எந்த கடவுளும் தீட்டு பார்ப்பதில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ்

கடவுளுக்கு ஆண், பெண் எல்லாம் ஒன்று தான், எந்த கடவுளும் தீட்டு பார்ப்பதில்லை என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் பிப்ரவரி 3ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்ற இப்படத்தை தமிழில் இயக்குநர் ஆர்.கண்ணன் ரீமேக் செய்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில் நடிக்கும் இப்படத்திற்கு ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்துள்ளார். தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது:-

என் நண்பர் ஒருவர் ரீமேக் படம் எடுக்க வேண்டும் என்று சொன்ன போது எனக்கு சிறிது தயக்கம் இருந்தது. இருந்தாலும், நண்பர் கூறியதால், அந்த படத்தைப் பார்த்தேன். அதன்பிறகு, வீட்டில் என் அம்மா எப்போதும் சமையல் அறையிலேயே இருப்பதை பார்த்து, அன்னைக்குத் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். கிராமப்புறத்தில் பல உள்ள பெண்கள் சமையல் அறையிலேயே பாதி வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். அவர்களின் திறமை வெளியில் வரவேண்டும், அவர்களும் வெளியில் வரவேண்டும். அனைத்து மக்களுக்கும் இந்த கருத்து போய் சேர வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. இந்த படத்தை எனக்கு கொடுத்த கண்ணன் அவர்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய, ஐஸ்வர்யா ராஜேஷிடம், மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தில், சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள் இதுபற்றி உங்களின் கருத்து என்ன என்று கேட்கப்பட்டது. இதற்கு, பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது:-

இந்த படத்திலும் ஒரு கருத்து சொல்லப்பட்டுள்ளது . அதை படம் வெளியே வரும் போது பாருங்கள். சபரிமலை கோவில் மட்டுமில்லை, கடவுள் அனைவருக்கும் ஒன்றுதான், ஆண் பெண் என்ற எந்த ஒரு பாகுபாடும் கடவுளுக்கு கிடையாது. எந்த கடவுளும் என் கோவிலுக்கு இவர்கள் வரவேண்டும், அவர்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை. அப்படி எந்தக் கடவுளாவது சொல்லியிருக்கிறார்களா? இருந்தால் சொல்லுங்கள். எந்தக் கடவுளும் இது பண்ணக்கூடாது, இதை சாப்பிடக்கூடாது என்று சொன்னது இல்லை. எல்லாமே மனிதர்கள் உருவாக்கியது. நான் இதுபோன்ற கட்டுபாடுகளை ஒரு போதும் நம்புவதில்லை. மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்று எந்த கடவுளும் சொன்னது இல்லை. எந்த கடவுளும் தீட்டு பார்ப்பதில்லை. இதுபோன்ற கட்டுப்பாடுகளை நான் எப்போதும் நம்பியது இல்லை. இவ்வாறு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.