சிறுகதைகள்


கடன்

கூடல்.காம்
ரயிலிலிருந்து பார்க்கும்போதே கோபுரம் தெரிந்தது. பெரியம்மா வீட்டிலிருந்து பார்த்தால் வடக்குப் பக்கம் இருக்கும் கோபுரம். ஸ்டேஷனிலிருந்து ரொம்பத் தொலைவு பெரியம்மா வீடு. பஸ்ஸில் வந்தால் கோயில்வாசல் பக்கம் இறங்கிக் கொள்ளலாம். காப்புராயன் கோயில் தெருவுக்கு நடந்தே போய்விடலாம். போன வருஷமும் அதற்கு முந்தியும் -திருநெல்வேலியிலிருந்து - அம்மாகூட வந்தபோது தாலுகா ஆபிஸ் ஸ்டாப்பிங்கில் இறங்கி நடந்துதான் போனது.

இப்போது எல்லாமே மாறிவிட்டிருந்தது. அப்பா சிங்கம்பட்டி ஜமீன் செக்ரட்டரியாகி விட்டிருந்தார்கள். குடும்பம் கல்லிடைக் குறிச்சிக்கு மாறியிருந்தது. குழந்தையைண்ணன்கூட வீடு மாறியிருக்கிறான். விசாரித்தால் சொல்லிவிடுவார்கள். இதென்ன பெரிய காரியம்.

கல்லிடைக்குறிச்சி போனபிறகு பெரியம்மா வீட்டுக்கு வருவது இது இரண்டாவது தடவை. சென்ற முறை தபசுக்காக வந்தது. அப்பாவைத் தவிர எல்லோருமே வந்திருந்தார்கள். எப்போது வந்தோம், எங்கே இறங்கினோம் என்பதுகூட ஞாபகம் இல்லை.

தபசுக்காட்சி பார்த்தது நினைவில் இருக்கிறது. தம்பி சேகருக்கு மாவிளக்கு எடுத்தது நினைவிருக்கிறது. ஊர் திரும்புகையில் சிமெண்டு சாக்கில் பெரியம்மா அரிசி கட்டிக் கொடுத்ததும் பழைய சேலையில் வடகம் முடிந்து கொடுத்ததும் கோமதி ஜூவல்லரி மார்ட் துணிப்பையில் திருவேங்கடத்துக் கத்தரிக்காய் போட்டுக் கொடுத்ததும் ஞாபகம் இருக்கிறது. குழந்தையண்ணன்தான் பஸ் ஏற்றி விட்டான். தபசுக்கு சங்கர் சினீஸில் சிவாஜி நடித்த "பாக்யவதி" படம் போட்டிருந்தார்கள்.

அம்மா காலையில் கங்கைகொண்டான் ஆச்சி வீட்டில் நாலு இட்லி வாங்கிக் கொண்டு வந்து சாப்பிடச் சொல்லி அனுப்பியது. கையில் ஒண்ணேகால் ரூபாய் கொடுத்துவிட்டிருந்தாள். கல்லிடைக்குறிச்சிக்கு தென்காசிக்கும் ரயில் சார்ஜ் அரை டிக்கெட், ஆறரையணா. தென்காசிக்கும் சங்கரன்கோயிலுக்கும் பத்தரையணா. மத்தியானம் ஒரு எலுமிச்சம்பழ சாதம் வாங்கிச் சாப்பிட்டுக்
கொள்ளும்படி சொல்லியிருந்தாள்.

தென்காசி வந்து வண்டி மாறக் காத்திருந்தபோது சாப்பிட்டது. சாயங்காலம் வரை எப்படிப் பசி தாங்கும். இப்போதெல்லாம் ஏனோ எப்போதும் பசிக்கிறது. திருநெல்வேலி கல்லத்தி முடுக்குத் தெரு வீட்டில் ஆச்சி தாத்தாவெல்லாம் இருந்தபோது இப்படி இல்லை. காலையில் தூங்கி எழுந்திருக்கையில் தலைகாணி பக்கத்தில் அல்வாப் பொட்டலம் இருக்கும். அப்பா முதல் நாள் ராத்திரியே மண்டபத்து லாலாக் கடையில் வாங்கிக் கொண்டு வந்து வைத்திருப்பார்கள். அம்மா காலையிலேயே பால் காய்ச்சிக் கொண்டுவந்து கொடுப்பாள். பூர்ணனுக்குச் சாப்பாட்டு ஞாபகமே வந்ததில்லை.

குறுக்குத்துறைப் படித்துறை, இலைவிபூதி தரும் முருகன் கோயில், மருத மர நிழல் வரிசை, லெவல்கிராஸிங் இசக்கியம்மன்- இதுதான் மனசில் இருக்கும். மாக்கல் நந்தியும் நெல்லையப்பர் கோயிலும் சப்த ஸ்வரத் தூண்களும் பொற்றாமைரைக் குளமும் வசந்த மண்டபமும் காந்தியம்மன் சந்நிதியும்தாம் நினைவில் நிற்கும். அம்மா அப்பாவோடு அக்காவும் இவனும்போய்வரும் ராயல் டாக்கீஸ், பாப்புலர் தியேட்டர், பாலஸ்டி -வேல்ஸ். அப்புறம் பார்த்தால் நயினார் குளம், தெப்பக்குளம். இவ்வளவுதான் பூர்ணன் உலகம். ஒரே வருஷத்தில் இவ்வளவும் எப்படிக் காணாமல் போய்விட்டிருந்தது. சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் போலானது.

ரயில்வே ஃபீடர் ரோட்டிலிருந்து தெற்கேயுள்ள குளத்தில் இறங்கி, கோயில்வாசல் வழியாகப் போவதுதான் சுருக்கு வழி. ஆனால் குளம் தாண்டும்வரை நிழலே இருக்காது. இப்பேது கருப்பையா அண்ணன் எதிரே வந்து ஒரு காபி வாங்கிக் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவன் அப்படியெல்லாம் வருகிறவன் இல்லை. காலையில் எட்டு மணிக்குப் பாத்திரக்கடை போனால், மதியம் சாப்பிட வந்துவிட்டு உடனே திரும்பி விடுவான். ஆனால், அவன் சமூகரெங்கபுரம் சீர்திருத்தப்பள்ளியில் இருக்கிறான்.

அண்ணாச்சி பேரைச் சொன்னால், வீட்டிலேயே இறக்கி விட்டுப் போய் விடுவான் வண்டிக்காரன். பஞ்சாயத்து யூனியன் காண்ட்ராக்டர் இல்லையா. பூர்ணனுக்குத்தான் அம்மாவிடமே "சோறெடுத்து வைலா" என்று சொல்லத் தெரியாதே.

அண்ணாச்சி வேலை இதே ரோட்டில், பக்கத்துத் தெருவில், போகிற வழியில்கூட எங்காவது இருக்கும். அண்ணாச்சிகூட முண்டாசு கட்டிக் கொண்டு வேலையாள்களை ஏவியடித்துக் கொண்டிருப்பார்கள்.

பத்துப் பனிரெண்டு வயசிலேயே யோசனைகளும் கற்பனைகளுமான மனம் உருக்கொண்டு வளர்ந்துவிட்டிருந்தது பூர்ணனுக்கு. இதில் பசிகூட கொஞ்சம் தணிந்து விட்டிருந்தது போல இருந்தது.

"வால கருப்பய்யா. அம்ம நல்லா இருக்காளால. அக்கா? தம்பிங்க எப்டி இருக்காங்க. சாப்பிடுதியால. ஏன் இப்டி முகம் கறுத்து வாடிப் போயிருக்கு." வெளித்திண்ணையில் உட்கார்ந்து அரிசி புடைத்துக் கொண்டிருந்த பெரியம்மை சுளகைக் கீழே வைத்துவிட்டு எழுந்து வந்து பூர்ணனை வரவேற்று உபசரித்தாள்.

பூர்ணன் கொஞ்சம் தயக்கமாய் வாசலிலேயே நின்றிருந்தான். வளவின் பக்கத்து வீடுகளில் தெரிந்த முங்களைப் பார்த்துவிட்டுச் சொன்னாள் பெரியம்மை.

"தங்கச்சி மகன். பெரியவன்."

பூர்ணன் பையை வெளித்திண்ணையிலேயே வைத்துவிட்டு உட்கார்ந்தான்.

"உள்ள வால கருப்பய்யா. இப்பதான் குழந்தை போனான். சாப்பிட்டுத் தண்ணிவிட்டேன். எடுத்துவைக்கட்டுமா. இல்ல, தோசை ஊத்தட்டுமால. என்ன சாப்பிடுத" என்று கேட்டுக்கொண்டே அடுக்களைக்குள் போனாள்.

தலை கவிழ்ந்தபடியே இவன் கத்தியைச் செருகுவதுபோலச் சொன்னான்:

"அம்மா ரூபா வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கா."

"சரில. குழந்தை வரட்டும். இன்னும் அவனுக்கு சம்பளம் போடல. அது என்னவோ இன்னும் அவன் வேலையில சேர்ந்ததுக்கு சர்க்காரு உத்தரவு வந்து சேரலியாம். அவனும் மூணு மாசமா எழுதிப் போட்டிருக்கான். ஹைவேஸ“ என்ஜினியரும் கையெழுத்துப் போட்டு அனுப்பிச்சிருக்காரு. எப்டியும் முதல் தேதி வந்துரும். அண்ணனே கொணாந்து கொடுத்திருவான். இல்லேன்னா மணியார்டர்ல அனுப்பச் சொல்தன்" என்றாள்.

"இப்டித்தான் பெரியம்மா நீயும் அண்ணனும் சொல்தீங்க. அங்க அப்பா மூணு மாசமா வீடடுக்கே வர்ல. அந்த மலையாளத்து
தே.........டியாவ தேடிக்கிட்டு மெட்ராஸீக்கே போயிட்டாக நாரைக் கிணத்து ஆச்சி வீட்டு வாடக கேட்டுக்கிட்டிருக்கா. "வீட்டக் காலி பண்ணுங்க" ன்னும் சொல்லிட்டா. மளிகக் கடயில பத்துவழி இல்லேனுட்டான்."

பூர்ணனை இடைமறித்து பெரியம்மை சொன்னாள்.

"எல. முதல்ல சாப்பிடு. பெரிய மனுஷன்போல பேசுத. எங்களுக்கு ஒண்ணும் தெரியாதாக்கும். போன மாசம் சுப்புபுள்ள சடங்குக்கு வந்திருந்த கல்கத்தாபிள்€ ள எல்லாத்தையும் சொன்னாரு. நாலு நாளைக்கு முன்னாடி ஈஸ்வரன்பிள்ளை துட்டிக்கு வந்துட்டு வந்த சிதம்பரத்தக்கா பாத்துட்டு வந்து சொல்லி அழுதா. "ஏட்டி, டவுணு டவுண்ன்னு கொடுத்தியள. இந்த திருநெல்வேலிக்காரங்களே படுக்காலிப் பயலுக, பாத்துக்கோ. இப்ப உந் தங்கச்சி இப்படி நாலு பிள்ளையளயும் வச்சிட்டு படுதாளேன்னு மனசு கேட்கல. என்ன செய்ய. கையில இருக்கா. உடனே புறப்பட்டு வந்திற. எப்படி வளந்தவ அவ.ராணி மாதிரி இருந்தவ. "அவுக எப்படியும் போகட்டும். வர்றப்ப வருவாக. இருடி" ன்னா கேட்பனான்னு சாதிச்சிட்டாளே. சொத்து போனா போவுது. கோர்ட்டு கேஸீங்கவும்தான் அவுக இப்படி பிள்ளையள் முகம்கூட ஞாபகம் இல்லாம அலையுதாக."

"நீ ஒண்ணும் அம்மையப்பத்தி சொல்ல வேண்டாம். சைக்கிள் எடுத்ததுக்குண்டான ரூபாயக் கொடுத்தா போதும்."

பூர்ணனுக்கு சாமி வந்ததுபோல இருந்தது. பெரியம்மையைப் பார்த்தாலும் பாவமாக இருந்தது. அவளிடம் சத்தம் போட்டுப் பேசுவதே மனசுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால், வேறு வழியில்லை. அம்மா எப்படியும் நூறு ரூபாயாவது வாங்கிக்கொண்டு வரச் சொல்லியிருக்கிறாள். அக்காவுக்கு மூணு மாசம் ஸ்கூல் ஃபீஸ் கட்ட வேண்டும். பெரியதம்பிக்கு நெஸ்டில் டின் வாங்க வேண்டும். வீட்டு வாடகை, மளிகைக்கடைப் பாக்கியெல்லாம் அடைத்துவிட்டு அப்பாவைப் பார்க்க பூர்ணன் மெட்ராஸ் போகவேண்டும்.

கல்லிடைக்குறிச்சி ஊரில் நூத்துக்கு முக்காலணா வீதம் அப்பளம் போட்டு நாலு பிள்ளைகளும் பெற்றவளும் வாழ முடியுமா. தாலிச் சங்கிலியை விற்று விட்டாள். பித்தளை ஏனங்களை வரிசையாக அடகு வைத்துவிட்டாள். தம்பிகளின் நாய்த் தாயத்தைக்கூட விற்று விட்டாள். ஆனால், ஒருவேளைகூட இவர்களைப் பட்டினி போட்டதில்லை. தனக்கு உள்ளதையும் ஒறுத்து இவர்களுக்குத்தாம் போட்டள். இரண்டு நாளாகக் காலையிலும் ராத்திரியும் சீனிக்கிழங்குதான். மத்தியானம் மட்டும் சோறு வடித்துத் துவையல்.

பெரியம்மை ஒன்றும்பேசவில்லை. பழையதைப் பிழிந்து எடுத்து வைத்தாள். சுண்டக்கறியைத் தட்டில் எடுத்து வைத்தாள். இவனைப் பார்த்துக் கேட்டாள்:

"கொஞ்சம் குழம்பு ஊத்திச் சாப்பிடுதியா, மோரு ஊத்தட்டுமா."

"எனக்கு ஒண்ணும் வேண்டாம். அண்ணன் வந்ததும் நா ரூவா வாங்கிட்டு போறேன்."

இதற்குள் பக்கத்து வீடுகளிலிருந்து வந்து, என்ன ஏது என்று விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பூர்ணனுக்கு அப்பாமேல், அம்மாமேல், தன் மேல் எல்லோர்மீதும் கோபம் வந்தது. வயிறு காந்துவதுபோல இருந்தது. காந்தல் இல்லை. பசி. எடுத்து வைத்த சோறு எதிரேயே இருக்கிறது. சாப்பிடலாம். ஆனால் ஒரு பிடிவாதம். வைராக்யம். ராத்திரிக்குள் ரூபாயை வாங்கிவிட வேண்டும். காலையில் முதல் பஸ்ஸ“க்குக் கிளம்பிவிட வேண்டும். வீம்புக்காக அப்படியே தரையில் படுத்துக்கொண்டான்.

"ஏ கருப்பய்யா. இந்த ஜமுக்காளத்த விரிச்சுப் படுல" என்ற பெரியம்மை அவன் கால்மாட்டுப் பக்கமாய் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

தூக்கம் வரவில்லை. யோசனை யோசனையாய் வந்தது. நல்ல நாளிலேயே பெரியம்மா வீடு ஒன்றும் செழிப்பில்லை. பெரியப்பா ரோடு மேஸ்திரி. 65 ரூபாய் சம்பளம். பூர்ணனுக்குப் பெரியப்பா நல்லவர்கள்தான். அப்பாவுக்கு, அம்மாவுக்கு ஊருக்கு எல்லோருக்குமே பெரியப்பா நல்ல மனுஷன்தான். ஆனால், பெரியம்மாவுக்கும் பெரியப்பாவுக்கும் எப்போதும் சண்டையாயிருக்கும். எப்படியோ அக்காவைக் கட்டிக் கொடுத்து விட்டார்கள். பெரியம்மை காபி கிளப்களுக்கும் வீடுகளுக்கும் இட்லிக்கு அரைத்துக் கொடுத்துத்தான் குடும்பத்தைக் காற்பாற்றினாள். பெரியம்மை என்றாலே தோசைக்கு மாவரைக்கிற உருவம்தான் மனசில் படிந்திருக்கிறது. பெரியப்பா சம்பளத்தில் பாதியைக்கூட வீட்டில் கொடுக்கிறதில்லையாம்.

பெரியம்மா நல்ல மனுஷி. கொஞ்சம் கடுத்தமாகப் பேசுவாள். கஷ்டப்பட்டவர்கள் எல்லோருமே பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறார்கள். அம்மாகூட இப்போதிப்போது வெடுக்வெடுக் என்றுதான் பேசுகிறாள். ஆனால் எப்போதும் அங்குவிலாஸ் சின்னத்தடை போட்டுக் குதப்பிய, சுத்தமாகக் கண் தெரியாது வாழ்ந்து முடிந்த, அம்மா ஆச்சி பொறுமையாகத்தான் இருந்தாள் (இவனும் அக்காவும்தான் போய் டவுண் மார்க்கெட் டிப்போவில் வாங்கிக் கொண்டு வருவார்கள்.) அப்பாவையிட்டு அம்மா படுகிற சிரமங்களையெல்லாம் பார்த்து உள்ளுக்குள் நொந்து கொண்டிருப்பாள் அந்த ஆச்சி.

போன வருஷம் பெரியப்பா நெஞ்சுக்குத்தில் இறந்ததும் சொல்லிவிட்டிருந்தார்கள். இவர்கள் வருவதற்கு முன்பே எடுத்து விட்டிருந்தது. அன்றைக்குக்கூட இவன்தான் கொக்கிரகுளம் போய் அப்பாவைத் தேடிவிட்டு வந்தான். அங்கே வீட்டில் அப்பா இல்லை. பிறகுதான் அம்மா புறப்பட்டு வந்தாள். அதனால்தான் வரப் பிந்திப் போயிற்று. பெரியப்பா முகத்தைக்கூடப் பார்க்க முடியவில்லை.

பெரியப்பா வேலையைக் குழந்தையண்ணனுக்குப் போட்டுக் கொடுத்திருந்தது. அதே ரோடு மேஸ்திரி வேலை. இவ்வளவு சின்ன வயசில் வேறு யாரும் ரோடு மேஸ்திரியாக இருந்ததில்லை.

திருநெல்வேலியில் பெரியதம்பி பெயரில், சேகர் சைக்கிள் ஷாப் என்று, சுவாமிசந்நிதிக்குப் பக்கத்தில் அப்பா கடை வைத்து இருந்தார்கள். இருபது சைக்கிள். அதில் அஞ்சு லேடீஸ் சைக்கிள், அந்த மலையாளத்தாள் வந்ததிலிருந்து ஒவ்வொன்றாகக் குறைந்தது. மூன்று திருடு போனது. ஆகக் கடைசியில் ஆறு மீதமிருந்தது. கடையை விற்கப் பேச்சு வருகிற நேரத்தில்தான் குழந்தையண்ணன் சைக்கிள் கேட்டு வந்திருந்தான். அப்பா ஒன்றும் சொல்லாமல், ஒரு நல்ல சைக்கிளாகப் பார்த்துக் கொடுத்தார்கள். பின்னால் பின்னால்கூட பணம் கேட்கத் தோன்றவில்லை அப்பாவுக்கு. அம்மாவும் இப்படி கஷ்டம் இல்லையென்றால் கேட்கமாட்டாள்.

அப்பா பிறகு சிங்கம்பட்டி ஜமீன் செக்ரட்டரியானதும் அவளையும் கூட்டிக் கொண்டு திரிந்தார்கள். சிங்கம்பட்டியிலேயே வீடு அமர்த்திக் குடியிருந்தார்கள். கல்லிடைக்குறிச்சியில் இவர்கள். அம்மா, அக்கா, இரண்டு தம்பிகள், இவன். அங்கும் இங்குமாகத்தான் அப்பா இருந்தது. அதுவும் இப்போது இல்லை. காணாமலே போய்விட்டார்கள்.

தலைவலிக்கிற மாதிரி இருந்தது. இப்போதுகூட, "தலைவலிக்கு பெரியம்ம" என்றால், உடனே காபி போட்டுக் கொடுப்பாள். அவளிடம் தான் இப்படி நடக்க வேண்டியிருக்கிறது.

எப்படியோ தூங்கிப் போயிருந்தான். பூர்ணன். தோளைத் தொட்டு எழுப்பியதும் விழித்துக்கொண்டான். அண்ணன்தான் எழுப்பினான்.

"ஏ, கருப்பையா. சாப்பாட்டில என்ன கோபம். முகத்தைக் கழுவிட்டு வந்து சாப்பிடுறா. அம்ம அம்பது ரூபா வாங்கி வச்சிருக்கா. எதித்த வீட்டு ஆச்சிட்டதான் கைமாத்தா வாங்கினா. சம்பளம் வாங்கினதும் மிச்சத்த கொண்டாந்து தந்திர்றேன். இப்ப நேரமாயிட்டு. காலையில பஸ்ஸேத்தி விடுதேன் போலாம், என்ன. என்னல இது, "நீங்கள்லாம் சாப்பிடுதியள்லா"ன்னு நீ கேட்டிட்டேன்னு அம்ம அழுதிட்டிருக்காலே, நான் வர்றப்ப. நான்தான், "அவனுக்கு என்ன தெரியும், விடும்மா"னு சொல்லி சமானப் படுத்தினேன். இப்படி கேட்கலாமாடா. சரி, சரி. சாப்பிட்டு சினிமாவுக்கு போலாம், வா" என்றான்.

பெரியம்மை இவனுக்காகச் சுடுசோறு பொங்கி, வத்தல்குழம்பு வைத்து, அப்பளம் சுட்டு, வடகம் வறுத்து வைத்திருந்தாள்.

சாப்பிட்டுவிட்டுக் கைகழுவ அங்கணத்துப் பக்கம் போனபோது என்னவோ ஒரு வெறுமை தெரிந்தது. என்ன என்று கவனித்துப் பார்த்தான். அங்கே இருந்த செப்பானையைக் காணோம் இப்போது.

நன்றி: அவன் அவள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link