சிறுகதைகள்


வள்ளி ஒயின்ஸ்

கூடல்.காம்

தானிம்மாவின் மாராப்பு விலகிக் கிடந்தது. நெஞ்சிலடித்துக் கொண்டு அழுதபோது ரவிக்கைக்குள் மார்புகள் குலுங்கின. சிறிது நேரம் அழுதபின் மூக்கை சிந்தி தூரப்போட்டுவிட்டு மாராப்பை ஒழுங்கு படுத்திக்கொண்டாள். எழுந்து போகப்போகிறாள் என நினைத்தபோது மறுபடியும் மார்பிலடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

"கெழவி கெழவி, காசு குடு கெழவி...." கெஞ்சியபடியே பேச்சிம்மாக் கிழவியின் பின்னாலேயே வந்தான் மணி.

கிழவி கருவாட்டு வாசமடிக்கும் தன் ஸ்தூல சரீரத்தை பிரயாசையுடன் நகர்த்தி வந்து கவுன்ட்டருக்கு முன்னால் போட்டிருந்த ஸ்டூலில் அமர்ந்தாள்.

"ஒரு கலர் குடு கணக்கப்பிள்ள."

கணக்கப்பிள்ளை ஒரு ஸெவன்-அப்பை உடைத்துக் கிழவியிடம் தந்தார். ஒரு மிடறு குடித்துவிட்டு பின்னால் நின்ற மணியைப் பார்த்தாள் கிழவி. அவன் கெஞ்சல் நிற்கவில்லை. பாட்டிலை கவுன்ட்டர் மீது வைத்துவிட்டு இடுப்பில் செருகியிருந்த சுருக்குப் பையைத் திறந்து காட்டினாள். "சொன்னா கேக்கமாட்ட.... பாரு எங்கிட்ட காசில்ல இப்ப."

மணி விடுவதாக இல்லை. "போன தடவை வந்தப்பவே என்ன ஏமாத்திட்டு போயிட்ட. இன்னிக்கு காசு தராம உன்ன விடமாட்டேன்" என்றவன் கிழவி குடித்து வைத்திருந்த பாட்டிலைக் கையிலெடுத்துக் கொண்டான்.

"ஏய் கலரக் குடுடா கிறுக்குப் பய மவனே."

"காசக் குடு. கலரத் தாரேன்."

"நெதம் ஒங்கிட்ட இதே தொந்தரவாப் போச்சி." பொய்யாக சலித்தபடியே இடுப்பின் மற்றொரு பக்கம் சுருட்டி மடித்துச் செருகி வைத்திருந்த துணிப்பையிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்து மணியின் கையில் வைத்து அழுத்தினாள்.

"கெழவின்னா கெழவிதான்." அவள் கன்னத்தை செல்லமாகக் கிள்ளிவிட்டு கேன்ட்டீனை நோக்கி ஓடினான் மணி.

"அடங்கொ..." என்ற கிழவி ஸெவன்-அப்பை குடிக்க ஆரம்பித்தாள். கிழவிக்கு கீழ் வரிசைப் பல் ஒன்று கிடையாது. வாயில் கவிழ்ந்த குளிர்பானம் கொஞ்சம் வெளியே வழிந்து தாவாங்கட்டையில் மயிரடர்ந்து கிடந்த மருவில் வந்து சொட்டி நின்றது.

பேச்சிம்மாக் கிழவி மாதம் இரண்டு தடவை வள்ளி ஒயின்ஸீக்கு வருவாள். "ஒல்சேல்" ஆறுமுகத்திடம் சரக்குகளை வாங்கி மூட்டை போடுவாள். கூட எப்போதும் இரண்டு மூன்று பேர் வருவார்கள். உடன் ஒரு மாட்டுவண்டியும் வரும். மூட்டைகளை மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு கிழக்கே பார்த்துப் பயணம். சவுக்குத் தோப்புகள் தாண்டி கடல் வந்ததும் ரெடியாக இருக்கும் தோணிக்கு சரக்கை மாற்றிவிட்டு ஆட்கள் திரும்பிவிடுவார்கள். தோணிக்காரனும் கிழவியும் இரவோடு இரவாக பாண்டிச்சேரி எல்லையைக் கடந்து கடலூர் அருகே அதிராம்பட்டிணத்தில் சரக்கோடு கரையேறி விடுவார்கள்.

பேச்சிம்மா கிழவிக்கு பத்து வருடமாக இதுதான் தொழில். சாமானியருக்கு எளிதில் விளங்காத வரிவிதிப்பு முறைகளால் பாண்டிச்சேரில் பத்து அல்லது பனிரெண்டு ரூபாய் விற்கும் குவார்ட்டர் பிராந்தி பாட்டில் தமிழ்நாட்டு எல்லைக்குள் வந்ததும் பத்து ரூபாய் விலை கூடிப் போகிறது. இதில் புதைந்திருக்கும் எளிய வியாபார உண்மையைப் புரிந்து கொண்ட பேச்சிம்மா கிழவி போன்ற சிலர் போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவியும், சிலநேரம் கையில் காசை அமுக்கியும் படுஜோராக கடத்தல் பிசினஸ் பண்ணி நல்ல காசு பார்த்தார்கள்.

கிழவியின் கணவன் இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு மீனவக் கலவரத்தில் அடிவயிற்றில் சூரிக்கத்தி வாங்கி செத்துப் போனான். அன்று கன்னியாங்குப்பத்திலிருந்து ஒடி வந்தவள் அதிராம் பட்டிணத்தில் கருவாட்டுக்கடை நடத்தி வந்தாள். தோழி ஒருத்திதான் அவளுக்கு "பாட்டில் பிசினஸை" அறிமுகப்படுத்தினாள். இதில் நல்ல காசு வரவே ஒப்புக்கு கருவாட்டுக் கடையும் அதைப் பிண்ணனியாகக் கொண்டு பாட்டில் வியாபாரமும் நடந்தது. தொழிலில் ஒத்தாசைக்கு நாலைந்து அடியாட்களை வைத்திருந்தாள் கிழவி. இப்போது அவளுக்கு சொந்தமாக இரண்டு மீன்பிடி படகுகளும் கடலூர் பழைய டவுனில் பெரிய வீடும் இருந்தது. போலீஸை கிழவி முறையாக கவனித்து விடுவதால் சிக்கல்கள் ஏதும் வருவதில்லை. மீறியும் கெடுபிடிகள் வந்தால் அதையும் சமாளித்து சரிக்கட்டிவிடுவாள்.

வள்ளி ஒயின்ஸீக்கு வரும் ஒவ்வொரு முறையும் வேலை பார்ப்பவர்கள் எல்லோரையும் பார்த்து நலம் விசாரிப்பாள். கேட்பவர்களுக்குக் காசு கொடுப்பாள். சட்டத்துக்குப் புறம்பானது என்றபோதும் தான் செய்யும் தொழிலில் அவள் ஒரு நேர்மையையும், ஒழுங்கையும் பேணி வந்தாள். அப்பாவி போன்ற அவள் தோற்றத்தையும் அவள் செய்யும் தொழிலையும் பொருத்திப் பார்ப்பது சற்றுக் கடினம்தான். ஒரு சம்பவத்தைச் சொல்லவேண்டும். ஒரு தடவை கூலிக்கு அமர்த்தி வந்த ஆள் ஒருவன் சரக்குகளை மூட்டை கட்டும்போது ஒரு குவார்ட்டர் பாட்டிலை மறைத்து வேட்டிக்குள் செருகுவதைப் பார்த்து விட்டாள் கிழவி. அவளுக்கு வந்த ஆத்திரத்தைப் பார்க்கவேண்டுமே. அவன் வேட்டியை உருவி பாட்டிலை எடுத்து அவன் மூஞ்சியிலடித்தாள்.

"நாறக் கழுத, திருடவாடா செய்யிற, என்கிட்டே கேட்டிருந்தா பத்தென்ன நூறு பாட்டிலக்கூட இனாமாக் குடுத்திருப்பேனடா பன்னாடப் பயலே" என்றாள்.

பேச்சிம்மா கிழவியைப் போல வள்ளி ஒயின்ஸை ஆதாரமாகக் கொண்டு "பாட்டில்" பிசினஸ் நடத்துபவர்களில் சுருளி கோஷ்டியும் ஒன்று. சுருளிதான் தலைவன். கூட எப்போதும் ஐந்தாறு பேர் இருப்பார்கள். எல்லாமே இருபதிலிருந்து முப்பது வயதுக்குள் இருப்பவர்கள். பேச்சிம்மா கிழவிக்கு கடல் மார்க்கமென்றால் இவர்களுக்கு தரை மார்க்கம். தரைமார்க்கமாக பிசினஸ் நடத்துவது கொஞ்சம் ரிஸ்க். போலீஸ் கெடுபிடிகள் அதிகம். ஆனாலும் அடிக்கடி சரக்கு கொண்டு போக தரைமார்க்கம் தான் வசதி.

சுருளியின் சகாக்கள் எப்போதும் வள்ளி ஒயின்ஸிலேயேதான் முகாமிட்டிருப்பார்கள். ஆட்டோ, பைக் சிலசமயம் வாடகைக் கார் மூலமாகவும் சரக்கு போதும். கடலூரை ஒட்டிய பாண்டிச்சேரி எல்லைக்குள் அமைந்த மற்ற எல்லா ஒயின் ஷாப்புகளைப் போலவே வள்ளி ஒயின்ஸீம் வாடிக்கையான மது விற்பனையுடன் கள்ளக் கடத்தலுக்கான பட்டியல் சப்ளையும் செய்து வந்தது.

பேச்சிம்மா கிழவி, சுருளி கோஷ்டி தவிர்த்து இன்னொரு "பிசினஸ்" பிரிவு உண்டு. முதலில் சொன்னவை "பெரிய கை"கள் என்றால் இவர்கள் சில்லரை பார்ட்டிகள். எல்லாருமே பெண்கள். ஏதோ மார்க்கெட்டுக்கு வருவதுபோல கையில் பையுடன் வருவார்கள். பத்தோ இருபதோ பாட்டிலை வாங்கிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். இவர்களது போக்குவரத்து பஸ்ஸில்தான். தானிம்மா, அம்சா, கமலம், அவுலு, மகாலட்சுமி வாடிக்கையாக வருபவர்கள். தினம் ஒரு தடவையாவது சரக்கு எடுத்துப் போக வருவார்கள். "டிமான்ட்" அதிகமாகும்போது சில நாள்களில் இரண்டு மூன்று தடவைகூட வருவார்கள்.

அவுலுதான் அனைவரிலும் இளையவள். கல்யாணமாகி ஒரு வருடம்தான் ஆகிறது. ஒல்லி, ஆனால் ஓங்கி மாதிரி உயரம். தானிம்மா மாநிறத்துக்கும் சற்று கூடுதல். பூசினாற்போன்ற உடம்பென்றாலும் உதடுகளும் நாசியும் திருத்தமாக இருக்கும். கடவுள் அவளுக்கு கண்களைத்தான் மாறுகண்களாகப் படைத்துவிட்டிருந்தார். அந்த மாறுகண் குறை மட்டும் இல்லையென்றால் தானிம்மாவைப் பேரழகி என ஒத்துக்கொள்வதில் யாருக்கும் தயக்கம் இருக்கமுடியாது. குள்ளம் என்றாலும் அம்சாவுக்கு செதுக்கினது மாதிரி உடம்பு. மாநிறத்துக்கும் சற்றுக் குறைவுதான். ஆனால் அந்தக்கூர் நாசியும் பளீரிடும் பச்சரிசிப்பல் வரிசையும் யாரையும் சுண்டியிழுக்கும். மேலுதட்டோரமிருக்கும் மிளகளவு மச்சம் அவளழகுக்கு முத்தாய்ப்பு.

சிலநேரம் மகாலட்சுமி, கட்டுப்போட்ட ஆறாத முழங்கால் புண்ணுடனும் நாள்பட்ட நரைத்த தாடியுடனுமிருக்கும் கணவனோடு வருவாள். இழுத்துக் கட்டப்பட்ட கொடிக்கம்பிபோல கிண்ணென்ற உடம்பு. மேலே தொப்புள் முழுமையும், கீழே கணுக்காலில் கொஞ்சமும் தெரிகிறாற்போல் புடவை கட்டும் தாராள உள்ளம் அவளுக்கு. ஒரு மகாராணிக்குரிய தோரணையோடுதான் ஒயின்ஸீக்கு வருவாள் போவாள். தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பாள். நிமிஷ நேரம்கூட அங்கு வெட்டியாக உட்கார்ந்திருக்கமாட்டாள்.

சரக்கு வாங்க எல்லோரும் "ஓல்சேல்" ஆறுமுகத்திடம்தான் வருவார்கள். மதுரைத் தமிழில், இரட்டை அர்த்தத்துடன் பேசுவதில் கில்லாடியான ஆறுமுகத்துக்கு தனியாக ஒரு அறை ஒதுக்கித் தந்திருந்தார் முதலாளி. பாருக்கு இணையாக ஓல்சேலிலும் வியாபாரம் நடந்தது. சம்பளத்துக்கு மேல் ஆறுமுகத்துக்கு விற்பனையில் பத்து பர்சன்ட் கமிஷனும் உண்டு. வியாபாரத்தினூடே மூடிய கதவுக்குள் ஆறுமுகம் சரக்கெடுக்க வரும் பெண்களுடன் லீலாவினோதங்கள் புரிந்து வந்ததாகவும் ஒயின்ஸ் ஊழியர்களிடையே பேச்சு இருந்தது.

சுருளியின் சகாக்களில் "பங்க்" என முடியும் கையில் எவர்சில்வர் காப்புமாய் கருப்பாய் வெடவெடவென்று இருப்பவன் ராஜூ. வயதுக்கும் தொழிலுக்கும் பொருத்தமில்லாத வகையில் எப்போதும் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில்தான் இருப்பான். போதையில் இருக்கும் போதும் சரி. இல்லாதபோதும் சரி ஏதோ பகல்கனவில் இருப்பவனைப் போல் அவன் கண்கள் மிதந்தபடியே இருக்கும். திடீரென்று ஒருநாள் அவனைக் காணவில்லை. ஒருவாரம் கழித்து அவன் வந்தபோது உடம்பு இளைத்து முகம் பேயறைந்தாற் போலிருந்தது.

நடந்தது இதுதான். ஒருநாள் பாரில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தவனுக்கு கண்சாடை காட்டியிருக்கிறாள் அவுலு. இருவரும் ஒயின்ஸீக்குப் பின்னாலிருக்கும் சவுக்குத் தோப்புக்குள் ஒதுங்கியிருக்கிறார்கள். "யொப்பா....", அதைச் சொல்லும் போது தலையை உலுக்கிக்கொண்டான் ராஜூ. "பொம்பளையா அவ, மனஷனப் போட்டு பெரட்டியில்ல எடுத்துட்டா. இந்த ஜென்மத்துக்கும் தாங்கும்டா சாமி." ஆனால் அவுலுக்கு பரம திருப்தியாம். மனங் குளிர்ந்துபோன அவள் ராஜூவுக்கு கால் சவரனில் மோதிரம் எடுத்துக் கொடுத்தாளாம். பாரில் உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டிருந்த ராஜூவிடம் இடது மோதிர விரலில் நிஜமாகவே கால்சவரன் தங்கம் மின்னிக்கொண்டிருந்தது.

அம்சா சிலநேரம் ஒரு உயரமான நபருடன் வருவாள். அந்த நபர் போலீஸ்காரர் என்பது அவர் தோற்றத்தைப் பார்த்தாலே தெரியும். தமிழ்நாடு போலீசைச் சேர்ந்தவர். அம்சா இரண்டு வருடங்களுக்கு முன் போலீஸிடம் மாட்டி ரிமாண்டில் இருந்தபோது ஏற்பட்ட பழக்கம். போலீஸ்காரருடன் வரும்போது அம்சாவின் முகத்தில் பிடிபடாத ஒரு பெருமையைப் பார்க்கமுடியும். ஒடிப்போய் அரைபாட்டில் "மேன்சன் ஹவுஸ்" பிராந்தியும் கேன்ட்டீனில் காடை வறுவலும் வாங்கி வருவாள். அவள் எதிரில் அமர்ந்து ஊற்றித்தர போலீஸ்காரர் குடிப்பார். பிறகு போலீஸ்காரர் மொபெட்டில் இருவரும் கிளம்பிப் போய்விடுவார்கள். அம்சாவிடம் மற்ற பெண்களுக்கு ஒருவித மரியாதையும் பயமும் இருந்ததற்கு காரணமில்லாமல் இல்லை.

பாரில் கணக்கப்பிள்ளை என்கிற சண்முகசுந்தரமும் குமாரும் மாற்றி மாற்றி நான்கு நாட்களுக்கு ஒருமுறை டூட்டி பார்ப்பார்கள். சண்முகசுந்தரம் வயதானவர். தொழிலில் மிகுந்த அனுபவமுள்ளவர். ஒயின்ஸ் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும்போது முதலாளி அவரிடம் தான் ஆலோசனை கேட்பார். எப்போதும் திருநீறு அணிந்து காட்சி தரும் குமாருக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சண்முகசுந்தரம் தினமும் குடிப்பார். ஆனால் அதை ஓர் ரகசிய வழிபாடுபோல செய்து வந்ததால் முதலாளி உள்பட நிறையப் பேருக்கு அவர் குடிப்பது தெரியாது. கணக்குவழக்கெல்லாம் முடித்து பத்து மணிக்கு கடையை மூடிவிட்டு கிளம்பும்முன் "பெக்" போட்டு விற்கும் "க்ரீன் லேபிள்" விஸ்கியில் சரியாக ஒரு பெக் எடுத்துக்கொண்டு பாட்டிலில் ஒரு பெக் தண்ணீரைக் கலந்துவிடுவார். யாரும் பார்க்காத ஒரு கணத்தில் மௌனமாக விஸ்கியை இறக்கிக்கொண்டு ஒரு பாக்கெட் வறுத்த முந்திரியைப் பிரித்து வாயில் கொட்டிக்கொண்டு எதுவுமே நடவாததுபோல வீட்டுக்குக் கிளம்பிவிடுவார். வழியில் கடவுளே வந்தாலும் நின்று ஒரு வார்த்தை பேசமாட்டார்.

குமாருக்கு இந்த "பாட்டில் பிசினஸ்" பெண்களைக் கண்டாலே பிடிக்காது. கவுன்ட்டரில் வந்து நின்று யாராவது அவனிடம் பேச்சுக் கொடுக்க முயன்றால் "சீ தூரப் போ" என விரட்டுவான். ஆனால் "ஓல்சேல்" ஆறுமுகம் ஒருநாள் சரக்கு விற்ற பணம் பத்தாயிரத்துடன் கம்பி நீட்டிவிட்ட போது முதலாளி அவனைத்தான் ஓல்சேலை கவனித்துக் கொள்ளச் சொன்னார். ஆறுமுகம் எங்கே போனான் என்ன ஆனான் என்று கடைசிவரை தெரியவில்லை. அந்த மதுரைப் பேச்சும் இரட்டை அர்த்த சீண்டல்களும் இல்லாதது பெண்களுக்கு பெரிய இழப்பாகத்தான் இருந்தது.

ஒரு தடவை தானிம்மாவுக்கும் அம்சாவுக்கும் ஏதோ சண்டை.

"என்ன மயிருக்குடி என் பின்னாலேயே வர்ற...? தனியாப் போக வழி தெரியாதோ தட்டுவாணிச்சிக்கு" என்றாள் அம்சா.

"ஆமாம்.... ஒங்க அப்பன் வீட்டு பஸ்ஸில இல்ல வர்ரேன். ஒன்னமாதிரி நானும் துட்டுக் குடுத்து டிக்கட்டு வாங்கிட்டுத்தாண்டி வர்ரேன். அதுலயெண்ணடி ஒனக்கு அப்பிடியொரு காண்டு."

"இங்க பாரு, நான் போற பஸ்ஸில நீ வரக்கூடாது. அவ்வளவுதான். சொல்லிப்புட்டேன்."

போலீஸ்காரருக்குத் தெரிந்த "பார்ட்டி" என்ற வகையில் பஸ்களில் நடக்கும் "செக்கிங்"கின் போது போலீஸ்காரர்கள் அம்சாவை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதுண்டு. அவளோடு ஒட்டிக்கொண்டு போகும் தானியம்மாவுக்கும் சமயங்களில் இந்தச் சலுகை கிட்டியது. தனது செல்வாக்கின் பலனை தானிம்மா ஓசியில் அனுபவிப்பது அம்சாவுக்கு எரிச்சலாக இருந்தது. அம்சா இப்படிச் சொன்னதும் தானிம்மாவுக்கும் ஆத்திரம் பொத்துக்கொண்டது.

"அதச் சொல்றதுக்கு நீ யாருடி ஆக்கங் கெட்ட மூதி. நான் நீ போற பஸ்ஸீலதான் வருவேன். ஒன்னால முடிஞ்சத பாத்துக்கோடி போலீஸ்காரன் பொண்டாட்டி."

தான் போலீஸ்காரனை வைத்திருப்பதை எல்லோர் முன்னிலையிலும் குத்திக்காட்டி தானிம்மா பேசிவிட்டது அம்சாவுக்கு தாங்கவில்லை. மனதுக்குள் கறுவிக்கொண்டாள்.

"ஓல்சேல்" வியாபாரம் இருபத்தி நாலுமணி நேர பிசினஸ். திடீரென்று நடுராத்திரியில் கதவைத் தட்டி சரக்கு கேட்பார்கள். குமாருக்கு இது பெரும் அவஸ்தையாக இருந்தது. அன்றைக்கு அப்படித்தான். ராத்திரி இரண்டு மணிக்குக் கதவைத் தட்டும் சத்தம். திறந்து பார்த்தால் அவுலு. சரக்கு இல்லையென்றெல்லாம் சொல்லி அனுப்பிவிட முடியாது. முதலாளியிடம் புகார் போனால் வேலை அவ்வளவுதான். "சனியனே" என்று மனதுக்குள் திட்டியபடி ஓல்சேல் ரூமைத் திறந்து பாட்டில்களை எண்ணிக் கொடுத்தான். அவனை விழுங்குவது போலப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவுலு.

"சரக்க வாங்கனயில்ல, இங்க என்ன மயிரு பார்வ, எடத்த காலி பண்ணு" என்று அடிக்காத குறையாக அவளை விரட்டினான்.

"இல்ல.... கூட பத்து பாட்டில் குடுத்துட்டு காச நாளக்கி வாங்கிக்கிறது..." என்று இழுத்தாள்.

"ஆங்.... அந்த வேலையெல்லாம் ஆறுமுகங்கிட்ட... காசக் குடுத்தியா சரக்க வாங்கினு போயிட்டேயிருக்கணும். இந்தப் பத்துவரவெல்லாம் நம்மகிட்ட வேணாம்."

குமார் வந்து படுத்தபோது அருகில் படுத்திருந்த கேன்ட்டீன் மணி கிசுகிசுப்பாகக் கேட்டான். "இன்னா தலைவரே, தடவிப் பாத்தியா... அவளோடது ஒரு கைப்பிடிக்குள்ளாற அடங்கிடும்யா... நல்லாக் கல்லு மாதிரி...."

"அடி செருப்பால நாயே. வாயப் பொத்திட்டு தூங்குடா ஈனப்பய மவனே" என்றவன் எழுந்து போய் முகம் கைகால் கழுவிக் கொண்டு வந்து மறுபடியும் படுத்தான்.

ஒன்றரையிலிருந்து மூன்று மணிக்கு இடைப்பட்ட நேரம் பாரில் வியாபாரம் டல்லடிக்கும் நேரம். அன்று மணி சுமார் இரண்டு இருக்கும். கணக்கப்பிள்ளை பல் குத்தியபடி அமர்ந்து சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். பார் ஊழியர்களில் சிலர் மேசையில் கவிழ்ந்து உறங்கியபடியும் சிலர் சுருளியின் சகாக்களோடு சேர்ந்து சீட்டாடிய படியும் இருந்தனர். இடதுபுறமிருந்த பெரிய வீட்டின் பாரை ஒட்டிய சுவரில் உயரமாக சாரம் அமைத்து இரண்டு பேர் சிமெண்ட் கம்பெனி விளம்பரம் எழுதிக்கொண்டிருந்தனர். பெண்களும் யாருமில்லை. தானிம்மா மட்டும் சரக்கு எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டுக்குக் கிளம்பினாள்.

தானிம்மா போய் ஒரு ஐந்து நிமிடம்கூட ஆகியிருக்காது. வேகமாக பதட்டத்துடன் ஓடிவந்தாள். பின்னாலேயே ஒரு மொபெட் வந்து நின்றது. தானிம்மா ஒயின்ஸீக்கும் ரோட்டுக்கும் நடுவே நின்றாள். இரண்டு கைகளிலும் பாட்டில்கள் நிரம்பிய பைகள். வண்டியிலிருந்து இறங்கிய போலீஸ்காரர் தானிம்மாவின் இடுப்பில் எட்டி உதைத்தார். பைகளுடன் தடுமாறிக் கீழே விழுந்தாள் தானிம்மா. "க்ளங்க்க்" என்ற ஓசையுடன் பாட்டில்கள் உடைந்து இளஞ்சிவப்பு நிறத் திரவம் தரையில் ஓடியது. அவள் முடியைத் பிடித்து தூக்கி உலுக்கி மறுபடி கீழே தள்ளினார் போலீஸ்காரர். "த்தூ நாயே" என்று கோபமாகக் காறித்துப்பிவிட்டு வண்டியிலேறிச் சென்றார்.

வீரிட்டபடியே எழுந்த தானிம்மா மார்பிலடித்துக்கொண்டு அழுதாள். "அடப்பாவி நல்லாயிருப்பியா நீ.... நாசமாப் போவே....." என்று மண்ணை வாரித் தூவினாள்.

"ஐயா, இதக் கேக்க யாருமில்லையா..... அவன் நாசமாப் போவ, கை கால் வெளங்காமப் போவ, அந்தக் கைகாரி தலையில கொள்ளி விழ...."

தலைவிரி கோலமாக அப்படியே தரையில் அமர்ந்து அரற்றத் தொடங்கினாள். அவளது மாறுகண்களால் யாரைப் பார்த்து அழுகிறாள் என சரியாகத் தெரியவில்லை.

கணக்கப்பிள்ளை, குமார், மணி, சுருளியின் சகாக்கள் மற்ற பார் ஊழியர்கள் இவர்களுடன் விளம்பரம் எழுதிக் கொண்டிருந்தவர்களும் இறங்கி வந்து அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

தானிம்மாவின் மாராப்பு விலகிக் கிடந்தது. நெஞ்சிலடித்துக் கொண்டு அழுதபோது ரவிக்கைக்குள் மார்புகள் குலுங்கின. சிறிது நேரம் அழுதபின் மூக்கை சிந்தி தூரப்போட்டுவிட்டு மாராப்பை ஒழுங்கு படுத்திக்கொண்டாள். எழுந்து போகப்போகிறாள் என நினைத்தபோது மறுபடியும் மார்பிலடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள். அவுலோ மகாலட்சுமியோ அல்லது வேறு பெண்களோ வரும்வரை அவள் அழுகையை நிறுத்தமாட்டாள் எனத் தோன்றியது.

நன்றி: வார்த்தைப்பாடு

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link