சிறுகதைகள்


கழுகுகள்

கூடல்.காம்

அழகிய "சால்வின்" நதிக்கரையில் அமைந்த "மோல்மீன்" நகரம். பர்மிய மண்ணுக்கே உரிய வளம் பாக்குமிடம் எங்கும் நீக்கமற நிறைந்து செழிப்பாய்த் தோன்றியது. அந்தச் செழிப்பில் இப்போது ஒரு சோகை தட்டிய வெறுமை; வீதி எங்கும் ஜன நடமாட்டம் இல்லை. கடைகள் வீடுகள் புத்த பொங்கி மடங்கள் எங்கும் சமாதி நிலைக்குரிய அமைதி தங்கியிருந்தது.

அந்த அமைதிக்கு நடுவே நிமிடத்திற்கு ஒருமுறை இடைவெளி விட்டு விட்டு போர் விமானங்கள் பறக்கும் பயங்கரச் சத்தம்; குண்டு வீழ்ச்சியின் இடி முழக்கம். ஜப்பானிய படை விமானங்கள் உலோகப் பறவைகளாய் வானில் பறந்து சென்று முன்னேறும் பிரிட்டிஷ் போர் விமானங்கள் மீது குண்டு வீசித் தாக்கிவிட்டு "சர்.....சர்....." என்று வான வீதியில் சென்று கொண்டிருந்தன.

தரையிலோ இந்திய தேசீய இராணுவம் நேதாஜி தலைமையில் அணிவகுத்துச் சென்றவை "ரீட்ரீட்" ஆகிவந்து கொண்டிருந்தன.

"கடோன்சியுவா" - தோட்டத்துக் காவலாளி தலைவிரி கோலமாய் ஓடிவந்தான். மோல்மீன் நகரிலிருந்து கடோன்சியுவோ பத்துக்கல் தொலைவில் இருக்கும். அந்த பெரிய நிறுவனத்துக்கு உரியவர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்: பர்மாவில் பல இடங்களில் நிறையச் சொத்துக்கள் இருந்தன. கடோன்சியுவாவிலும் வளமிக்க ஒரு தோட்டமும் அதையொட்டி ரைஸ் மில்லும் இருந்தது. மோல்மீன்தான் தலைமையிடம்; சண்டை தொடங்கியதுமே முதலாளி வீட்டார் எல்லாரும் உயிருக்குப்பயந்து காலிசெய்து கொண்டு தாயகம் போய்விட்டனர்; ஒற்றைத் தனிக்கட்டையாய் இருபது ஆண்டுகளுக்கு மேலாய் ஓடாய் உழைத்த என்னை நம்பி எல்லா பொறுப்புகளையும் விட்டு விட்டு ஓடிப்போய் விட்டனர்; கயிற்றைக் கட்டி மலையை இழுக்கும் கதைதான்; வந்தால் மலை; அந்தால் கயிறுதானே?

கடோன்சியுவா-தோட்டக் காவல்காரன் பர்மிய இனத்தவன்; என்னைப்போலவே விசுவாசமிக்க ஊழியன்; பதறிக் கொண்டு வந்தவனிடம் சாவதானமாய்க் கேட்டேன். "தோவா. என்ன நடந்தது! கணக்கர் கந்தசாமி கச்சாத்து ஏதும் கொடுத்திருக்கிறாரா...?" பர்மிய மொழியில் தான் விசாரித்தேன்.

"ஓ....." வென்று அலறினான். கதறினான்; ஏதோ சொல்லத் துடிக்கிறான்; வார்த்தைகள் வடிவம் பெறவில்லை; அழுகையை நிறுத்தமுடியாமல் மேலும் கேவுகிறான். ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது. அவனது கையிலும் காலிலும் சிராய்ப்புக் காயங்களையும் ரத்தப் பீறல்களின் திட்டுக்களையும் இப்போது கவனிக்கிறேன்.

"உடனே புறப்படுங்க....."கடோன்கியுவ" தோட்டத்துக்கு"....பர்மியத் தமிழில் பிதற்றினாள்.

அவனை உட்காரவைத்து தோள்களைத் தட்டிக் கொடுத்து என்ன விஷயம் என்று வெளிக்குப் பதறாமல் ஆனால் உள்ளுக்குள் ஒரு உதறலோடு கேட்டேன்;

தேம்பித் தேம்பி அழுதபடி சொன்னான்.

ரங்கோன் பகுதியிலிருந்து ஜப்பானியப் படைகள் பின் வாங்கி வந்து கொண்டிருந்தன. தோல்வியால் துவண்டுபோன ஒரு சிறு படைக்குழு திரும்பி வரும் பாதையெல்லாம் கிராமங்களில் புகுந்து கொள்ளையடித்தும் பொருள்களை அபகரித்தும் நாசமாக்கியபடி அட்டகாசமாய் வெறிபிடித்தவர்கள் போல் ஆட்டம் போட்டு வந்தனர். "கடோன்சியுவா" தோட்டத்தில் புகுந்திருக்கின்றனர். அனைவருக்கும் நல்ல பசி வேறு? தென்னங் குலைகளை தாறுமாறாக வெட்டிச் சாய்த்தனர்; வேகவேகமாகத் தேங்காய்களைப் பறித்து இளநீரைச்சீவி வானரங்களாய்த் தோப்பை சீரழித்தார்கள். கணக்கர் கந்தசாமி பொறுமையாய்ப் புழுங்கினார். வெளியில் தலைகாட்டவே இல்லை. எல்லாச் சிப்பாய்த் தடியன்களும் போயான பின்னர் சீரழிந்து கிடக்கும் தென்னம்பிள்ளைகளைப் பார்த்து கண்ணீர் விட்டார்.

ஜப்பானியச் சிப்பாய்களைத் தாய்மொழியாம் தமிழில் திட்டித் தீர்த்தார்; வேறென்ன செய்வார்? அவ்வளவுதான்; அடுத்த கணம், தோட்டத்து மூலையிலிருந்து நான்கு சிப்பாய்த் தடியன்கள் நேராக அவரை நோக்கி வந்தார்கள். எல்லோரும் போய் விட்டார்கள் என்று நினைத்தவருக்கு அதிர்ச்சியாகி விட்டது. பாவம் ஒருவன் கையில் அரிவாள் மற்றவன் கையில் இளநீர் இருந்தது. அருகில் வந்ததும், பளார் என்று கணக்கர் கந்தசாமியின் கன்னத்தில் ஓங்கி ஒருவன் அறைந்தான்; ஒர் அலறல்; அப்படியே சுருண்டுபோய்க் கீழே விழுந்து விட்டார். ஓடிப்போய் ஒருவன் மீண்டும் அவரைத் தூக்கினான்: தோட்டக்காரன் "தோவா" வின் கழுத்தைப் பிடித்து ஒருவன் தள்ளிக் கொண்டு வந்தான். "என்னமோ திட்டினாரே.......கன்னா பின்னா என்று; அதற்கு என்ன அர்த்தம்; பர்மிய மொழியில் சொல்லு".....என்று கேட்டு "தோவா" வின் முதுகில் ஓங்கி எத்தினான் ஒருவன்; மற்றவன் அவன் தலைக்கு மேலே அரிவாளை ஓங்கினான். கணக்குப்பிள்ளை தலை கவிழ்ந்து மயங்கிய நிலையில் சுணங்கிக் கிடந்தார்.

சொல்லாவிடில் இரண்டு பேரையும் கொன்றுவிடுவதாக நான்காமவன் அரை குறை பர்மியமொழியில் அரட்டினான் "தோவா"வை; சொல்லிவிட்டால் உதையோடு விரட்டிவிடுவதாகவும் அவன் உறுமினான். மறுமொழி வராவிடில் இருவரது உயிருக்கும் ஆபத்து என்ற உதறல் நிலை; தட்டுத் தடுமாறி தன் கழுத்துப் பிடியிலிருந்து சிப்பாயின் கையை லேசாக தளர்த்தச் செய்து கணக்குப்பிள்ளை சிப்பாய்களைத் திட்டியதை பர்மிய மொழியில் "தோவா" சொன்னான். ஒரே தள்ளு, "தோவா" தூரப்போய் தலைகுப்புறச் சாய்ந்தான். அடுத்தகணம் மெய் சிலர்க்கும் வண்ணம் அந்த வெறிச் செயல் நடந்து முடிந்து விட்டது. ஆம்! ரத்தம் பீறிட கணக்கர் கந்தசாமியின் தலையை ஒரே சீவாக சீவி எறிந்துவிட்டு அந்த நான்கு அரக்கர்களும் தோட்டத்தை விட்டு வெளியேறிப் போய் விட்டார்கள்.

"தோவா" சொல்லி முடித்து மீண்டும் மயங்கி வீழ்ந்தான். கேட்டதும் ரத்தம் உறைந்து விட்டது எனக்கு; காலை ஆறுமணிக்கு இந்த அட்டகாசம் நடந்திருக்கிறது. இப்போது மணி பத்தாகப் போகிறது. தாய் நாட்டிலிருந்து பிழைக்கவந்த கணக்குப்பிள்ளை கந்தசாமி அனாதைப் பிணமாய் முண்டம் வேறு தலைவேறாய் அந்திய மண்ணில் கிடக்கிறார்.

"போய் தோட்டத்திலேயே ஒரு குழியைத் தோண்டி புதைத்து விடு" - என்றேன்.

"அதற்குத்தான் நீங்களும் வரவேண்டும்" என்றான்.

நானும் ஓர் அனாதைதான். இங்கேயும் போர்விமானங்களின் குண்டுகள் எந்த நேரத்தில் பாயுமோ என்ற அச்சத்தில் நித்தமும் செத்துப்பிழைத்துக் கொண்டு தான் இருக்கிறேன். அப்படி ஏதாவது நேர்ந்தால் என்னையும் ஒருவன் அடக்கம் செய்ய வேண்டாமா?

கடையைப் பூட்டிவிட்டு சாவியைப் பையில் போட்டுக் கொண்டு "தோவா" வும் நானும் "கடோன்சியுவா" தோட்டத்துக்கு உடனே புறப்பட்டோம். ராணுவ நடமாட்டம் உள்ள காலங்களில் நடந்து போவதுதான் பாதுகாப்பு; வழியெங்கும் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. விமானம் பறக்கும் ஓசை வெகு தொலைவில் கேட்டவுடனேயே பதுங்கு குழிக்குள் வீழ்ந்து மறைந்து கொள்ளவேண்டும். குண்டு வீழ்ச்சியால் பூமி அதிரும்; கற்கள் சிதறும்; குழிக்குள் கிடப்பவர்கள் விமான ஓசை அடங்கியதும் வெளியே எட்டிப் பார்ப்பார்கள்.

முன்னும் பின்னுமாய் நானும் வேலைக்காரன் "தோவா" வும் வேகமாய் நடந்து கொண்டிருந்தோம்; சாலையிலிருந்து கொஞ்சம் ஒதுக்குப்புறமான ஒற்றையடிப் பாதை அது. பாதித் தூரம் கடந்திருப்போம்......."ஒய்ங்...." என்று அபாயச் சங்கின் அலறல் கேட்டது. விமானத் தாக்குதல் தொடங்கப் போகிறது என்பதற்கான எச்சரிக்கை, பதுங்கு குழிக்குள் ஓடி விழுந்து கொண்டு விட வேண்டும்; தோவா..... "லா....லா" என்று பர்மிய மொழியில் அவசரப்படுத்தினான். வேகமாக என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான்; விமானம் அலறுகிறது. ஓரமாய் இருந்த பதுங்கு குழிக்குள் போய் இருவரும் வீழ்ந்தோம். ஒரு நொடிதான் இருக்கும்; திடுதிடுவென்று நான்கு ஸோல்ஜர்கள் ஓடிவந்து அதே குழிக்குள் வீழ்ந்தார்கள்; ஆறு பேருக்கு அங்கே இடமில்லை; சிப்பாய்கள் வந்து மேலே வீழ்ந்தவுடன் "தோவா ஓ...ஓ" என்று பேயாய் அலறி விட்டான். அதிகாலை " கடோன்சியுவ" தோட்டத்தில் கொலை வெறித் தாண்டவமாடிய மூர்க்கர்களே இவர்கள்? ஆம்; "தோவா"வை அலாக்காகத் தூக்கி குழிக்கு வெளியே எறிந்தான் ஒரு தடியன்; என்னை ஒருவன் நெட்டித் தள்ளினான் மேலே; "ஓடிப் போங்கள் நாய்களே....வெளியே போய் செத்துத் தொலையுங்கள்" என்று துரத்தி விட்டனர்.

உலோகக் கழுகாய் போர் விமானம் தூரத்தே பறந்த வந்து கொண்டிருக்கிறது. என் கையைப் பிடித்துப் பரபரவென இழுத்துக்கொண்டு "தோவா" ஓடுகிறான்; புதரை ஒட்டி அருகில் இருந்த ஒரு பதுங்கு குழியில் போய் என்னைத் தள்ளி அவனும் வீழ்ந்து கொண்டான்.

தாழ்வாய் தலைக்கு மேலே பறந்த விமானங்கள் "டுமில்.......டுமில்" என குண்டு மாரி பொழிந்தன" கல்லும் மண்ணும் சிதறி அடிக்கப்பட்டன. புதருக்குள் இருந்த விஷப் பூச்சிகள் வெளியேறி ஓடின. இரண்டு காதுகளையும் கைகால் இறுகப் பொத்திக் கொண்டு இறுதி முடிவுக்காய் குழிக்குள் வீழ்ந்து கிடந்தோம்; விமானங்கள் பறக்கும் ஓசை சற்று மட்டுப்பட்டது. பின்னர் முழுவதுமாய் நின்றது. கழுகுகளும் காக்கைகளும் எங்கு இருந்தனவோ; கூட்டம் கூட்டமாய் வந்து தரை இறங்கின.

மெல்ல எழுந்து மேலில் படிந்திருந்த மண்ணைத் தட்டி விட்டுத் தலையைத் தூக்கினேன்; எனக்கு முன்னதாக "தோவா" எழுந்து போய் வெளியில் நின்று கொண்டிருந்தான்.

"பாப்ஜி....லாபா.....லாபா" எனக் கைகொட்டிச் சிரித்த வண்ணம் என்னைக் குழியிலிருந்து தரையேற்றினான்.

சற்றுமுன் சாவின் சந்நிதானத்தில் நின்று தவித்தவன் இப்போது சந்தோஷத்தின் விளிம்பில் குதித்துக் கொண்டிருந்தான். காரணம் புரியாமல் திகைத்தேன்.

தூரத்தில் தெரிந்த பதுங்கு குழிக்கு அருகில் எங்களை விரட்டியடித்த - சாவின் வெளியில் பிடித்துத் தள்ளிய-ஜப்பானியச் சிப்பாய்களின் சடலங்கள்...ஆமாம் நான்கு சடலங்கள்....குண்டு வீச்சில் சின்னா பின்னமாகிச் சிதறிக் கிடந்தன.

அக்கொலை பாதகர்களின் சடலங்கை மயானக் கழுகுகள் கொத்திக் கிழித்துக் கொண்டிருந்தன.

நன்றி: நிழல்கள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link