துருக்கியில் 9 நாள்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தாய், 2 குழந்தைகள்!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் உலகையே உலுக்கியுள்ளது. இந்த கோர சம்பவத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் கடந்த 6-ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கம். பல நாள்களாக இடிபாடுகளுக்கு இடையில் இருந்தும் உயிருடன் சிலர் மீட்கப்பட்டு வருவது அதிர்ச்சியாகத்தான் உள்ளது. பூகம்பம் நிகழ்ந்து 128 மணி நேர போராட்டத்துக்குப் பின்னரும் உயிருடன் இருந்த 2 மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. சமீபத்தில் 74 வயது மூதாட்டி ஒருவரும் அதன் தொடர்ச்சியாக 46 வயது பெண் ஒருவரும் மீட்கப்பட்டார்.

இப்போது அன்டக்யாவில் இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளுக்கு இடையே 9 நாள்களுக்குப் பிறகு தாய் மற்றும் இரு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எலா என்ற பெண்ணும் மெய்சம், அலி என்ற அவரது இரு குழந்தைகளும் மீட்கப்பட்ட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான அனடோலு தெரிவித்துள்ளது. சரியாக 228 மணி நேரம் தன் இரு குழந்தைகளையும் காப்பாற்றி தன் உயிரையும் தக்கவைத்துள்ளார் எலா. மிகவும் நெகிழ்ச்சியான இந்த நிகழ்வு குறித்து பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. இதில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, நிலநடுக்கத்துக்கு 42 ஆயிரம் போ் பலியாகியுள்ளனா். அவா்களில் துருக்கியில் 36187 பேரும், சிரியாவில் 5,800 பேரும் அடங்குவா்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.