சிறுகதைகள்


சொந்தம்

கூடல்.காம்
வெளுத்த தலையோடு வந்து நின்ற அந்தப் பெரியவர், "தம்பி, என்னை உங்களுக்கு நினைவிருக்குதுங்களா?" என்று கேட்டதும் ஒரு கணம் திக்குமுக்காடிப் போனேன்.

நினைவுத் தடங்களில் அவரின் பதிவுகளைத் தேடும் பணி உடனே நடந்தது. என்றாலும் பலனில்லை - "தெரியலீங்களே!" என்றேன்.

"பரவாயில்லை தம்பி, நானே சொல்றேன்... அது நடந்து ஐந்து வருடமிருக்கும்... அப்போ, சைக்கிளில் போன என் மகன் லாரியில் அடிபட்டு மருத்துவமனைல சேர்த்திருந்தாங்க... நிறைய ரத்தம் தேவைப்பட்டுச்சி..."

"ஞாபகம் வந்திடுச்சிங்க பெரியவரே... இப்போ உங்க பையன் நல்லாயிருக்கானா?"

"நல்லாயிருக்கான்... கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கிறான்... அதை விடுங்க தம்பி... நான் வந்த விஷயமே வேற... என் மகளுக்கு வர்ற இருபதாம் தேதி கல்யாணம் வச்சிருக்கேன்... பஸ் ஸ்டாண்டுல இறங்குனதுமே உங்க கடை விளம்பரம் கண்ணுல பட்டுச்சி... உங்க போட்டோவைப் பார்த்ததுமே மனசு குளிர்ந்து போச்சுங்க தம்பி... நேரா இங்க வந்திட்டேன்..."

"சொல்லுங்கய்யா, நான் என்ன செய்யணும்... முதல்ல உட்காருங்க."

ஆமா, இந்த வீடியோ கடை எப்போ வச்சீங்க?"

"இப்பதான். ஒரு மாசம் ஆகுது."

"நல்லது தம்பி, நல்ல மனசு உள்ளவங்களுக்கு ஆண்டவன் ஒரு குறையும் வைக்க மாட்டான்... என் மகள் கல்யாணத்தை நீங்கதான் தம்பி வீடியோ படம் எடுத்துக் கொடுக்கணும்... ஆர்டர் புக் பண்ணிக்கங்க..."

டைரியை எடுத்தேன்.. "ஐயா, உங்க பேர் முகவரியைச் சொல்லுங்க... கல்யாணம் நம்ம வீட்டுலயா, இல்ல மண்டபத்துலயா..."

ஒரு பத்திரிகையை எடுத்து எழுந்து நின்று என்னிடம் கொடுத்து, "அவசியம் வந்திடுங்க தம்பி... இதுல எல்லா விபரமுமிருக்கு" என்றார்.

"அதான் ஆர்டர் கொடுத்திட்டீங்களே, கட்டாயம் வந்திடுவேன்."

வாசல் வரை வந்து அவரை வழியனுப்பி வைத்தேன்.

அப்போது நான் பேருந்து நிலையத்திலிருந்த தனியார் தொலைபேசி நிலையத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று இரவுப் பணியில் இருந்தபோது பதற்றமாய் வந்தார் இந்தப் பெரியவர். யார் யாருக்கோ செய்தி சொன்னார். உடனே ரத்தம் கொடுக்கணும்னு டாக்டர் சொல்றாரு... இல்லைன்னா உயிருக்கே ஆபத்தாய்டுமாம்... வந்திடறீங்களா - என்று கெஞ்சினார். தடுமாற்றத்தோடு பூத்திலிருந்து வெளிப்பட்டவர் பணம் கொடுக்காமல் கிளம்பினார்.

"ஐயா, பணம் தராமப் போறீங்க"- என்று நான் அழைத்ததும் திரும்பி வந்து,

"பதற்றத்துல மறந்திட்டேன் தம்பி, எவ்வளவு ஆகுது?"

பில்லை பிரிண்டரிலிருந்து கிழித்து நீட்டிய நான், "ஐயா, ஏதாவது பிரச்சினைங்களா?" என்று வினவினேன்.

"ஆமாந் தம்பி... என் மகன் லாரியில் அடிபட்டு சீரியஸா இருக்கான்... "ஓ-பாஸிடிவ்" ரத்தம் உடனே செலுத்தணும்ங்கிறாங்க... அதான் உறவுக்காரர்களை வரச் சொன்னேன்... இந்த ராத்திரில வருவாங்களான்னு சந்தேகமாயிருக்கு!"

"ஐயா, எனக்கும் ஓ-பாஸிடிவ் க்ரூப் தான்... நான் வேணா ரத்தம் கொடுக்கிறேனே..."

அவர் திகைத்து நின்றார்.

கடைப்பையனிடம் சொல்லிட்டு அவரோடு போனேன். ரத்தம் கொடுத்தேன். திரும்பும்போது பெரியவர் பணம் கொடுத்தார். "இதுக்கெல்லாம் பணம் வாங்கினா நான் மனிதனில்லை" என்று கிளம்பி வந்தேன். அதற்குப் பிறகு அவரை நான் சந்திக்கவே இல்லை. அந்த நன்றிக்கடன் இன்று அவரை என்னிடம் அழைத்து வந்திருக்கிறது.

திருமணத்திற்கு முதல்நாள் மாலையே அந்த கிராமத்திற்கு என் உதவியாளன் சுந்தரத்துடன் வந்து விட்டேன்.

பெரியவர் வீட்டுக்கு எதிரில் தெருவை அடைத்துப் பந்தல் போட்டிருந்தார்கள். முதல் நாளிரவில் நிச்சயதார்த்த விழா முடிந்து தடபுடலான விருந்து. அப்போதுதான் வந்த ஒரு இளைஞன் நன்றியோடு என் கைகளைப் பற்றி, "வாங்க சார்... என்னைத் தெரியுதுங்களா?" என்று கேட்டான். முகச்சாடையை வைத்துப் பெரியவரின் மகனாய் இருக்குமென்று யூகித்தேன்.

"நீங்க பெரியவர் மகன்தானே?"

"ஆமா சார்... இன்னிக்கு நான் உயிராடு இருக்கேன்னா அதுக்கு நீங்கதான் சார் காரணம்..." குரல் தழுதழுக்கப் பேசின அவன் கண்களில் கண்ணீர்.

அவனை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டேன்... "ஒரு உயிருக்கு இன்னொரு உயிர் இந்த உதவி கூடச் செய்யலேன்னா எப்படி... அது சாதாரண விஷயம்"

"நீங்க பெரிய மனிதர் சார்..."

"அது கிடக்கட்டும்... படிப்பெல்லாம் எப்படி இருக்கு?"

"நல்லா படிக்கிறேன் சார்..."

அப்போது பெரியவர் குறுக்கிட்டு, "என்ன தம்பி, சிவா என்ன சொல்றான்..."

"சும்மாதாங்கய்யா... படிப்பைப் பற்றி விசாரிச்சேன்."

"உங்களை ரொம்ப நாளாவே பார்க்கணும் பார்க்கணும்னு துடிச்சிட்டிருந்தான். தம்பி... இப்பதானே நீங்க கண்ணில் பட்டீங்க... சரிடா சிவா, நீ போய் மாப்பிள்ளையைக் கவனிச்சுக்க... அவங்க எந்தக் குறையும் சொல்லக்கூடாது!"

"சரிப்பா..." என்று நகர்ந்தவன், "சார், அப்புறம் உங்ககிட்ட பேசுறேன்." என்று கூட்டத்தில் கலந்து போனான்.

எல்லோரும் இப்படி அநியாயத்துக்கு நல்லவர்களாய் இருக்கிறார்களே என்று தோன்றியது.

பொழுது விடியுமுன்பே சுந்தரம் என்னை எழுப்பினான். இருவருமாய் அல்லிக்குளத்திற்குச் சென்று குளித்து முடித்து உடுத்திக் கொண்டு திரும்பினோம். வரும் வழியில், "அண்ணே, அங்கே கல்யாண வீட்டுல என்னவோ அசம்பாவிதம் நடந்திருக்குண்ணே... எல்லோரும் கூடிக் கூடிக் குசுகுசுன்னு பேசிக்கிட்டாங்க... உடனே செய்தியை வெளியே பரப்பிட வேணாம்னு பேசிக்கிட்டாங்க."

"என்னடா சொல்றே நீ... காலையிலேயே என்கிட்ட அடி வாங்காதே... அவர் ரொம்ப நல்ல மனுசன்... அவர் மனசு வருந்தும் படியா எதுவும் நடக்காது... நடக்கவும் கூடாது!"

"நிஜமாத்தாண்ணே சொல்றேன்."

"சும்மா பொத்திக்கிட்டு வாடா... இல்லைன்னா அடிச்சே கொன்னுடுவேன்!"

வீடு நெருங்க நெருங்க எனக்குப் பதற்றமாயிருந்தது.

சுந்தரம் சொன்னது போலவே பந்தலில் கூட்டமாய் நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள். எல்லோரது முகத்திலும் கலவரம் அப்பியிருந்தது. எனக்கு சூழ்நிலையின் தீவிரம் விளங்கவில்லை.

கூட்டத்திலிருந்த சிவாவைத் தனியே இழுத்து வந்தேன். "என்னாச்சு சிவா?"

"மாப்பிள்ளையைக் காணும் சார்!"

"மாப்பிள்ளையைக் காணுமா, என்னய்யா சொல்றே?"

"ஆமா சார்... வேறு யாரையோ காதலிக்கிறதால இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்ல. என்னைத் தேட வேணாம்னு லெட்டர் எழுதி வச்சிட்டு ஓடிட்டாரு!

"அடப்பாவமே, நல்ல இடமான்னு விசாரிச்சுதானே அப்பா ஏற்பாடு பண்ணினாரு?"

"அவன் அப்பவே அவங்க அப்பாகிட்ட சொல்லியிருக்கான் சார்... அவர்தான் சொத்துக்கு ஆசைப்பட்டு அவனைக்
கட்டாயப்படுத்திக் கூட்டிட்டு வந்திருக்கார்..."

மேள முழக்கம் நிறுத்தப்பட்டது. ஒலிபெருக்கியின் விசையும் பிடுங்கப்பட்டது.

நானும், சுந்தரமும் திண்ணையில் ஒடுங்கி உட்கார்ந்தோம். எனக்கு அந்தப் பெரியவரின் முகத்தைப் பார்க்கவே வெட்கமாயிருந்தது. அந்த நல்லவருக்கு ஏன் இந்த சோதனை?

உறவினருக்கு மத்தியில் பெரியவர் என்னவோ காரசாரமாய் விவாதிப்பது கேட்டது-

"சாதி என்னய்யா சாதி... நம்ம சாதிக்காரன்தான் முகத்துல கரியைப் பூசிட்டுப் போய்ட்டானே, அதனால எடுத்த முடிவை நான் மாத்திக்கப் போறதில்லே... உங்க முடிவைச் சீக்கிரமாச் சொல்லுங்க... இல்லாட்டி ஊர்ப்பகையே வந்தாலும் பரவாயில்லைன்னு நானே தனிச்சி நின்று இந்தக் கல்யாணத்தை நடத்திக் காட்டுவேன்!"

அவர் பேசுவது எனக்கு விளங்கவில்லை. சாதிப் பிரச்சினை இதில் எங்கிருந்து வந்தது?

சற்றைக்கெல்லாம் மற்றவர்களும் பெரியவரின் கருத்துக்குச் சம்மதம் சொல்லியிருக்க வேண்டும். பெரியவர் முன்னால் வர, கூட்டம் என்னை நோக்கி வந்தது. பயந்த நான் எழுந்து நின்று விட்டேன்.

பெரியவர் பேசினார்... "தம்பி, நடந்ததெல்லாம் நீங்களே பார்த்திட்டிருந்தீங்க... அதனால நான் ஒரு முடிவு எடுத்தேன். அதுக்கு உறவுக்காரர்களும் சம்மதம் சொல்லிட்டாங்க... நீங்களும் பெரிய மனசோட சம்மதம் சொல்லணும்."

"ஐயா நீங்க என்ன சொல்றீங்க... இதில் என் சம்மதம் எதுக்கு?"

"தம்பி, நீங்கதான் என் மானத்தைக் காப்பாத்தணும்... நீங்கதான் என் மகளுக்கு தாலி கட்றீங்க..."

"ஐயா ஆஆஆ!"

"ஏன் தம்பி, எங்களை உங்களுக்குப் பிடிக்கலையா?"

"என்னங்கய்யா இப்படிச் சொல்றீங்க... நான் உங்க வசதிக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாதவன்!"

"அதை நாங்க பார்த்துக்கிறோம்... நீங்க என் மாப்பிள்ளை ஆய்ட்டா வசதி தானே வந்திட்டுப் போகுது கழுதை... வாங்க, பட்டு வேட்டியைக் கட்டிக்கிட்டு உடனே மணவறைக்கு வந்திடுங்க... சுந்தரம் நீ வீடியோ எடுய்யா... உனக்கு லைட்டு பிடிக்க நான் ஆள் தர்றேன்..."

அடுத்த சில நிமிடங்களில் எல்லாமும் நடந்து முடிந்தது. எனக்கு ஒரு வாழ்க்கைத் துணைவி வந்து விட்டாள். எல்லாம் கனவில் நடப்பது போலிருந்தது.

யாக குண்டத்தைச் சுற்றி வந்தபோது என் விரல் பிடித்துத் தோழனாய் முன்னால் நடந்த சிவா காதோரம் சொன்னான்... "உங்களைப் பார்த்ததுமே நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளையா இருக்கக்கூடாதான்னு தோணிச்சு. இப்ப மாப்பிள்ளை புண்ணியத்துல நிஜமாவே அப்படி நடந்துபோச்சு. எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா மாமா!" என்று அவன் நெகிழ்ந்தபோது எனக்கும் கண்களில் நீர்த்திரை.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link