஷா பேச்சு மூலம் நிரூபணமாகிறது. ஓரணி ஒரு முதல்-மந்திரிக்கு சம்மன் அனுப்பி, விசாரிக்க முடியும் என்று காட்டுவதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அப்படியானால், மத்திய உள்துறை மந்திரியிடம் ஏன் விசாரிக்க முடியாது? அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வராது. பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மாடு கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜிக்கு மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. ஆசியர்களை வேலைக்கு அமர்த்துவதில் ஊழல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் விசாரணையை இடை நிறுத்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த சில மணிநேரங்களிலேயே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனான அபிஷேக் பானர்ஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.