சிறுகதைகள்


தொடரும் பயணம்

கூடல்.காம்
"அனு....அனு....அனு....."

"எதுக்காக இப்படி ஒரேயடியா கத்துறீங்க........"

"ஆபிஸீக்கு நேரமாச்சுன்னு உனக்குத் தெரிய வேண்டாமா?"

"அமைதியா இருந்த வீடு ஒரு வார காலமா அமளிப் பட்டுக்கிடக்குது"

"என்ன சொல்றே"

"பின்னே என்னங்க! காலையிலே எழுந்திருச்சு காய்கறி வாங்கிக் கொடுப்பீங்க! நான் சமைச்சுக் கொடுப்பேன்! உங்கப்பா வந்ததிலிருந்து கடைக்குப் போறதை விட்டுட்டீங்க"

"அப்பா! நீங்கதான் காலையிலே கடைக்குப் போய் காய்கறி வாங்கிக் கொடுத்தா என்ன? வாக்கிங் போனாப்பலே இருக்கும்! ஏம்மா நீ தான் கொஞ்சம் சமையலுக்கு உதவி பண்ணினா என்ன? உனக்கிருக்கும் பிரஷ்ஷர் கொஞ்சம் சரியான மாதிரியும் இருக்கும்."

மகன் பிரகாஷ் பேச்சைக் கேட்டவுடன் சச்சிதானந்தமும், தேவகியும் ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டனர்.

இருவரும் இங்கே இருப்பது தங்களின் பிள்ளைக்கு பிடிக்கவில்லையென்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

ஒருவாரம் கூட தாக்குப் பிடிக்கவில்லை. அன்று மதியமே வீட்டைவிட்டு வெளியேறி விடுவது என்று தீர்மானித்தனர். வந்த சுவடு தெரியாமல் மூத்த மகனிடம் சொல்லாமல் கொள்ளாமல் இரண்டாவது மகன் செல்வம் வீட்டுக்கு வந்தனர்.

தாய் தந்தையரை செல்வம் எதிர்பார்க்கவில்லை.

"வாங்கப்பா!....வாங்கம்மா! அண்ணன் வீட்டுக்கு ரெண்டு பேரும் போயிருப்பதாக தங்கச்சி மீனாவின் மாப்பிள்ளை கூறினார்! ஏம்ப்பா! அண்ணன் வீடு வசதியில்லையா? ஏம்மா? அண்ணி நல்லா கவனிச்சுக்கிறலையா? அண்ணன் கைநிறைய சம்பளம் வாங்குது? சொந்தவீடு; பால்மாடு சொந்தமா வச்சிருக்கு! இவ்வளவு வசதி இருக்கிறப்போ கூடப் பத்து நாளைக்கு இருந்துட்டுப் போகச் சொல்லலையா......?"

"இல்லப்பா .....நாங்களும் பெரிய மகனைப் பார்த்தாச்சு! சின்ன மகனைப் பார்க்க வேண்டாமா?"

"அதுக்குச் சொல்லலை! உங்களுக்கு வசதி குறைச்சலா இருக்குமோன்னு சொன்னேன்! முப்பது வருஷமா வசதியா வாழ்ந்த உங்களுக்கு இந்த சிறிய வீட்டில் வசதி குறைச்சலா இருக்குமோன்னுதான்....."

"பரவாயில்லை. எல்லோரும் பிறக்கறப்பவே வசதியோடு பிறக்கறதில்லை! ஏழ்மையைப்பற்றி நானும் என் வயசுக்கு தெரிஞ்சுதான் வச்சிருக்கேன்"

"அம்மாவுக்கு லோ பிரஷ்ஷராய் இருக்கிறதுனாலே அடிக்கடி மயக்கமாய் வருதுனு ஏற்கனவே சொல்லுவாங்க. இங்கு ஹால்லே மட்டும்தான் ஃபேன் இருக்கு.....குழந்தைகள் ஃபேன் இல்லாமல் தூங்க மாட்டாங்க."

"அதனாலென்ன வெளியில் படுத்துக் கொள்கிறோம். குழந்தைகளின் தூக்கம் கெடக் கூடாது. உன்னையும் அப்படித் தானே வளர்த்தோம்."

"அப்பா! தப்பா எடுத்துக் கிடாதீங்க. வீட்டில் உள்ள நிலையை உங்களிடம் வெளிப்படையாக சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வது."

சச்சிதானந்தமும் தேவகியும் மறுநாளே மகள் வீட்டிற்கு புறப்பட்டார்கள்.

"வாங்கப்பா! வாங்கம்மா!" - ஒரே மகள் புவனா வரவேற்றாள்.

"சின்ன அண்ணன் வீட்டிற்கு போயிருப்பதாக பெரியண்ணன் ஃபோனில் சொல்லிச்சு! இவ்வளவு சீக்கிரம் இங்கு வருவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை! மாமானார், மாமியார் இருவரும் ஒருவாரம் தங்கிவிட்டு நேற்றுத்தான் ஊருக்குப் போனார்கள்; அவர்கள் இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை."

புவனாவின் கணவன் சம்பிரதாயத்துக்கு, வாங்க என்றான்! அவனது வரவேற்பில் உற்சாகமில்லாதது கண்ட சச்சிதானந்தமும் தேவகியும் மனங்கூசினார்கள். கணவனது போக்கைப் புவனா புரிந்து கொண்டாள்.

"நானும், அவரும் நாளை வெளியூர் போவதாக இருக்கோம்" - என்றாள்.

வயோதிகப் பறவைகள் மெதுவாகப் பறந்து கூடு திரும்பின.

சச்சிதானந்தமும், தேவகியும் பிள்ளைகளின் உபசரிப்புகளைப் பற்றி அலசலானார்கள். சச்சிதானந்தத்துக்கு கடந்த கால நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக இதயத்தில் படமாக ஓட ஆரம்பித்தது.

சச்சிதானந்தம் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று ஐந்து மாதங்கள் உருண்டோடி விட்டன.

மூன்றாவது மாதத்திலேயே எல்லாப் பணமும் வந்து விட்டது. இரண்டு லட்சங்கள் கைவசம் உள்ளதைத் தெரிந்து இரண்டு மகன்களும், மகளும் பணம் பங்கீடு செய்து கொள்ள வீடு தேடி வந்துவிட்டார்கள்.

சச்சிதானந்தம் பங்கீட்டைக் காலம் கடத்த முடியாத நிர்பந்தத்திற்கு ஆளானார். பிள்ளைகளின் திருமணக்கடன்களுக்காக அடமானமிருந்த வீட்டைத் திருப்பினார். பிள்ளைகளுக்கு தலா இருபத்திஐயாயிரம் கொடுப்பதைத் தவிர அவர் தப்பிக்க வழியில்லாமல் திக்குமுக்காடினார்.

கையிலே பத்தாயிரம் மட்டுமே மிஞ்சியது; ஐந்து மாதங்களில் அதுவும் கரைந்தது.

"தேவகி நான் அப்பவே சொன்னேன்! நீயும் பிள்ளைகளோடு சேர்ந்துக்கிட்டு நமக்கு பிள்ளைகள் இருக்கும்போது அவ்வளவு பணம் எதற்கு என்று சொன்னீயே! இப்ப தெரிஞ்சுக்கிட்டியா?"

"பெண் புத்தி பின் புத்தி என்று சொல்லக்கேட்டிருக்கேன்! அனுபவிச்சப்புறம்தான் தெரியுது"

"மூத்தவன் பேசிய பேச்சின் பொருள் விளங்கியதா உனக்கு...."

"நன்றாகவே விளங்கியது! அவனை எவ்வளவு செல்லமாக வளர்த்தேன்!" - கண்கள் கலங்கின.

"இரண்டாவது மகன் அப்பாவின் செல்லப்பிள்ளையென்று மூத்தவன் அடிக்கடி சொல்லுவானே, அவன் பேச்சைக் கேட்டாயா?"

"கேட்டேன்! வெளியில் போய் படுத்துக்கொள்ளச் சொன்னான்! என்னைப் பற்றிக்கூட கவலையில்லை. உங்களைப் போய் வெளியில் படுத்துக் கொள்ள....." - அதற்கு மேல் அவளால் பேசமுடியவில்லை! கண்ணீர் பொல பொலவென்று கொட்டியது.

"அடி பைத்தியமே! நீ ஏன் அழுகிறாய். நான் உயிரோடிருக்கும் வரை உன்னைக் கண்கலங்க விடமாட்டேன்"

"ஒரே மகள்! நல்ல இடத்தில் சம்பந்தம் செய்து கொடுப்பதற்காக உன் நகைகளை விற்று, கல்யாணத்தை முடிச்சோமே, அந்த மகள் பாசத்தைப் பார்த்தியா"

"அவ பேர்ல ஒன்னும் தப்பில்லீங்க! அவளுடைய கணவர் மனசு அப்படி. அவரை அவளால் எதிர்த்துப் பேச முடியலே!"

"பணத்தைப் பங்குபோட்டு வாங்கினப்ப மட்டும் மனசு சரியாய் இருந்துச்சாக்கும்? தேவகி, நான் உயிரோடிருக்கும் போதே இந்த நிலையின்னா, என் உயிருக்கு ஏதாவது வந்துச்சுனா, உன்னை யார் கவனிச்சுக்கிறப் போறாங்க! அதுதான் என் கவலை!

"அப்படிச் சொல்லாதீங்க! எல்லாத்தையும் பார்த்த பிறகும் நான் உயிரோடிருக்கேனே...."

தேவகிக்கு துக்கம் தாழமுடியாமல் தேம்பி, தேம்பி அழுதாள்! புடவையின் முந்தி ஈரமாகியது.

சச்சிதானந்தம் தேவகியை ஆசுவாசப் படுத்தினார்! அவருக்கு ஆறுதல் சொல்ல மக்கள் யாரும் வரவில்லை.

தினமும் செய்தித் தாள் படிப்பது சச்சிதானந்தத்தின் பொழுதுபோக்காகும். பத்திரிகையை நிறுத்தச் சொல்லிவிட்டார்! மாதந்தோறும் முன்னூறு ரூபாய்க்கு வாங்கும் மாத்திரைகளை நிறுத்த எண்ணினார்! தூய வெண்ணிற ஆடைதான் அணிவார்! இனி தனது ஆடைகளை தானே சலவை செய்து கொள்ள திட்டமிட்டார்! மாலை டிபனை வேண்டாம் என்று மனைவியிடம் கூறினார்.

தம்பதியர் இருவரும் சித்தம் கலங்கி அமர்ந்திருந்தனர்!

"சார் போஸ்ட்" - தபால்காரர் நீண்ட கவர் ஒன்றை தந்துவிட்டுச் சென்றார்.

ஆவலுடன் பிரித்துப் படித்தார்!....விழிகள் ஆகாசமாய் விரிந்தன.

"தேவகி! பிள்ளைகள் கைவிட்டாலும் நமக்கு ஒரு நல்ல காலம் வந்திருக்கு. என்னுடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டா, உன்னுடைய பாதுகாப்புக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தேன். உனக்குக்கூட நான் சொல்லலை. பாலிசி முடிந்து இப்படி திடீரென்று ரெண்டு லட்சம் வரும்னு நானே எதிர்பார்க்கல்லே!"

"அப்படியா.....? ஆண்டவன் காப்பாத்தினாரு"! - புடவையின் தலைப்பால் கண்களை துடைத்துக் கொண்டாள்.

"இனிமேலாவது நாம புத்தியோட பொழைக்கணும்"

ஒரு முடிவோடு வீட்டு வேலைகளை கவனிக்கலானாள்.

செய்தி காட்டுத் தீயாய் மக்களுக்குப் பரவியது....! மூத்த மகன் - இளைய மகன் - ஒரே மகள் மூவருமே இப்போது முழித்தார்கள். அந்தஸ்தில் உயர்ந்துவிட்ட அவர்களை எந்த முகத்தை வைத்துக்கொண்டு போய்ப் பார்ப்பது எனக் கூசினார்கள். மறு மலர்ச்சியோடு சச்சிதானந்தம் புதிய வாழ்கைப் பயணத்தை தொடர்ந்தார்.

நன்றி: நிழல்கள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link