சிறுகதைகள்


பனை மரங்கள்

கூடல்.காம்

மாடசாமிக்கு அன்று மனநிலை ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது! அவனுக்கிருந்த ஒரே சொத்து அதுதான். ஆம் பனைமரங்களடங்கிய அவனுடைய சின்ன புஞ்சை நிலம் மட்டும் தான். அரசு நூற்பாலைக்கு இடம் போதவில்லையாதலால் அதை கையகப்படுத்துவதற்கு அதிகாரிகள் முயற்சி செய்வதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை! தடுக்கவும் முடியவில்லை; நேற்று நடந்த சம்பவம் அவன் கண்முன்னே வந்து நின்றது! நினைக்க நினைக்க வயிற்றைக் கலக்கியது.

"ஏம்ப்பா மாடசாமி! உனக்கு வேறு நிலம் எதனாச்சும் இருக்கா"? - தாசில்தாரின் கனிவாக பேச்சு அவனைப் பதமாக பதில் தர ஏதுவாயிற்று.

"ஐயா! இந்தப் புஞ்சைக் காடு தவிர, உள்ளங்கையளவுக்கு ஒரு எழுபது செண்டு நஞ்சை நிலம் மட்டும் உள்ளது. அதில் கெடைக்கும் நெல்லை வைத்துத்தான் அரைவயிற்றுக் கஞ்சி குடிக்கிறோம்."

அது சரிப்பா! இந்தப் புஞ்சைக்காட்டிலே எல்லாமே பனைமரங்கள் தானே நிக்குது! இதிலே நெல் விளையாதுல்ல"

"இந்தப் பனைமரங்களாலேதான் சாமி என் குடும்பம் அன்றாட அரைவயிற்றுக் கஞ்சி குடிச்சிக்கிட்டிருக்கோம்."

"அதென்னப்பா! இதை வச்சி கஞ்சி குடிச்சுக்கிட்டிருக்கம்னு சொல்றே."

"ஆமா ஐயா! வருஷத்துக்கு இரண்டு முறை ஓலை வெட்டி ஆயிரம், ஐநூறுக்கு வித்துடுவேன். அதில் உள்ள மட்டையில் நார் உறித்து தும்புக் கயிறு திரித்து நூறு, இருநூறுக்கு சந்தையிலே கொண்டு போய் வித்துடுவேன்; நுங்கு சீசன்லே நுங்குகளை பட்டை போட்டு அந்த வழியா வர்ற பஸ்லே இருபது முப்பதுக்கு விற்று காசாக்கி, சந்தைச் செலவுக்கு சரி பண்ணிடுவேன்; பனங்கொட்டையை பதித்து, அதிலிருந்து எடுக்கும் பனக்கிழங்கை விற்று காசாக்கி வீட்டுச் செலவுக்கு சரி செய்துருவேன். பதனீர் இறக்கி, டவுன்லே கொண்டு போய் விற்று, கைச் செலவுக்கு வைத்துக் கொள்வேன்."

"சரிப்பா! பனை மரத்துக்கு அரசாங்கத்துலே பணம் தருவாங்க."

"எவ்வளவு தரப் போறாங்க மரத்துக்கு இருபதோ, முப்பதோ தருவாங்க. அதுவும் ஒரு தடவை தானே கொடுப்பாங்க."

"ஆமா! மரத்தை வெட்டியாச்சுன்னா இரண்டாவது தடவை எப்படி தருவாங்க."

"ஐயா! வருஷா வருஷம் கிடைக்கும் வருமானத்தை ஒரே தடவையில் அழிச்சிடுவீங்க... மறு வருஷத்துலே என் பொழப்பு சீரழிஞ்சு போகும். அப்ப என்னை இந்த அரசாங்கம் காப்பாத்துமுங்களா."

தாசில்தார் பொறுமையிழந்து விட்டார்! "இந்தாப்பா வளவளன்னு பேசாதே! ஊருக்கு பெரிய மில் வந்தா இந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கெல்லாம் வேலை கிடைக்கும்; உனக்குக் கூட வேலை கிடைக்கும்; ஊர் செழிக்கும்; பணப் புழக்கம் ஏற்படும். இதையெல்லாம் நினைச்சுப்பாரப்பா."

"ஐயா! என் குடும்ப நிலையையும், எனது வறுமையையும் சொன்னா எடுத்துக்கிறமாட்டீங்க! கோபப்படுறீங்க"

மாடசாமியை எப்படி வயப்படுத்துவது என்பது புரியாமல் தாசில்தார் அந்த இடத்தை விட்டு ஜீப்பில் ஏறி அமர்ந்தார்.

மாடசாமியின் பனைமரங்கள் உள்ள இடத்தையும் சேர்த்து கையகப்படுத்தினால்தான் மில் கட்டுவதற்கு இடம் சரியாக இருக்கும் என தீர்மானித்து, அந்த இடத்தை கட்டாயமாக கையகப்படுத்துவதைத் தவிர வேறு வழி அவருக்கு தெரியவில்லை.

மேலப்பட்டி கிராமத்தில் மாடசாமியின் தந்தை கூலாண்டிக்கு எழுபது செண்டு நஞ்சை நிலமும், எண்பது செண்டு புஞ்சை நிலமான பனந்தோட்டமும் தான் பூர்வீகச் சொத்து. கூலாண்டி பதனீர் இறக்கும் தொழிலாளி. ஐம்பது வருடங்களுக்கு முன் அந்தப் புஞ்சை நிலங்களில் அவன் பனங்கொட்டையைப் பதித்திராவிட்டால் இன்று இந்த பனைமரங்கள் மாடசாமிக்கு கை கொடுத்திருக்காது. கூலாண்டிக்கு ஒரே மகன் மாடசாமி. மாடசாமியை பத்து வயதிலே பனை மரங்கள் ஏறக் கற்றுக்கொடுத்தான். பதநீருக்கு பாளை சீவுவதிலே மாடசாமியை மிஞ்ச முடியாது. தந்தைக்குப் பின் தனயன், அந்தப் பனைமரங்களைப் பேணிக்காத்து, அதிலிருந்து கிடைத்த வருமானத்தைக் கொண்டு தன் குடும்பத்தை நடத்தி வந்தான்.

மேலப்பட்டி கிராமத்தில் நூற்பு ஆலை ஏற்படுத்த அரசு திடீரென தீவிரம் காட்டியது. அதுவும் மாடசாமியின் புஞ்சைப் பனங்காட்டையடுத்துள்ள நிலத்தை அரசு தேர்ந்தெடுத்தது. அரது சேர்ந்தெடுத்த இடம் போதாது என்று அதிகாரிகள் கூறியதன் விளைவாகத்தான் மாடசாமியின் பனங்காட்டின் மீது கை வைக்க ஆரம்பித்தது.

மேலப்பட்டி கிராமத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக இது போன்ற மழையைக் கண்டதில்லை. அப்படி அடைமழை கொட்டியது. இடியும் மின்னலும் தொடர்ந்தன. மாடசாமி தனது பனங்காட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அத்தருணத்தில்-

ஆகாயத்திலிருந்து மின்னல் ஒன்று வெள்ளிக் கோடுகளாக வளைந்து பூமியில் பதிந்தது. மூன்று நிமிடங்களில் இடியொன்று மேலப்பட்டி கிராமத்தை அதிர வைத்தது. இடியோசை தனது பனைமரப் புஞ்சைக் காட்டின் அருகே கேட்டவுடன், மாடசாமி நிலைகுலைந்து போனான்.

மறுநாள் காலை-

மேலப்பட்டி கிராம மக்கள் மாடசாமியின் பனங்காட்டை நோக்கி விரைந்தனர்.

அங்கே-

நூற்பாலைக்கு தேர்ந்தெடுத்த இடத்திற்கும் மாடசாமியின் பனந்தோப்புக்கும் நடுவே யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நான்கடி சுமாருக்கு பூமி ஐம்பது அடி ஆழம் பிளவுபட்டிருந்தது! அங்குதான் இடி விழுந்து இறங்கி இருக்கிறது.

செய்திகேட்டு சிறிது நேரத்தில் புவியியல் அரசு அதிகாரிகள் இடத்தைப் பார்வையிட ஓடோடி வந்தனர். சுற்றிச் சுற்றிப் பார்த்து ஆய்வு செய்தார்கள்; முடிவாக, அரசு அதிகாரிகள் கூடி நூற்பு ஆலைக்கு வேறு இடத்தை தேர்வு செய்ய சிபாரிசு செய்தார்கள்!

மாடசாமி சிரித்துக் கொண்டே அழுதான்!

நன்றி: நிழல்கள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link