சிறுகதைகள்


கிணறு

கூடல்.காம்
எப்பொழுதுமாய் அமர்ந்து படிக்கிற அந்தப் பாறையின் ஓரத்துக் குழியில்....வயிறார மேயவிட்ட ஆடுகளை வீட்டுக்குத் திருப்பிவிடுகின்ற முருகப்பன் கூழெடுத்துப் போன தன் மூங்கில் குடாப்பில் கொண்டுவந்தத் தண்ணீரை ஊற்றிப் போனதைப் பார்த்த மல்லிகாவிற்குத் தொடர்ந்து படிக்க மனசு வரவில்லை.

பாறையை உராய்ந்து கிளம்பிய பனை முதுகு சாய்த்துக் கொள்ள எதவாய் வழக்கம்போலவே அவளுக்கு ஒத்துழைக்கத்தான் செய்தது. ஆனாலும் புத்தகத்தை மூடிவிட்டாள்.

பனை ஓலைகளின் கூர்களில் கூடுகள் கட்டியுள்ள குருவிகளுக்கான விடாய் தீர்க்கும் முருகப்பனின் புஞ்சை மனசிற்கு இடையூறு செய்தல் தகாதெனக் கருதி எழுந்து.... பாறையிலிருந்து கொல்லைக்குள் குதித்து கொஞ்சம் நடந்து திரும்பினாள்.

பிலிபிலியென்று குருவிகள் ஒருசேர ஓடிவந்து குழியில் ஊற்றிய தண்ரைக் குடித்துவிட்டு இறக்கைகளை நனைத்து நனைத்துச் சிலுப்புவதைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

தழைந்து வளர்ந்த துவரஞ்செடிகளின் பிளந்த மஞ்சள் பூக்களில் குடைந்து வெளியேறும் வண்டின் மிரட்டலைப் புத்தகத்தைக் கொண்டு விரட்டத் திரும்பியவள் விக்கித்து நின்றாள்.

அவன்.

பனையைப் பிடித்து உலுக்கும் பேய்க்காற்றாய் அவனது பார்வை. அழுந்தப் பாதங்கள் ஊன்றிச் சமாளித்தாள். நடுங்கிய அதிர்வுகளுக்குள் மழை முளைத்தது. உதடுகளின் மேல் தாவணி கொண்டு ஒற்றிக் கொண்டாள். எச்சில் விழுங்கினாள்.

ஏய்...கிட்டவராத. நாளைக்கு நேர்முகத் தேர்வுக்கு சென்னைக்குப் போகணும். உன்னை நம்பித்தா என்னெ அனுப்புறதா அப்ப(ன்) ஆத்தா சொல்லியிருக்காங்க. இப்பிடி ஏதாவது கோக்குமாக்கு செஞ்சி அத கெடுத்துடாத.

எனக்கு நீ...உனக்கு நாங்கறது ஊருக்கே தெரிஞ்சதுதான.

ஒண்ணும் வேணாம்...என்று தப்பிக்க துவரைக்குள் குனிந்து நுழையப் போனவளை முதுகில் அணைத்து இறுகப் பிடிக்கையில் நொறுங்கினாள்.

துவண்டவளை வாங்கி மடியில் கிடத்தி உற்றுப் பார்த்தான்.

பார்த்தாள்.

ஒண்ணும் செய்யல...செய்ய முடியாதுடி காளி. இப்படியே உத்துப் பாத்துகிட்டே இரு...போதும்.

போதும் போதும்...பொழுது போயிடுச்சி. கிழவி எனக்காகக் காத்திருக்கும்.

கிழவி...இங்க பாரேன்...இவ எம்மடியில படுத்துக்கிடக்க மாட்டேங்குறா...

சனிய...சனிய...என்னா கத்து கத்துது பாரேன்...எவ காதுலயாவது உழுந்து தொலைச்சா அவ்வளவுதா...

என்ன ஆயிடுமாம்...நாங்கட்டிக்கப் போறவ எம்மடியில படுத்துக்க எவகிட்ட கேக்கணுமாம்?

யாருடி?

.......

யாருடி அது?

நாந்தே பாட்டி...

பாறையிலிருந்து அப்ப குதிச்சவ....இம்மா நேரம் என்னடி பண்ணுனவ?

சொல்லு...சொல்லு...இம்மா நேரம் என்ன பண்ணுனன்னு சொல்லு..குசுகுசுத்துக் கேலிசெய்த முத்தரசு பாட்டியின் அரவம் கேட்டு....ஊமை நடை போட்டுத் தப்பித்துக் கொண்டான்.

ஒரு பெரிய்ய வண்டு பாட்டி.....விரட்டி விரட்டி பயமுறுத்திடுச்சி....

வண்டு சத்தமா தெரியலையே.....

வண்டுசத்தந்தே....வா வீட்டுக்குப் பேவோம். ஒத்தக்காக்கா மிச்சமில்ல. எல்லாம் அடையப் போயிடுச்சுங்க.

போவட்டும் போவட்டும். பெரியவங்க பழையதுக்குக் கிழக்கப் போன அந்தப் பத்துப் பதினைஞ்சு மயிலுங்க இந்தப் பக்கமா இன்னும் திரும்பல. அதுங்களும் அடையப் போவட்டும். அப்புறமா போவலாம்.

சரி..

யாருடி அது

அதுன்னா....

ஆகா....சரியான ஆளுடி நீ....உன்னைத் தாண்டி வந்த வண்டு பயந்துகிட்டு ஓடுனதா தெரியலையே....கூச்சப்பட்டு கிட்டுல்ல ஓடுச்சு.

ஆமே...அவந்தே...சுதிமதி கெட்டது....சொன்னா கேட்டாத் தானே.

கிழவி....

ம்...

இப்படிக் கெணத்தோரமா வந்து குந்திகிட்டுப் பேசேன்.

யாருடி இவ குந்துனா குந்துனமாதிரியே இருக்க வேண்டியதுதான். ஒடம்புன்னா அசைஞ்சுகிட்டே இருக்கணுன்டி.

ஆமா.....காத்து மழையின்னும் பாக்காம கட்டாந்தரையிலதா அசைஞ்ச....கட்டுல்ல எங்க அசைஞ்ச?

ஆமா....கட்டையில் போறவளுக்குக் கட்லு வேற....

கிழவி.....

என்னடி....

சொல்லு சொல்லுன்னு எத்தன நாளா கெஞ்சுறேன்....

அடி...இவ ஒரு இவ....

இப்ப சொல்லுல....இந்தக் கெணத்துலயே புடுச்சித் தள்ளிடுவேன்.

இனிமேத்தா விழணுமாக்கும்.

தலைய பிச்சிக்கணும்போல இருக்குடி கிழவி. எத்தனத் தடவ கேக்குறேன்... .எதுக்குடி இப்படி கன்னி கழியாம.....கல்யாணமே கட்டிக்காம காலந்தள்ளுனவ....

சொல்றேன்....சொல்றேன்....

ஒன்னப் போல குமரா இருந்தப்போ ஒருநாளு....இதே கொல்லையிலத்தா வரகுக்குக் களவெட்டிகிட்டு இருந்தேன். காத்தும் கருகிப் போகிற மாதிரி வெக்க. உச்சி வரைக்கும் கொத்திகிட்டுக் கிடந்தவளுக்கு அக்குள் ரெண்டுலயும் குட்டிப் போட்ட ஆட்டுலேருந்து ஒழுவுற மாதிரி வேர்வ ஒழுவிகிட்டே இருந்தது. ஒடம்பு முழுக்க சொண வேற புடிச்சிப் புடுங்குது. ரெண்டு மூணு நாளா அவுத்துக் கட்டாத சீலையிலிருந்து உமட்டறமாதிரி கவுச்சி வேற.....

இன்னிக்கு எப்பிடியும் ஆசதீர தேச்சி குளிக்கணும்னுட்டு முடிவு பண்ணி....குதிகால உந்தி சுத்திமுத்தும் பாத்தேன்.

சுவர் எழும்புன மாதிரி நிக்கிற கள்ளிச் செடிகளத் தாண்டி ஒரு காக்கா குருவி கூட கண்ணுல படல. ஒத்த ஓணா கள்ளிக்கு மேல கழுத்த நீட்டி நீட்டிகிட்டு...கைய வீசி அதையும் விரட்டிட்டு....சீலைய அவுத்து கெணத்துக் கல்லுல வச்சி குமுக்கி அடிச்சி துவச்சி அலசி வரகுப் பயிர்மேல விரிச்சி வுட்டுட்டு ஒரு முனைய கிணத்து ஓரமா வச்சு அதுமேல ஒரு கல்ல எடுத்து வச்சுட்டு...கிணத்துக்குள்ள குதிச்சேன்.

ஆசதீர முங்கிமுங்கி நீச்சலடிச்சேன்... மூச்சடக்கி மூச்சடக்கிப் பழகிப் போனவ....விறால் கணக்கா அப்பப்ப வந்து மூச்சுவுட்டுட்டுப் போயி ஆழத்துலயே கெடந்தேன். அப்படியே மல்லாந்து கிட்டு முழிச்சுப் பாத்தேனா...உச்சி உறும வெயில்ல.... கண்ணாடி மாதிரி தண்ணியில... என்னையே என்னால பார்க்க முடியல. கூச்சம் புடுங்கித் தின்ன உடனே மேலபோயி சீலையெ எடுத்துச் சுத்திக் கிடணும்னு மேல வந்தேன்.

வந்தா.....பத்து பதினைஞ்சு வெள்ளாடுங்க கிணத்துல தண்ணிகுடிக்க தெக்குத் தெருவு மருதாயி வூட்டுக்காரரு குளிக்கணும்னு குதிக்கப் போனவரு என்னெ முழுசா பாத்துட்டாரு. ஒரு ஆம்பளக்கிட்ட அம்மணமா தன்னைப் பாக்கக் குடுத்தவ எப்படி இன்னொருத்தங்கிட்ட தன்னெ தர முடியும். அதா அப்படியே இருந்துட்டேன்.

ஒரு நா தெக்குத் தெரு பக்கமா மோளச்சத்தம் கேட்டுது. என்னான்னு கேட்டப்ப அந்த ஆளு போயிட்டான்னு சேதி கெடச்சது. அப்படியே எழுந்தேன். இந்தக் கிணத்தாண்ட வந்தேன். கையில் கிடந்த வளையலையெல்லாம் அப்படியே உருவி இந்த கெணத்துக்குள்ள போட்டுட்டு...இறங்கித் தல முழுவிட்டுப் போயிட்டே.

கிழவியை மார்பில் வாங்கி இறுகத் தழுவிக் கொண்டாள் மல்லிகா. பூத்தத் தலையை வருடிவிட்டாள். குபுக்கெனப் பொங்கிய கண்ணீரைத் துடைக்காமலேயே பாட்டியின் முகத்தை இரு கைகளிலும் ஏந்தி உற்றுப் பார்த்தாள். கிணற்றுத் தண்ணீர் முழுக்க அவள் கைகளில் தளும்புவதாய் உறைந்தாள்.

குறுக்கோடும் மயில்களின் அரவம் கேட்ட கிழவி மல்லிகாவின் கைகளை வாங்கி மடியிலிருந்த தட்டப் பயித்தங்காயை வைத்தாள்.

வா போவோம். அது என்ன சத்தம். காடையா கௌதாரியா?

கௌதாரிதே. புதருக்குள்ள அடைய ஓடுதுங்க. கண்ணு நெகாவுலயா இதையெல்லாம் நீ கண்டுபுடிக்கிற. காது நெகாவுலல்ல கண்டுபுடிக்கிற.

எதக் கண்டுபுடிச்சி என்னா பண்றது. காடைக்கும் கௌதாரிக்கும் கிளிக்கும் குருவிக்குமா வெளைஞ்ச பூமி இன்னைக்கு மனுசாளுக்கே மாட்டேங்குதே. மானம் இடிச்சாதான மண்ணு பூக்க. அதா சனங்களெல்லாம் தட்டயும் கடப்பாரையும் தூக்கிகிட்டு திசைக்கு ஒண்ணா செதறிப் போவுதுங்க....

பாட்டி....

ம்....

நாளைக்குப் பட்டணம் போறேன்.....ஒரு வேலைக்காக....

ஒத்தையிலயா....

நம்ம நாகமந்தலாங்க அத்தையோட மவன் முத்தரசு இல்ல....அது கூட....

ஆமா....அது....அதுதான வண்டு.

பிச்சிப்புடுவே கிழவி.

பாத்துப் போயிட்டுவாடி. காலம்கெட்டுக் கிடக்கு.

பாட்டியின் சொல்லுக்குள் ஊறிக்கிடந்த உண்மை மீன் முள்ளாய்குத்த அவளுக்கு வலித்தது.

அவன்....அவனா...அவனேதான்.

வெள்ளம் பெருகும் ஓடையில் தோளில் சுமந்து அக்கரையில் கொண்டுபோய் இறக்கிவிட்டுப் பள்ளிக்கு விரல் பிடித்து அழைத்துப் போகத் தொடங்கியவன்.. அப்புறம் எங்கெல்லாம் அழைத்துப் போனான்.

காளான் பிடுங்க...கொடுக்காப்புளிகாய் அடிக்க... கொன்னையில் பொன்வண்டு பிடித்து ஈரமணலில் புதைத்து வைத்து...காலையில் வந்து முட்டைகள் பார்த்து மகிழ....குளத்தில் தாமரைக்காய் பறித்துத் தின்ன....ஒத்தைப் பனைப் பாறையில் போய் அமர்ந்து கொண்டு தேர்வுக்குப் படிக்க...துவரைக்குள்ளே போய் இழைந்துபடுத்து மூச்சின் இழுப்பை வயிற்றின் அசைவில் கணக்கிட்டு ஒத்திசைவாய் மூச்சுவிட்டுத் தூங்க.... கிணற்றுக்குள் போய் குமிழ்கள் பாதரசப் பந்துகளாய் மேல்வந்து உடைய உடைய ஆழத்தில் முத்தமிட்டுச் சிலிர்க்க.....

அவனேதான்...

சென்னைக்குப் போய் விடுதியில் அறையெடுத்து ஒற்றைப் படுக்கையில் ஒருக்களித்தபோது உற்றுப் பார்த்தவன்....தித்திக்கத் தித்திக்கப் பொய்கள் சொல்லி...பிறக்கப் போகும் குழந்தைக்கெல்லாம் பெயர் தேடி....வேலை கிடைத்ததும் திருமணம் என்று தலையில் அடித்ததை நம்பி....

அவனுக்கு வேலை கிடைத்ததும் அவனுக்குத் திருமணம் என்பது மெய்யாக...வசதிபடைத்த வீட்டில் பெண் கிடைக்க...நாள் குறித்து...பக்கத்து நகரத்தில் மண்டபம் பிடித்து....மணமகன் அறைக்குச் செல்லத் தயாராக அவனது தெருவில் மேள சத்தம் அதிர அதிர மல்லிகா வன்மம் குடித்து எழுந்து....நடந்தாள்.

கிணறு.

தும்பி பறக்கையில் இலேசாய்த் தொட்டால் கூட தளும்பிவிடும் அளவிற்கு நிறைந்து கிடக்கும் கிணறு.

குதித்தாள்.

ஆழம்போய் தரைதொட்டு...இமை பிளந்து விழிகளால் தேடித்தேடி பாட்டி உருவிப் போட்ட பாசி பிடித்த வளையல்களையெல்லாம் எடுத்தவள் இரு உள்ளங்கைகளுக்கு நடுவில் வைத்து வன்மம் வாங்கி நொறுக்கினாள். ஒன்றிரண்டு வளையல் துணுக்குகள் உள்ளங்கையில் குத்த...குருதிக் கசிவு எரியும் சுடராய் மேலெழும்பி கரைவதை உற்றுப் பார்த்தாள்.

கிழவி...உன்னோட வாழ்க்கைய இந்தக் கெணத்துக்குள்ளயே ஆழந் தேடி வந்து புதைச்சுட்ட. நா அப்படிச் செய்யப் போறதில்ல. கிணத்துக்கு மேல வானம் இருக்கு. வர்றேன் பாட்டி.

தரையில் உந்தி மல்லிகா வேகமாய் மேலே வந்து கொண்டிருந்தாள்.

நன்றி: வெள்ளைத் தீ

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link