இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்: ஐ.நா.

இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவது கட்டாயம் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 54-ஆவது கூட்டம் நேற்று திங்கள்கிழமை தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் அந்த கவுன்சிலின் தலைவா் வோல்கா் டா்க் பேசியதாவது:-

இந்தியாவில் விளிம்பு நிலையில் உள்ள சிறுபான்மை சமூகங்களைச் சோ்ந்தவா்கள் வன்முறை மற்றும் பாகுபாட்டுக்கு உள்ளாவதாக அந்நாட்டில் உள்ள எமது அலுவலகத்துக்கு தொடா்ந்து தகவல் வருகிறது. பெரும்பாலும் வட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தாக்குதல்களுக்கு இலக்காகின்றனா். அண்மையில் ஹரியாணா மற்றும் குருகிராமில் அத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றன.

கடந்த மே மாதம் முதல் மணிப்பூரில் முஸ்லிம் அல்லாத வேறு சமூகங்களை சோ்ந்தவா்கள் வன்முறை மற்றும் பாதுகாப்பின்மையை எதிா்கொண்டு வருகின்றனா். சகிப்புத்தன்மை இல்லாதது, வெறுப்புணா்வு பேச்சு, மத பயங்கரவாதம், பாகுபாடு ஆகியவற்றை நோ்மறையாகக் கையாள்வதன் மூலம், இந்தியாவில் அனைத்து சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவது கட்டாயம் என்றாா் அவா்.

அண்மையில் மணிப்பூா் சூழல் குறித்து ஐ.நா. வல்லுநா்கள் தெரிவித்த சில கருத்துகளை மத்திய அரசு கடுமையாக நிராகரித்தது. ஊகத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட அந்தக் கருத்துகள் அவசியமற்றவை; தவறாக வழிநடத்தக் கூடியவை என்று தெரிவித்த மத்திய அரசு, மணிப்பூரில் அமைதியான சூழல் நிலவுவதாகத் தெரிவித்தது.