சிறுகதைகள்


மைதானம்

கூடல்.காம்
மரங்களில் பறவைகள் தங்கிப்போனதின் சாட்சியாய் தரையில் சிதறிக் கிடக்கும் வெள்ளைநிற எச்சங்களைப்போல், அந்த மைதானம் முழுவதும் பரவிக் கிடந்தன அடுப்பெரித்துக் கருப்பேறிய "ஃ" கற்கள். மனிதர்கள் தங்கியிருந்து சமைத்து சாப்பிட்டு விட்டுப் போனதற்குச் சாட்சியங்களாய். பறவைகள் பெரும்பாலும் அதே இடம் அதே மரம் தேடி அடைய வரலாம். ஆனால் இந்த நாடோடிக் கூட்டம் வருவார்கள், போவார்கள். எவ்வித விகர்ப்பமுமின்றி வந்தவர்களையெல்லாம் வரவேற்று தன் மடி மீது அமர வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தது அந்த மைதானம். ஒரு வகையில் பறவைகளும் நாடோடிக் கூட்டத்தாரும் வெவ்வேறல்ல போலும்.

இந்த மைதானத்தை ஒட்டி எங்கள் தாத்தா வீடு கட்டியபோது எங்கள் வீடும் இந்த மைதானமும் ஊருக்கு அப்பால் வெகுதூரம் தள்ளியிருந்தது. தாத்தா இறந்தபோது இந்த மைதானத்தையும் எங்கள் வீட்டையும் நகரம் கிட்டத்தில் நெருங்கிவிட்டது. நகரத்தின் வேகத்திற்கு மைதானமும் எங்கள் வீடும் ஓட முடியாததால் நகரம் எங்களைக் கடந்து பல மைல் தூரம் முந்திச் சென்றுவிட, இப்போது எங்கள் வீடும் மைதானமும் நகரின் மத்தியாகிப் போனோம். ராமசாமி தாஸ் என்கிற ஒரு புண்ணியவான் இந்தப் பரந்த மைதானத்தை இந்த ஊர் பஞ்சாயத்தின் பேருக்கு உயில் எழுதி வைத்ததோடு, சில நிபந்தனைகளையும் உயிலில் சேர்த்து எழுதி வைத்துவிட்டு சிவலோகம் போய்விட்டார். அந்த நிபந்தனைகளில் முக்கியமானது எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்த மைதானத்திற்குள் எவ்வித கட்டிடங்களும் கட்டக்கூடாது. நாடோடிகள் தங்கிச்செல்வதைத் தடுக்கக் கூடாது. மரங்கள் வளர்க்கலாம். ஆனால் சுற்றுச் சுவர் கட்டி பூட்டு திறப்பு போடக்கூடாது. இவைகளை மீறி ஏதாவது செய்தால் உயில் காலாவதியாவதோடு, என்னுடைய வாரிசுகள் உரிமை கோரும் உரிமையைப் பெற்றுவிடுவார்கள். பஞ்சாயத்து வளர்ந்து நகராட்சியாகுமென்றோ நகராட்சி மாநகராட்சியாகுமென்றோ உயில் எழுதிய ராமசாமி தாஸ் நினைத்திருக்கக் கூடும். பல கோடி ரூபாய் சொத்தை நாடோடிகளிடம் கொடுத்துவிட்டு மாநகராட்சியும் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது. பல்வேறு கட்சிப் பிரமுகர்களால் பெருமூச்சு மட்டுமே விட முடிகிறது.

மைதானம் ராமசாமிதாஸ் பூங்கா என்ற பேரில் நகரின் மத்தியில் பரந்து விரிந்து கிடப்பதோடு பறவைகளை அழைக்கும் மரத்தைப்போல் நாடோடிகளை வா வா என்று கூவி அழைத்துக் கொண்டிருக்கிறது. எப்போதும் ஏதாவது ஒரு நாடோடிக் கூட்டம். அல்லது பலவிதமான நாடோடிக் கூட்டம், அத்தது, அலஞ்சது, பிஞ்சது, கிழிஞ்சது, பிளாட்பாரம் என்று சண்டையும் சச்சரவுமாய் நிறைந்து காணப்படும் மனிதக் கூட்டங்கள், கூப்பாடுகள்.

நீண்ட நாட்கள் தங்கியிருப்பவர்கள் என்று பார்த்தால் மைதானத்தின் மேலக் கடைசியில் குடிசைகள் போட்டு சில மாசங்களாக வசித்து வருகின்ற ஒரு கூட்டம். பெரும்பாலும் பழைய பேப்பர், இரும்பு, அலுமினியம், அறுந்த செருப்பு, பாலிதீன் பை போன்ற கழிவுகளை பொறுக்கி விற்று வயிறு கழுவும் கூட்டம். சாயங்காலம் ஆகிவிட்டால் சண்டைகளும் ஆரம்பித்துவிடும். ஆண்கள், பெண்கள் என்று அனேகமாக எல்லோருமே பாட்டிலும் கையுமாகப் போதையில் மிதப்பார்கள். சிறிது நேரம்தான் பறவைக் கூச்சல்கள் போல் அடங்கி, அப்புறம் அமைதியாகத் தூங்கும் அந்த மைதானம்.

இதோ பொழுது விடிந்துவிட்டது. பறவைகள் விதவிதமான சத்தங்களுடன் இடம்பெயர்ந்து செல்கின்றன. அதேபோல்தான் தங்களுடைய கக்கங்களில் கால்வரை இழுபடும் பெரிய பெரிய பைகளை இழுத்துக்கொண்டு கைகளில் நுனி வளைந்த கம்பி கட்டிய குச்சிகளைப் பிடித்துக் கொண்டு, கைக்குழந்தைகள் தொட்டிலாய் மார்பில் தொங்கப் பெண்கள் போகிறார்கள். அந்த அதிகாலை கருக்கிருட்டில் நடமாடும், ஓடும், சிரிக்கும் பொம்மைகளைப் போல் அவர்கள் மைதானத்தைவிட்டு கிளம்பிச் செல்கிறார்கள்.

இரவின் போதை மயக்கம் இன்னும் தெளியாமல் பாபநாசம் சவமாய் உறங்கிக் கொண்டிருக்கிறான் மரத்தடியில். தன்னுடைய இரட்டைக் குழந்தைகளை வெள்ளரிப்பழத்தைப் போல் இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு பாபநாசத்தின் பெண்டாட்டியும் மாமியாரும் பஸ் ஸ்டாண்டிற்கு விரைகிறார்கள். சாயங்காலம் திரும்பி வரும்போது இருவரின் மடிகளிலும் சில்லரைகள் கனத்துக் தொங்கும். கூடவே பிராந்திப் பாட்டில்களும். அப்போது போதை தெளிந்து இவர்களை வரவேற்பான் பாபநாசம்.

இதோ பத்தே வயது நிரம்பிய நாகப்பனின் மூத்த மகன் முனியசாமி கக்கத்தில் பைகள் இழுபட, கூடவே இளைய மகன். இருவரும் எப்போதும் ஜோடிப் புறாக்களைப்போல் தான் நகர வீதிகளில் திரிவார்கள். ஏனென்றால் நாகப்பனின் மூத்த மகன் முனியசாமிக்கு எந்த நேரத்திலும் வலிப்பு வந்து ரோட்டில் விழுந்துவிடுவான். அவனைக் காப்பாற்றிப் பாதுகாப்பாக அழைத்து வரவே அவனை விட்டுப் பிரியாமல் அண்ணன் கூடவே திரியும் தம்பி.

இன்றைக்கும் சண்டை ஆரம்பித்துவிட்டது. என்ன சண்டை, எதற்காக சண்டை என்று யாருக்கும் தெரியாது. ஆனால் தினமும் சண்டைகளும் சவால்களும் நிச்சயம் உண்டு. சிறிது நேரத்தில் அடங்கி, அப்புறம் காலையில் திசைக்கொன்றாய் ஓடிவிடும் வழக்கம். இன்று சண்டை பாபநாசத்திற்கும் நாகப்பனுக்கும் இரண்டு பேருமே வேலைக்கு போகாமல் குடித்துவிட்டு தினமும் தூங்கி எழும் சோம்பேறிகள். பாபநாசத்தின் சத்தம் பலமாய்க் கேட்கிறது.

"டேய், ரெட்டப் புள்ளடா, ஆளுக்கு நூறுடா, எரநூறுடா எரநூறு, மாமியா நூறு, பொண்டாட்டி நூறு. பஸ் ஸ்டாண்டுல கால் வெச்சா போதும்டா எரநூறு செத்ததுடா, எரநூறுடா, ரெட்டச் சிங்கம்டா ரெட்டச் சிங்கம், ஒரு சிங்கத்துக்கு நூறுடா நூறு."

"போடா.... பிச்சக்காரப்பயல, ஒம்பெருமைய ஒன்னோட வச்சுக்கோ, இங்க வந்து பீத்தாத, எம்புள்ளைக ரெண்டும் தெரு பூரா நாயா அலஞ்சு எரநூறு கொண்டாருதுடா, எம் பொண்டாட்டி நித்தம் நூறு கொண்டாரா, எனக்கென்னடா ராசாவுக்கு ஒன்ன மாதிரி பஸ்ஸ்டாண்டுல பிச்ச எடுக்க விட்டாடா நான் குடிக்கிறேன், ஒழச்ச காசுல குடிக்கன்டா நாயே."

பஸ் ஸ்டாண்டின் மேல வாசலில் பாபநாசத்தின் பெண்டாட்டி கைக்குழந்தையை தரையில் கிடத்தி பக்கத்தில் உட்கார்ந்து யாசித்துக் கொண்டிருப்பாள். துணியால் மூடியிருக்கும் அந்த பிஞ்சுக் குழந்தையை அப்போதைக்கப்போது போவோர் வருவோரிடம் திறந்து காட்டுவாள். அப்படி அவள் திறந்து காட்டும்போது அந்தப் பச்சை மண்ணின் மெல்லிய தோல் வெய்யில் பட்டு மினுங்கும். பிஞ்சுப் பாதங்கள் இலேசாய் அசையும். கருவண்டுக் கண்கள் வெய்யில் பட்டவுடன் மூடித் திறக்கும். இதேபோல் இன்னொரு குழந்தையை பஸ் ஸ்டாண்டின் கீழவாசலில் பாபநாசத்தின் மாமியார் தரையில் படுக்கவைத்து, உட்கார்ந்து கையேந்திக் கொண்டிருப்பாள். வெய்யில் ஏற ஏற மூடிய குழந்தையின் மீது தண்ணீர் தெளிப்பாள். இரட்டைக் குழந்தை பிறந்ததால் பாபநாசத்திற்கு சந்தோஷம் பிடிபடவில்லை. இரட்டை வருமானமாயிற்றே.

நாகப்பனின் பிள்ளைகள் இரண்டும் ஜோடிகளாய் பஜாரில் திரியும் காட்சி குருடர்களை நினைவுறுத்தும். வலிப்பு வந்துவிட்டால் காப்பாற்றிக் கொண்டுவர வேண்டியது சின்னவனின் பொறுப்பு. பல தடவை வலிப்பு வந்து நடுரோட்டில் கூட விழுந்திருக்கிறான் மூத்தவன். ஆனாலும் இருவரும் சாக்குப் பை நிறைய சுமையுடன்தான் வருவார்கள். நாகப்பனின் போதையில் சிலசமயம் அடி, உதை, மிதிகளையும் தாங்கிக்கொள்ள வேண்டும்.

சரியாக ஒரு வாரம்தான் ஆகியிருக்கும். பாபநாசத்தின் இரட்டைக் குழந்தைகளில் ஒன்று இறந்துவிட்டது. வெயிலின் உஷ்ணம் தாங்காமல் மேலெல்லாம் கொப்புளம் கொப்புளமாய் வந்து தோல்கள் உரிந்து செத்துப்போனதாகப் பேசிக்கொண்டார்கள். பாபநாசம் தினமும் ராத்திரியில் குடித்துவிட்டு வந்து கண்டபடி புலம்பித் தீர்த்தான்.

"வம்பா நூறு ரூபா வருமானம் போச்சே, தெனமும் நூறு ரூபானா மாசம் மூணாயிரம் போச்சே, கடவுள் எனக்கு குடுத்து வைக்கலையே, சொலையா தெனமும் எரநூறு வந்துருமே, பாதியா கொறஞ்சு போச்சே, கடவுளே ஒனக்கும் கூட புடிக்கலையா நான் நல்லாயிருக்கிறது-"

பாபநாசத்திற்குத் தினமும் நூறு ரூபாய் வருமானம் குறைந்துபோனது என்பது மட்டுமே பெரிய கவலை. அவன் புலம்பும்போது அடிக்கடி நூறு ரூபாய் என்ற வார்த்தைகள் சதா வந்துகொண்டிருக்குமே ஒழிய குழந்தையைப் பற்றிய வார்த்தை ஒரு நாளும் வந்ததில்லை. திடீரென்று வருமானம் சரிபாதியாகக் குறைந்து விட்டால் யாருக்குத்தான் வருத்தம் இருக்காது.

அடுத்த ஒரு வாரம்தான் போயிருக்கும். இன்னொரு குழந்தையும் அதே போல் மேலெல்லாம் சிவந்து கொப்புளமாய் வெடித்துத் தோல்கள் உரிந்து இறந்து போனது. பாபநாசத்தின் வருத்தமும் கோபமும் நாகப்பனின் மேல் திரும்பியது.

"இந்த நாகப்பன் பயதான் செய்வினை வச்சு என்னோட கொழந்தைகளைக் கொன்னுட்டான். எனக்குத் தெனமும் எரநூறு ரூவா வருமானம் வர்றது அந்தப் பயலுக்குப் புடிக்கலே, அதுதான் வயித்தெரிச்சல்ல கொன்னுட்டான். டேய், ஒன்னய என்ன செய்றேனு பார்டா."

பாபநாசத்தின் பெண்டாட்டி வந்து இழுத்துக் கொண்டுபோய் குடிசைக்குள் தள்ளி வாசலில் காவலாக உட்கார்ந்து கொள்வாள். பாபநாசத்தின் இரண்டு கைக்குழந்தைகளும் இறந்து தினமும் இருநூறு ரூபாய் வருமானம் நின்றுபோனதில் நாகப்பனுக்குப் பெரிய சந்தோஷம். போதையில் பாபநாசத்தை வம்புக்கு இழுத்துப் பேசுவதில் ஒரு திருப்தி போலும்.

"ஒழச்சு சாப்பிடணும்டா, ஒழச்ச துட்டுல குடிக்கணும்டா. பிச்ச எடுத்த காசுல குடிச்சிட்டு, பெரும பேசுனா அது நெலைக்காதுடா. பாத்தயா ரெண்டு சிங்கக் குட்டிக ஒழைக்குது. நான் குடிக்கன், என்னய எந்தப் பயலும் அசைக்க முடியாதுடா, ரெண்டு சிங்கக் குட்டிகள்டா, தெனமும் ஆளுக்கு எரநூறு. என்னோட சுண்டு வெரலக் கூட மடக்க முடியாதுடா."

அனேகமாக ஒரு மாசம் ஆகியிருக்கலாம். ராமசாமி தாஸ் பூங்கா அல்லோலகல்லோலப்பட்டது. எல்லோரும் மூப்பன்பட்டி கண்மாயை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி கல்லையும் கரையவைக்கும் காட்சியாகும். நாகப்பனின் மகன்கள் இரண்டு பேரும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்தபடி ஊதிப்போய் பிணமாய் மிதந்து கொண்டிருந்தனர். கரையில் நின்று பார்ப்பதற்கு, உபயோகித்து தூக்கியெறிந்த இரண்டு பெரிய தலையணைகள் மிதப்பதுபோல் தெரிந்தது. இருவரின் கக்கங்களிலும் சாக்குப் பைகள் தொங்கியபடியே இருந்தன. நாகப்பன் அழுது புலம்பியது தன் மகன்களுக்காக மட்டுமல்ல என்பது தெரிந்தது.

"எரநூறு போச்சே... அடக்கடவுளே எரநூறு போச்சே, எம்புள்ளைக வலிப்பு வந்து தண்ணியில விழல, இந்த பாபநாசம் பயதான் இரண்டு பேத்தையும் அடிச்சு கொன்னு தண்ணியில தூக்கிப் போட்டிருப்பான். டேய்.... பாபநாசம் நீய் வெளங்க மாட்டடா, எரநூறு போச்சே.... அய்யய்யோ சொளையா தெனமும் எரநூறு போச்சே."

காலை வெய்யில் ஏறிக்கொண்டிருந்தது. அநேகமாக எல்லோருமே நகரத்திற்குள் போய்விட்டபடியால் மைதானம் வெறிச்சோடிக் கிடந்தது. முழு போதையுடன் பாபநாசம் தள்ளாடி தள்ளாடி மைதானத்திற்குள் வந்துகொண்டிருந்தான். பழைய இரும்புக்கடை முருகேசன் எதிரே சைக்கிளில் வந்துகொண்டிருந்தான்.

"என்ன... பாபநாசம், தாடிமீசையெல்லாம் பயங்கரமாயிருக்கு, கோவிலுக்கு வளக்கயா இல்ல சும்மாதானா."

"சும்மா வளப்பனா சாமி, குலதாம்பரம் கோயிலுக்கு நேந்திருக்கேன், பொண்டாட்டி மாசமாயிருக்கா, போனவாட்டி ரெட்டப்புள்ள பெறக்கணும்னு வேண்டிக்கிட்டன், அதே மாதிரி பெறந்துச்சு. இந்த வாட்டியும் ரெட்டப் புள்ள பெறக்கணும்னு வேண்டியிருக்கன், அப்படி பெறந்திட்டா, ரெட்டக் கெடா வெட்டி பொங்கல் வைக்கேன்னு வேண்டியிருக்கன், ரெண்டு புள்ளனா, ஒரு புள்ளக்கு நூறுனா தெனம் எரநூறு வரும்ல்ல."

".........."

"என்ன ஒண்ணும் பேசாம கம்முனு நிக்கீரு, ரெட்டக் கெடா புடிக்க அட்வான்ஸ் பணம் நீருதான் குடுக்கணும், ஒம்ம ரூபாய்க்கு ஒண்ணும் பயமில்ல, நிச்சயமா ரெண்டு பெறக்கிறது உறுதி, பெறகென்ன தெனம் எரநூறுனா பத்து நாளையில ஒம்ம ரெண்டாயிருத்த தூர நின்னு வாங்கிட்டுப் போரும்.

இரும்புக் கடைக்காரர் எதுவும் பேசவிரும்பாம அவனுடைய வளர்ந்த தலைமுடியையும், தாடியையும் மீசையையும் உற்றுப் பார்த்தபடியே வேகமாக சைக்கிளில் ஏறினார்.

மைதானத்தின் மேற்கு மூலையில் மரத்தடியில் நாகப்பன். போதையேறிய கண்கள் சிவந்திருக்கின்றன. அவனுடைய இரண்டு வயதுக் குழந்தையும் ஒரு வயதுக் குழந்தையும் மரத்தடி நிழலில் விளையாடிக் கொண்டிருந்தனர். இரண்டு குழந்தைகளின் கக்கங்களிலும் பாலித்தீன் கேரிபேக் பைகளைத் தொங்கவிட்டிருந்தான். இரண்டும் மெதுவாக எட்டு வைத்து அந்தப் பைகளுடன் நடக்கும்போது சந்தோஷமாக சிரித்துக்கொள்கிறான். அவனுடைய முகம் மகிழ்ச்சியில் பிரகாசிக்கிறது. இன்னும் சில வருஷங்களில் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் தோள்களில் தொங்கும் ஒவ்வொரு பையும் தினம் நூறு ரூ‘ய் கொண்டுவரும் பையாக மாறிப்போகும். ஒவ்வொரு பையும் நூறு ரூபாயென்றால் இரண்டு பைகள். தினமும் இருநூறு ரூபாய். நாகப்பனையும் பாபநாசத்தையும் அசைக்க யாரால் முடியும்?

நாகப்பனும் தாடி மீசை முடியை வளர்க்கிறான். என்ன நேர்ச்சை என்னும் தெரியவில்லை. ஆனால் நாகப்பனின் பெண்டாட்டி முழுகாமல் இருப்பது மட்டும் சத்தியமான உண்மை.

நன்றி: புதிய பார்வை

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link