சிறுகதைகள்


மெர்குரிப் பூக்கள்

கூடல்.காம்

அந்தச் சிறிய நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. சின்னச் சின்ன சந்துகள் கூட வண்ணத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அப்பகுதியின் மாபெரும் மக்கள் தலைவராகத் திகழ்ந்தவரின் நினைவுநாள் விழா அன்று நடை பெறுவதாகவிருந்தது. ஆண்டுதோறும் இந்த விழா உற்சாகமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் அன்றைய தினம் விழா பற்றி ஊர்மக்கள் அனைவருமே உற்சாகம் காட்டினார்கள்.

முக்கிய சாலையின் குறுக்கே பெரிய மேடை போட்டிருந்தார்கள். அதைக்கூடப் பலர் குறை கூறினார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதால் அந்தக் கூட்டத்தை வாரச் சந்தைத் திடலில் போட்டிருக்கலாம் என்றும் பேசிக் கொண்டார்கள். மேடை அலங்காரப் பணி காலையிலேயே தொடங்கிவிட்டதால் அந்த வழியாகப் போய் வரும் பேருந்துகள் நீண்ட தூரம் சுற்றி வளைத்துச் செல்ல வேண்டியிருந்தது. வழக்கமாக இது போன்ற நேரங்களில் மனச்சங்கடமும், குமைச்சலும் அடையும் மக்கள் அன்று அது பற்றிக் கலவைப்பட்டதாகக் தெரியவில்லை.

இத்தனை மகிழ்ச்சிக்கும், ஆர்வத்திற்கும் மையமாக இருந்தது பிரபல சினிமா நடிகர் ஒருவரின் வரவுதான். இந்த விழாவில் கலந்து கொள்வதற்கென்றே அவர் சென்னையிலிருந்து வருகிறார். பட்டிதொட்டி எங்கும் விளம்பரப்படுத்தப்பட்டது. அவரது பெயரில் இயங்கிவந்த மன்றங்கள் மட்டுமல்ல, பிற நடிகர்கள், நடிகைகள் பெயரில் இயங்கிவந்த மன்றங்கள்கூட விழாவுக்கு வரும் நடிகரை வரவேற்று பெரிய பெரிய சுவரொட்டிகள் ஒட்டியிருந்தன.

நடிகர் வரும் வழி நெடுகிலும் ஐந்து மைல் தூரத்துக்கு சாலையின் குறுக்காக பெரிய பதாகைகள் கட்டப்பட்டிருந்தன. "இத்தனை துணிகளையும் ஒன்றாகச் சேர்த்தால், அந்த ஊரில் படிக்கும் பையன்களுக்குச் சட்டை தைத்துப் போட்டு விடலாம்" என்று காலையில் தேநீர்க் கடையில் கருத்துத் தெரிவித்த பொதுநலத் தொண்டர் ஒருவர் பலமாக உதைக்கப்பட்டு அது போலீஸாரின் வழக்கமாக ஆனதும் நல்ல விளம்பரமாக அமைந்துவிட்டது.

பிரபலமான நடிகர் சிறப்புரை நிகழ்த்தவிருப்பதால் குறிப்பிட்ட நபர்களைத்தான் மேடையில் ஏற்ற வேண்டும் பேச வைக்க வேண்டும் என்பதில் விழாக்குழுவினர் அதிக அக்கறை காட்டினார்கள்.

நடிகர் வருவதற்கு முன் யார் யார் பேச வேண்டும், நடிகர் முன்னிலையில் யார் யார் உரை நிகழ்த்தவேண்டும், என்பது கூட முடிவு செய்யப்பட்டிருந்தது உரையாற்றுவோரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலுசாமியும் இடம் பெற்றிருந்தார். மறைந்த தலைவரைப் பற்றி நன்கு அறிந்தவர் என்பதாலும் மேடையைத் தவறாகப் பயன்படுத்தமாட்டார் என்பதாலும் அவர் பெயர் பலராலும் பரிந்துரைக்கப்பட்டது.

காலை பதினோரு மணியிருக்கும். நூலகநேரம் முடியவே பாலுசாமி வீடு திரும்பினார். வழக்கமா வருகின்ற வழியில் தான் வந்து கொண்டிருந்தார். "ஐயா...ஐயா...." என்று குரல் கேட்கவே திரும்பிப் பார்த்தார். அந்த வீட்டு வாசலில் நடுத்தர வயதில் ஒரு பெண்ணும் பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பையனும் நின்று கொண்டிருந்தனர். அவர்களுடைய தோற்றமே ஏழ்மை நிலையை எடுத்துரைப்பதாக இருநத்து.

"ஐயா... ஒரு அஞ்சு நிமிஷம் வந்துட்டுப் போங்க" என்று அழைத்தாள் அப்பெண். பாலுசாமி வழக்கமாகச் செல்கின்ற பாதை என்பதால் அந்தப் பெண்ணைப் பல முறை பார்த்திருக்கிறார்.. கூலிவேலை செய்து வருபவள் என்ற அளவில் தெரிந்து வைத்திருந்தார்.

அவள் தன்னை அழைத்ததன் காரணத்தை அவரால் ஊகிக்க முடியவில்லை. முன் பின் அறிமுகமில்லாத தன்னை ஏன் அழைக்க வேண்டும் என்று குழம்பினார். மிகச் சிறிய அந்த ஓட்டு வீட்டுக்குள் குனிந்து நுழைந்தார். அதற்குள்ளாக தூசியைத் துடைத்துவிட்டு ஒரு நாற்காலியை போட்டாள் அந்தப் பெண். தனது தோளில் கிடந்த துண்டால், வழிந்து ஓடிய வியர்வையைத் துடைத்தவாறு அமர்ந்தார் பாலுசாமி.

"ஐயா... இன்னைக்கு கூட்டத்தில நீங்களும் பேசப் போறதா என் மகன் சொன்னான்...."

"ஆமாம்மா.... அதுக்கு என்ன...?"

பாலுசாமி மேலும் குழம்பிப் போனார். கூட்டத்தில் பேசுவதற்கும் இந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு. எதற்காக அதைக்கேட்க வேண்டும் என்று தயங்கினார். அந்தப்பெண்ணே புதிரை விடுவித்தாள்.

"ஐயா... உங்களாலே ஒரு சின்ன உதவி வேணும். என் பேரு கமலா. இவன் என் பையன் எனக்கு மூணு பிள்ளைகள்".

"சரிம்மா... உங்களுக்கு நான் என்ன செய்யணும்; அதைச் சொல்லுங்க"

"ஐயா... உங்களுக்குத் தெரியுமான்னு எனக்குத் தெரியலே... என் கணவர் பெயர் கணேசன் ஒரு காலத்திலே அவரும் நடிகர் தான்."

"அப்படியா... அவர் இப்ப என்ன செய்கிறார்?".... ஏன் தான் கேட்டோம் என்று பாலுச்சாமி பதறிப்போனார். அந்தப் பெண் பொல பொல வென்று கண்ணீர் சிந்தினார். தன் நிலைக்கு வர அவளுக்கு இரண்டு மூன்று நிமிடங்கள் பிடித்தன.

"அவர் இப்ப இல்லே. அவர் செத்துப் போய் பத்து வருசம் ஆச்சு. ஐயா நாங்க காதலிச்சு கலியாணம் செய்துகிட்டோம். அதனால அவர் இறந்தபிறகு நான் யார் வீட்டுக்கும் போக முடியலே. இந்த மூணு பிள்ளைகளையும் வச்சுக்கிட்டு நான் படுற பாடு... என்னத்தையா சொல்றது. அதிலே மூத்தவ வயசுக்கு வந்து ஆறேழு வருசமாச்சு. இவளை எப்படிக் கரையேத்தப் போறேனோ...."

இதைக் கேட்டதுமே பாலுசாமி வெட்கத்தால் நாணிப்போனார். எத்தனையே ஆண்டுகளா இந்தப் பாதை வழியாகத்தான் போய் வருகிறார். ஆனால் அந்தச் சிறிய வீட்டிற்குள்ளாக இத்தனை பெரிய சோகம் அடைபட்டுக் கிடப்பதை அறியாமல் போனமைக்காக வெட்கப்பட்டார். இந்நிலையில் தன்னிடம் என்ன கோரிக்கை வைக்கப் போகிறாளோ என்ற அச்சமும் அவருக்கு ஏற்பட்டது. தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு கேட்டார்.

"சரிம்மா... நான் என்ன செய்யணும், அதை சொல்லலியே...?"

"ஐயா.. இன்னைக்குக் கூட்டத்திலே பேசப் போறாரே நடிகர், அவரும் என் கணவரும் ரொம்ப நெருக்கமா இருந்தாங்க. சென்னையிலே ஒரே காலனியிலே பத்து வருசம் ஒன்னா குடியிருந்தோம். பக்கத்துப் பக்கத்து வீடு. அப்ப இவரும் சில்லறை வேஷந்தான் போட்டாரு. என் கணவர் மாரடைப்பாலே திடீர்ன்னு இறந்தப்ப நிலை குலைஞ்சு போயிட்டோம். அவரை எடுத்து அடக்கம் பண்ணவும், பிற காரியங்களுக்கும் இவருதாய்யா ரொம்ப உதவியா இருந்தாரு".

"ஏம்மா... அப்ப இந்த நடிகரை உங்களுக்கு நல்லாத் தெரியுமா...! அவர் பெரிய நடிகரா இருக்கிறதுனாலே உதவி கேட்டு வாங்கலாமே... கேட்டா அவரும் செய்யாமலா இருப்பார்". தன்னால் கூற முடிந்த ஆறுதல் வார்த்தைகளைக் கூறிய பாலுசாமி இப்போது சற்று தெளிவு பெற்றார். தன்னை அந்த அம்மாள் அழைத்ததன் நோக்கத்தை ஓரளவு புரிந்து கொண்டார்.

சற்ற நேர அமைதிக்குப் பிறகு கமலா தொடர்ந்தாள்.

"ஐயா கணவர் இறந்த பிறகு வீட்டு வாடகைகூட என்னால கொடுக்க முடியலே. அப்ப பிள்ளைங்களும் சின்னதுகள். ஒருநாள் ராத்திரி யாருக்கும் சொல்லாம ரயிலேறி இங்கே வந்துட்டோம். கூலிவேலை செய்து பிள்ளைகளைக் காப்பாத்தி வர்றேன்"

"நான் என்ன செய்யனும், இப்ப அதைச் சொல்லுங்க...."

"அந்த நடிகரோடு மேடையிலே இருப்பீங்கல்ல. அந்த நேரத்தில் எங்களைப்பத்தி அவர்கிட்ட சொல்லுங்க. ஏதாவது உதவி செய்வார்னு நம்புறேன்."

"நல்லதும்மா... என்னால முடிந்ததைச் செய்யுறேன்... எதுக்கும் நீங்க முன்னதாகவே அங்கே வந்து என் கண்லபடுற மாதிரி நில்லுங்க. நேரம் பார்த்து உங்களை அவரிடம் கூட்டிப் போறேன்."

"ஐயா... நீங்க நல்லா இருக்கணும். ஆண்டவன் உங்க புள்ள குட்டிகளைக் காப்பாத்துவான். இந்த உதவியைச் செய்தா என் உயிர் உள்ள வரைக்கும் உங்க நன்றியை மறக்க மாட்டேன்."

கமலாவின் வார்த்தைகள் அவரது நெஞ்சைத் தொட்டன. இந்த அபலைப் பெண்ணுக்கு எப்படியாவது உதவவேண்டுமே என்ற ஆதங்கம் அவரிடத்தில் மேலோங்கியது.

அங்கிருந்து விடைபெற்று வீட்டை நோக்கி நடக்கலானார். அன்றைய கூட்டத்தில் தலைவரது சிறப்புகளை எப்படியெல்லாம் எடுத்துரைப்பது என்பது பற்றியே சிந்தித்து வந்த, அவர், இப்போது அந்த நடிகரிடம் பேசி ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் பெறலானார்.

மாலை ஏழு மணிக்கு கூட்டம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஐந்து மணிக்கே கூட்டம் அலைமோதியது. சினிமாவையும் நடிகர்களையும் கேவலமாகப் பேசுபவர்கள் கூட ஏதோ, சாக்கில் சற்று தள்ளி ஓரத்தில் நின்றவாறு நடிகரின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வழக்கமாகச் சுணங்கியே மேடைக்குவரும் தலைவர்களைப் போல் அல்லாது சரியாக ஏழு மணிக்கே அந்த நடிகர் காரில் வந்து இறங்கினார்.

கூட்ட நெரிசலில் அவரைப் பத்திரமாக மேடையேற்றுவதே போதும் போதும் என்றாகி விட்டது. வாழ்க முழக்கங்கள் விண்ணை எட்டின.

நிகழ்ச்சியும் உடனடியாகத் தொடங்கியது. நடிகருக்கென அலங்கார இருக்கை போடப்பட்டிருந்தது. தலைக்குமேலே கையை உயர்த்திக் கும்பிட்டவாறு அதில் வந்து அமர்ந்தார். புன்னகை செய்தவாறு இங்கும் அங்கும் திரும்பிப் பார்த்தார். கூட்டத்தினர் அதிசயத்தைப் பார்ப்பது போல அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பாலுசாமி ஓரத்தில் அமர்த்தப்பட்டார். சற்றுமுன்னர் இருந்த உற்சாகம் இப்போது அவரிடமில்லை. நடிகருக்கும் அவருக்கும் இடையே இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களைத் தள்ளி உட்கார வைக்கவும் முடியாது; இங்கிருந்தவாறு பேசவும் முடியாது என்று குழம்பினார். அந்த ஏழைப் பெண்ணுக்கு உதவக்கூடிய வாய்ப்புத் தனக்கு ஏற்பட்டிருப்பதை எப்படியும் நல்ல முறையில் செய்ய வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தார். இதற்குள்ளாக வீடியோ படங்களும் புகைப்படங்களும் எடுக்கப்பட்டன.

விழாத் தலைவர் உரையாற்றத் தொடங்கினார். அந்த நேரத்தில் நடிகர் தன் பின்னால் நின்ற ஒருவரிடம் ஏதோ கூறலானார். அவ்வளவுதான் ஏதோ அதிசயம் நிகந்ததுபோல பாலுச்சாமிக்குப் பக்கத்து இருக்கைக்கு வந்த நடிகர் அமர்ந்தார். பிறகுதான் புரிந்தது தலைக்கு மேல் ஒளிவிட்டுக் கொண்டிருந்த "மெர்க்குரி" வெளிச்சத்தையும், விளக்கைச் சுற்றி மொய்த்துக் கொண்டிருந்த கொசுப் படையையும் தவிர்க்கவே அவர் இடம் மாறியிருந்தார்.

இப்போது பாலுச்சாமிக்கு வயிற்றில் பால் வார்த்தது போலிருந்தது. அவருக்கு ஆண்டவனாகப் பார்த்து தனது பக்கத்தில் நடிகரை அமர வைத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார். இனி நேரம் பார்த்துச் சொல்லி விடவேண்டியது தான் என்று அவரது நெஞ்சு பரபரத்தது. எதிரே ஓரத்தில் ஏக்கத்தோடு நின்று கொண்டிருந்த கமலாவையும் அவ்வப்போது பார்த்துக் கொண்டார்.

இவருக்கு வாய்ப்பு வருவதற்குள்ளாக மூன்று பேர் உரையாற்ற நேர்ந்தது. பாலுசாமி பதைபதைத்தார். நடிகர் பக்கமாகத் தலையைத் திருப்பி வணக்கம் சொன்னார். நடிகரும் மகிழ்ச்சியோடு பதில் வணக்கம் செலுத்தினார். இரண்டே நிமிடங்களில் தான் சொல்ல வேண்டியவற்றை குறள்போல சுருங்கச் சொன்னார். இதை கவமாகக் கேட்டுக் கொண்டிருந்த நடிகர், "அப்படியா... அவுங்க இங்கேயா இருக்காங்க...! எனக் கேட்டார். பாலுசாமி பதில் சொன்னார்.

நடிகர் மீண்டும் வாய் திறந்தார். "சரி இப்பநான் அவுங்க வீட்டுக்கு வரமுடியாதே...."

"ஐயோ... அதெல்லாம் வேண்டாம். அந்த அம்மாவே இந்தக் கூட்டத்துக்கு வந்துருக்காங்க. மேடைக்குப் பின்னால நிற்கச் சொல்லியிருக்கேன். கூட்டம் முடிந்ததும் நீங்க ஒரு நிமிசம் அவுங்ககிட்டே பேசினால் போதும்...." என்றார்.

நடிகர் கறுப்புக்கண்ணாடி அணிந்திருந்ததால் அவரது உள்ளத்தைக் கண்களின் வழி காணமுடியவில்லை. பாலுசாமி மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தார். இந்த அளவுக்கு வந்த பிறகு காரியம் நடக்காமலா போகும் என்று கருதினார். பிரபலமான நடிகரிடம் உள்ளூர் ஆசிரியர் பாலுசாமி என்னதான் பேசுகிறாரோ என்று கூட்டம் வியப்போடு நோக்கியது. அவருக்கு அடித்த யோகத்தைப் பாருங்களேன் என்று ரசிகர்கள் கண்களை அகலவிரித்தவாறு நோக்கினார்கள்.

அடுத்துப் பேச வாய்ப்பு பாலுசாமிக்கு வந்தது. பேசிய பத்து நிமிடங்களில் நடிகரைப் புகழ்ந்து இரண்டு நிமிடங்கள் பேசினார். அந்தப் புகழ்ச்சி அவர் மனசாட்சிக்குப் புறம்பாகவே இருந்தது. இருந்தாலும் ஏழைப் பெண்ணுக்கு உதவி என்பதால் மன உறுத்தலைப் பொறுத்துக் கொண்டார்.

கடைசியா சிறப்புரை நிகழ்த்துவதற்காக நடிகர் எழுந்தார். இதுவரை அமைதியாக இருந்த கூட்டம் நடிகரை நெருக்கத்தில் காண வேண்டும் அவரது அங்க அசைவுளைக் கவனிக்க வேண்டும் என்பதற்காக முண்டியடித்து முன்னே வந்தது அமைதிப் படுத்துவதற்குள் பெரும்பாடாகிப் போனது. இதற்கிடையே நடிகர் பேசத் தொடங்கினார். மறைந்த தலைவரின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

"இன்று இந்த அளவுக்கு மறைந்த நமது தலைவருக்கு மரியாதை கெய்கிறோம் என்றால் அதற்குக் காரணம் அவரிடமிருந்த மனிதாபிமானமே வேறு எந்தத் தலைவரிடமும் இந்தப் பண்பைப் பார்க்க முடியாது. மனிதனுக்கு மனிதன் உதவ வேண்டும். உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற மாண்பினை நமக்கு எடுத்துச் சொன்னவர் நம் தலைவர். அவரது தொண்டர்கள் என்று சொல்லிக் கொள்வதில் நாம் பெருமை படுகிறோம். அவரது கொள்கைகளைப் பின்பற்றுவதே அவருக்கு நாம் செய்கின்ற மகத்தான அஞ்சலியாகும்."

இப்படியாகப் பேசிக் கொண்டே போனார் அந்த நடிகர். அவரது இந்தப் பேச்சின் மறைபொருள் எதுவென்பது பாலுசாமி ஒருவருக்கே புரிய முடியும். நெஞ்சமெல்லாம் இனிப்பதுபோல அவர் உணர்ந்தார். தனது கோரிக்கையை ஏற்று உரையின் ஊடாக இத்தகைய கருத்தைத் தெரிவிப்பார் என்று பாலுசாமி துளியும் கருதவில்லை. இப்போது கடைசியாக ஒரு முறை தொலைவில் நின்ற கமலாவைப் பார்த்தார். பொருள் பொதிந்த தனது பார்வையை அந்த ஏழைப்பெண் புரிந்து கொண்டிருப்பாள் என்பது போல அவரது பார்வை இருந்தது. கைக்கு எட்டி விட்டது. இனி வாய்க்கு எட்ட வேண்டியது தான் பாக்கி.

இதற்கிடையே நடிகரது உரை முடிவுற்றது. யாரோ ஒருவர் நன்றி கூறனார். மேடையின் ஒழுங்கும் கூட்ட ஒழுங்கும் குலையத் தொடங்கியது. இந்த நெருக்கடிகளுக்கிடையே நடிகரை ஒட்டி நின்றார் பாலுசாமி. நடிகரும் பாலுசாமி பக்கமாக நோக்கினார். நடிகரை மேடையை விட்டுக் கீழே இறக்கினார்கள்.

அந்த நெருக்குதலில் பாலுசாமி கையிலிருந்த குறிப்புகளும் புத்தகங்களும் கைநழுவிப் போயின. அப்போது தொலைவில் நின்ற கார் மேடையருகே கொண்டுவரப்பட்டது. இதற்குள்ளாக கையை ஆட்டி கமலாவைத் தன்பக்கம் வருமாறு சமிக்ஞை காட்டினார் பாலுசாமி. அந்தப் பெண்ணும் முண்டியடித்துக் கொண்டு, நெரிசலில் சிக்கியவாறு அவர்கள் பக்கமாக வரலானாள். அவளது கோலம் முன்னிலும் மோசமாக இருந்தது.

"சார்... இந்தா அந்த அம்மா வந்துட்டாங்க...." என்றார் பாலுச்சாமி. பின்பக்கமாகத் திரும்பினால் கமலாவைப் பார்த்துப் பேசிவிடலாம். அதற்குள்ளாகக் காரின் கதவைத் திறந்து கொண்டு நடிகர் உள்ளே அமர்ந்தார். கதவும் சாத்தப்பட்டது. ஏற்கனவே காரின் கண்ணாடி தூக்கி விடப்பட்டிருந்ததால், நடிகரைப் பார்க்கவோ பேசவோ முடியவில்லை. காரும் நகர்ந்தது.

தரையில் போப்பட்ட மீன் போல பாலுசாமியின் பாசநெஞ்சம் துடிக்கலானது. தனது உயிரினும் மேலான ஒருவரைப் பறிகொடுத்ததைப் போல பரிதாபமாக நின்றார் பாலுசாமி.

நன்றி: நிழல்கள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link