சிறுகதைகள்


பிழை

கூடல்.காம்
கல்லிடைக்குறிச்சியிலிருந்து அம்பாசமுத்ரத்துக்கு நடந்தே போய்விடலாம். இரண்டு மைல்கூட இராது. மருத மர நிழலில் நடை தோற்றாது. ஆற்றுப்பாலம் தாண்டி கொஞ்ச தூரம் போனால் ஊர் வந்துவிடும். அம்மா இவனையும் சின்னவனையும் கூட்டிக் கொண்டு போனாள். அக்காவும் சேகரும் பெரியம்மை வீட்டுக்குப் போயிருந்தார்கள்.

நடந்துதான் போனோம். சின்னவன் ஆறுமுகத்தை அம்மா ஒக்கலைவிட்டு இறக்கவே மாட்டாள். இது என்ன அன்பா, கருணையா, அப்பா மீதான பிரியமா. அம்மா அதிகம் வீட்டைவிட்டு வெளியில் கிளம்ப மாட்டாள். சங்கரன்கோயில் பெரியம்மை வீடு, திருச்சி அத்தைவீடு தவிர வேறு எங்கும் போக விளங்காது, அவளுக்கு, புதுச்சத்திரம் மதினி திரும்பத் திரும்பக் கூப்பிட்டுச் சலித்துப்போய் விட்டாள். வழுதூர் சின்ன ஆச்சி, "வரவே மாட்டேங்கிறியே" என்று ஆவலாதி சொல்வாள். குற்றாலம் பெரியம்மை வீட்டுக்குப் போவதுகூடக் குறைந்துவிட்டது, பெரிய பெரியம்€மை செத்துப்போன பிறகு, பிள்ளைகள் படிப்புக்கெட்டுப் போகும். அப்பா சாப்பாட்டுக்குத் திண்டாடுவார்கள். பிறகு எப்படி விருந்தாடிப் போக முடியும். கோடை விடுமுறைக்குத்தான் திருச்சி அத்தை வீடு போவோம். தபசுக்குத்தான் பெரியம்மை வீட்டுக்கு.

அப்பா சிங்கம்பட்டி ஜமீனில் இருந்தவரைக்கும் இவனும் அக்காவும்தாம் தேடிக்கொண்டு போவார்கள். அம்மா ரூபாய் வாங்கிக்கொண்டு வரச்சொன்னாள் என்று கேட்டு வாங்கிக் கொண்டு வருவார்கள். இப்படித்தான் குடும்பம் நடந்தது. இப்போது அப்பா இங்கேயே இல்லை. அந்த மலையாளத்துத் தே......டியாளைத் தேடிப் பட்டணத்துக்கே போய்விட்டார்களாம். அரண்மனை வேலையையும் ஓய்த்தாயிற்று. அப்பாவைப் பார்த்தே மூன்றுமாசம் இருக்கும்.

அம்மா என்ன பண்ணுவாள், பாவம். இரண்டு டிரங்க் பெட்டி நிறைய இருந்த அப்பாவுடைய பேண்ட் - ஷர்ட் எல்லாவற்றையும் விற்றாகி விட்டது. இவன்தான் கீழத்தெருவில் கொண்டுபோய் விற்றுக்கொண்டு வந்தான். வீட்டில் மாட்டியிருந்த போட்டோக்களை யெல்லாம் கழற்றி ஃபிரேம் போடுகிற கடைக்குக் கொண்டுபோய் கண்ணாடிகளையும் துத்தநாகத் தகடுகளையும் போட்டுக் காசு வாங்கிக்கொண்டு வந்தான். அம்மா ராட்டை நூற்கப் படித்துக் கொண்டாள். சிட்டம் போட்டுத் தருவாள். இவன் அம்பாசமுத்ரம் கதர் வஸ்திராலயத்தில் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வருவான். அப்பளம் போடுவதற்குத் தொட்டுக் கொள்ள கொடுத்த பச்சரிசி மாவில் மீறுவதை உப்புமா கிண்டிப் போடுவாள். ஏழிலைக்கிழங்கு வாங்கி அவித்துத் தருவாள். சமயங்களில் பச்சை அப்பள மாவையே சாப்பிட்டோம்.

பசி தீயாய் எரியும். பட்டினி குடல் கருக்கும். அம்மா அசரவில்லை. அக்கா சகித்துக்கொண்டாள். இவன் சித்தாள் வேலைக்குப் போனான். செங்கல் சுமந்தான். ஆம்பிளை சம்பாத்யம் இல்லாமல் எப்படிக் குடும்பம் கழியும்.

நடுவுள்ள தம்பி சிதம்பரத்தைக் கல்லிடைக்குறிச்சி இடுகாட்டில் புதைத்தாயிற்று பிடிமண் அள்ளிப்போட்டு வந்தாயிற்று. புதை குழியில் அவனைக் கிடத்தியிருந்தது இன்னும் மனசை அறுத்துக் கொண்டிருக்கிறது. இதற்குப் பிறகு அம்மாவுக்கு இந்த ஊரே வெறுத்து விட்டது. விளங்காத பேர் விளங்காது. பூர்ணனுக்கு முகம் தெரியாத பெரியம்மை சிதம்பரம். பிள்ளை கொள்ளி இல்லாமல் செத்துப்போனாள். அவள் பேரை விடலாமா தம்பிக்கு. சாகிற மாதிரியா இருந்தான் தம்பி. அம்மா பொறிகலங்கிப் போனாள்.

ஏற்கெனவே திருநெல்வேலியில் தங்கச்சி காந்தியைத் தூக்கி விட்டாயிற்று. அதிலிருந்து அம்மன் சந்நிதிக்குப் போகவே பிடிக்கவில்லை இவனுக்கு. காந்திமதி அம்மன் பேர் ஏன் விளங்காமல் போயிற்று. அவள் செத்த பிறகுதான் அப்பா கூப்பிட்டார்களே என்று கல்லிடைக்குறிச்சி வந்தாள் அம்மா. அம்மாவுக்குப் பிடித்த பிள்ளைகள் அவர்கள் இருவரும்தாம் என்று பூர்ணனுக்குத் தோன்றும். இவனிடம், தம்பி சேகரிடம், அக்காவிடம், ஆறுமுகத்தின்மேல் எல்லாம் அம்மாவுக்கு பிரியம்தான். ஆனால், அதெல்லாம் காந்தி, சிதம்பரம்போல ஆகாது.

அம்பாசமுத்ரம் பஜார் வந்ததும் இவனுக்கு இரண்டு ஆமைவடை வாங்கிக் கொடுத்தாள். ஆறுமுகத்துக்கு காபி வாங்கி கிரைப் வாட்டர் பாட்டிலில் ஊற்றிக் கொடுத்தாள். அம்மா ஒன்றும் சாப்பிடவில்ல. தண்ணீர்கூடக் குடிக்கவில்லை. வழுதூருக்கு நடந்துதான் போகவேண்டும். பஸ் மார்க்கத்தில் இல்லை. நடந்தோம். வெயில் சுட்டெரித்தது. அம்மாவுக்குச் செருப்புப் போட்டுப் பழக்கமில்லை. இவனும் செருப்புப் போடுவதில்லை. கால் சுட்டது. அம்மா அமைதியாக நடந்துகொண்டிருந்தாள். இவன் பின்னால் போய்க்கொண்டிருந்தான்.

தகையாக இருந்தது. அம்மாவிடம் சொன்னான். பக்கத்தில் கொஞ்சம் தள்ளி இருந்த காபி கிளப்பில் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடிக்கக் கொடுத்தாள். ஓர் ஆற்றுப்பாலம் தாண்டி, சுடுகாட்டைக் கடந்து, வயல்வெளிகளுக்கு அப்பால் ஊர் வந்தது. சின்னத்தாத்தா மைனர்பிள்ளையும் ஆச்சியும் வீட்டில்தான் இருந்தார்கள். நிரம்ப ஆசாபாசமாக உபசரித்தார்கள். அப்பாவை விசாரித்தார்கள். அக்காவையும் சேகரையும் எங்கே என்று கேட்டார்கள். அம்மா உதடு பிரியாமல் பேசினாள். சாப்பிடச் சொன்னார்கள். இவன் பின்வாசல்பக்கம் போய் முகம், கை கால் கழுவிவிட்டு வந்து உட்கார்ந்தான். அம்மா சாப்பிட அவசரம் காட்டவில்லை. தம்பிக்குச் சோறு பிசைந்து ஊட்டினாள் முதலில்.

ஆச்சி வீட்டில் நாலு நாள் இருந்தோம். காலையில் அம்மாதான் இட்லி அவித்து, சட்னிக்கு அரைத்து அடுக்களை வேலையை முடிப்பாள். மத்தியானம் சோறு பொங்கி, குழம்பு வைத்து, கூட்டோ பொரியலோ வைப்பாள். ராத்திரி பழையது. தாத்தாவுக்கு மட்டும் நாலு தோசை. இருந்த நாளைக்குள் வற்றல் போட்டது. வடகம் போட்டது. தோட்டத்திலிருந்து பறித்த மாங்காயில் ஊறுகாய் போட்டது. இவன் போய் நெல் குத்திக்கொண்டு வந்தான். அம்மா புடைத்துக் கொழித்து எடுத்து வைத்தாள்.

இவன் காலையில் பழையது சாப்பிட்டுவிட்டுப் போய்க் கோடைப்பருத்தி எடுத்து வருவான். வரும்போது உச்சிப்படை ஆகியிருக்கும் குளித்துவிட்டுச் சாப்பிடுவான். புறப்படும்போது ஆச்சி ஒரு பெரிய பையில் அரிசி போட்டுக் கொடுத்தாள். பிதுக்கு வத்தல், வெண்டைக்காய் வத்தல், சீனியவரைக்காய் வத்தல் எல்லாம் தனித்தனியே ஒரு பழைய சேலையில் முடிந்து கொடுத்தாள். பத்து ரூபாய் நோட்டாய் நாலோ ஐந்தோ அம்மா கையில் கொடுத்தாள். "பிள்ளையளைப் பாத்துக்கோம்மா" என்று சொல்லியனுப்பினாள்.

வழுதூரிலிருந்து நடந்து முக்கூடல் ரோட்டுக்கு வந்து பஸ் பிடித்து ஆலங்குளத்தில் இறங்கி குறுக்கே நடந்தால் புதுச்சத்திரம். புதுச்சத்திரத்தில் ஒரு அண்ணன் வீடு இருக்கிறது. அப்பாவுக்கு ஒன்று விட்ட அண்ணாச்சி மகன். சோமுப்பிள்ளை. கிராம முன்சீப். ஊரில் பெரிய வீடு. கொஞ்சம் நஞ்சை உண்டு. தோட்டக்காடும்கூட. என்னவோ கதை, கவிதையெல்லாம் எழுதுவான். பொருநைச் செல்வன். ஆயிரத்தைக் காலே மாகாணியாக்கிவிட்டு உட்கார்ந்திருக்கிறான். ஆனால் சாப்பாட்டுக்கு கஷ்டம் இல்லை. வியாபாரம், காண்ட்ராக்ட் இப்படி ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போட்டு, குட்டியைத் தூக்கி ஆட்டில் போட்டு எதோ வசதியாகத்தான் இருந்தான். அந்த மதினி ரொம்ப நல்ல மனுஷி . எல்லாம் பட்டு நொந்துபோய் விட்டாள்.

மதினி நகையையெல்லாம் காலி பண்ணிவிட்டான் அண்ணன். பெரியப்பா வைத்துவிட்டுப் போனதில் ஏகமாய்க் கரைத்துவிட்டான். மதினி எதுவும் கேட்க மாட்டாள். பொறுமையாய் இருந்து கொண்டாள். இரண்டு ஆணும் ஒரு பெண்ணும் பிள்ளைகள். சின்ன அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தது. அப்பாவிடமும் சொல்லி வைத்திருந்தான். சாப்பாட்டுக்கு நெல்வந்துவிடும். தோட்டத்திலிருந்து காய்கறி, கீரை கிடைக்கும். சம்பளம் அதிகம் ஒன்றும் இல்லைதான். ஆனால் நிறைய வருமானம் வரும். அந்த மதினி திருநெல்வேலி வரும் போதெல்லாம் கூப்பிட்டுக் கொண்டேயிருப்பாள். மதினிக்கு கொக்கிரகுளம். ஊருக்கு வரும்போதெல்லாம் இவர்கள் வீட்டுக்கு வந்து விட்டுப் போவாள். அம்மா அந்த மதினியிடம் வெகு ஆதரவாக இருப்பாள். அதனால் மதினிக்கு அம்மாமீது ஒரு தனி பாசம்.

அந்தப் பக்கமெல்லாம் நன்றாக மழை பெய்திருந்தது. சாலையில் இருபுறமும் தண்ணீர் கட்டிக் கிடந்தது. வழியில் ஓர் இடத்தில் நீர் அரித்து வெங்காயம் முளை தெரிய இறைந்து கிடந்தது. இவனும் அம்மாவும் பிடுங்கிச் சேகரித்துத் துண்டு நிறையக் கட்டி வைத்துக் கொண்டார்கள். கொஞ்ச தூரம் சென்று, வழியில் நின்று கொண்டிருந்த ஆட்டிடையர்களிடம் காண்பித்து, "இது என்ன வெங்காயம் இப்படி வெள்ளையாக இருக்கிறதே" என்று என்னவோ ஒரு ஆர்வத்தில் கேட்டான். "என்னங்க இது. விஷப்பூண்ட கட்டி எடுத்துட்டு போறீங்க. நல்ல வேளை, ஒண்ணும் தின்னுடலியே. எங்கியாவது இப்பிடி வெங்காயம் கேட்பார் இல்லாம கிடக்குமாங்க" என்று இரக்கப்பட்டுச் சொன்னார்கள். துண்டைப் பிரித்து ஒரு மூலையில் கொட்டிவிட்டு மேலே நடந்தோம்.

அம்மா எப்போதுமே பையத்தான் நடப்பாள். இருட்டுவதற்குள் போய்ச் சேர வேண்டுமே என்று விரைசலாக நடந்தாள். ஊருக்குள் வந்ததும் விசாரித்துத் தெரிந்து கொண்டோம். "சோமுப்பிள்ளை வீடு." கீழ்முனையில் சின்னச்சின்னத் தோட்டங்கள் கடந்து சற்றே ஒதுக்குப் புறமாய். அந்திக் கருக்கலுக்குக் கொஞ்சம் முந்தி. இன்னும் இருட்டவில்லை. வெளிச்சம் மங்கியிருந்தது. பெரிய வீடுதான். ஆனால் எதிர்புறம் இடிந்து சிதிலமான கட்டடம். கள்ளிச்செடிகள் கன்னாபின்னாவென்று முளைத்துக் கிடந்தன. மூணு நாலு கழுதைகள் கவலை இல்லாமல் படுத்துக் கிடந்தன.

இவர்கள் போன சமயம் யாருமே இல்லை என்கிற மாதிரி இருந்தது வீடு. கதவு அடைத்துக் கிடந்தது. அண்ணன் அயலூர் போயிருந்தாலும் மதினியும் பிள்ளைகளும் இருக்க வேண்டுமே. எல்லோரும் குடும்பத்துடன் எதாவது கல்யாணம், சடங்குக்குப் போயிருந்தாலும் சமைந்து வீட்டில் இருக்கும் அக்கா இருப்பாளே, கதவு எப்படி அடைத்துக் கிடக்கும். அம்மாவும் இவனும் திண்ணைப்படி ஏறி முன்கதவுப் பக்கம் நின்று தட்டினார்கள். எந்த சத்தமும் இல்லை. ஜன்னல் வழியே குரல் கொடுத்துப் பார்த்தார்கள். பதிலே இல்லை. அம்மா தயங்கியபடியே நின்றாள். அப்படியே திரும்பி வந்து முன்வீட்டில் விசாரித்தோம்.

"சரசா, அவ்வீட்டுல எல்லோரும் தென்காசில ஒரு கல்யாணம்னு போயிருக்காஹ. வடிவு வீட்ல இருப்பாளே" என்றார்கள்.

மறுபடியும் வந்து அம்மா படியில் உட்கார்ந்துகொண்டாள். இவன் பழையபடி கதவைத் தட்டிப் பார்த்தான். ஆறுமுகம் வாசலில் மண்ணளைந்து விளையாடிக் கொண்டிருந்தான்.

"ஏ(ய்), கருப்பையா. இங்க வா. அக்கா தூங்கிட்டுருக்காளோ என்னவோ. பின்னாலகூடிப் போய் கதவத் தட்டிப் பாக்கியா"
என்றாள் அம்மா.

இவன் முடுக்கு மாதிரி இருந்த சந்து வழியே பின்வாசல் பக்கமாய்ப் போனான். கூடவே அம்மாவும் வந்தாள். நடுவழியில் ஒரு ஆள் வேகவேகமாக ஓட்டமும் நடையுமாக வந்தான். கொஞ்ச வயசுக்காரனாக இருந்தான். தாட்டிகமாக, வளர்த்தியாக இருந்தான். அம்மா சடாரென்று ஒதுங்கிக்கொண்டாள். இவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. பின்கதவு ஒருக்களித்திருந்தது. அம்மா வந்த வழியே திரும்பி விட்டாள். முன்வாசல் கதவு லேசாய் திறந்திருந்தது. அக்கா கதவுப் பக்கம் நின்று கொண்டிருந்தாள். உடம்பு சரியில்லாதது போலத் தெரிந்தாள். அம்மா முகத்தைப் பார்த்ததும் ஒரு இளஞ்சிரிப்புடன் வரவேற்றாள்.

"வாங்க சித்தி. எப்ப வந்தீக. செத்த கண் அசந்துட்டேன். அப்பவே வந்திட்டீகளோ, சித்தப்பா நல்லாருக்காகளா. அண்ணாச்சி, மதினி, பிள்ளையள்லாம் செம்பா கல்யாணத்துக்குப் போயிருக்காக. நாளை, நாளைக்கழிச்சு வந்திருவாக. இவன்தான் சின்னத் தம்பியா. பெரிய தம்பிக்கு என்னைத் தெரியுதா" என்று இவன் பக்கமாகத் திரும்பிக் கேட்டாள்.

இருட்டு கவிந்து வந்தது. ஆனால் பிறைசந்திரனும் நட்சத்திரங்களும் தோன்றியிருந்தன வானத்தில்.

அம்மா முகம் வாடியிருந்தது. வடிவக்காவை ஏறிட்டுப் பார்த்தபடி சொன்னால்: "சமைஞ்ச பிள்ளைய இப்படி ஒத்தையில விட்டுட்டு ஊர்வழிய போனாங்களாக்கும் உங்க அண்ணனும் மதினியும். ஊர்உலகம் இருக்கது தெரியாம இருக்காங்களே."

உள்ளே போய் "லைட்"டைப் போட்டுவிட்டுச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

நன்றி: அவன் - அவள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link