சிறுகதைகள்


அடையாளம்

கூடல்.காம்

"அய்யா வெளியே போயிருக்காங்க; திரும்பிவர சாயங்காலம் ஆகும்.....அஞ்சுமணிக்கு மேலே வந்து பாருங்க......"

"பெரிய அய்யாவா......? கிராமத்துக்குப் போயிருக்காங்க; அடுத்த வாரம் கோயில் திருவிழா வருது; அது முடிஞ்சுதான் திரும்பி வருவாங்க; அந்த வேலையாத்தான் போயிருக்காங்க...."

"சின்னய்யாவா.....? கம்பெனியிலே இருந்து வர தினம் எட்டு மணி ஆகிவிடும்; ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் வீட்டில் இருப்பான்; அன்றைக்குப் பார்த்துதான் தேடிக்கிட்டு வருவாங்க....வெளியே போனா மதியம் சாப்பிடத்தான் வீட்டுக்கு வருவான்".

அந்த வீட்டுப் பெரியம்மா சொல்லுவதில் அர்த்தம் இல்லாமல் இல்லை; அவ்வளவும் உண்மைதான். அப்போதைக்கு அப்போது, வந்து விசாரிப்பவர்களிடம் யாரைக் கேட்கிறார்களோ அவர்களுக்குத் தக்கபடி இப்படித்தான் பதில் சொல்லுவார். எங்கள் கிராமத்திலிருந்தபோது அந்த வீட்டை மட்டும்தான் "அய்யா வீடு" என்று எல்லோரும் அழைப்பார்கள். தாத்தாவைப் "பெரிய அய்யா" - தகப்பனாரை "அய்யா", அவரது ஒரே மகனான இளையவரை "சின்னய்யா" என்பார்கள்.

கிராமத்து மக்களுக்கு "அய்யா" என்ற வார்த்தையே ஆதரவின் ஒரு குறியீடு போலும்; படித்தவர்கள், படிக்காதவர்கள், விவசாயக் கூலிகள், பெண்கள், ஆசிரியர்கள், பெரியவர்கள் என்று எல்லாருக்கும் அது "அய்யா வீடு" தான். "அய்யா என்ற வார்த்தை அந்தப் பெரியம்மாவின் வாயில் இப்போதும் அடிக்கடி புரண்டு கொண்டிருப்பது அதன் அடையாளமாகத் தானோ?

கிராமத்தை விட்டு நகரத்துக்கு வந்து, அந்த நவநாகரிகமான காலனியில், புதிய பங்களா கட்டி, பங்களாவின் முன்னாடி பின்னாடி எல்லாம் தோட்டம் வைத்து, தென்னை, மா, பலா, வாழை என்று கனி கொடுக்கும் மரங்கள் வளர்த்து, முன்புறம் வண்ண வண்ணப் பூக்கள் மலர, கொடிகளைப் படரவிட்டு அந்தப் புது பங்களாவில் வாழ்ந்தாலும், கிராமத்தில் பழகி வந்த "அய்யா" என்ற வாஞ்சைமிகு வார்த்தை மட்டும் இன்னும் அந்தப் பெரியம்மாவை விட்டுப் போகவில்லை; அது ஆச்சரியமாக இருந்தது. நினைக்க நினைக்க எனக்கு சந்தோஷமாகவும் இருந்தது. இந்த நினைப்பும், சந்தோஷமும்கூடக் கொஞ்ச நேரம் நீடித்திருக்கக் கூடாதோ.....?

பள்ளிக்கூடம் விட்டு "ஸ்கூல் பஸ், வருகிற சத்தம் கேட்டது. "நாச்சியாரு......?" - என்று மருமகளைப் பெரியம்மா கூப்பிட்டதும், உடனே கொடியொன்று அசைந்து வருவது போல், மருமகள் மாடியிலிருந்து இறங்கி வந்து, வேகமாக வாசலுக்குப் போய், "கேட்" டைத் திறந்து கொண்டு நின்றாள்.

"ஸ்கூல்பஸ்" மெதுவாக வந்து நின்றது. பேரன், வெள்ளைச் சீருடையில் கருப்பு, "டை" கட்டி, வெவ்வேறு வண்ணங்களில் சாக்ஸ் பூட்ஸ் அணிந்து, வண்டியை விட்டு, புத்தகச் சுமையுடன் இறங்கினான். அம்மா, ஒரு கனமான புத்தகப் பை கட்டையும், மற்றொரு கையில் மெல்லிய பூப்போன்ற தன் இளஞ்சிவப்பு மகனையும் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். வரும் போதே மகன் கேட்டான். "அம்மா..... "டாடி" இன்றைக்கு சீக்கிரமே வந்திருவாங்களா.......?"

"வந்திருவாங்க; "டாடி" வந்து நம்மளை கோயிலுக்குக் கூட்டிக்கிட்டு போவாங்க; தம்பிக்கு இன்றைக்குப் பிறந்த நாள் இல்லையா...? அதனாலதான்..." செல்லமாகக் குழைந்தாள்.

" "டாடி" வேலையில, "மறந்துட்டேன்" னு சொல்லிவிட மாட்டாங்களே.....?"

"டாடி" அப்படியெல்லாம் சொல்லமாட்டாங்க; நீயும் தம்பியும் தயாரா இருங்க; அஞ்சு மணிக்கு கண்டிப்பா வந்துடறேன்".... "அப்படின்னு ஃபோன் பண்ணிணாங்க."

" "டாடி" நல்லவங்க.....! இல்லையாம்மா......?"

"ஆமா......"டாடி" ரொம்ப நல்லவங்க!"

இங்கேதான் என் நினைவுகள் இடித்தன. கேட்ட உரையாடல்கள் யாவும், என் மண்டைக்குள் நண்டு பிறாண்டுவதைப் போலப் பிறாண்டிக் கொண்டு இருந்தன.

பட்டணத்தில் வாழ்கிற எங்கள் ஊர் அய்யா வீட்டுக்குப் போய்விட்டு, அங்கே பெரியம்மாவோடு ஒரு நாள் முழுக்கப் பேசிக் கொண்டு இருந்துவிட்டு, ஊர் திரும்பியதும், தந்தையிடம் எல்லாவற்றையும் விவரித்தேன்.

"பெரியம்மா நம்ம கிராமத்து வாசனை மாறாமல் அய்யா, பெரிய அய்யா, சின்னையா - என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்றாங்க; பழசையெல்லாம் இன்னும் நுகர்ந்தபடி இருக்காங்க; ஆனால், அவங்க பேரனை "டாடி" ன்னு சொல்ல வைச்சிருக்காங்க; அவங்க மருமகளும் அப்படியேதான்; மகனுக்கு "டாடி" ன்னு சொல்லிப் பழக்குறாங்க; இதைத்தான் தலைமுறை இடைவெளின்னு சொல்றதா? இல்லை, ஆங்கில மோகம்னு சொல்றதா....? என்னன்னு சொல்லுறது....? கொஞ்சம் விளக்குங்களேன்....." - என்றேன்.

"இது.......அப்படி இல்லேப்பா.....பழைய குடும்ப மரியாதை, கவுரவம்"னு சொல்றதுண்டு இல்லையா....? அதனோட தொடர்ச்சிப்..பா.. இது."

"என்ன சொல்றீங்க.....?" அங்கே, "அப்பாவுக்குப் பதிலா "அய்யா" ன்னு கூப்பிடுறாங்களே.....அதக் கூட ஏத்துக்கிடலாம்; ஆனால், "டாடி" ன்னு சொல்லறதை எப்படி பழசின் அடையாளம்" என்று ஒப்புக் கொள்ள முடியும்?" சற்று இரைந்தேன்.

"அதுவா.....? கிராமத்திலே நிலபுலம் நீச்சல்னு பெரிசா, பேரும் புகழோடு செல்வாக்கா வாழ்ந்தவரு பெரியவரு; அப்புறம் மகன் படிச்சு பெரியாளாகி பட்டணத்திலே வேலைக்குப் போனதாலே அங்கேயும் வீடு, வாசல், பங்களான்னு கட்டிக்கிட்டு மகன் கூட எல்லாரும் போயிட்டாங்க; அவரு பேரனும், அச்சாபீஸ், கம்ப்யூட்டர், ஆப்செட் என்று தொழிலை விருத்தி பண்ணிக்கிட்டு முன்னேறி வர்றாருன்னு கேள்வி; கலியாணமும் ஆச்சு; பேரனும் பிறந்திட்டான்; இருந்தாலும், அவங்க கூப்பிடுகிற பெயரினால் கூட, குடும்ப கவுரவம் பங்கப்பட்டு விடக் கூடாதுன்னு ரொம்ப கவனமா இருக்கிறாங்க என்பதை ஊன்றிக் கவனிச்சியா....?"

"எனக்கு இன்னும் கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க....?"

"சொல்றேன்; பெரியம்மாவோட, மாமனார் பேருதான் அப்பாசாமி; அவர் பெயரை, தப்பித்தவறி கூட உச்சரிக்க மாட்டாங்க. மாமனார் பெயரைச் சொன்னா மரியாதைக் குறைவுன்னு நினைக்கிறவங்க; மகன் வந்து கேட்டாலும், "அய்யா... கோயிலுக்குப் போயிருக்காங்க" "அய்யா கொல்லைப்பக்கம் இருக்காங்க" ன்னு எல்லாத்துக்குமே அய்யா....அய்யா.....ன்னு சொல்லிப் பழகிட்டாங்க; தாத்தா பெயரை "அப்பாவு" ன்னு மகனுக்கு வைச்சிருக்காங்க; அதனாலேயே, மருமகளையும், மகன் கிட்ட "அப்பா வந்திருவாங்கடா...." ன்னு சொன்னா புருஷன் பேரைச் சொன்னதா ஆகிவிடும் இல்லையா....? அதனாலே, "அப்பா" ன்னு உச்சரிக்கிறதைத் தவிர்க்க வேண்டி, "டாடி" ன்னு சொல்லியும், சொல்லச் சொல்லியும் பழக்கிட்டாங்க....."

"ஓ....!"

"இன்னொன்னு உனக்கு ஞாபகம் இருக்கா....?"

"என்னாது.....?"

"நான் அப்போ ராமேஸ்வரத்திலே வேலைக்குப் போய் விட்டேன்; நம்ம வீட்டுக்கு செரிபு வாத்தியாரய்யா வந்து ராமு இருக்காறான்னு விசாரிச்சு இருக்காரு; உங்க அம்மா...."அவங்கள இப்போ "வரத்துக்கு" மாத்திட்டாங்க" அப்படின்னு சொல்லவும் அவர் அர்த்தம் புரியாம முழிச்சுப் போனாரு."

"உடனே அத்தை வந்து, தம்பியை ராமேஸ் "வரத்துக்கு மாத்தியிருக்காங்க" ன்னு சொல்லி, விளங்க வச்சதா சொல்லுவாங்க.... நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்."

"அதேதான்; கணவர் பெயரையோ குடும்பத்துப் பெரியவரான தாத்தா பெயரையோ, வயதில் சின்னவங்க சொல்லிக்கிடறது இல்லை; சொன்னா அது மரியாதைக் குறைவுக்கு அடையாளம்னு நினைச்சாங்க."

"அப்படி, காலம் கற்பிச்ச மரியாதைகளை மறக்காமல் கைக் கொள்றதுனாலே தான் "அப்பா" க்கள், "அய்யா" வாகவும், "சின்ன அய்யாக்கள்" "டாடி" யாகவும், மாறி இருக்கிறாங்க..."

இது ஒண்ணும் ஆங்கில மோகமும் இல்லை, அவசர யுகத்தின் போலி நாகரிகமும் இல்லே; தெரிஞ்சுக்க....." என்று கூறியதோடு மேலும் தொடர்ந்தார்.

"நாம குடும்ப கலாசாரத்தைத் தொடர்ந்து காப்பாத்திக்கிட்டு வருகிறோம் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு, இப்படிப்பட்ட மனசார்ந்த ஈடுபாடு மட்டும்தான், ஒரு சின்ன அடையாளமாக இருக்கு;

"நாட்டுப்புற வழக்கில் "அய்யா" ன்னு சொல்றதும், அதுவல்லாமல், இப்படி "டாடி" ன்னு மட்டும் கூப்பிடறதும், அதுக்கு உதவியாக இருக்குமே தவிர ஒரு போதும் தடையா இருந்ததே இல்லை."

பெற்றவர் இல்லையா.....? அவர் சொல்லச் சொல்ல கவுரவத்தின் அடையாளம் எனக்குப் புரிய ஆரம்பிச்சுது. ஆட்சேபணை எதுவும் தெரிவிக்காமல் கேட்டுக் கொண்டேன்.

நன்றி: நிழல்கள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link