எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்ய முடியாது: கவர்னர் தமிழிசை

இலவச பனங்காய்களை தலையில் சூட்டிக் கொள்ளும் வாரிசு குருவிகள் அல்ல நாங்கள். பனை விதைகளாய் மண்ணில் புதைந்து தானே வளர்ந்து உருக்கேறிய பனை மரங்கள் நாங்கள்.. சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம் என்று கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கவர்னர்களே எரிமலையோடு விளையாடாதீர்கள் என்று தி.மு.க. சார்பில் வெளியிட்ட கட்டுரைக்கு கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. சிலந்தி வேடமிட்டு வரும் மூட்டை பூச்சிகளே…. உங்கள் சாயம் வெளுக்கிறது என்ற பயமா? எனவேதான் எதைக் கண்டாலும் தினம் தினமும் அஞ்சும் தெனாலி திரைப்படக் கதாநாயகன் போல் நிழலுக்கும் அஞ்சி அஞ்சி அடிக்கடி கவர்னரை பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுகிறீர்கள். சீரியலிலும், சினிமாவிலும் நடித்துவிட்டு பதவியில் அமர்ந்திருப்பவர்களுக்கு கேமரா மேனியா? மைக் மேனியாவா? இல்லை எங்களுக்கா? உண்மையை உரக்கச் சொல்லும் எங்களுக்கு மைக் மேனியாவும் இல்லை கேமரா மேனியாவும் இல்லை. எங்களுக்கு மைக் மேனியா என்பதைவிட உங்களுக்குத்தான் மோடி போபியா (மோடி பயம்) எனவே இந்த பயத்தில் குளிர் ஜுரம் வந்து அடிக்கடி என்னைப்பற்றி கட்டுரை வருகிறது.

தெலுங்கானாவில் என்ன நடக்கிறது என்பதை ஒழுங்காக முழுமையாக தெரிந்து கொண்டு பேசுங்கள். தெலுங்கை பூர்வீகமாகக் கொண்டு வீட்டில் தெலுங்கு பேசி தமிழ் வேஷமிடும் தெலுங்கர்களுக்கு தெலுங்கானாவின் கவர்னராக இருந்தாலும் தெலுங்கானா சட்டமன்றத்தில் திருக்குறளை தமிழில் ஒலிக்கச் செய்த முழுமையான தமிழ் ரத்தம் ஓடும் தமிழச்சி நான் என்பதை ஜீரணித்து கொள்ள முடியவில்லை. என்னை யார் தமிழகத்தில் கருத்து கூற முடியாது என்று சொல்வது.. யார் அந்நியர் நீங்களா? நானா? கடந்த மூன்று ஆண்டுகள் தெலுங்கானா உள்ளூர் பத்திரிகைச் செய்திகளை ஆராய்ச்சி செய்து பார்த்தால் யார் நடுங்கிப் போயிருக்கிறார்கள் என்பது தெரியும். அங்கே தெலுங்கானா அரசை அலறவிடுவது யார் என்பதும் தெரியும். மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்காக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதை அங்கே உள்ள முக்கிய பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகவும்,முக்கிய செய்தியாகவும் அன்று மாலையே தொலைக்காட்சிகளில் விவாத பொருளாகவும் அவ்வப்போது நடந்து வருகிறது. எனக்கு பதில் சொல்ல ஆட்சியாளர்களும் குடும்ப வாரிசுகளும் அமைச்சர்களும் கங்கனம் கட்டி நிற்பதே அதற்கு சாட்சி. அங்கே மக்களுக்காக ஆட்சியாளர்களை திணறடிக்கும் என்னை கை பிசைந்து நிற்பதாக கனவு காண்கிறீர்கள்.

கவர்னருக்குரிய மரியாதையை தர தவறியதன் விளைவுகளை கண்டு தான் உங்களுக்கு பரமானந்தம் என்றால் அது மாதிரியான அற்ப சந்தோசம்தான் உங்களுக்கு கிட்டும். இதன் மூலம் உலகத் தமிழர்களுக்கு காப்புரிமை வாங்கிக் கொண்டதாக தம்பட்டம் கட்டிய, வீர வசனம் பேசிய உங்கள் சாயம் வெளுக்கிறது. அங்கே பண்ணை வீட்டில் நடக்கும் வாரிசு அரசியல் ஆட்சியை மக்கள் முன் தோலுரித்துக் காட்டியதால் கவர்னர் மாளிகை மீது கோபம். தெலுங்கானாவில் மூன்று நாள் பாண்டிச்சேரியில் மூன்று நாள் என்று நேரம் ஒதுக்கி வழியில் தமிழ்நாட்டிலும் சில நிகழ்வுகளில் கலந்துகொண்டு பணியாற்றும் என்னை குறை காண வேண்டாம். நான் பொது வெளியில் வைக்கும் வாதங்களுக்கு பதில் விளக்கம் சொல்ல தெம்பும், திராணியும் அற்றவர்கள் தான் என்னைப் பற்றி கட்டுரை எழுதுகிறார்கள்.

தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி அண்டை மாநிலத்தில் மக்கள் பணியாற்றும் நான் கருத்து கூறினால் அதை எதிர்த்து கட்டுரை எழுதுவது தான் உங்கள் கருத்து சுதந்திரமா? நீங்கள் எரிமலைகள் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி. எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்ய முடியாது. குருவி தலையில் பனம் பழமா என்று கேட்டிருக்கிறீர்கள்? இலவச பனங்காய்களை தலையில் சூட்டிக் கொள்ளும் வாரிசு குருவிகள் அல்ல நாங்கள். பனை விதைகளாய் மண்ணில் புதைந்து தானே வளர்ந்து உருக்கேறிய பனை மரங்கள் நாங்கள்.. சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். இடி ஒலியே எங்களை ஒண்ணும் செய்ய முடியாதபோது.. இந்த கட்டுரை எங்களை என்ன செய்துவிட முடியும். வதந்திகளை பரப்பும் சிலந்திகள் நசுக்கப்படலாம். உண்மையாக உழைக்கும் சிங்கங்களை ஒன்றும் செய்து விட முடியாது. சிலந்திகள் சிங்கங்களை என்ன செய்து விட முடியும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

முன்னதாக தமிழிசையை கடுமையாக விமர்சித்து, தி.மு.க., நாளிதழில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பலருக்கு ‘மைக் மேனியா’ இன்னும் சிலருக்கு ‘கேமரா மேனியா’ என்பர். கேமராவில் முகத்தை காட்ட வேண்டும்; மைக்கில் பேச வேண்டும் எனும் மன வியாதி சிலருக்கு அதிகம் உண்டு. அத்தகைய நிலை தமிழிசைக்கும் ஏற்பட்டுள்ளது. அவரை, கவர்னராக தெலுங்கானா அரசோ, மக்களோ மதிப்பதில்லை. அதனால், புதுச்சேரியில் தன் ஆட்சி அதிகாரத்தை செலுத்தி வருகிறார்.

தெலுங்கானாவில் வாயை திறக்க முடியவில்லை. கவர்னருக்குரிய மரியாதையை தெலுங்கானா அரசு தரவில்லை. கவர்னர் உரையாற்ற கூட அழைக்கவில்லை என, போகும் இடமெல்லாம் புலம்பி தீர்க்கிறார்.
தமிழிசையின் கதறலுக்கு மத்திய அரசு காது கொடுப்பதாக தெரியவில்லை. இதை அறியாமல், மத்திய அரசு தனக்கு பின்னால் இருப்பதாக கருதி, தமிழிசை பிதற்றுகிறார்.

தமிழகத்திற்கென கவர்னர் இருக்கும்போது, எல்லை தாண்டியும், எல்லை மீறியும் அடிக்கடி தமிழக விவகாரங்களில் தலையிடுகிறார். இது, கவர்னர் ரவியை எவ்வளவு சங்கடப்படுத்தும் என்பதை எண்ணாமல், ‘வாரன்ட்’ இன்றி ஆஜராகி தன் அறியாமையை அவரே வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார். மைக்கும், கேமராவும் கிடைத்து விட்டால், ‘இரும்புக்கரம், துரும்புக்கரம்’ என, வீராவேசம் பேசுவதை நிறுத்திவிட்டு, ஆக்கப்பூர்வமாக கவர்னர்கள் செயல்பட வேண்டும். உங்களது எல்லை தெலுங்கானா. அங்கு பட்ட அடிக்கு, தமிழகத்தில் தமிழிசை வீரத்தை காட்டக் கூடாது. அவரது கூற்றுபடி மூக்கை, வாலை நீட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.