சிறுகதைகள்


நானும் அவனும்

கூடல்.காம்
ஒன்பது மணிக்கெல்லாம் வெயில் இப்படிச் சுள்ளுன்னு மண்டையப் பிளந்தா, மிச்ச பொழுதையும் எப்படி ஓட்டுறதுன்னு யோசிச்சுக்கிட்டே மெதுவாய் எழுந்து வெறுப்புடன் கடலைவண்டியைத் தள்ளினான் வேலாயுதம். காரியாபட்டி பஸ்ஸ்டாண்ட் எப்பவும் இப்படிக் கூட்டமாத்தான் இருக்கும். ஐனங்க வர்ற பஸ்ல இறங்குறதும், போற பஸ்கள்ல ஏறிப்போறதும் வேடிக்கையான வாடிக்கை நிகழ்ச்சிதான். ஈசப்புத்துக்குள்ள இருந்து ஈச சர்சர்ன்னு வர்ற மாதரி இந்த ஐனங்க பஸ்ஸ்டாண்டுல இருக்கிற ரெண்டு வாசல் வழியாவும் வர்றதும் இருக்கும்.

மதுரை பெரியார் நிலையம், அருப்புக்கோட்டை, விருதுநகர், திருச்சுழின்னு போர்டு தாங்கின பஸ்கள் முகவரியை முகத்தில் எழுதி ஒட்டிக்கொண்டு வரிசையாக சிவப்பு, ஊதா, பச்சைன்னு கலர்கலரா நின்றன. எப்பவுமே இப்படி எல்லாப் பஸ்சும் ஒரே சமயத்துல இருக்கிறது இல்லை. வரும் போகும். சில சமயங்கள்ள ஒரு பஸ்கூட இல்லாம பஸ் ஸ்டாண்டே வெறிச்சோடிக் கிடக்கும்.

வரிசையா நின்னுக்கிட்டிருந்த பஸ்களுக்கு நடுவால வண்டியத் தள்ளிப்போயி, "கடலை, சூடா... வேர்க்கடலை"ன்னு கத்தினான் வேலாயுதம். ஏழு மணிக்கு பஸ்ஸ்டாண்டுக்குள்ள நுழைஞ்சவனுக்கு இப்பவரைக்கும் ரெண்டு பொட்டலம்தான் வித்து தகர டப்பாவுல ரெண்டு ரூபாதான் கிடந்துச்சு. இந்த ரெண்டு ரூபாய மூக்கையாட்ட கொடுத்துட்டு கட்டண கழிப்பறையில போயி ஒன்னுக்கு அடிக்கத்தான் முடியும். மூக்கையா மகன் கணேசன் இருந்தா ரெண்டு தடவை மனசா போயிக்கன்னு விடுவான். முன்னாடிபோல் சந்து, பொந்தெல்லாம் இல்லாம ரொம்ப கஷ்டமாயிருக்கு. ஒரு நாளைக்கு ஒன்னுக்குப் போகவே ஆறு ரூபாயா செலவழிக்க முடியும்? பேரூராட்சி, சுத்தம் சுகாதாரம்ன்னு சொல்லி வரிசையா கடைகளையும் கட்டி, சிமிண்ட் தளத்தையும் போட்டுவச்சிருக்கு. அப்பப்ப வெளியில சந்தைப்பேட்டைப் பக்கம் புளியமரத்துக்கு பின்னாடி ஓடிப்போயிட்டு வந்துட்டா, அப்பாடா... ரெண்டு ரூபாய மிச்சம் பண்ணியாச்சுன்னு மனசத் தேத்திக்குவான் வேலாயுதம்.

பஸ்ஸ்டாண்டுக்குள்ள இருக்கிற ஒரே ஓட்டல் செட்டிநாடு மெஸ்தான். அதுல போண்டாவையும், பூரியையும் சுட்டு கண்ணாடி டப்பாவுக்குள்ள பார்வையா அடுக்கிவச்சிருந்தாக. அதைப் பார்த்த வேலாயுதத்துக்கு எச்சில் ஊறி, வயிறு பசிக்க ஆரம்பித்தது. மனதிற்குள் மாரியம்மாளைத் திட்டினான். "பாவிமக கஞ்சிய தூக்குல ஊத்தி எடுத்தார இம்புட்டு நேரமாக்குறாளே"ன்னு.

மாரியம்மாவ நெனச்சுக்கிட்டே மறுபடியும் பஸ்ஸ்டாண்டை, "கடலை, வேர்க்கடலை"ன்னு கத்திக்கிட்டே வண்டியில இருந்த தகரத்தை கட்டையால தட்டிக்கிட்டே சுத்தி வந்தான். ஆனா யாருமே வாங்கலை. அவுக அவுக வேலையாத்தான் அங்கிட்டும், இங்கிட்டும் அலையிறாகளே தவிர கடலை, கடலைன்னு கத்துறவனக் கவனிக்க ஆள் இல்லை. மழைக்காலமா இருந்தா சுடச்சுட ஏவாரமும் தூள் பறக்கும். ஆனா இந்த வெயில் காலத்துல வெள்ளரிக்காய் விக்கிறவுகளுக்குத் தான் ஏவாரமே. பள்ளிக்கூடம் போயிட்டு வந்து, யூனிபார்ம்மைக்கூட மாத்தாம சின்ன பிள்ளைகளும், பையன்களும் ரப்பர்பேண்ட் பாக்கெட்டை வாங்கி மூணு பிஞ்சை ஒண்ணா மூடுஞ்சு ரெண்டு ரூபாயின்னு வித்துப்புடுதுக. ஜனங்களும் வெயிலுக்கு நல்லதுன்னு வாங்கித் தின்னுதுக.

பஸ்ஸ்டாண்டுக்குள்ள வேலாயுதம் தள்ளுவண்டி போல இன்னும் ரெண்டு வண்டி இருக்குது. எல்லாருமே கடலை வித்தவுகதான். சுப்பையாவும், சோணையும் வேலாயுதத்தைப் போல கடலையை மட்டுமே நம்பி ஏவாரத்துல இறங்க மாட்டானுங்க. சுப்பையா சீசனுக்கு ஏத்தபடி தண்ணிப்பழம், நெல்லிக்காய், மாங்காய், எலந்தபழம், பனங்கிழங்கு, ஆலவள்ளிக் கிழங்குன்னு ரெண்டு மூணு அயிட்டத்தை வச்சுக்கிட்டுத்தான் ஏவாரம் பண்ணுவான். சோணையும் அப்படித்தான். இப்ப, அவிச்ச பட்டாணி, சுண்டல்ன்னு மாறிக்கிட்டான். வேலாயுதத்தால மட்டும் பத்து வருஷமா பார்க்குற தொழிலை மாத்திக்க முடியல.

எப்படியோ மூணு வண்டிக்காரனும் முட்டிக்காம, முறைச்சுக்காம பஸ்ஸ்டாண்டே உலகம்ன்னு சுத்தி, சுத்தி வந்து கத்திக்கிட்டே பொழப்பை ஓட்டிக்கிட்டு இருக்கானுங்க. வேலாயுதத்துக்குக் கால்ல போட்டிருந்த ரப்பர் செருப்பு தேய்ஞ்சு, அஞ்சு விரல் தடத்துலையும் சின்ன ஓட்டைக்கூட விழுந்திருச்சு. ஏவாரம் நல்லா நடந்தா பாய் கடையில அம்பது ரூபா ரப்பர் செருப்பு வாங்கிப் போட்டுக்கிடணும்ன்னு ரொம்ப நாளா மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டே, பாய் கடையில போயி அப்பப்ப வந்து இறங்கின புது செருப்புகளைப் பார்த்துக்கிட்டும், வெலையை விசாரிச்சுக்கிட்டும் இருப்பான் வேலாயுதம்.

மதுரை பெரியார்நிலையம் போற பஸ் கிளம்ப கொஞ்சம் கூட்டம் கொறஞ்சு காத்தும் வந்துச்சு. உடனேயே நரிக்குடி பஸ் வரவும் ஜனங்க சீட் போடுறதுக்கு முண்டி, மோதி வாசல், ஜன்னல்ன்னு திறந்திருக்கிற பக்கமெல்லாம் ஏறியும், கர்ச்சீப், பைன்னு சீட்டுல தூக்கிப்போட்டும், அதுக்கு சண்டைகளைப் போட்டும் கசகசன்னு ஒரே இரைச்சலாகிப் போச்சு. இந்த லட்சணத்துல போன வாரம் புதுசா ஃபேன்ஸிக்கடை தொறந்திருக்கிற அய்யப்பன் வேற விடாம டேப்பைப் போட்டு மக்களுக்கு தலைவலிய வரவச்சுக்கிட்டு இருந்தான்.

அய்யப்பன் கடை வந்த ஒரு வாரத்துல ஏற்கனவே கடை வச்சிருந்த மணிக்கு ஏவாரம் கொஞ்சம் டல்லுதான். அய்யப்பன் சல்லிசா தர்றதோட குங்குமச்சிமிழ், டம்ளர், தட்டு, கிண்ணம்ன்னு எவர்சில்வர் பொருட்களை கிப்ட்ன்னு சொல்லிக் கொடுத்து ஜனங்களைக் கவர் பண்ண ஆரம்பிச்சுட்டான். மாரியம்மா கூட பிள்ளைகளுக்கு வளையலு, பொட்டுன்னு வாங்கிட்டு கிப்ட்டா கிண்ணம் வாங்கிட்டு வந்துட்டா. மணி எப்பவும் போல ரோஸ், பச்சை, சிவப்புன்னு கலர்கலரா குடங்களைக் கட்டி தொங்கவிட்டுக்கிட்டு "வாங்க, வாங்க"ன்னு கூவிக்கிட்டுத்தான் இருக்கான்.

சரியா ஆவி வராம இருக்கவே வேலாயுதம் குனிஞ்சு வண்டிக்குக் கீழ பார்த்தான். ஸ்டவ்வு ஒழுங்கா எறியமாட்டேன்னு அடம்பிடிக்குது. அத மாத்தணும். வண்டியில இருக்குற நாலு சக்கரமும் பேருக்குத்தான் சுத்துது. அதுகள சரி பண்ணணும்னு யோசிச்சுக்கிட்டே ஸ்டவ்வைக் கூட்டி வச்சுட்டு, அதுமேல இருக்குற ஈயப்பானையில பாட்டில்ல இருந்து தண்ணிய ஊத்தினான். பானையில இருக்கிற தண்ணி ஆவியாகி வண்டிமேல விரிச்சிருக்கிற சாக்குல பட்டு, அவிச்சகடலை எப்பவுமே சூடா இருக்கிறதுக்குத்தான் இந்த ஏற்பாடெல்லாம். வண்டி மேல சாக்குல கெடக்குற கடலைகளை மாத்திப் போட்டு ஆவி காட்டிக்கிட்டான்.

விருதுநகர் பஸ் கிளம்பும்போது ரெண்டு சின்னப்பசங்க, "அண்ணே, கடலை"ன்னு கத்தி, ஆளுக்கு ஒத்த ரூபாய் நீட்டினானுங்க. அவசரமா பொட்டலம் போட்டுக்கிட்டு ஓடிப்போயி கொடுத்துட்டு காச வாங்கிட்டு வந்த வேலாயுதம் மாரியம்மா வர்றதப் பார்த்து சிரித்தான்.

ஆனா, வந்தவ எள்ளும், கொள்ளும் முகத்துல வெடிக்க சிவந்த முகத்தோட வந்தா. கஞ்சி கொண்டு வந்த தூக்குவாளிய டொப்புன்னு வண்டி மேல வச்சா. "பாத்தும்மா, பழையவண்டி ஓட்டையாக்கிறதா"ன்னு வேலாயுதம் சிரிக்க, அவள் இன்னும் முறைத்தாள்.

"ஏய்யா, நம்ம பொழப்புல மண்ணப்போடுறதுக்குன்னே ஒரு கடலை வண்டிக்காரன் புதுசா வந்திருக்கான் போல"

காலையில எட்டுமணியப்போல அருப்புக்கோட்டை பஸ்ஸ்டாண்டுல ஏவாரம் பார்த்துக்கிட்டு இருந்தவன், இங்க வண்டியோட நுழைஞ்சதுமே. மத்த மூணு வண்டிக்காரவுகளும் சேர்ந்து வண்டியோட போயி, "யாரப்பா, புதுசாயிருக்க?"ன்னு அரட்ட, பய அழுக ஆரம்பிச்சுட்டான். பொண்டாட்டி ஊரான காரியாபட்டிக்கே வரவேண்டியதாப் போச்சு சூழ்நிலைங்கிறான். இதவிட்டா வேற பொழப்பும் தெரியாதுங்கிறான்.

"சரி, பார்க்க பாவமாயிருக்கு. அதோட பஸ்ஸ்டாண்ட என்ன நமக்கு மட்டுமா பட்டாப்போட்டு கொடுத்துருக்கா. அவன் பங்குக்கு அவனும் சுத்தி வந்து ஏவாரம் பார்த்துட்டுப் போறானே"ன்னு சுப்பையா மத்த ரெண்டு பேர்கிட்டயும் தனியாப் பேசி, புதுசா வந்தவனையும் எப்படி நடந்துக்கிறணும்னு சொல்லவும் செஞ்சான். இதையெல்லாம் வேலாயுதம் மனசா ஏத்துக்கிட்டாலும், சோணைக்கு மனசில்லை. அவன மனசுக்குள்ளே திட்டுறான்னு அவனோட முறைக்கிற கண்ணே காட்டிக் கொடுத்துச்சு.

வேலாயுதம் காலையில நடந்த இந்த விஷயத்தையெல்லாம் மாரியம்மாகிட்ட அப்படியே சொன்னான்.

"தாராளம் தண்ணிபட்ட பாடு, ஏராளம் எண்ண பட்ட பாடாயிருக்குது உங்களுக்கு. உங்க மூணு பேருக்கே ஏவாரம் சரியில்லாம, பிள்ளைகுட்டிகளோட கஷ்டப்படும் போது இன்னொருத்தனுக்கு வக்காலத்து வாங்குறீகளோ? குடிக்கிறது கஞ்சி, கொப்புளிக்கிறது பன்னீருங்கிற கதையாவுலய்யா இருக்கு உம் பேச்சு"

மாரியம்மா எப்பவும் இப்படித்தான். பேசினவாய மூடாமத்தான் பேசுவா. ஆனா பாசக்காரி, ராத்திரி ஒன்பது மணிக்கு வேலாயுதம் வீட்டுக்குப் போயிரணும் அவளுக்கு. சூடா சோத்தைப் போட்டு கொழம்ப ஊத்தி அவன் சாப்பிடுறத பார்த்துக்கிட்டே தானும் சாப்பிடுவா. "ரெண்டு நேரத்துக்கும் கஞ்சியக்குடிச்சிக்கிட்டு கெடக்குற, ஒரு நேரமாவது சூடா சாப்பிடு"ன்னு அள்ளி, அள்ளி வச்சு அன்ப அதுல காண்பிப்பா. வென்னி போட்டு குளிக்கச் சொல்லிட்டு, காலப்பிடிச்சும் விடுவா. "பஸ்ஸ்டாண்டை இப்படி நாய் மாதிரி சுத்துறதுக்கா உங்காத்தா உன்னைப் பெத்துப் போடணும், உங்காத்தாக்காரி உன்னைப் பெத்த நேரமும், பேருவச்ச நேரமும்"ன்னு வேலாயுதத்துக்கு கால் அமுக்கிக்கிட்டே அவுக அம்மாவையும் வஞ்சுக்குவா.

பாவம், அவளும் வீட்டுல சும்மா இல்லை. தீப்பெட்டி ஒட்டுவா. பூ கட்டுவா. கடலையை அவிச்சு கொடுத்துட்டு பழம், காய்கன்னு வாங்கி காலையிலேயே ஏவாரத்துக்கும் போயிட்டு வந்திருவா. அவளும் சேர்ந்து பாடுபடுறதுனாலதான் பிள்ளைகள பள்ளிக்கூடத்துல படிக்க வைக்க முடியுது.

வசவுல பிடிக்க ஆரம்பிச்சவளுக்கு துணைக்கு பக்கவாத்தியம் வாசிக்க வந்தவன் மாதிரி சோணை வந்தான். "நல்லாச் சொல்லு மதினி, அண்ணனும், சுப்பையாப் பயலும் தான் என்னமோ பெரிய டாடாபிர்லா மாதிரி.... ஏவாரத்துல பங்குக்கு வந்து நிக்கிறவனை மல்லுக்கட்டி அனுப்பாம பாவம், புண்ணியம்ன்னு பேசிக்கிட்டு திரியுதுக"ன்னு மாரியம்மாளுக்கு எடுத்துவிட்டான். "பாவிப்பய, இவனுக்கு இந்தக் காரியாபட்டி பஸ்ஸ்டாண்டை விட்டா வேற ஊரா கெடைக்கல. பொழப்ப கெடுக்கவே வந்திருக்கா"ன்னு மாரியம்மாளும் சோணைகிட்ட பேச ஆரம்பிச்சா.

வேலாயுதம் வண்டிய வேப்பமரத்தடியில பூக்கடைக்கு பக்கத்துல நிப்பாட்டிவச்சிட்டு கஞ்சிவாளிய எடுத்துக்கிட்டு சாப்பிட உட்கார்ந்தான்.

"இருய்யா, பேசிக்கிட்டே மறந்து தொலைச்சுட்டேன் பாரு. வடை வாங்கியாறேன்"னு ஜாக்கெட்டுக்குள்ள வச்சிருந்த பர்ஸ எடுத்துக்கிட்டு மண்டை முத்தையா கடைக்கு ஓடினா. ஆமவடையும், உளுந்தவடையுமா ரெண்டு வாங்கி வந்தா. "மதினி. மண்டைமுத்தையா ஒத்தரூபா அளவுக்குத்தான் போடுவாரு"ன்னு சோணை சிரிக்க, "அப்புறம் அவரு மண்டையளவுக்கா போடுவாறு"ன்னு வேலாயுதமும் சிரித்துக்கொண்டே கஞ்சிய அள்ளிக்குடித்தான்.

உளுந்தவடைய பாதி பிச்சு பொண்டாட்டி கையில கொடுத்தான் வேலாயுதம். அவளும் மறுக்காம வாங்கி வாயில போட்டுக்கிட்டா. அவளுக்கு உளுந்தவடை பிடிக்கும்ன்னு அவனுக்குத் தெரியும்.

வேலாயுதம் சாப்பிட்டு முடிச்சதும் மாரியம்மா தூக்குவாளிய எடுத்துட்டுப் போயி பஸ்ஸ்டாண்டுக்குள்ளேயே இருந்த சிண்டக்ஸ்தொட்டி பைப்புல கழுவி, அது நெறைய தண்ணியும் பிடிச்சாந்து வந்து புருஷனுக்கு கை கழுவ கொடுத்தாள். "நீ வேணா, செத்த மரநிழலுல உட்காரு. நான் போயி ஒரு சுத்து சுத்தியாரேன்"னு சொல்லிட்டு வண்டிய நின்னுக்கிட்டிருந்த பஸ்களுக்கு நடுவுல போக ஆரம்பிச்சா மாரியம்மா.

"அப்பாட"ன்னு வேப்பமரத்தடியில உட்கார்ந்த வேலாயுதத்துக்கு கண்ணுலபட்டது. அந்தப் புதுசா வந்திருந்தவனோட வண்டி. வண்டிக்குள்ள எரியிற ஸ்டவ்வுல இருந்து எப்படியோ தீ சாக்குல பட்டு புகைய ஆரம்பிச்சது. வண்டிக்கிட்ட அந்தப் புதுப்பயலையும் காணோம். அடடே எரியப்போகுதேன்னு மனசு படபடக்க, கையை ஊண்டி வேலாயுதம் எந்திரிக்க, தீ சாக்குல சப்புன்னு பத்திக்கிச்சு.

ஓடி வந்த வேலாயுதம் சாக்குல பத்திக்கிட்ட தீயைக் கையால தட்டியே அணைச்சுப்புட்டான். கடலையை ஓரமா ஒதுக்கிட்டு சாக்குல தண்ணிய ஊத்தினான். எரியிற ஸ்டவ்வையும் குறைச்சு வச்சான். கடைக்குப்போயிட்டு வந்த புதுப்பய தீயைப் பார்த்த அதிர்ச்சியில பதறிப்போயி ஓடிவந்தான். அவன் ஓடிவர்றதுக்குள்ள வேலையுதம் எல்லாத்தையும் சரி பண்ணிட்டான். வந்தவன் வேலாயுதத்துக்கு கண்களாலே நன்றி சொல்லும் முகபாவனையில் நின்றான்.

"ஏண்டா, இப்படியா ஸ்டவ்வ ஏறியவிடுறது? ஏற்கனவே அவிச்ச கடலைதானடா. சூடா இருக்குறதுக்குத்தான் ஸ்டவ் எறியணும். சாக்க இப்படித் தொங்கவிடாம, இழுத்து வையி மொதல்ல".

வேலாயுதம் தொழில் யுத்திகளைக் கற்றுத்தர, வாத்தியாருக்கு முன் நிக்கிற பள்ளிக்கூட பையன்போல நின்னு கேட்டான் புதியவன்.

மாரியம்மாகிட்ட சோணை, "அங்க பாரு மதினி, உம்புருஷன் புதுசா வந்தவனுக்குப் புத்திமதி சொல்றத"ன்னு கையைக் காண்பிச்சுவிட வண்டியோட வேகமாக வந்தவள், "எங்க வயித்தெறிச்சதாண்டா இப்படி வண்டி பத்திக்குது"ன்னு அவன் முகத்துக்கு நேரவே வைய ஆரம்பித்தாள்.

"மாரியம்மா, என்ன பேசுற நீ? அவனை எதுக்கு வையிற, நானும் அவனும் ஒண்ணுதான். நம்மளப்போல வயித்துப் பாட்டுக்குத் தானே வந்திருக்கான். அவனுக்கு வந்த நாள்லேயே நஷ்டம்னா தாங்குவானா அவன். பாவம் சின்ன பையன். அவனும் பொழைக்கட்டுமே"

வேலாயுதம் சொல்லிக்கிட்டு வண்டிய தள்ளிக்கிட்டு, "கடலை, கடலை"ன்னு கத்திக்கிட்டே புறப்பட, மாரியம்மா, "போய்யா, பொழைக்கத் தெரியாத பொசகெட்ட மனுசா"ன்னு வஞ்சுக்கிட்டே தூக்குவாளிய எடுத்துக்கிட்டு வீட்டுக் கிளம்பினாள்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link