சிறுகதைகள்


கண்ணம்மா

கூடல்.காம்
"விரலுக்குத் தகுந்த வீக்கம்" என்பார்களே, அதுமாதிரி சிறியதாக, அழகாக இருக்கிறது மெந்தகாப் டவுன். நறுவுசா போட்ட கோலம் மாதிரி கடைகள், வீடுகள், வீதிகள், சினிமா கொட்டகை, ஷெல் பெட்ரோல் நிலையம் எல்லாமே கச்சிதம்.

அந்தக் கோடியிலிருந்து பிரியும் ஒற்றையடிச் செம்மண் பாதையில் ஒரு மைல் தூரம் கடந்து போனால் ஜூரு எஸ்டேட் இருக்கிறது. அங்குதான் கண்ணம்மாவின் வரிசை வீடான கூலி லயமும் இருக்கிறது.

சாலைத் திருப்பத்திற்கு வரும்போது சண்முகம் அவளைப் பார்த்துக்கொண்டு நிற்கிறான். அவனருகில் வந்ததும் பிரேக் போடுகிறாள் கண்ணம்மா. ஹேண்டலைப் பிடித்தவாறு சைக்கிளின் இடப்பக்கமும் வலப்பக்கமும் கால்களை தரையில் ஊன்றி நிற்கிறாள்.

சாலைத் திருப்பத்திற்கு வரும்போது சண்முகம் அவளைப் பார்த்துக்கொண்டு நிற்கிறான். அவனருகில் வந்ததும் பிரேக் போடுகிறாள் கண்ணம்மா. ஹேண்டிலப் பிடித்தவாறு சைக்கிளின் இடப்பக்கமும் வலப்பக்கமும் கால்களை தரையில் ஊன்றி நிற்கிறாள்.

"என்ன கண்ணம்மா! எங்கே போயிட்டு வர்றே?"

"கிராணியார் வீட்டுக்குப் போய் சம்பளம் வாங்கிட்டு வர்றேன்...."

"உன் புத்தியே போவாது கண்ணம்மா, எதுக்காக இப்படி ரெண்டு ரெண்டரை மைலு சைக்கிள்ளே போயிட்டு வர்ற? ஒரு நாளு பொறுத்துக்கிட்டா நாளைக்கு அந்தக் கிராணியாரே தோட்டத்துக்கு வந்து எல்லாருக்கும் சம்பளம் போடுவாருல்லே, அப்போ வாங்கிட்டா என்ன?" அவளுடைய பயணக் களைப்பைத் தன்மீது சுமத்திக்கொண்டு சண்முகம் கேட்கிறான்.

"உம்.... நான் ஒண்ணும் சம்பளத்துக்காவ போவலே.... அப்பாவுக்கு இருமல் மருந்து வாங்கத்தான் போனேன். அப்படியே சம்பளத்தையும் குடுத்தாரு, வாங்கிட்டு வந்தேன்". கண்ணம்மா தாவணியால் நெற்றி வேர்வையை ஒற்றிக்கொள்கிறாள்.

அந்த எஸ்டேட்டில் உள்ள எல்லாரிடமும் ஆற்று நீர் மாதிரி அடித்துப் பேசும் கண்ணம்மாவுக்கு சண்முகத்திடம் பேசும்போது மட்டும் ஏதோ ஒருவகை ஒட்டுதல் ஏற்படுகிறது. அது என்ன என்று அவள் விளங்கிக்கொள்ளவே இல்லை. ஆனால் அது ஏன் என்று அவள் மனசையே கேட்டுப்பார்க்கும் நேரம், அவள் தனிமையாக இருக்கும் நேரமும், சண்முகத்தின் நினைவு வருகின்ற நேரமும்தான்.

"ஆமா, சம்பளம் எவ்வளவு எடுத்தே?"

"எரநூத்தி அஞ்சு வெள்ளி எடுத்தேன் சம்முவம்". சண்முகத்தை அவள் "சம்முவம்" என்றுதான் கூப்பிடுகிறாள். அவளை விட ரெண்டு வயதே மூத்த சண்முகத்துக்கும் அவள் அப்படிக் கூப்பிடுவதுதான் பிடிக்கிறது. கண்ணம்மா சம்பளத் தொகையைச் சொன்னதும் அவன் நெற்றி விரிப்பில் கோடுகள் விழுந்து மறைகின்றன. ஒரு பெண் இவ்வளவு சம்பாதிக்கிறாளே என்பதால் எழுந்த வியப்போ, அல்லது ஆண் மகனான தன்னால் இப்படிச் சம்பாதிக்க முடியவில்லையே என்பதால் படிந்த ஆற்றாமையோ தெரியவில்லை. அவன் கண்களில் ஒரு மயக்கமாகத் தோன்றி மறைகிறது.

"ஏங் கண்ணம்மா, இவ்வளவு பணத்தையும் எடுத்துக்கிட்டு இப்படி ஒத்தையிலே வர்றியே, எவனாவது அடிச்சுப் புடுங்கிக் கிட்டுப் போனா என்ன செய்வே?" அவளிடமிருந்து திட்டவட்டமான ஒரு பதிலை எதிர்பார்த்துக்கொண்டே சண்முகம் இப்படிக் கேட்கிறான்.

"அடுத்தவங்க பணத்துக்கு நாம ஆசைப்படாதப்போ, அடுத்தவன் ஏன் நம்மகிட்ட வரப்போறான்? அப்படியே வந்தாலும் இந்தக் கண்ணம்மா கிட்டே ஒன்னும் நடக்காது சம்முவம்"

அவன் சிரித்துக்கொள்கிறான். அவள் சைக்கிளை எடுக்கிறாள். அவன் ஹேண்டலைப் பற்றிக்கொள்கிறான்.

"சரி, சைக்கிளைக் குடு, நான் ஓட்டிக்கிட்டு வர்றேன். நீ பின்னாடி உட்கார்ந்துக்க" என்று அவளிடமிருந்து சைக்கிளை வாக்கிக் கொள்கிறான். ஹேண்டலில் மாட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் பையைக் கையில் எடுத்துக் கொள்கிறாள் கண்ணம்மா. அந்த ஒற்றையடிச் செம்மண் பாதையில் சைக்கிள் வளைந்து செல்கிறது. கண்ணம்மா கவனமாக சைக்கிள் சீட்டைப் பிடித்துக் கொண்டு பின்னால் அமர்ந்திருக்கிறாள். அவளுடைய அந்தக் கவனம் வேறொரு கவனத்தில் சற்றே படுகிறது.

சண்முகம் அந்த எஸ்டேட்டுக்கு வந்து கொஞ்ச நாள்தான் ஆகிறது. சினிமா நடிகன் மாதிரி வாட்டசாட்டமாக இருந்தாலும், கர்வம், ஆடம்பரம் இதெல்லாம் கிடையாது. ஜூரு எஸ்டேட்டுக்கு அவன் வேலைக்கு வந்து கொஞ்ச நாட்களுக்குள் வேலை பேர்மிட் முறை அமலுக்கு வந்துவிடுகிறது.

அவன் இந்த நாட்டிலேயே பிறந்திருந்தும்கூட பிரஜா உரிமை இல்லாமல் இருந்திருக்கிறான் என்ற உண்மை அப்போது தான் அம்பலமாகிறது. ஆடிஓடி அவரையும் இவரையும் பிடித்ததுதான் மிச்சம். அவனுக்கு வேலை உறுதியாகவில்லை.

இங்கு வேலை இல்லை என்றதுமே கப்பல் கப்பலாக இந்தியாவுக்குச் செல்லும் கூட்டத்தோடு அவன் சேரவில்லை.

"கோடிக்கோடியா மக்களைப் பெத்து வைச்சுக்கிட்டு, அவங்களோட தேவைகளையே இன்னும் பூர்த்தி செய்யாம இருக்கிற இந்தியாவுக்கு இதுவேறயா பாரம்". சண்முகம் கொஞ்சம் அழுத்தம் பெறுகிறான். ஆனால் அவனுடைய கேள்விக்குறியான எதிர்காலத்தை நினைத்து நினைத்து கண்ணம்மாதான் மிகவும் சங்கடப்படுகிறாள்.

"பொறந்த நாட்டிலே உறுதியா இருக்கணுங்கிற புத்திகூட இல்லாம இப்படி இருந்திருக்கியே சம்முவம்? உன்னையெல்லாம் எதுலே சேர்க்கிறது?"

"என்னை ஏன் கேட்கிறே கண்ணம்மா, எங்கப்பா அம்மாவைக் கேளு. அவங்கதான் எனக்குப் பொறந்த சூராகூட எடுத்துவைக்காம போயிட்டாங்க...." தன்னைப் பெற்றவர்களை நினைத்து ஒரு கணம் நொந்துகொள்கிறான் சண்முகம்.

"அவங்களைக் கேட்டா, அவங்க அப்பா அம்மாவைக் கேளும்பாங்க.... ஆனா இப்போ உன்னோட சிரமத்தை யாரு கேட்கிறதாம்...?" கண்ணம்மா இப்படிக் கேட்கும்போது பதில் கூடிமுடியாமல் அவன் தலை கவிழ்ந்துவிடுகிறது.

ஓசை பள்ளத்திலிருந்து வந்தாலென்ன, மேட்டிலிருந்து வந்தாலென்ன. அதன் பொருள் சரியானதாக இருக்கும்போது கேட்டவர் மனத்தை அது என்னமாய்க் கவர்ந்து மடக்கிவிடுகிறது.

அந்த ஒற்றையடிப் பாதையில் சைக்கிள் சக்கரம் அழுந்துவதால் ஏற்படும் சர்... சர்ரென்ற ஓசையும், இருமருங்கும் உள்ள கித்தா மரங்களிலிருந்து எழும் பறவைகளின் கூவலும் பதிய முடியாத அளவுக்குக் கண்ணம்மாவின் மனத்தில் ஒரு மௌனம் பரவுவதாக உணர்வு. அவள் அதைக் கலைக்க முனைகிறாள்.

"சம்முவம் பர்மிட்டுக்கு முயற்சி பண்ணுவியா?"

"ஏன் கண்ணம்மா? பிரஜா உரிமை இல்லாதவனுக்குப் பொண்ணு குடுக்க முடியாதுன்னு உங்கப்பா சொல்லிவிட்டாரே, அதுக்காகக் கேட்கிறியா...?" அவன் திரும்பிப் பார்க்காமலே சைக்கிளை ஒட்டிக்கொண்டு கேட்கிறான்.

கண்ணம்மா நிமிர்ந்து அவன் முதுகைப் பார்க்கிறாள். கண்களில் நீர் பனித்துவிடுகிறது. "அப்பா மேலே கோவப்படாதே சம்முவம். வேலை வெட்டி பார்க்க முடியாத ஒருத்தனுக்கு யாருதான் பொண்ணு குடுப்பா?" அவள் யாருக்காகவோ ஆறுதல் சொல்கிறாள்.

"நான் ஒண்ணும் அவருமேல் கோவிச்சுக்கலே கண்ணம்மா, ஆனா நாளைக்கி நான் ஒரு திட்டத்தோட வருவேன். அதுக்கு நீ ஒத்துக்காட்டிப்போனாத்தான் உன் மேல கோவமா வரும்". பொதிமணலில் சக்கரம் மாட்டி சைக்கிள் புரண்டுவிடாதவாறு மெதுவாகப் பிரேக் போட்டபடி அவன் கூறுகிறான்.

"என்னா திட்டம் சம்முவம்...?" கண்ணம்மா ஆவலோடு கேட்கிறாள்.

"அதை நாளைக்கி சொல்றேனே".

வரிசை வீடுகள் தெரிகின்றன. அந்த வரிசையில் முதல் வீடு ஆயாம்மமாவுடையது. அவன் சைக்கிள் நிறுத்துவதற்கு முன் கண்ணம்மா கீழே இறங்குகிறாள். அவனும் வண்டியை விட்டு இறங்குகிறான். சைக்கிள் சத்தம் கேட்டதுமே ஆயாம்மா தலையை நீட்டிப் பார்க்கிறாள். கண்ணம்மாவைக் கண்டதும் எழுந்து வெளியே வருகிறாள்.

"ஆயாம்மா.... இந்தா கத்தக்காம்பு".

"என்ன ஆயாம்மா, வெறும் கத்தக்காம்பா திங்கிறியா?" என்று சண்முகம் கிண்டல் பண்ணுகிறான்.

"யாருடாப்பா, சம்முவமா? நான் எங்கே திங்கிறேன்... வெத்தலையோட போட்டுக் கொதப்பித் துப்புறேன். எனக்கென்ன பல்லா இருக்கு? நான் என்ன உன்மாதிரி இளவட்டமா?" ஆயாம்மா பேச்சில் மிகவும் கெட்டிக்காரி என்பதை அவன் மொழியின் அழகு காட்டுகிறது.

"முதல்லயே கண்ணம்மாகிட்டே சொல்லியிருந்தா உனக்கு ஒரு ஒரலு வாங்கியாந்து குடுத்திருக்குமே ஆயாம்மா?" கிழவியை மேலும் சீண்டுகிறான் சண்முகம்.

"அதெல்லாம் ஒண்ணும் வேணாண்டாப்பா, நீங்க ரெண்டு பேரும் சீக்கிரமா கல்யாணத்தைப் பண்ணுங்க. என் கண்ணம்மா உன்னை இடிக்கிற இடியிலே அவளிட்டே ரெண்டு வெத்தலையைக் குடுத்தா அதையும் சேர்த்து இடிச்சுக் குடுத்துடுவா".

"ஆயாம்மா, நீ என்னா பேச்சை எங்கேயோ சுத்தி வளைக்கிறே" என்று சண்முகம் கேட்கும்þ‘து ஆயாம்மா பொக்கை வாயைத் திறந்து சிரிக்கிறாள். வெட்கத்தால் தலைகவிழ்ந்த வண்ணம் பிளாஸ்டிக் பையை சைக்கிள் ஹேண்டலில் மாட்டுகிறாள் கண்ணம்மா.

"அப்போ நான் வர்றேன் ஆயாம்மா. கண்ணம்மா, நாளைக்கிப் பார்ப்போம்" என்றவாறு வேறு திசையில் செல்கிறான் சண்முகம்.

அவனுக்கு வேறு யாரும் இல்லை. சிறிய வயதிலேயே அவனுடைய அப்பா, அம்மா பெரிய ஊருக்குப்போய்விட்டதால் அவன் தனி மனிதனாகத்தான் இருக்கிறான். அந்த எஸ்டேட்டில் இருக்கும் வள்ளுவர் படிப்பகத்தை நோக்கி அவன் நடை தொடர்கிறது.

அடுத்த லயத்திலிருக்கும் தன் வீட்டை நோக்கி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போகிறாள் கண்ணம்மா. கோடி வீட்டுலிருக்கும் அம்மாசிக் கிழவனின் அந்தக்காலத்துப் பாட்டுக் குரல் கேட்கிறது. கள்ளுத் தண்ணியோ அல்லது லாலாந் தண்ணியோ கொஞ்சம் கூடிவிட்டால் அம்மாசிக் கிழவனுக்குச் சுதியும் கூடி விடும். மைக் இல்லாமலே முக்கால் மைலுக்குக் கேட்கும் அவனுடைய "மைக்ரோபோன்" தொண்டை திறந்து விடும்.

அந்த மாதிரி சமயங்களில் அவன் கண்ணம்மாவைப் பார்த்து விட்டால் அவளுக்காக ஒரு பாட்டைப் பாட ஆரம்பித்துவிடுவான். இப்போதும் அவன் குரலைக் கேட்டதும் அவளுக்கு அந்தப் பாட்டு ஞாபகத்துக்கு வருகிறது.

"கள்ளுக்கடை ஓரத்திலே கச்சான் கடை நம்மகடை
கச்சான்வாங்க வந்தகுட்டி கறுத்தகுட்டி நம்ம குட்டி"

நினைவின் மருவலில் கண்ணம்மா சிரித்துக் கொள்கிறாள். அவள் அப்படி ஒன்றும் கறுப்பு அல்லை, மாநிறம்தான். என்றாலும் அம்மாசிக் கிழவனின் பாட்டு அவளுக்கு ஆத்திரமூட்டுவதேயில்லை.

அதைத் தாண்டி "ட" வடிவில் அமைந்த அவளுடைய லயத்துக்குச் செல்கிறாள். வாசலில் அட்டைப் பெட்டியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஒட்டுப் பாலின் நெடி என்னவோ மாதிரி பரவி நிற்கிறது. அது அவளுக்குப் பழகிவிட்ட வாடைதான். அத்தர் வியாபாரிக்கு வாசனையில் ஏற்பட்டதைப் போன்று ஒரு பரிச்சியம்.

சைக்கிளை ஓரத்தில் நிறுத்திவிட்டு பையும் கையுமாக உள்ளே நுழைகிறாள். ஒழுங்காக வாரிவிடப்படாத தலை மாதிரி ரோத்தான் பிசிருகள் நீட்டிக்கொண்டிருக்கும் பழைய மூங்கில் நாற்காலியில் உட்கார்ந்து இருமிக்கொண்டிருக்கிறான் மாணிக்கம். பனியன் போடாத உடம்பில் நெஞ்சு கூடுகட்டிப் போய் இருக்கிறது. மகளை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துக்கொள்கிறான். அவளிடம் இருக்கும் ஏதோ ஒரு சாயலைப் பார்க்கும் போதெல்லாம் உணர்வில் கசப்புத்தட்டி முகத்தில் சுருக்கங்களாக விழுந்து மறைகின்றன.

கண்ணம்மாவின் அம்மா அஞ்சலை தான் சேர்த்து வைத்திருந்த நகைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு ஒருநாள் எவனுடனோ ஓடிப்போனதிலிருந்து மாணிக்கம் வெண்கலமாக மாறிக்கொண்டிருக்கிறான். வெண்கலமாவது துலக்கினால் கொஞ்சும் ஒளி வீசுமே! துலக்கத் துலக்கத் துலங்காமல் இருப்பதை என்னவென்று சொல்வது? கூழாங்கல்லோ? அதுகூட வடிவில் குறையாமல் இருக்குமே.

இருமிக்கொண்டிருக்கும் தந்தையிடம் மருந்துப் புட்டியை நீட்டுகிறாள் கண்ணம்மா.

"இந்தாப்பா.... கிராணி குடுத்தாரு. அப்படியே போத்தலோட ஒரு மொடக்கு குடிச்சுக்க... இருமல் நிக்கும்".

"ஏம்மா, சம்பளம் வாங்கிட்டியா?

"இம்....".

"ஒரு வெள்ளி குடேன்".

"ஏன்? லாலாந்தண்ணி குடிக்கணுமா?" கண்ணம்மா இப்படிக் கேட்கும்போது எதுவும் சொல்லாமல் இருக்கிறான் தந்தை.

"நீ ஒன்னும் லாலாந்தண்ணியைக் குடிச்சுட்டு சாவவாணாம், அம்மாசிக் கிழவன்கிட்டே காசு குடுத்தனுப்புறேன், கள்ளுத் தண்ணி வாங்கிட்டு வரட்டும்.... அதைக் குடி. அதாச்சும் இருமலுக்கு நல்லது" என்று அடுக்களைப் பக்கம் செல்கிறாள். கள்ளச் சாராயம் குடித்துக் குடித்து அதனால்தான் தன் தந்தை இப்படி எலும்புக் கூடாகிவிட்டார் என்பது அவளுடைய நம்பிக்கை.

மாணிக்கம் லேசாகச் சிரித்துக் கொள்கிறான். இருமல் வந்ததிலிருந்து இருண்டு மாதமாக வேலைக்குப் போகமுடியவில்லை. அதற்கு முன்பெல்லாம் நெனைச்சா தண்ணிதான். இப்போது கண்ணம்மாவின் சம்பாத்தியத்தில் எல்லாம் நடக்கவேண்டும். கண்ணம்மா பால்வெட்டப்போவதால் வீட்டில் சமையல் கிடையாது. ஆயாம்மா வீட்டிலிருந்து அடுக்குச் சட்டியில் சாப்பாடு வந்துவிடும். அதற்கு மாதம் இவ்வளவென்று போய்விடும்.

மாணிக்கம் சாப்பிட்டுவிட்டு மூடி வைத்திருந்து சாப்பாட்டின் முன் அமர்கிறாள். அவள் நினைவு சண்முகத்தை நாடி ஒடுகிறது.

ஏழைகளுக்கே உள்ள வீறாப்பும் வைராக்கியமும் மாணிக்கத்திடம் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறது. சண்முகத்துக்கு எப்படிக் கண்ணம்மாவைக் கொடுக்கப்போகிறான்? மாரியப்பன் மண்டோர்கூட எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டார். இந்த விஷயத்தில் மாணிக்கம் அவன் இருமலைப்போல் பிடிவாதமாகவே இருக்கிறான்.

ஆரம்பமாகும் எல்லாவற்றுக்குமே முடிவு என்று ஒன்று நிச்சயம் இருக்குமாமே! அப்படியானால் கண்ணம்மாவின் பிரச்னைக்கும் ஒரு முடிவு நிச்சயம் கிடைக்குமோ! அது எப்போது?

"நாளைக்கி என்னமோ சொல்லப்போறதா சம்முவம் சொன்னுச்சே!" கண்ணம்மாவுக்கு அன்றையப்பொழுது நினைவுகளாகவே கழிகிறது.

மறுநாள் கண்ணம்மா வேலைக்காட்டுக்குப் போகிறாள். அன்று அவளுக்கு இரண்டு நிரை கிடைக்கிறது. சிட்டாகப் பறந்து வேலை செய்கிறாள். தனக்காக ஒதுக்கப்பட்ட அத்தனை மரங்களையும் வெட்டிவிட்டு பிறகு, பாலெடுத்துக்கொண்டு பால் வாளிகளைக் காண்டா போட்டுத் தூக்குகிறாள். ஸ்டோரை நோக்கிச் செல்லும்போது சண்முகம் எதிர்ப்படுகிறான். ஆவலோடு அவனை நோக்குகிறாள். ஆனால் அவன் சொல்லும் விஷயம் அவளுக்கு வேம்பாகக் கசக்கிறது.

"இங்கேயே இருந்தா எனக்கும் வேலை கெடைக்கப்போறதில்லை.... உங்கப்பா உன்னையும் எனக்குக் குடுக்கப்போறதில்லே. அதனாலே நாம ரெண்டு பேரும் கோலாலம்பூருக்குப் போயிடுவோம். அங்கே புதுசா பெரிய பெரிய கம்பெனிகள்லாம் கட்டுறாங்களாம். அங்கே போனா நிச்சயமா நல்ல வேலை கெடைக்கும். நாம்பலும் அங்கே போய் ரிஜிஸ்டல் கல்யாணம் பண்ணிக்கலாம். என்ன சொல்றே?"

சண்முகத்தின் நேரடியான இந்தக் கேள்வி அவளைத் திக்கு முக்காட வைக்கிறது. தோளில் இருந்த காண்டா வாளியைப் பாதை ஓரமாக வைத்துவிட்டு கைகளைத் தேய்த்து அதில் ஒட்டிக் கொண்டிருந்த கித்தாப்பாலை எடுத்துக்கொண்டிருக்கிறாள் கண்ணம்மா.

சண்முகத்துக்க ஏதோதோ மாற்றுவழிகள் சொல்ல வேண்டும்போல் அவளுக்குத் தோன்றுகிறது. ஆனால் உருப்படியாக எதுவும் வர மறுக்கிறது. திசைகாட்டி இல்லாத பாட்டைச் சந்திப்பில் நின்று குழம்புவது போல சற்று நேரம் தவிக்கிறாள் கண்ணம்மா. அவனோடு வாழவேண்டும் என்கிற ஆசையும் அப்பாவின் பிடிவாதமும் துலாக்கோலின் சரிசமமான எடையாக நிற்கின்றன. மனத்தில் இருக்கும் களத்தை எந்தப்பக்கம் வைப்பது?

ஏதோ ஒர் உந்தலில் அவனிடம் சரியென்று தலை ஆட்டுகிறாள். தராசுத் தட்டின் ஒரு பக்கம் இறங்கிவிட்டதோ? புறப்படுவதற்கான நாள் வகுக்கப்படுகிறது. புதிய தெம்போடு சண்முகம் வந்த வழியே திரும்பிச் செல்கிறான்.

ஸ்டோரில் பாலைக் கொண்டுபோய் நிறுத்ததும் முதல் வேலையாக ஆயம்மாவிடன் செல்கிறாள். அவளிடம் ஒன்று விடாமல் அனைத்தையும் சொல்கிறாள். நல்லதோ கெட்டதோ, ஆயம்மாதான் அவளுக்குத் தாய்மாதிரி.

"இந்தக் காலத்துப் புள்ளைகளெ நம்பிப் போகக்கூடாதடியம்மா! அது இதுன்னு சொல்லி நடுத்தெருவிலே கொண்டு போய் விட்டுடுவானுக"! உலகாயதத்தையும் உள்ளதையுமாக ஆயம்மா கூறிவைக்கிறாள்.

"சம்முவத்தைப் பாத்தா அப்படித் தோனலெ ஆயம்மா. பொம்பளைங்க வேலையில்லாம இருந்துடலாம். ஆனா ஆம்பிளைங்களாலே அப்படி இருக்க முடியாது. அதனாலதான் சம்முவத்தோட போறதுன்னு முடிவு பண்ணிட்டேன்". ஆயம்மாவிடம் ஆதரவான வார்த்தைகளை எதிர்பார்த்துக்கொண்டே பேசுகிறாள் கண்ணம்மா.

"என்னமோம்மா ஆண்டவன் ஒனக்கு நெறஞ்ச அறிவைக் குடுத்திருக்கான். நீயாத்தான் இதுலயெல்லாம் யோசிச்சு நட.ந்துக்கணும்". கண்ணம்மாவின் முன் நெற்றியில் விழுந்து கிடக்கும் முடியைக் காதோரத்துக்கு ஒதுக்கிவிடுகிறாள் ஆயம்மா.

"எல்லாத்துக்கும் ஒரு முடிவோட தான் கிளம்புறேன். நீ ஒண்டிதான் எனக்கு நம்பிக்கையான மனுசிங்கிறதுனாலெ உங்கிட்டே எல்லா விசயத்தையும் சொல்லிட்டுப் போறேன் ஆயம்மா. கோலாலம்பூர்ல சம்முவத்துக்கு வேலை கெடைச்சதும் நாங்க ரெண்டு பேரும் அஙகேயே ரிஜிஸ்டர் பண்ணிக்கிட்டு அப்புறமா வந்து அப்பாவையும் கூட்டிக்கிட்டுப் போவலாம்னு நெனைச்சிருக்கேன். அதுவரைக்கும் இந்தத் தோட்டத்திலே கசமுசான்னு எதுவும் நடக்காம இருக்கணும்னுதான் மண்டோர் ஐயாகிட்டே பினாங்குக்கு சொந்தக்காரங்க வீட்டுக்குப் போறதாச் சொல்லி ரெண்டு மாசம் லீவு வாங்கிக்கப்போறேன். அது வரைக்கும் அப்பாவுக்கு சாப்பாட்டை நிறுத்திடாம குடு ஆயம்மா. ரெண்டு ஒன்னு செலவுக்குக் கேட்டாலும் குடு. நான் வந்ததும் தந்திடுறேன்" என்று ஆயம்மாவின் கையைப் பிடித்துக்கொள்கிறாள் கண்ணம்மா. ஆயம்மா பொக்கைவாய்ச் சிரிப்போடு ஆசீர்வதிக்கின்றாள்.

விடிய விடிய தூங்காமல் சிம்னி விளக்கருகில் இருமிக் கொண்டிருக்கும் மாணிக்கத்துக்கு என்னென்னமோ நினைவுகள் எழுந்து அவனைப் பேயாய் ஆட்டுகின்றன. மனைவி அஞ்சலையைப் போல் தன் மகளும் ஒருநாள் இப்படி ஓடிப்போவாள் என்று மாணிக்கம் எதிர்பார்க்கவே இல்லை. நினைவுக்கு மாறாக ஒன்று நடந்துவிடும்போது நெஞ்சு எப்படித் தவித்துப்போகிறது!

குட்டையில் ஊறிய மட்டை என்று சொல்கிறார்களே, அது அனுபவப்பூர்வமான வார்த்தைகள்தாமோ!

கருக்கலோடு சிம்னி விளக்கை அணைத்துவிட்டு நெஞ்சைப் பிடித்துக்கொண்டே மாரியப்பன் மண்டோர் வீட்டுக்குச் செல்கிறான் மாணிக்கம். அவரிடம் சொல்லி, தன் அவமானத்துக்கு மாற்றுத் தேட வேண்டும்.

ஆனால் மாரியப்பன் மண்டோர் முந்திக்கொள்கிறார்.

"என்ன மாணிக்கம், உம்மவ கண்ணம்மா பினாங்குக்குப் போறதாச் சொல்லி ரெண்டு மாசம் லீவு வாங்கிட்டுப் போவுது!"

எதிர்பாராத இந்த விபரத்தால் சற்றே தடுமாறிவிடுகிறான் மாணிக்கம். பிறகு சுதாரித்துக்கொள்கிறான். "ஆமாங்க மண்டோர் ஐயா, அதை உங்ககிட்டே சொல்லிட்டுப் போவலாம்ணுதான் வந்தேன்". மாணிக்கம் தட்டுத்தடுமாறி கூறி முடிக்கிறான். மண்டோரிடமிருந்து ஒரு கடகடகச் சிரிப்பு வருகிறது.

"உனக்கு முந்தியே உம்மவ சொல்லிடுச்சு. உனக்கு இப்ப இரும எப்படி இருக்கு?"

"அப்படியேதாங்க ஐயா இருக்குது. ராப்பட்டா பெரிய தொந்தரவாப்போவுது" சொல்லும்போதே அவனுக்கு இருமல் வந்துவிடுகிறது.

"உடம்பெ பார்த்துக்க, தெம்ப இருந்துச்சுன்னா வேலைக் காட்டுக்குப் போயிட்டுவா" நூறு பேருக்கு மேல் வைத்து வேலை வாங்கும் மண்டோரின் பொறுப்புத்தனம் அவர் பேச்சில் வெளிப்படுகிறது.

"சரிங்க ஐயா, நான் வர்றேனுங்க" என்று மாணிக்கம் திரும்புகிறான். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிய முடியாத குழப்பமுமூ அவமானமும் இப்போதைக்கு இல்லை; இன்னும் இரண்டு மாதத்துக்குப் பிறகுதான் என்ற ஆறுதலும் அவன் நடையில் கலந்து பின்னுகின்றன.

மெந்தகாப்பில் ஒர சிறிய வட்டத்துக்குள் இருந்த கண்ணம்மாவுக்குக் கோலாலம்பூர் நகரம் புத்தம் புதிதாக, பெரும் புதுமையாகத் தோன்றுகிறது. கூண்டிலிருந்து வெளிப்பட்ட சிட்டுக்குருவி மரத்துக்கு மரம், கிளைக்குக் கிளை தாவித்தாவி அமருமே, அப்படி ஒரு குதூகலம் அவளுக்கு. பெரிய பெரிய கடைகளுக்கு முன்னும் பேங்கு கட்டிடங்களுக்கு முன்னும் நின்று நின்று வேடிக்கை பார்க்கிறாள்.

ஏரிகளும் பங்களாக்களும் நிறைந்து பூமலையும், மிருகக் காட்சி சாலையும், தேசியப் பொருட்காட்சி நிலையமும், சதா கூட்டம் மொய்த்துக்கொண்டே இருக்கும் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையின் வரிசைக்கடைகளும் பதினைந்து நாட்கள் அவர்களின் பார்வைக்கு விருந்தாகின்றன.

இந்தப் பதினைந்து நாட்களில் ஒருநாள் கூட அவளுடைய பெண்மைக்குச் சோதனையாக அமைவில்லை என்றவரைக்கும் அவளுள் ஒரு நிம்மதி பிறக்கிறது. அந்த நிம்மதியில் சண்முகத்தின் மேல் அவள் வைத்திருக்கும் மதிப்பு மேலும் ஒருபடி உயர்கிறது.

ஒரு பெரிய வீட்டில் தற்காலிகமாக வாடகைக்குப் பிடித்த ஓர் அறையே கொண்ட ஒண்டுப் பகுதியில் இன்னும் எத்தனை நாட்களைக் கழிப்பது? கையோடு கொண்டுவந்திருந்த சம்பளப் பணத்தில் முக்கால்வாசி தீர்ந்துவிடுகிறது. அந்தக் கவலையும் அவ்வப்போது எழுந்து கண்ணம்மாவை உலுக்குகிறது.

சண்முகம் வருகிறான். அவன் முகத்தில் ஒரு பெரிய மலர்ச்சி தெரிகிறது. புதிதாக வாங்கிவந்த துணிமணிகளும் பழங்களும் அவன் கையில் பிளாஸ்ட்டிக் பைக்குள் முண்டும் முடிச்சுமாக இருந்துகொண்டு எட்டிப்பார்க்கின்றன. நல்ல சேதிதான் கொண்டு வருகிறானோ?

"கண்ணம்மா, இன்னைக்கு ஒரு கம்பெனி மேமேஜரைப் பார்த்தேன். அவருகிட்ட நம்ப கதையைப் பூரா சொன்னேன். அவரும் எனக்கு வேலை தர்றதாச் சொல்லி அட்வான்ஸா அம்பது வெள்ளிகூட குடுத்தாரு.... இதோ பாரு உனக்கு ஒரு போர்வை, ஸ்வெட்டர் எல்லாம் வாங்கிவிட்ட மாணவனைப் போல் சண்முகம் கூறுகிறான். கண்ணம்மாவுக்கு ஆச்சர்கமாவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.

"அவருஉன்னைக்கூட பார்க்கணும்னு சொன்னாரு கண்ணம்மா. இன்னைக்கு இங்கே வந்தாலும் வருவாரு. வந்தாருன்னா நீயும் அவருக்கிட்ட அணுசரனையாப் பேசி உதவச் சொல்லு. வேலை கெடைச்சுடுச்சுன்னா அடுத்த வாரமே நாம் ரிஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கலாம்". கனவு மயக்கத்தோடு கூறுகிறான் சண்முகம்.

"உனக்கு வேலை வாங்கித் தர்ற மனுசன்னா அவர் தெய்வம் மாதிரி சம்முவம். எனக்கும் அவரெப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடணும்னு தோனுது". அவளுடைய வாழ்க்கையில் விழுந்திருந்த முடிச்சுக்கள் சாரணியர் முடிச்சுக்களைப் போல் சரசரவென்று தானாகக் சுழன்று விழும் உணர்வு.

பொழுது மளமளவென்று ஓடுகிறது. நிரந்தரமாகத் தங்குவதற்கு ஏற்ற இடமாகப் பார்த்து வருவதற்காக வெளியில் செல்கிறான் சண்முகம்.

சற்று நேரத்திற்கு பிறகு கதவு தட்டப்படுகிறது. கதவு திறக்கப்படுகிறது. தன் எதிரில் நிற்கும் ஆள்தான் சண்முகம் சொன்ன மேனேஜர் என்று தெரிந்துகொள்கிறாள் கண்ணம்மா.

"வாங்க...."

"நீதான் அந்தப் பையன் சண்முகம் சொன்ன கண்ணம்மாவா" என்று கேட்டவாறு உள்ளே நுழைகிறார் வந்தவர்.

"ஆமாங்க.... சம்முவம் உங்களைப் பத்தி ரொம்ப சொன்னுச்சு. உங்க உதவிய நாங்க என்னைக்கும் மறக்கமாட்டோம்".

"என்ன பெரிய உதவி. எல்லாம் உனக்காகத்தான் செய்றேன்" என்று அறைக்குள் பார்வையை மேயவிடுகிறார் வந்தவர்.

பேச்சின் ஆரம்பமே என்னவோபோல் இருக்கிறது கண்ணம்மாவுக்கு. அகத்தழகு முகத்திலே என்று ஆயம்மா அடிக்கடி சொல்வது அவள் நினைவுக்கு வருகிறது. சற்றே ஒதுங்குகிறாள்.

"ஏன் ஒதுங்கிப் போறே?" என்று ஓரடி முன்னே எடுத்து வைக்கிறார் வந்தவர்.

"இது நல்லதில்லேங்க" என்று மேலும் ஒடுங்குகிறாள் கண்ணம்மா.

"ம்.... உன்னை மாதிரி எத்தனையோ எஸ்டேட் புள்ளைகளெப் பாத்துருக்கேன். நீ சும்மா இது பண்ணாதே" என்று அவர் சொன்னதுதான் போதும். உடம்பெல்லாம் ஜிவ்வென்று கொதிக்கிறது கண்ணம்மாவுக்கு.

"சீ... எஸ்டேட்டுனா எளப்பமாவா நெனைச்சே? அங்கே உள்ளவளுக்கும் மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாம் இருக்கு தெரிஞ்சுக்க, கிட்டே வந்தே, தோலை உரிச்சுப்புடுவேன்...." கண்ணம்மா திடீரென்று காளியாக மாறிவிடுகிறாள்.

"நான் அம்பது வெள்ளி கொடுத்திருக்கேன் தெரியுமில்லே...." அடிபட்ட நாயாக உறுமுகிறார் வந்தவர்.

"பிசாசே! இதுக்காகவா குடுத்தே? உன் காசும் நீயும் என் கால் தூசுக்குச் சமம்" என்று கூறியவள், பட்டென்று தன் கழுத்தில் கிடக்கும் சங்கிலியை அறுக்கிறாள்.

"இந்தா இது நீ குடுத்த வெள்ளிக்கு மேலே இருக்கும். எடுத்துக்கிட்டு இந்த எடத்தை விட்டுப் போயிடு. இல்லே...." என்று சங்கிலியை அவன் மீது வீசி எறிகிறாள். அது அவர் கை மடிப்பில் போய் விழுகிறது. அடுத்தகணம், இதுவரை எங்கோ பதுங்கியிருந்த ரப்பர் பால்வெட்டும் உளி ஒன்று அவள் கையில் மின்னுகிறது.

சங்கிலியை எடுத்துக்கொண்டு திரும்பிக் பார்க்காமல் போகிறார் வந்தவர். நெற்றியில் அரும்பு கட்டியிருந்த வியர்வை பொட்டிலும் கன்னத்திலுமாக வழிகிறது கண்ணம்மாவுக்கு. இதுவரை இருந்த ஆவேசம் போய், இப்போது உடலெல்லாம் நடுங்குகிறது.

சண்முகம் வருகிறான். அழுகையும் ஆத்திரமுமாக அவனிடம் பொங்கி வழிகிறாள் கண்ணம்மா.

"இதோ பாரு சம்முவம், இந்தப் பெரிய ஊருக்கு வந்து வெக்கங்கெட்டதனமாக நடந்து, அதனாலே கெடைக்கிற வேலை உனக்கு வேணவே வேணாம். பேசாம என்னோட எஸ்டேட்டுக்கே வந்திடு. அங்கே நான் பால் வெட்டி சம்பாதிக்கிற சம்பாத்தியத்திலே உன்னையும் வைச்சுக் காப்பாத்துவேன். உனக்குப் பொறக்கிற புள்ளைங்களையும் காப்பாத்துவேன். ஆனா நீ மட்டும் எஸ்டேட்டுன்னா எளப்பமா நெனைக்கிறவங்க கூட்டத்திலே சேர்ந்திடாதே".

கண்ணம்மாவின் இந்தப் பேச்சும், அவள் கையிலிருக்கும் உளியும், அந்த அறையில் புதிதாக வீசிக்கொண்டிருக்கும் அத்தர் வாடையும் நடந்ததை அவனுக்கு உணர்த்துகின்றன. அதை உணரும்போது அந்த உணர்வையும் மீறி ஏதோ ஒன்று அவன் உடலை முறுக்குகிறது.

"என்னை மன்னிச்சிடு கண்ணம்மா...." அவமானத்தால் அழுகையே வந்துவிடும்போலிருக்கிறது அவனுக்கு.

"சம்முவம், நாளைக்கே நாம ரிஜிஸ்டர் பண்ணிட்டு மெந்தகாப்புக்குப் போவோம்.... என்ன சொல்றே?" கண்ணம்மாவின் தீர்க்கமான கேள்விக்குத் தலையசைக்கிறான்.

மறுநாள் ரிஜிஸ்டர் ஆபீசில் உள்ள பியூன்கள் சிலருடைய உதவியோடு அவர்கள் பதிவுத் திருமணத்துக்கு ஒரு நாள் குறிக்கப்படுகிறது. அந்த நாள்வரை அங்கே இருக்க அவளுக்குப் பிடிக்கவில்லை. அன்று மாலையே அவர்கள் மெந்தகாப்புக்குச் செல்கின்றனர்.

அந்த ஒற்றையடிச் செம்மண் பாதையின் விளிம்பில் கூலி லயம் தெரிகிறது. அவ்வழியாக நடந்துவரும் மாரியப்பன் மண்டோர் கண்ணம்மாவைப் பார்த்துவிடுகிறார்.

"என்ன கண்ணம்மா, ரெண்டு மாசம் லீவு வாங்கினே! ஒரு மாசம் முடியிறத்துக்குள்ளே திரும்பிட்டே?" அவர் கேள்வியில் கடகடச் சிரிப்பும் கலந்துவிடுகிறது.

"அதெல்லாம் விவரமா வீட்டுல வந்து சொல்லறேன் மண்டோர் ஐயா. நாளைக்கி நான் வேலைக்காட்டுக்கு வரலாங்களா?" என்று கண்ணம்மா அமைதியாகக் கேட்கிறாள்.

"ஓ.... தாரளமா வாபுள்ளே. வீட்டுல இருந்துக்கிட்டு என்ன பண்ணப்போறே....?" என்று கேட்டவாறு சண்முகத்தை ஜாடையாகப் பார்த்துவிட்டுப் போகிறார்.

லயத்திலிருந்து ஆயம்மா எட்டிப்பார்த்துவிட்டு வெளியே வருகிறாள். சண்முகத்தையும் கண்ணம்மாவையும் ஒன்றாகப் பார்த்ததில் அவளுக்குச் சற்று ஆறுதலாக இருக்கிறது.

"என்ன ஆயம்மா! சொகமா இருக்கியா?" என்று நலம் விசாரிக்கிறான் சண்முகம்.

"சொகத்துக்கு என்னடாப்பா கொறச்சல்" என்று அவனுக்குப் பதில் கொடுக்கிறாள்.

"என்னடி கண்ணம்மா! கோலாலம்பூரு பிடிச்சுப் போச்சா?" என்று கண்ணம்மாவைக் கேட்கிறாள்.

"அதை ஏன் ஆயம்மா கேட்கிறே! எல்லாரும் உன்னை மாதிரியும் என்னை மாதிரியும் இருப்பாங்கன்னு நெனைச்சேன். ஆனா போய்ப் பார்த்தாதான் தெரியுது, வேற மாதிரி மனுசங்களும் இருக்காங்கன்னு" என்று சொல்லிவிட்டு சண்முகத்தை ஜாடையாகப் பார்க்கிறாள் கண்ணம்மா. அவன் வானத்தை வெறித்துக்கொண்டிருக்கிறான்.

"சொல்றது சின்னாங்கு புள்ளே... செஞ்சுப் பார்த்தாத்தான் அதுல இருக்கிற கஷ்டம் தெரியும். நான் ஒங்கப்பன்கிட்டே எல்லாம் சொல்லி சரிக்கட்டி வைச்சிருக்கேன். நீ தைரியமா சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வீட்டுக்குப்போ புள்ளே". பொக்கை வாயில் நமட்டுச் சிரிப்பு சிந்த ஆயம்மா இருவரையும் பார்க்கிறாள். தோட்டத்திலிருக்கும் இந்த நல்ல மனசை நோக்கிப் பார்வையாலேயே வணங்கினர் கண்ணம்மாளும் சண்முகமும்.

நன்றி: நவமலர்கள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link