சிறுகதைகள்


அவன் - அவள்

கூடல்.காம்

எவ்வளவு சொல்லியும் நம்புவதாக இல்லை அவள்.

எந்த விதத்திலும் சமாதானம் செய்துவிட முடியாது. என்கிற மாதிரி பிடிவாதமாக இருந்தாள்.

இப்படி வைராக்யமாக இருக்கிறவளோடு எப்படி வாழ முடியும்.

அன்பான வார்த்தைகளைக்கூட ஆணின் பசப்பு மொழிகள் என்பது போலப் புறக்கணிக்கப் பழகிவிட்டிருந்தாள்.

தொட்டுப் பேசுவதைக் கவனமாகத் தவிர்த்துவந்தாள்.

பார்வையை எதிர் கொள்வதை விட்டு விட்டிருந்தாள்.

இவ்வளவு இறுக்கம் ஒரு பெண்ணுக்கு ஆகாது.

கொஞ்சம்கொஞ்சமாகச் சேர்ந்திருந்த அவநம்பிக்கை.

நாள்பட நாள்படத் திரண்டிருந்த கசப்பு.

சன்னம் சன்னமாகக் குவிந்துபோன வெறுப்பு.

எல்லாம் ஆகக்கூடிய பாறையாக நின்றன.

அவள் இக்கதிக்கு ஆனதில் தான்தான் முழுமுதல் காரணகர்த்தா என்ற உறுத்தல் வேறு மனசைக் குடைந்து கொண்டிருந்தது.

நிவர்த்திக்க வகையறியாது சிந்தை குழம்பியிருந்தான்.

நியாயம் அவள் பக்கம்தான் என்று ஆதியிலிருந்தே உணர்ந்திருந்தான்.

அவள் மனதில் இத்தனை துக்கம் கொண்டிருப்பது தப்பில்லை தான்.

தன்னிடம் அவள் மிகுந்த வன்மத்தோடு இருப்பதில் தவறில்லை என்றாலும் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

பகையாளிபோலவே தான் அவள் நடந்து கொண்டாள்.

வெகு கடுமையாக விரோதம் பாராட்டினாள்.

இது இப்படி ஆகியிருக்கக் கூடாது.

இந்த மாதிரி துரதிர்ஷ்டம் நேரக்கூடாது ஒரு ஆணுக்கு.

அவள் இப்படிப்பட்ட பெண்ணே இல்லை.

ஆசையும் பாசமும் கொண்டவள்.

குழந்தைதான்.

கவலைதெரியாத அந்தப் பச்சைப்பிள்ளை மனசைக் காலம் அழித்துவிட்டதா.

காற்றுப்போல சுதந்திரமான அவள் குதூகலத்தைக் கொன்றது விதிதான்.

பெண்ணுக்கு மட்டுமேயான அவள் கனவுகள் கருகிப் போயிருக்க வேண்டாம்.

நாளும் அவள் குற்றப்பத்திரிகை வாசிக்கையில் பேதலித்துப் போகிறான் அவன்.

அவளுடைய தொடர்ந்த புகார்களைக் கேட்டுக்கேட்டு கலவரமடைகிறான்.

அவனைச் சுட்டெரிக்கிறது அவள் கோபம்.

அவள் பழிவாங்கிக் கொண்டிருக்கிறாளா.

உண்மையிலேயே அவன் களைத்துப் போய்விட்டான்.

இந்த யுத்தத்தை நீடிக்கவிடுவது முட்டாள்தனமானது.

ஆனால் அவள் எதையும் கேட்க சித்தமாயில்லை.

என்னை விட்டுவிடு என்கிறாள்.

வேண்டாம் இந்த உறவு என்றே சொல்கிறாள்.

நிம்மதியாக இருக்கவிடு போதும் என்று கணக்குத் தீர்க்கிறாள்.

அப்படி என்ன கொடுமை இழைத்துவிட்டோம்.

பெண் தெய்வங்களே பெண்தெய்வங்களே

பிழைபொறாத பெண்தெய்வங்களே.

ஆயாசமாக இருந்தது.

பக்கத்தில் இருந்தும் விலகிப் போயிருப்பது இருவருக்குமே புரிந்த ஒன்றுதான்.

பேசினாலே தப்பாகிவிடுகிறது.

விஷம் தோய்ந்த கத்திகளாகின்றன வார்த்தைகள்.

முகத்திலேயே விழிக்காதவர்கள் போலத்தாம் பேசிக் கொள்ளும் படியாகிறது.

அன்பாக இருந்தோம் என்பது கனவாகவும்

அப்படி இனிமேல் இருக்க முடியாது என்பது எதார்த்தமாகவும் மாறியிருந்தது.

நாலு சுவர்களுக்குள் இந்தமாதிரி இருப்பது அவளுக்கும் தாள முடியாத அவஸ்தையாகத்தான் இருக்கும்.

என்ன செய்தும் இந்த மனமூட்டத்தை விலக்க முடியாது போயிற்று.

ஆண்களையெல்லாம் வரிசையாக நிற்கவைத்துச் சுட வேண்டும்.

கோபமாகக் குரல் உயர்த்தி அவள் அன்றொரு நாள் சொல்லக் கேட்டபோது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இதுநாள்வரை பத்து தடவையாவது சொல்லியிருப்பாள்.

எரிச்சல்தான் இது

எரிப்பது தீதானே.

இது தீதான்.

இதை அணைக்க முடியுமா.

கொஞ்சம் நாடியைப் பிடித்துத் தாங்கினால் போதும் முதலில்.

பிறகு உன்னைவிட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள் என்று மண்டியிட வேண்டியிருந்தது.

காலகதியில் எந்தக் கூச்சமும் இல்லாமல் ஆண்டையிடம் அடிமைபோல மன்னிப்புக் கேட்டுத் தப்பித்துக் கொண்டிருந்தான்.

நாடகத்தின் காட்சிகள் மாறுவது மாதிரி பார்த்துக் கொண்டிருந்தவள் நடிப்பு என்று கருதி ஒரு முடிவுக்கு வந்துவிட்டிருந்தாள்.

அவனும் நாடகத்தை முடித்துவிடலாம் என்ற மனநிலையில்தான் இருந்தான்.

என்றபோதும் அவள் அவனுக்குப் பெரிதும் வேண்டியிருந்தாள்.

உணவை ஒழிக்க முடியுமா.

உறக்கத்தை விடமுடியுமா.

சுவாசத்தை எப்படி நிறுத்த.

இப்படியே ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவகையில் அவன் அவளிடம் சமரசம் செய்து கொண்டிருந்தான்.

இனி சமரசத்துக்கு இடமில்லை என்று அவள் முடிவு செய்திருப்பது போலப்பட்டது.

இவனுக்குமே அபத்தமாகத்தான் இருந்தது.

இதுவரை எதோ ஒரு பந்தத்தில் கட்டுண்டிருந்திருக்கிறோம்.

எல்லாம் கழிந்து போனதாகத் தோன்றுகிறது.

அவளுக்கு அவன் வேண்டியதில்லை.

ஒரு பிரிவிலும் பற்றிலும்தாம் நடையேற்றி வைத்திருக்கிறாள்.

பாவம் என்றுகூட இருக்கலாம்.

காலம்காலமாக எல்லாப் பெண்களும் பாவம் பார்த்துத் தான் ஆண்களை விட்டு வைத்திருக்கிறார்கள்.

எந்த நேரமும் எளிதாகத் துண்டித்துவிட முடியும் உறவை.

ஒரு பெண்ணை உண்மையான ஆண் ஒதுக்கிவிட்டுப் போக முடியாது.

இது ஆணின் பலவீனமாக இருக்கலாம்.

அது பெண்ணில் சக்தியாக இருக்கும்.

இந்த மாயவலையில்தான் எல்வோரும் சிக்கிக் கிடக்கிறார்கள்.

இவனும் விதிவிலக்கு இல்லை.

இதுதான் பெரிய சோகம்.

அவளுக்குத் தெரியும் அவனை.

திரும்பத்திரும்ப தேடி வருவான்.

அந்த அளவுக்கு அடிமைப்பட்டிருந்தான்.

அவள் இல்லாமல் உயிர்தரித்திருக்க இயலாது.

அவள் கன்யாகுமரி அம்மன் போலத் தனித்திருக்கக்கூடியவள்.

இவ்வளவு காலமும் நடந்தது விளையாட்டு.

இனி நடக்கவிருப்பது வினை.

விளையாட்டிலேயே ஜெயிக்கத் தெரியாதவன்

வினைக்கு என்ன ஆவான்.

தூங்கிக் கொண்டிருந்தாள்.

தொட்டு எழுப்பலாம்.

தயக்கமாக இருந்தது.

எப்படித் தூங்க முடிகிறது அவளுக்கு

அவன் தூக்கத்தைப் பறித்துவிட்டு,

அவள் அயர்ந்து உறங்குவதே அவன் அருகாமையில்தான்.

நிம்மதியான உறக்கம் அவன் சார்ந்தது.

அவனையும் உறக்கத்தையும் துறக்க

அவள் ஆயத்தமாகிவிட்டாளா.

அவள் அண்டையில்தான் அவனும் அமைதியாகத் தூங்க முடியும்.

அவளை விட்டுப் பிரிந்திருக்கும் காலம்

தூக்கம் கெடும் காலம்.

வீட்டில் இருக்க வாய்க்கிற நாள்களில் வேனிற்காலத்தில் காற்றுக்காகக்கூட

அவன் வெளியில் வந்து படுத்துப் பழக்கமில்லை.

கல்யாண வீடுகளுக்குத் தனியே போக நேர்ந்தால் குழம்பிப் போவான்.

சினிமாவுக்கு ஒற்றையாய்ப் போக முடியாதவன்.

இந்த அளவு மனத்தாங்கல் வந்த பின்னும் அவனை நம்பி

அவள் உறங்குவது ஒரு புதிர்தான்.

இதுதான் பெண்.

அவளையும் அவனையும் இணைத்துவைத்தது கண்ணுக்குப் புலனாகாத விதி.

சம்பிரதாயத் திருமணம்தான்.

அன்றைக்கு மதியமே தெரிந்து போயிற்று ஆளுமைமிக்க பெண்.

அடிபணிய வைக்கும் ஆளுமை.

ஒன்றும் செய்வதற்கில்லை.

ராணி.

எந்த ராணியும் ஆணுக்கு சவால்தான்.

ராணி அன்பாக இருப்பாள்.

ஆனால் ஆளவே விரும்புவாள்.

ஆணுக்கேயான அகம்பாவம் ஆளுகையை ஏற்க மறுத்தது.

ராணியென்றாலும் மனைவிதானே என அவள் அடிமனம் சொல்லியிருக்கக்கூடும்.

அனுசரித்துப் போகவும் செய்தாள்.

ஒவ்வொரு விஷயத்திலும் தீர்மானமாக இருந்தாள்.

எல்லாக் காரியங்களிலும் கருத்தாக நடந்து கொண்டாள்.

அவள் கருத்தை மாற்ற முடியவில்லை.

அவள் மனசை எதுவும் செய்யக் கழியவில்லை.

எந்த ஒன்றிலும் அவன்தான் விட்டுக்கொடுத்துப் போக வேண்டி வந்தது.

விடுதலறியா விருப்பு.

எனில் உள்ளுக்குள் சிறிதுசிறிதாகப் கசப்பு மண்டியது.

ஆணும்பெண்ணும் கூடிவாழ்வதில் யாராவது ஒருவர்

ஒப்புக்கொடுக்க வேண்டியிருக்கிறது.

நீயாகத்தான் இரேன் என்பது அவன் கட்சி.

இதன் மறுதலையாய் நானாக இருக்கமாட்டேன் என்றாகி விட்டது.

ஏன் இப்படி இருக்க வேண்டும் என்பதே அவள் கேள்வி.

பதில் சொல்ல முடியாதது.

மிகவும் தன்முனைப்புக்கொண்ட ஈருயிர்களும் அவஸ்தையில் உழன்று கொண்டிருப்பதற்கு யார் என்ன செய்ய முடியும்.

காலம்காலமாய்... எங்களை அடக்கியொடுக்கி வைத்து விட்டீர்கள்.

வேற வழியேயில்லை. இல்லை, நீங்கள் ஒடுக்கியிருப்பீர்கள்.

ஆண், பெண்ணை உடம்பாகவே பார்க்கிறான்.

அது அப்படித்தான் இருக்கிறது. ஒருவகையில்,

உங்களையெல்லாம்.....

என்ன செய்ய வேண்டும்.

உன் தாயும் உடன்பிறந்தவளும் பெண்கள்தாம் என்பதை மறந்து விட்டாயா.

இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்குமான மரியாதையே அதுதான்.

நம்பி வந்தவளை மட்டும் காலில் போட்டு மிதிக்கிறீர்களே.

மடியில் போட்டுக் கொஞ்சுவது?

எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு...

யாருக்குத்தான் இங்கே அநீதி இல்லை.

இந்த ஆண்களே அயோக்கியர்கள்.

ஆமாம், பெண்களின் பார்வையில்.

"பேசி ஜெயிக்க முடியாது. பெண்கள் பேசக் கற்றுக் கொண்டார்கள்."

"பாரி"லிருந்து வெளியே வந்தான்.

கொத்துக்கொத்தாய் நினைவுகள்.

ஊர்த்துவதாண்டவம்.

காளி.

சிவகாமி.

அங்கயற்கண்ணி.

அர்த்தநாரீஸ்வரன்.

தாஷ்யாயனி.

அம்பை.

குண்டலகேசி.

இல்லை.

நான் ஒருகாலும் சீரழியமாட்டேன்.

சத்தம்போட்டுப் பாடினான்.

துன்ப நினைவுகளும்

சோர்வும் பயமுமெல்லாம்

அன்பில் அழியுமடீ - கிளியே

அன்புக் கழிவில்லை காண்

ராகத்தோடு பாடத் தெரியாதது வருத்தமளித்தது.

நடை தூரத்தில் வீடு.

நிலா கூடவே வந்தது.

நட்சத்திரங்கள் நிறைய இருந்தன.

விடிவெள்ளி கண்ணில் பட்டது நல்ல சகுணம்.

நன்றி: அவன் - அவள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link