நரேந்திர மோடியின் தீவிர ரசிகன் நான்: எலான் மஸ்க்!

நரேந்திர மோடியின் தீவிர ரசிகன் நான் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்கிறார். இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான எலான் மஸ்க், பிரதமர் மோடியை நியூயார்க் நகரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பாக மஸ்க் பேசியுள்ளதாகவும் தெரிகிறது. 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் பிரதமர் மோடி. அதன் ஒரு பகுதியாக மஸ்க் – பிரதமர் மோடி சந்திப்பு நடந்துள்ளது. அப்போது அடுத்த ஆண்டு தான் இந்தியாவுக்கு வர உள்ளதாகவும் மஸ்க் தெரிவித்துள்ளார்.

“நான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இந்தியாவுக்கு சரியானதைச் செய்ய விரும்புகிறார் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். அதே போல புதிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்குவது மற்றும் ஆதரவாகவும் இருக்கிறார். அவருடனான இந்த சந்திப்பின் போது நாங்கள் சிறப்பு வாய்ந்த பல விஷயங்களை பேசினோம். அவருக்கு இந்தியா மீது அதிக அக்கறை உள்ளது. அது எந்த அளவுக்கு என்றால் இந்தியாவில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்ய அவர் எங்களைத் தூண்டுகிறார். அதற்கான சரியான நேரத்தை எதிர்பார்த்து நாங்கள் உள்ளோம்” என மஸ்க் தெரிவித்துள்ளார்.

அதோடு ஸ்பேஸ்-எக்ஸ் மூலமாக, ஸ்டார் லிங்க் மூலமாக இந்தியாவின் ஊரகப் பகுதியில் இணைய சேவையை வழங்குவது, டெஸ்லா நிறுவனம் சார்ந்த பணிகள் தொடர்பாக இந்தியாவில் முதலீடு செய்யும் திட்டம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்கள் உள்நாட்டு சட்டங்களை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதை செய்வதை தவிர நிறுவனங்களுக்கு வேறு வழி ஏதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு சொல்லியுள்ளார். அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜாக் டார்ஸி, இந்திய அரசு மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்திருந்தார். அதில் விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டபோது சில ட்விட்டர் கணக்குகளை இந்திய அரசு முடக்கச் சொன்னதாக அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.