சிறுகதைகள்


இன்னொருநாள்

கூடல்.காம்

சங்கரி அதற்குள் தூங்கிவிட்டாள். மணி என்ன, ஒன்பதரைகூட இருக்காது. படுத்தவுடன் அவளுக்குத் தூக்கம் வந்துவிடுகிறது. அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பகல் பூராவும் வேலை. அவ்வளவு பெரிய மகளிர் கல்தூரி விடுதிக்கு அவள் ஒருத்திதான் எல்லாம். மெஸ் பில் போடுவது, காய்கறி வாங்குவது, மளிகைசாமான் வாங்குவது, யாராவது ஒரு பெண்ணுக்குக் காய்ச்சல் என்றால் டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போய் வருவது, இப்படி நிறைய வேலை இருக்கிறது அவளுக்கு. வீட்டுக்கு வந்ததும் அலுப்பு வந்து விடுகிறது. கண் நிறையத் தூக்கம்.

பூர்ணனுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. இப்போது என்றில்லை, எப்போதுமே பத்து மணிக்கெல்லாம் தூங்கி அவனுக்குப் பழக்கமில்லை. படுத்தவுடன் தூங்கவும் முடியாது. எவ்வளவு அசதியிருந்தாலும்.

யோசித்தபடி இருந்தவனை சங்கரியின் தூக்கம் எரிச்சல் படுத்தியது. கூடவே பாவமாகவும் இருந்தது. பூர்ணன் இன்னும் சாப்பிடவில்லை. பசிக்கிறதோ இல்லையோ ஏதாவது கொஞ்சம் சாப்பிட்டுவிட்டுப் படுக்கலாம். தானே எடுத்துப்போட்டுச் சாப்பிடுவது ஒரு கொடுமை. எழுப்பலாம். எழுப்பிச் சோறு எடுத்து வைக்கச் சொல்லலாம்.

"லைட்"டைப் போட்டால் போதும். சங்கரி எழுந்துவிடுவாள். இன்னமும் அவள் "சென்ஸிடிவா"கத்தான் இருக்கிறாள். வெளிச்சம் அவள் தூக்கத்தைக் கலைத்துவிடும். கோபப்படுவாள். "தூங்கும் போது எழுப்பாதீங்கன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். நான் தூங்கினாலே உங்களுக்குப் பிடிக்காது" என்று அலுத்துக் கொண்டே எழுந்துவிடுவாள். சிலசமயங்களில் இப்படியாகிவிடும். அவளை எழுப்பி, சாப்பாடு போடச் சொல்லி, சாப்பிட்டுவிட்டுத் தூங்குவான். சிலவேளைகளில் அவளை எழுப்ப மனசில்லாமல் அப்படியேகூடத் தூங்கிவிடுவான். இப்போதெல்லாம் தானே எடுத்துப் போட்டுச் சாப்பிடப் பழகிக் கொண்டான்.

கல்யாணமான நாளிலிருந்து ராத்திரி ஏதாவது படிக்கிறது, எழுதுகிறது என்பதே துப்புரவாக இல்லையென்றாகிவிட்டது. இதுவரை இருந்த வீடு எல்லாமே அநேகமாக ஒரு கட்டு, சமையலறைதான். இதில் எப்படி எழுத, படிக்க. விளக்கு எரிந்தால் சங்கரிக்குத் தூக்கம் வராது. சங்கரி தூங்கவேண்டுமென்றால், இவன் எழுதக்கூடாது, படிக்கக்கூடாது.

கல்யாணமான புதிதில் இதெல்லாம் பிடிக்காமல் சண்டைபோட்டு, பிறகு பூர்ணன்தான் தனது பழக்கத்தை மாற்றிக் கொள்ளும்படி ஆயிற்று. நல்ல புஸ்தகம் கிடைத்தால், எழுதத் தோன்றினால் அடுக்களை "லைட்"டைப் போட்டு பூர்ணன் படிப்பான், எழுதுவான். இப்போதெல்லாம் அதுகூட இல்லை. படித்து, எழுதி என்ன ஆகப்போகிறது என்றுகூடத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.

முன்னிரவில் தூக்கம் வராதது அவனுக்கு ஒரு பிரச்னையே இல்லை. இந்த நேரத்தில்தான் நிறைய யோசிக்க முடிகிறது. ஐந்தொகை எடுப்பதைப் போல எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்க முடிகிறது.

குழந்தை சரவணன் விழித்துவிட்டால் தொட்டில் ஆட்டி விடலாம். சங்கரி சாப்பிடாமல் தூங்கிவிட்டால், ஞாபகமாக எழுப்பிச் சாப்பிடச் சொல்லலாம்.

திங்கள்கிழமை. வானொலியில் பத்து முதல் பதினொன்று. "கனவுகண்ட காதல் கதை கண்ணீராச்சே", பூர்ணனுக்குப் பிடித்த கம்பதாசன் பாட்டு. வெளியேபோய் டீ குடித்துவிட்டு வில்ஸ் ஃபில்டர் வாங்கிவரலாம். ஆனால் சங்கரியையும் குழந்தையையும் தனியே விட்டுவிட்டுப் போக மனசு வரவில்லை. தண்ணீர் தாகமாக இருந்தது. எழுந்து மெதுவாக நடந்து அடுக்களை "லைட்"டைப் போட்டான். சத்தம் வராமல் எவர்சில்வர் பானையைத் திறந்து, தண்ணீர் கோரிக் குடித்தான். நல்லவேளை, சங்கரி விழிக்கவில்லை.

சங்கரி குறுக்கிக்கொண்டு படுத்திருந்தாள். எல்லாம் பெண்களுமே இப்படித்தான் படுத்திருப்பார்கள் போல. ஒருக்களித்து உடம்பைச் சுருக்கிக்கொண்டு படுப்பதுதான் பெண்கள் பழக்கமாக இருக்கலாம். இது பெண்ணின் ஆதிபடுக்கை நிலையாக இருக்க வேண்டும். மனசளவில் பெண்கள் குழந்தைகளாக இருப்பதைக் காட்டுகிறதோ இது.

மணி பதினொன்றரை இருக்கும். எதிரேயிருக்கும் ஸ்டேட் பாங்க் வெண்டிலேட்டர் வழியாகக் கசிந்த மெர்க்குரி விளக்கு வெளிச்சம் வீட்டுக்குள் அனாவசியமாக வந்து விழுந்து கிடந்தது. இரவின் நிசப்தத்தையும் மீறி, தூரத்தில் லாரிகள் போகிற வருகிற சப்தம் பழக்கப்பட்ட தொனியில் கேட்டது. அகாலத்திலும்கூட எங்கேயோ தமிழ்சினிமா பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. அபத்தமாக இருந்தது.

இன்னும் கொஞ்ச நேரத்தில் பக்கத்து வீட்டுத் தாடி வந்து விடுவார். அவர் பெயர் பூர்ணனுக்கு மனசுக்குள் இருக்கிறது. இந்த வளவில் எல்லோருக்குமே அவர் தாடிதான். என்ன பெயர். சுப்பையா பிள்ளை, ராமையாபிள்ளை, இப்படி ஏதோ ஒரு பிள்ளை. பெயரில் என்ன இருக்கிறது.

அவர் வருகிற சப்தம் தெளிவாகக் கேட்கும். கண்கள் கிறங்கும் போதையிலும் மிக நிதானமாக நடந்து போய்க் கதவை மெல்லத் தட்டுவார்.

"ஏளா வடிவு, ஏளா ஏ வடிவு" என்று கூப்பிட்ட கொஞ்ச நேரத்தில் கதவு திறக்கிற சப்தம் கேட்கும். தொடர்ந்து அவர், "ஏளா வடிவு, பிள்ளைல்லாம் தூங்கிட்டுதுகளா" என்றபடியே கை, கால் கழுவிவிட்டுச் சாப்பிட உட்காருவார்.

அந்த நேரம்தான் தாடி அண்ணாச்சியும் வடிவு மதினியும் சுதந்திரமாகப் பேசிக் கொள்வார்கள். என்ன பேச்சு, பெரிய காதல் பேச்சா. வடிவு மதினி பிள்ளைகளைப் பற்றிப் பேசுவாள். அதாவது புகார் சொல்வாள். அல்லது பூரித்துப் போவாள். அண்ணாச்சி ஹோட்டல் வியாபாரத்தைப் பற்றிப் பேசுவார். அதற்கு மேல் பேச என்ன இருக்கிறது. வெயில் காலமாக இருந்தால் கட்டிலை வெளியில் போட்டு அண்ணாச்சி தூங்குவார். மதினி கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டுப் படுத்துக்கொள்வாள்.

இவர்கள் குடியிருக்கும் வீட்டு அமைப்பே ஒரு தினுசானது. மொத்தத்தில் அது ஒரே வீடுதான். வாடகைக்காக மூன்றாகத் தடுத்து விட்டிருக்கிறார்கள். இடையில் ஒரே ஒரு மரக்கதவு.

நடுவில்தான் பூர்ணன் வீடு. அவன்தான் அந்த மூன்று வீட்டுக்காரர்களிலும் சின்னவன். முதல் வீட்டுக்காரர் இங்கே ஒரு ஹோட்டலில் கேஷியராக இருக்கிறார். ஹோட்டலிலேயே அவருக்குச் சாப்பாடு எல்லாம். அவர் வீட்டுக்கு வருவதும் போவதும் தெரியாது. உடுப்பி போத்தி குடும்பம். ஐந்து வயதில் ஒரு பையன் இருக்கிறான். அவர் மனைவி பெரும்பாலும் தையல் மிஷினிலேயேதான் இருப்பாள். ஒரு நேரம் சமையல்செய்தால் அதிகம். குழந்தைகள் சட்டை, பெண்கள் ஜாக்கெட் இப்படி ஏதாவது ஒன்று தைத்துக் கொண்டிருப்பாள். ராத்திரி பத்து, பத்தரை மணி வாக்கில்தான் போத்தி வருவார். வந்த கொஞ்சநேரம் விளக்கெரியும். கன்னடத்தில் மனைவியிடம் என்னவோ பேசிவிட்டுப் படுத்துக் கொள்வார். அவர் பெயர் என்ன என்று பூர்ணனுக்குத் தெரியாது. உடுப்பி பக்கத்திலிருந்து திருநெல்வேலிப் பக்கம் வந்து பிழைப்பது பற்றி அவர் என்ன நினைப்பார். நினைப்பாரா. யாருக்குத் தெரியும். ஆனால் அவர் குடும்பம் சௌகரியமாகவும் சந்தோஷமாகவும் இருப்பது மாதிரிதான் படுகிறது.

வடிவு மதினிக்கு வயிற்றில் ஆபரேஷன் ஆனபிறகு தாடி அண்ணாச்சி வீட்டில் படுத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது. கழுநீர் எடுக்க வரும் ராஜாத்தியோடு அவர் "தொடுப்பு" வைத்துக் கொண்டது இதுக்குப் பிறகா முன்னாடியேவா என்று தெரியவில்லை. அவருடைய குடிப்பழக்கத்துக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்றும் தெரியவில்லை.

கொஞ்சம் கண்ணை மிரண்டு வருகையில் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டான்.

"ஏய்யா, இந்த லோகாவப் பாத்தேளா. அவ வர்ற வரத்து ஒண்ணும் சரியில்ல. இன்னிக்கு சோமுப்பிள்ளை வீட்டுக்கு நெய்யக் கொடுத்துவிட்டேன். இந்தப் பய கூட வர்றேன்னு தொயங்கட்டிப் போயிருக்கான். இவ அவன ஏமாத்திட்டு ஓடிருக்கா. செத்த மூதி. கீழ கொட்டிட்டு வந்து நிக்கா. இந்த மூதேவிகள வச்சு நான் என்ன செய்ய."

"ஏ தேவடியாபுள்ள... பிள்ளைய சரியா வளக்கத் தெரியாம எங்கிட்ட வந்து சொல்லுத நீ. நீ கொடுக்க இளக்காரம்தான்டி எல்லாம். நான் கடயக் கவனிப்பனா, உன் சீக்கக் கவனிப்பனா. நீல்லாம் ஏட்டி பூமியில் இருக்க. கொஞ்ச நேரம் காலைல கடைக்கு லேட்டாப் போனா, அவன் அதுக்குப்போச்சு, இதுக்குப் போச்சுன்னு லிஸ்ட் கொடுத்திர்றான். கண்ணில காசக் காமிக்கிறான் இல்ல. அண்ணனாச்சே சங்கடப்படுதானேன்னு கடையில இருக்கவச்சா இந்த இழவு. வீட்டுக்கு வந்தா இப்டி இழவு. என்ன என்னடி பண்ணச் சொல்லுத."

சற்று நேர அமைதிக்குப் பிறகு மறுபடியும் மதினி குரல் கேட்டது.

"இல்லய்யா. நீங்க ஒரு வார்த்த சொன்னா போதும். இதுகளுக்கு நீங்க கொடுக்கிற இடம்தான் இப்டி அடங்க மாட்டேங்குது. நான் சொன்னா கேட்குதுகளா, கொண்டாடுதுகளா. எல்லாம் உங்க செல்லம். இந்த வரத்து வருதுக."

"செறுக்கி யுள்ள. என்னடி பேசுத நீ. நான் என்னடி செய்யட்டும். பகல் பூரா நீதான் வீட்டில இருக்க. பிள்ளைய பாக்கறதைவிட என்ன புடுங்குற நீ. திடீர்னு நான் செத்துப்போனா நீங்கள்லாம் தெருவிலதான் நிக்கப்போறீங்க. மச்சினன்னு எந்தப் பயலாவது பாக்கப் போறானா. ஒரு பயலும் துப்பில்ல. நான் கல்லாவே இருப்பேன்னு நினைச்சிட்டு இருக்க நீ. குழம்ப விடுட்டி. செத்த பயவுள்ள. நீ என்ன வெட்டி முறிக்க, இந்த பிள்ளையைப் பார்க்காம. எனக்கு உங்களப்பத்தியே தான் கவலைல்லாம். நான் இருக்கரவரைக்கும் வண்டி ஏதோ ஒடும். என்னன்னும் தொலைங்க. நான் நாளக்கி மண்டயப் போட்டுட்டா, நீயெல்லாம் இருந்து கடய நடத்திறப்போறியாக்கும். என்னவோ நாசமாக போங்க."

பூர்ணனுக்குத் தன் மீதே கோபம் வந்தது. இந்த ஊரில் தனக்கு ஒரு வேலை கிடைக்கப் போவதில்லை. எதுக்கு இங்கே இருக்கிறோம். பெண்டாட்டி உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டு அவளிடமே சிகரெட்டுக்குக்கூட காசு வாங்கிக்கொண்டு. சீ, என்ன பிழைப்பு இது. பேசாமல் திரும்பவும் மெட்ராஸீக்கே போய் விடலாம். ஏதாவது ஒரு வேலை கிடைக்காமல் போகாது. மறுபடியும் ப்ரூப்-ரீடராகவாவது எதிலும் சேரலாம். நிச்சயம் பிழைக்க வழி இல்லாமல் போகாது.

யோசனைகளில் ரொம்ப நேரத்துக்குத் தூக்கம் வரவில்லை. ஆனாலும் எப்போதும் போல யோசித்தபடியே தூங்கி விட்டிருந்தான் பூர்ணன்.

நன்றி: அவன் - அவள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link