சிறுகதைகள்


புதிய வேதம்

கூடல்.காம்

அந்த வளாகத்தில் அந்த நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக கூட்டமாகக் காணப்பட்டது. ஜமாபந்தி நேரங்களிலேயே அத்தகைய கூட்டத்தைக் காணமுடியும். ஆனால் மாலை நான்கு மணியிலிருந்து ஆட்களின் வருகை அதிகரிக்கத் துவங்கியது. காலையில் கொடுத்த சாதிச் சான்றிதழ்கள் கையெழுத்தானதும் பெற்றுச் செல்லலாம் எனக் காத்திருந்த பெற்றோர்களுக்குப் புதிய ஆட்களின் வருகை அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால் தங்களுக்கு வரவேண்டிய சான்றிதழ்கள் கிடைக்காது போகுமோ என்ற குழப்பமான நிலையில் இருந்தனர்.

ஏதேனும் விழாவிற்கு ஏற்பாடு செய்திருப்பார்கள் என்று சிலர் பேசிக்கொண்டார்கள். ஆனால் விழாவைக் குறிக்கக் கூடிய கொட்டகையோ, ஒலி பெருக்கிகளோ தோரணங்களோ காணப்படவில்லை. ஒரு வித்தியாசமான சூழலை அங்கிருந்தவர்கள் உணரமுடிந்தது.

அந்த நெரிசலிலும் புதிதாக வந்து கொண்டிருந்தவர்களை அடையாளம் கண்டு வலப்பக்கமாக இருந்த அறையில் அமருமாறு ஓரிருவர் சொல்லிக் கொண்டிருந்தனர். வந்தவர்களில் அநேகர் அறிமுகமானவர்களாக இருந்ததால் ஆர்வத்தோடு பேசிக்கொண்டிருந்தார்கள். சிலரது கையில் சிறிய சிறிய பொட்டலங்களும் காணப்பட்டன.

அப்போது நேரம் சரியாக ஐந்து என்பதைக் காட்ட அந்தப் பழைய கட்டிடத்தின் உச்சியிலிருந்த கடிகாரம் ஐந்து முறை அடித்து ஓய்ந்தது. கையில் தாள்களுடன் வெளியே வந்த அலுவலர் ஒருவர் அங்கு காத்துக்கொண்டிருந்தவர்களது பெயர்களை ஒவ்வொன்றாகக் கூப்பிட்டு அதிகாரியின் கையொப்பம் பெறப்பட்ட சான்றிதழ்களை வழங்கிக் கொண்டிருந்தார். அங்கிருந்த எல்லாருக்குமே அது அதிசயமாகப்பட்டது. மாலை மூன்று மணிவாக்கில் கொடுக்கப்பட்ட பேப்பரும் கையெழுத்தாகி வந்ததை பலரால் ஜீரணிக்கவே முடியவில்லை.

"என்னங்க அதிசயமா இருக்கே.....இப்பத்தான் கொடுத்துட்டுப் போனேன். வெளியே போய் டீ சாப்பிட்டு வருவதற்குள்ளாகக் கையெழுத்தானதை என்னால நம்பவே முடியலே... ஏதோ....நம்ம நல்ல நேரம்னு எடுத்துக்கிற வேண்டியதுதான்" என்றபடி நகர்ந்தார் நடுத்தர வயது ஆள் ஒருவர்.

சற்று நேரத்தில் எல்லாம் தெளிவாகியது. அன்று வந்த வட்டாட்சியர் ஓய்வு பெறவிருந்தார். அந்த அறைக்கு வந்து அவர் முன்வரிசையில் அமர்ந்தார். ஒருசிலர் இடம் மாறி உட்கார்ந்தார்கள். சிலர் இடம் மாறி உட்கார வைக்கப்பட்டார்கள். அலுவலகத்தில் பணியாற்றிய ஆண்களும், பெண்களுமாக வந்து பின்வரிசையில் காலியாகக் கிடந்த இருக்கைகளில் அமரலானார்கள்.

அந்த வழியனுப்பு நிகழ்ச்சி நிரலின்படி தலைவரை வழி மொழிவதற்காக ஒருவர் மேடை முன்வந்து நின்றார். அவ்வளவு தான் ஓய்வுபெறப் போகும் வட்டாட்சியர் சிங்காரவேலு அவசரமாக எழுந்து "முதலில் டீ, பிறகுதான் கூட்டம்" என்றார். இதை எதிர்பார்த்து இருந்தது போல அந்த அலுவலக உதவியாளர்கள் எல்லாருக்கும் டீயும் கேக்கும் வழங்கினார்கள். அதுவரை கலகலவெனக் கேட்டுக் கொண்டிருந்த பேச்சொலி நின்றது. ஊழியர்கள் காகிதத்தட்டில் தந்த கேக்கை தின்று முடித்ததும் காகிதத்தட்டை கசக்கியவாறு தங்களது இருக்கைகளுக்கு கீழே மற்றவர்களுக்குத் தெரியாமல் போட்டார்கள். கூட்டம் முடிந்தபிறகு அதைக் கூட்டிப்பெருக்கும் ஊழியரின் ஏச்சுப்பற்றி யாரும் அப்போது சிந்தித்துப் பார்த்ததாகத் தெரியவில்லை.

சிங்காரவேலு ஓர் அற்புதமான மனிதர். அந்த ஊரில் அவர் சிறிது காலமே வட்டாட்சியராகப் பணியாற்றினாலும் அவரது அயராத உழைப்பால் ஊர் மக்களின் பாராட்டுதல்களுக்கு உள்ளானார். எனவே அவரைப் பாராட்டிப் பேசியவர்களுக்கு விஷயத்திற்குப் பஞ்சமில்லை.

ஒருசிலர் அவரது தாராள குணத்தைப் புகழ்ந்துரைத்தார்கள். சிக்கனத்திற்கும் அவருக்கும் ரொம்பதூரம் என்பதை அவரது நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டினார். பணி ஓய்வின்போது கிடைக்கும் பணத்தையாவது அவர் பத்திரப்படுத்தி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அழுத்தமாகப் பேசினார்.

சிங்காரவேலு தனது மூன்று பிள்ளைகளின் படிப்பு, வேலை வாய்ப்பு, திருமணம் என அவர்களுக்குரிய கடமைகளைச் செய்து முடித்துவிட்டார். ஆனாலும் அவரது முப்பத்தைத் தாண்டு அரசாங்கப் பதவியின் போது ஆயிரம், ஐயாயிரம் என்று சிறு தொகையைக் கூட அவர் சேர்த்து வைத்துப் பார்த்தது கிடையாது. வயதான காலத்தில் பல பெற்றோர்களைப் போல பிள்ளைகளை நம்பத் தயாராக இல்லை. ஆகவே கிராஜூட்டி, பென்சன் என்று வரும் தொகையைக்கொண்டு யார் கையையும் நம்பாமல் இருக்கவேண்டும் என அவர் எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டு. மறந்துபோன அந்த உணர்வுகளை அவரது நண்பர் நினைவு படுத்தி விட்டார். விழா நிகழ்ச்சிகளின் இடையே இருந்தாலும் சிங்கார வேலுவின் மனம் எதையோ கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது.

அவரது அலுவலக நண்பர்களைவிட அலுவலகத்திற்கு வெளியே அவர் நட்புப் பாராட்டி வந்த நண்பர்களே அன்றைய விழாவில் அதிக அளவில் கலந்து கொண்டிருந்தார்கள். எனவே நினைவுப் பரிசுகளும் நிறையவே சேர்ந்தன. கூட்டம் முடிந்ததும் ஒரு காரில் வைத்து சிங்கார வேலுவை அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். கூடவே பல நண்பர்களும் அவரது வீடு வரை வந்தார்கள். அவர்களது வருகையை எதிர் பார்த்தது போல சிங்காரவேலுவின் வீட்டில் ஒரு குட்டி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். தனது அளப்பரிய விருந்துகளின் வாயிலாகவே பல நண்பர்களைக் கவர்ந்தவர் சிங்காரவேலு என்பதால், அன்றைய விருந்து குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

ஒவ்வொரு இலைப்பக்கமும் வந்து அவரே தனது கைப்பட பலகாரங்களை எடுத்து வைத்து உண்ணச் செய்தார். விருந்து முடிந்தாலும் கூட்டம் கலைவதாக இல்லை. அன்றைய விழா பற்றிய பேச்சு இடம் பெற்றதால் சிங்காரவேலு படுக்கைக்குச் செல்லும் போது இரவு பன்னிரண்டாகிவிட்டது. அலுவலகத்தின் கடைசிநாள், கூடுதலான கோப்புகளில் கையொப்பு, விழா இவை காரணமாக படுத்ததுமே அவர் தூங்கிப் போனார்.

மறுநாள் அலுவலகம் செல்லவேண்டியதில்லை என்பதால் வழக்கத்திற்கு மாறாக எட்டு மணிவரை தூங்கவேண்டும் என நினைத்து வீட்டிலும் தெரிவித்து விட்டுத்தான் படுக்கைக்குச் சென்றார்.

ஆனால் விடியலுக்கு முன்பாகவே ஏதோ பலமான சத்தம் கேட்கவே கண் விழித்தார். எதிரில் இருந்த சுவர்க் கடிகாரம் ஆறு மணியைக் காட்டியது. சுதந்திர மனிதராகக் கண் விழித்த அவர் இலேசாக முறுவலித்துக் கொண்டு எழுந்தார். உரத்த பேச்சு ஒலிவந்த அறைப்பக்கம் நடக்கலானார். அதிகாலையில் யார் இப்படி உரக்கப்பேசி தூக்கத்தைக் கலைத்தது என்பதை அறியும் நோக்கில் அவிழ்ந்த நிலையில் இருந்த கைலியை இறுக்கக் கட்டியவாறு அடுத்த அறைக்குள் நுழைந்தார்.

அவரது பிள்ளைகள் மூவருமே அங்கே இருந்தார்கள். காலை எட்டுமணிக்குக் கண் விழிக்கும் மூத்த மகன் அந்நேரத்தில் அங்கே இருந்தது அவருக்கு வியப்பைத் தந்தது.

"என்னப்பா இது அதிகாலையில் எழுந்திட்டீங்க"

"அப்பா....உங்களுக்குச் சிரமம் இல்லாமல் நாங்களே எல்லாத்தையும் செய்துட்டோம்." என்றான் முரளி.

"எனக்கென்ன சிரமம்" என்றவராகப் பார்வையைத் திரும்பிய சிங்காரவேலு திடுக்கிட்டார். முதல் நாள் மாலை அவருக்கு நினைவுப் பரிசாக அளிக்கப்பட்ட அத்தனை பொருள்களும் அங்கே கிடந்தன.

"எதற்காக எல்லாவற்றையும் எடுத்து வச்சிருக்கீங்க?" என்றார்.

"அப்பா....நாங்களே இதை மூன்று பங்காகக் கூறு போட்டுட்டோம். இதோ பாருங்கோ" என்று சுட்டிக் காட்டினான் மூன்றாவது பையன் முத்துச்சாமி.

"அப்படியா....நீங்களே பங்கு போட்டுக் கொண்டீர்களா, பரவாயில்லை....அதுசரி....எனக்கு ஒரு பாண்ட், சட்டைக்குத் துணி எடுத்து வைக்கக் கூடாதா?"

"அப்பா....அதையும் பேசினோம்.....நீங்க இனிமே அலுவலகமா போகப் போறீங்க.....இல்லே ஆட்சியரைத் தான் பார்க்கப் போறீங்களா?" என்றான் முரளி.

சிங்காரவேலுக்குத் தலைசுற்ற ஆரம்பித்தது. ஓய்வு பெற்ற மறுநாளே இந்தப்பாடு என்றால் போகப்போக என்ன ஆகுமோ என்று நினைத்தார். ஒரு கணம் யோசித்தவராக "ஏம்பா, நீங்க பங்கு போட்டுக் கொண்டது உங்க அம்மாவுக்குத் தெரியுமா?" என்றார்.

"அம்மாவுக்கா....அம்மாவுக்கு இங்கே என்ன வேலை? சண்டை போட்டுக்காமல் ஏதாவது செய்யுங்கள் என்று சொல்லி இந்தப் பக்கமே வரவில்லை" என்று பெருமையாகப் பேசினான் உமாபதி.

அதற்கு மேல் பேசுவதற்கு ஏதும் இல்லை என்று கருதிய சிங்காரவேலு பல்துலக்குவதற்காக பாத்ரூம் பக்கம் போனார் முதல் நாள் விழாவில் பேசிய நண்பரது பேச்சு அவரது நினைவில் திரும்பவும் பளிச்சிட்டது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று. என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. நல்ல வேளை அன்பளிப்பாக வந்த பொருள்கள்தான் போயின. கையில் உள்ள பணத்தைப் பத்திரப்படுத்தி யார் கைகளையும் எதிர்பாராமல் கடைசிவரை இருக்கவேண்டும் என்ற உணர்வு அவரிடத்தில் மேலோங்கியது.

அடுத்த ஒருவாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பொழுது கழிந்தது. பையன்கள் இவரிடத்தில் காட்டிய அன்பு அவரைச் சிலிர்க்க வைத்தது. மாலை நேரங்களில் டிபன் என்று எதையும் உண்ணும் பழக்கம் இல்லாதவர். அதிகமாகப் போனால் இரண்டு காபி குடிப்பார். இது எல்லாருக்கும் தெரியும். ஆனால் கடந்த வாரம் முழுக்க, வீடு திரும்பிய பையன்கள் ஏதாவது பலகாரப் பொட்டலங்களுடன் வரத் தொடங்கினார்கள். அவரும் சொல்லிப் பார்த்தார். அவர்கள் நிறுத்துவதாகத் தெரியவில்லை.

அவரிடத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருந்த மனப்பதிவுகள் மாறத் தொடங்கின. தனது பையன்களைப் பற்றி தவறான முடிவுக்கு வந்துவிட்டோமோ என்று கூட எண்ணலானார். நாம் பிள்ளைகளை அப்படியா வளர்த்தோம்" என்று மதிய உணவின் போது கூட மனைவியிடம் கூறிப் பெருமைப்பட்டார். அந்த அம்மாவும் "இல்லையா பிறகு" என்று சொல்லி வறுத்த மீன் துண்டை அவரது தட்டில் வைத்தார்.

ஒருமாதம் வெற்றிகரமாகக் கடந்தது. சிங்காரவேலுவுக்கு உரிய பென்ஷன் தொகை நிர்ணயிக்கப்பட்டு விட்டதால், வங்கிக்குச் சென்று பணம் எடுத்துவர விரும்பினார்.

அந்நேரத்தில்

"போவதாக இருந்தால் சீக்கிரமாகவே போய் வாங்க. உச்சிநேரத்தில் போய், பிறகு அம்மா, அப்பான்னு கத்தக் கூடாது" என்று அவரது மனைவி எச்சரிக்கவே பத்துமணி வாக்கில் புறப்படுவதற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்.

கைப்பையை எடுத்து பாஸ்புத்தகம், செக் புத்தகம், பேனா எல்லாம் உள்ளே இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டார். ஒரு மாதத்திற்குப் பிறகு பேன்டை எடுத்து மாட்டினார். இடுப்பில் அது தொள தொளப்பாக நின்றது. சற்று இளைத்துப் போய் விட்டதைக் காண அவருக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. செருப்பை மாட்டிக் கொண்டு புறப்படத் தயாரானார்.

"அப்பா.....ஒருநிமிஷம்" என்ற முரளியின் குரல் கேட்டு நின்றார்.

"பேங்க் தானே போகனும், பாஸ் புத்தகத்தையும் செக்கையும் எங்கிட்டத் தாங்க. நான் போய் பணம் எடுத்துவர்றேன். முதல்வாரம், அங்கே கூட்டம் அலைமோதும். உங்களால் காத்திருக்க முடியாது" என்று படபடவெனப் பொரிந்து தள்ளினான்.

வீணாக அலைய வேண்டாம் என்பதில் அவர் சமாதானம் அடைந்தார். ஆனால் பாஸ் புத்தகத்தையும் சேர்த்துக் கேட்டது அவருக்கு பகீர் என்றது. எதையும் காட்டிக் கொள்ளாமல் உள்ளே வந்து செக்கில் அவனது பெயரையும் தொகையையும் எழுதிக் கொடுத்தார். அவரது சிந்தனை தீவிரமாகச் செயல்பட்டது.

கையில் கிடைத்த இரண்டு லட்சத்தையும் வங்கியில் சாதாக் கணக்கில் போட்டு வைத்திருப்பது அவ்வளவு நல்லதாகப் படவில்லை. நிரந்தரக் கணக்கில் போட்டு அதிலிருந்து ஆறுமாதத்திற்கொருமுறை வட்டி வருமாறு செய்து கொண்டால் நல்லது என்ற எண்ணம் மேலோங்கியது.

அன்று புதன்கிழமை சந்தைநாள். கறிகாய்கள் வாங்கி வர அவரது மனைவியும் பேத்தியும் சந்தைக்குச் சென்றுவிட்டர்கள். வீட்டில் அவர் மட்டும் தனியே இருந்தார். பாத்ரூம் சென்று திரும்பி வரும் போது கால் வழுக்கி விட்டது. அவ்வளவுதான் கணுக்காலை அசைக்க முடியவில்லை. எப்படியோ எழுந்து யாராவது வரட்டும் என்ற வேதனையோடு காத்திருந்தார்.

சற்றுநேரத்தில் மனைவி வந்ததும் விபரத்தைச் சொன்னார். அந்த அம்மாளோ கூச்சல் போட்டு ஊரைக் கூட்டிவிட்டார். அரைமணி நேரத்தில் பக்கத்தில் இருந்த மருத்துவமனை படுக்கையில் கிடத்தப்பட்டார் சிங்காரவேலு. பெருங்கூட்டம். மருத்துவமனை ஊழியர்களுக்கு பார்வையாளர்களைக் கட்டுப்படுத்துவது போதும் போதும் என்றாகிவிட்டது. எல்லா விதச் சோதனைகளும் செய்யப்பட்டன. மூன்றுநாளைக்குப் பிறகு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். சாதாரண சதைப்பிடிப்பு என்ற அளவில் ரூபாய் ஐயாயிரத்தைக் காலி செய்துவிட்டு சிங்காரவேலு வீடு திரும்பினார்.

அந்த மூன்று நாள்களிலும் அவரது பையன்கள் காட்டிய அக்கறை இவரைச் சந்தேகப்பட வைத்தது. கைவசம் உள்ள பணத்தைப் பங்கு போட்டுத் தராமல் போய்விடுவாரோ என்று அவர்கள் பயந்ததை அவர் ஓரளவு புரிந்து கொண்டிருந்தார்.

அன்றுமாலை அவரது பால்ய நண்பர் குமாரசாமி அவரைப் பார்பதற்காக வந்தார். நீண்டநேரம் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"பணத்தைப் பத்திரமா வங்கியிலே போட்டாச்சுல்ல"....

"ஆமாம்...உடனே அதைச் செய்துட்டேன். ஆனா அதைக் காலி செய்யாமல் பைன்கள் விட மாட்டாங்கள் போலிருக்குதே" என்று மனக்குறையை எடுத்துச் சொன்னார்.

"சிங்காரவேலு....உங்களுக்கு இன்னுமா புரியல. என் நிலையைப் பார்த்தீர்களா, பையனும் தன்னோட வந்து இருக்கச் சொன்னான். பொண்ணும் மருமகனும் தங்களோட வந்து இருக்கச் சொன்னாங்க....அவுங்க காட்டிய அன்பும் பேசிய பேச்சும் உங்களுக்குத்தான் தெரியுமே....இப்ப என்ன ஆச்சு... பென்சன் தொகையை வைத்து நாங்க ரெண்டு பேரும் காலந்தள்ளிக்கிட்டு இருக்கோம்."

"அதுசரி....பையனோட வியாபாரத்துக்காக உங்க சேமிப்புத் தொகை ஐந்து லட்சத்தையும் அப்படியே கொடுத்தீங்களே....அவனுமா அப்படி நடந்துக்கிறான்?"

"அப்படிக் கேளுங்க.....வியாபாரத்திலே நட்டமாகி மேற்கொண்டு ஐந்து லட்சம் கடன் இருக்குன்னு சொல்றான். இதோட விட்டாலும் பரவாயில்லை.......வீட்டை விற்று வர்ற தொகை முழுவதையும் தரச் சொல்றான். ஒரு வருஷத்திலே விட்ட தொகையை மீட்டுத் தருவானாம்."

"ஏங்க..... அது நடக்கிற காரியமா, நீங்க அதுக்கு என்ன சொன்னீங்க"

"ஏற்கனவே உனக்கு செய்ததெல்லாம் போதும். வீட்டை விற்றுப் பணம் வேண்டுமென்றால் நானும் உங்க அம்மாவும் செத்தபிறகு விற்றுக்கொள் என்று சொல்லிவிட்டேன்."

"அப்படியா சொன்னீங்க.....என்னசார் உலகம்......வயதான காலத்தில அப்பா அம்மா சந்தோஷமா இருக்கணும்னு நினைக்காம கையில இருக்கிற கொஞ்ச நஞ்சப் பணத்தையும் பிடுங்கப் பார்க்கிறாங்களே."

"சிங்காரவேலு அதனாலதான் சொல்றேன். அவங்களோட நாடகத்துக்கு மயங்கி பணத்தைப் பங்கு போட்டுறாதீங்க....பிற்பாடு ரொம்ப சிரமப்படுவீங்க.....உங்க மனைவியோட நிலைமையையும் கொஞ்சம் மனசுலே வச்சுக்கங்க. ஒருவாய்க் கஞ்சிக்குப் பிறரை எதிர்பார்த்து நிற்குமாறு நாமே செய்துவிடக் கூடாது."

நண்பர் குமாரசாமி பிறகு புறப்பட்டுச் சென்றார். அவர் சொல்லிச் சென்ற கருத்துக்களின் மீது சிந்தனையில் ஆழ்ந்தவராக இருந்தார் சிங்காரவேலு.

இரண்டு நாள் கழித்து மனைவியிடம் தனது கருத்தை தெரிவித்தார். அவர் சொல்வது அந்த அம்மாளுக்குச் சரியாகவே பட்டது. மனைவி பெயரில் ஐம்பதாயிரத்தை வங்கியில் முதலீடு செய்வது என்றும், அவரது காலத்திற்குப் பிறகு அந்தப் பணத்தைப் பையன்கள் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்தார்கள்.

யோசனை செயல்வடிவம் பெறத்தொடங்கியது. அன்று மாலையில் தேனீர் வேளைக்குப்பிறகு பையன்கள் மூவரும் அங்கே அமர்ந்திருந்தார்கள். சிங்காரவேலு பையன்களை தன் பக்கம் அழைத்தார்.

"தம்பிகளா! நான் சொல்றதைக் கவனமாகக் கேளுங்க....உங்களைப் பொறுத்த வரைக்கும் நான் எந்தக்குறையும் வைக்கலே. மூன்றுபேரும் வேலை பார்க்கிறீங்க. குடும்பத்தோட இருக்கீங்க. உங்களோட வருமானம் போதுமா, போதாதா என்பதைப் பற்றி யோசிக்க இது நேரமில்லே. தகப்பன் என்கிறமுறையில் உங்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்துவிட்டதாகவே உணர்கிறேன். ஆனா....."

இந்த முன்னுரையை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த மூவரும் அந்த "ஆனா" வைக் கேட்டுத் திகைப்புற்றனர். என்ன சொல்லப் போகிறாரோ என்று துடுக்குற்று இருந்தனர். அவர் சொல்லப் போவது சாதகமா பாதகமா என்பதை தீர்மானிக்க முடியாமல் திகைத்து நின்றனர்.

"ஏய்.....மீனாட்சி அந்தக் கைப்பையை எடு" என்று மனைவி பக்கம் திரும்பிச் சொன்னார். அந்த அம்மாவும் அலமாரியைத் திறந்து பையை எடுத்து அவரிடம் கொடுத்தார்.

பையன்களின் முகத்தில் அச்சம் கலந்த மகிழ்ச்சி காணப்பட்டது.

சிங்காரவேலு பையைத் திறந்து செக் புத்தகத்தை எடுத்தார். ஏற்கனவே எழுதியிருந்த மூன்று தாள்களையும் எடுத்து ஆளுக்கு ஒன்றாக நீட்டினார்.

இந்தா பாருங்க.....இதிலே ஒவ்வொருவருக்கும் இருபதாயிரம் ரூபாய்க்கு எழுதியிருக்கேன். உங்களோட தேவைகள் எனக்குத் தெரியாது. அதுபோல என்னோட தேவைகளும் உங்களுக்குத் தெரியாதுன்னு நினைக்கிறேன். ஓய்வு பெறுகிறவரை நான் தன்மானத்தோடு வாழ்ந்தவன். அறிமுகமில்லாத நபரிடம் ஒரு டீ கூட வாங்கிச் சாப்பிட்டதில்லை. யாரிடமும் கையேந்தியது இல்லை. இனியும் அப்படியே இருக்க விரும்புகிறேன்.

உங்க சம்பாத்தியத்திலிருந்து எனக்கோ உங்கம்மாவுக்கோ நீங்க எதுவும் தரவேணாம். நீங்க நல்லா இருங்க. நாங்கபாட்டுக்குத் தனியா இருக்கோம். வரப்போக இருங்க. ஐந்துபத்து தேவைப்பட்டா கேட்டு வாங்கிக்குங்க. ஓய்வூதியப் பணம் முழுவதையும் இப்பவே பங்கு போடச் சொல்லி என்னை நடுத்தெருவில் நிறுத்திறாதீங்க."

கடந்த ஓரிரு மாதங்களாக அவரது நெஞ்சை அழுத்தி வந்த ஒரு பெரும் சுமையைக் கீழே இறக்கி வைத்தது போன்ற உணர்வு சிங்காரவேலுக்கு ஏற்பட்டது. மாலை மணி ஆறாகி விட்டதால் எழுந்து ஆற்றுப்பக்கம் காற்று வாங்கப் புறப்பட்டார்.

நன்றி: நிழல்கள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link