சிறுகதைகள்


பரிணாமம்

கூடல்.காம்
1

எங்களுரில் அத்தனை பேரும் கேட்டு வளர்கிற கதைதான். ஆனால் எனக்குள் மட்டும் அது ஆழமான ஒரு நம்பிக்கையாக ஊடுருவி விட்டிருந்தது. காரணம் அதைச் சொன்னவன் சிங்கி. அந்நாட்களில் கங்காருவும் குட்டியும் போலத்தான் இருப்போம் நாங்கள். சிங்கி உண்மையில் கதை சொல்வதில்லை. அவனுடைய நிஜ உலகமே அதுதான். வெறும் எடுபிடிக் கிழவனாக அவனைக் குறுக்கும் பகல் வெளிச்சத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மாலையில் கள் தேவைப்பட்டது அவனுக்கு. உடும்புத்தோல் உடுக்கையை ஒற்றை விரலால் மீட்டியபடி, பாட்டும் உரையும் கலக்க, அவன் கதை சொல்வான். அப்போது கட்டுகளுக்கு அப்பாற்பட்டதோர் வனவிலங்கின் வலிமையும் தூய்மையும் அவனில் வந்து குவியும். குரல் ஓங்காரமாகப் பொங்கியெழும்.

நீலி மலைக்கு அப்பாலிருக்கிறது மலையம்மையின் சன்னிதானம் என்பான் சிங்கி. நீலிமலையின் வடவிளிம்பு வரைதான் மனிதர்களின் எல்லை. அங்கிருந்து பார்த்தால் கீழே ஆழத்தில் மரங்களின் மண்டைகள் பின்னிப் பிணைந்து பசுமையான படுகை தெரியும். அதுதான் மலையம்மையின் மடி. அதற்கப்பால் மானுட ஸ்பரிசமே படாத ஆதிமலை. அதன் உச்சி மீது வழவழவென்று ஒரு பிரமாண்டமான உளுந்துபோல ஆதிப்பாறை. அதுதான் மலையம்மையின் முகம். மழை பெய்து நீர் அதன்மீது வழியும் போது அதில் மலையம்மையின் கண்கள் தெரியும். மலையம்மை காக்கும் தெய்வம். நாட்டுக்கு அதிபதி அனந்த பத்மநாபசாமி, காட்டுக்கு மலையம்மை என்பான் சிங்கி.

மலையம்மையின் மடியிலே வளரும் அத்தனை மரங்களும் ஆதிமலை நோக்கித் தெண்டனிட்ட நிலையில்தான் இருக்கும். மூன்று இலை விட்டு மேலெழும் கன்றுகூட கும்பிட்டபடியே தான் வெளிவரும். அங்கு கருங்காணிகள் வசிக்கிறார்கள். அம்மையின் முலையைக் கவ்வி உறிஞ்சும் அருமைப் பிள்ளைகள், கருங்காணிகளுக்கு வீடு இல்லை. உடையணியும் பழக்கமும் இல்லை. வளைந்த மரக்கிளை அடிப்பாகமே அவர்களுக்கு கூரை. கருங்காணிகள் பத்து யானை பலம் கொண்டவர்கள். பெரிய பாறைகளைக்கூட அனாயசமாகத் தூக்கிப் போடும் ராட்சதர்கள். அங்கு மிருகங்களே இல்லை. நீலிமலை மேல் நின்றபடி அவர்கள் வாழும் ஆனந்த வாழ்க்கையைக் காண முடியும். அவர்கள் எல்லோருமே அழகானவர்கள். ஆண்களெல்லாம் கரும்பாறையில் கொத்தி உண்டாக்கப்பட்டவர்கள் போலிருப்பார்கள். பெண்கள் கருவீட்டி மரத்தால் கடைந்தது போல மினுமினுப்பார்கள். கருங்காணிகளுக்கு நோய் கிடையாது. துக்கம் கிடையாது. பயம் இல்லை.

பொறாமை இல்லை. கோபமோ, வெறுப்போ, பேராசையோ அந்த மண்ணிலேயே இல்லை. அங்கு பெரியனும் சின்னவனும் என்று பாகுபாடு கிடையாது. எல்லாருமே அம்மையின் மக்கள். அவர்கள் அம்மைக்கு விசுவாசமாக இருந்தார்கள். அவள் அவர்களை தன் மடியின் வெதுவெதுப்பில் வைத்துக் கொண்டாள். முன்பொரு காலத்தில் அத்தனை பேரும் அம்மையின் அருமைப் பிள்ளைகளாக இருந்தவர்கள் என்பான் சிங்கி. ஆனால் அம்மையின் பிள்ளைகளில் சிலருக்கு நாட்டுக்குப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. கோயில் பார்க்க வேண்டும். கொட்டாரம் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. அம்மை சொன்னாள், நாட்டுக்குப் போக வேண்டாம் மக்களே; நாட்டு நீலி மகாமாயாவி. அவள் பார்வை பட்டால் கதிமோட்சமே இல்லை. அவளிடம் சிக்குபவர்களுக்கு பேராசையும், பொறாமையும் ஏற்படும். அவர்கள் பரஸ்பரம் வெறுப்பார்கள். திருடுவார்கள். சண்டையிடுவார்கள். பழம் பழுத்த மரத்தின் வேர் தோண்டிப் பார்க்க நினைப்பார்கள். மீள வழியின்றி நாட்டிலேயே சுற்றி வருவார்கள். பிச்சை எடுத்தாலும் விட்டு வர மட்டும் மனம் வராது.

நாட்டு நீலியின் மோக வலையில் சிக்க வேண்டாம் பிள்ளைகளை, அம்மை இருக்கிறேன் அடங்கியிருங்கள் என்றாள் அம்மை. பிள்ளைகளின் ஆசை அடங்கவில்லை. ஒரு சாரார் அம்மையறியாமலேயே நாட்டைப் பார்க்க வந்தார்கள். வீடாச்சு, வயலாச்சு, தோப்பாச்சு, குடியாச்சு என்று ஊரிலேயே தங்கிவிட்டார்கள். குசும்பும், குண்டாமண்டியும் செய்தார்கள். கொலை களவு பாவங்கள் பண்ணினார்கள். அவர்கள் பாவங்கள் எல்லாம் சந்ததிகளுக்கு வந்து சேர்ந்தது. சிங்கி தன்னை அப்படி வந்தவர்களின் பரம்பரையில் சேர்ந்தவன் என்பான். அப்போது அவன் கண்கள் நிறையும். முகச்சுருக்கங்களிலும், நரைத்துத் தொங்கும் மீசையிலும் வழியும் போதையும் சோகமும் குளறச் செய்த குரலில், "மாயநீலி வலையிலே சேந்தோமே! பெத்த அம்மையை மறந்தோமே! எக்க அம்மோ, மலையம்மை ஆத்தாளே!" என்று புலம்பி அழுவான். இறுகி ஒடுங்கிய உடல் குலுங்கும். எனக்கும் அழுகை வந்து தொண்டையை முட்டும். அவன் விலாப் பக்கம் ஒண்டியவனாக நானும் அழுவேன். சிங்கி சொல்வான், "ஆனா ஒண்ணுண்டு ஏமானே, இந்தக் கும்பிக்குள்ள ஒரு தீயுண்டு. இண்ணல்லங்கி நாளை அம்மை மடியில செண்ணு சேராம இருக்கப் போறதில்லை பாத்துக்கிடுங்க. ஏழு தலமொற செய்த சகல பாவத்தையும் மறந்து பொறுக்கணும் மலையம்மோ எண்ணு அம்மைக்க காலில விளுந்து கரையணும். அம்மை மறக்காம இருக்க மாட்டாள்."

"நானும் வாறன் சிங்கி" என்பேன் ஆவலாக.

"சீச்சி ஏமான் என்னத்துக்கு. ஏமான் நாட்டு ராசாவாக்கும் பாத்திக்கிடுங்க."

"மலையம்மையை நான் பாக்கணும்" என்று சிணுங்குவேன்.

"என்னத்துக்கு? ஏமானுக்க தெய்வம் அனந்த பப்பனவ சாமியாக்கும். திருவந்திரத்திலச் சங்கு சக்கரம் வச்சுகிட்டு மலந்து கெடக்குதே அதாக்கும். மலையம்மை எங்களுக்கு தெய்வம்" என்பான் சிங்கி.

மலையம்மையை விட்டுவிட்டு வந்து, பாதி வழியிலேயே குற்றவுணர்வு கொண்டு, மனம் கலங்கி நின்று விட்டவர்களை மலையம்மை திரும்ப ஏற்றாள். அவர்களை காட்டில் வைத்து காப்பாற்றுவதாகச் சொன்னாள். அவர்கள் தாம் காணிக்காரர்கள். ஆனால் மலையம்மையை மனசால்கூட விட்டுவர எண்ணாதாவர்களை மட்டும் தன் மடியில் வைத்து சீராட்டினாள். காணிகள் மலையம்மையின் பாதங்களிலும் புஜங்களிலும் மட்டுமே வசிக்க முடியும். மலையம்மையின் செல்லப் பிள்ளைகளான கருங்காணிகள் வசிக்கும் படுகைக்கு அவர்களும் போக இயலாது

"போனா என்ன?" என்பேன்.

"போவாம இருப்பானுவளா? அம்மெ மடிக்கு போகணும் எண்ணு நெனைக்காத பிள்ளை உண்டுமா?" என்று தலையாட்டுவான் சிங்கி. ஆனால் நீலிமலைச் சரிவிறங்கிப் படுகைக்குப் போய், அம்மையின் எல்லையை மீறி கால் வைத்த கணமே அம்மையின் கண்ணுக்குத் தெரியாத கை அப்படியே அள்ளி எடுத்து வீசிவிடும். சிங்கியின் பாட்டாவும் அவன் தகப்பனும் முன்பு விரதமிருந்து, மலையேறி, மலையம்மையின் மடிக்குப் போனார்களாம். எல்லையை முதலில் தாண்டிய தன் தகப்பன் அப்படியே அந்தரத்தில் எம்பிப் பறந்து, அருகே இருந்த பாறை மீது அறையபட்டு, சிதறியதை சிங்கியின் தந்தை கண்ணால் பார்த்தாராம். மலையம்மோ என்று கூவியபடி திரும்பி ஓடிவிட்டாராம். "அதாக்கும் மலையம்மைக்க சட்டம்" என்பான் சிங்கி. "அவளுக்கு ஈரம் உண்டு. இரக்கம் உ.ண்டு. சோறும் தண்ணியும் தந்து காப்பாற்றுத அம்மையாக்கும். ஆனா எல்லை தாண்டிப் போனா மட்டும் விடமாட்டா" வழி தவறிப் போனவர்களானாலும், அம்மை காணிக்காரர்களைச் சீராட்டி வளர்த்தாள். நாட்டுக்கும் மனமிரங்கி மழை பொழிய வைத்தாள். சிங்கி கண்ணீர் மல்க கை கூப்பி கும்பிடுவான். "நாட்டு நீலிக்க மறிமாயத்திலேந்து ஏழெகளை காத்து லெட்சிக்கணும் மலைமுத்தம்மோ" என்று கூவுவான்.

2

நான் அருமனை உயர்நிலைப் பள்ளியிலும், பின்பு மார்த்தாண்டம் கிறிஸ்தவக் கல்லூரியிலும் பயின்ற நாட்களில் நண்பர்கள்
மத்தியில் கதைசொல்லி என்று பிரபலமாக இருந்தேன். சிங்கி மறைந்து வருடங்கள் தாண்டிய பிறகும் அவன் உடுக்கையின் ஒலி எனக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. மலையம்மையின் படுகை மீது அவன் கொண்டிருந்த நம்பிக்கை எனக்குள்ளும் அதே வேகத்துடன் இருந்தது. அதைப் பற்றித் திரும்பத் திரும்ப சொல்வேன். வாய் திறந்து கண் பிதுங்க ஆவலாய் கேட்கும் பையன்கள் பிற்பாடு எனக்கு கப்ஸா மோகன் என்று பெயர் சூட்டினார்கள். நான் கவலைப்படவில்லை. உள்ளூர எப்படியோ என் நம்பிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் தகவல்கள் கிடைக்கப் போகின்றன என்று நம்பினேன். சிங்கியைப் போன்ற ஒரு மனிதனோ, அல்லது அவர் தந்தையோ பொய் சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.

ஒரு விஷயத்திற்காக நம் உள் மனம் விழிப்புடன் தேடியபடி இருக்குமெனில் தேடி வருவது போல அதுபற்றிய தகவல்கள் நம்மை அடைவதைக் காணலாம். முழுக்கோடு ஒய்.எம்.சி.எ. மிகப் பழைய ஸ்தாபனம். அங்கிருந்த புரதான நூரகத்தை பழைய புத்தகக் கிடங்கு என்று மேலும் பொருத்தமாகக் குறிப்பிடலாம். அந்தக் குவியலில் துழாவியபடி இருந்தபோது, தற்செயலாக ராபர்ட் செய்லர் கீரின்ஹவுஸ் அவர் எழுதிய தென்னிந்தியப் பயணக் குறிப்புகள் என்று புரதான புஸ்தகம் எனக்குக் கிடைத்தது. (M.Robert Sailor Green House; South Indian Travel notes; Published by Pilgrim Books, Piccadilli Circle, London 1817) கிட்டத்தட்ட கந்தல். பக்கங்கள் அப்பளம் போல உடைந்தன. எழுத்துக்கள் நினைத்திருக்க முடியாத இடங்களில் எல்லாம் வளைவு நெளிவுகள் கொண்டு, படிப்பது பரிதவிப்பாக இருந்தது. மற்ற பயணிகளைக் போலவே செய்லரும் தான் பயணம் செய்த சிறு நிலப்பகுதிதான் இந்தியா என்று நம்பியிருந்தார். கொச்சியில் கப்பலிறங்கி, தீபகர்ப்ப முனையில் கிட்டத்தட்ட 400 மைல் பயணம் செய்து, மீண்டும் கொச்சியை அடைந்து, அங்கிருந்து பர்மாவிற்கு கிளம்பியிருந்தார்.

கேரளக் கடற்கரையில் சில சிரியன் கத்தோலிக்க குடும்பங்களில் விருந்தினராகவும், நாகர்கோவிலில் ஒரு வெள்ளைப் பிளாண்டரின் விருந்தினராகவும் தங்கி; உள்ளூர்ப் பகுதிகளை விரிவாகவும் நுட்பமாகவும் ஆராய்ந்திருந்தார் செய்லர். ஆனால் செய்லரின் நூலை நாம் எதற்கும் ஆதாரம் காட்ட முடியாது. எதையும் நம்பத் தயாரான ஒரு கீழை தேச மனமும், கலந்த ஒரு வினோதமான மனசு அவருடையது. மேலும் அவருக்கு எதையும் சுவராஸியமாக சொல்லவும் தெரியாது. எதற்கும் முதலிலிருந்து அப்பகுதியின் நில அமைப்பு, பலவிதமான பூமி சாஸ்திர தகவல்கள் இவற்றைக் குறிப்பிட்டு விட்டே ஆரம்பிக்கிறார். அவர் லண்டனில் சர்வேயராக இருந்திருக்கக் கூடும். அசல் பகுதிக்கு வரும்போது உணர்ச்சியற்ற ஏழெட்டு வாக்கியங்கள்; அவ்வளவுதான். எரிச்சலூட்டும் புஸ்தகம் அது. அதைப் படித்த ஒரே இந்தியன் நான் தானோ என்ற சந்தேகம் அதன் கைபடாத பக்கங்களைப் புரட்டிப் பார்க்கப் பார்க்க எனக்குள் எழுந்தது. மலையம்மையின் படுகை பற்றி சிறு குறிப்பொன்று இந்த நூலில் இருந்தது. ஆனால் அங்கிங்காக சிதறிக் கிடந்தது. சுருக்கமான தொகுப்பே இப்படி மொழி பெயர்க்கலாம். (பக்கங்கள் 200 முதல் 210 வரை).

"திற்பரப்பு என்று அழைக்கப்படும் ஒரு பெரிய கோயில் ஒரு சிறு நீர்வீழ்ச்சியின் அருகே உள்ளது. அக்கிராமத்தில் உள்ள ஒன்பது உயர்சாதி வீடுகளிலும் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. தாழ்ந்த சாதியினரின் குடிசைகள் தாங்க முடியாத அளவு அசுத்தம். எனவே மரநிழலிலேயே தங்க நேர்ந்தது. இந்தக் கோயிலுக்கு கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் மிக அடர்த்தியான காடுகள் உள்ளன. உள்ளே போகப் போகப் காடு அடர்த்தி மிகுந்து, நிலமும், வானமும் தெரியாதபடி ஆகிறது. கோடைக் காலத்தில் மட்டும் இப்பகுதியில் உருவாகும் ஒற்றையடிப் பாதையில், சகலவிதமான முன்னேற்பாடுகளுடனும், நாலு நாள் பயணம் செய்தால் காணிகள் எனப்படும் ஆதிவாசிகள் (கேன்ஸ் -Kanes என்கிறார் செய்லர்) வசிக்கும் சிறு சிறு ஊர்களை அடையலாம். பரஸ்பரம் எவ்விதமான தொடர்புகளுக்கும் இடம் தாரமல் ஆனால் விரோதமின்றி, தனித் தனி ஊர்களாக இவர்கள் வசிக்கிறார்கள். மற்ற ஆதிவாசிகளைப் போல் இவர்கள் அதிகம் மாமிசம் உண்பதில்லை. "இப்படிப் போகிறது செய்லரின் குறிப்பு. காணிகளிடம் இருந்து மலையம்மையின் படுகை பற்றிக் கேட்டறிந்து, அங்கு செல்லப் புறப்படுகிறார் செய்லர். இருபது நாள் நடந்து படுகை முனையை அடைகிறார். பிறகு கண்ட காட்சிகளை செய்லர் கீழ்க்காணும்படி குறிப்பிடுகிறார். (பக்கங்கள் 216, 217, 218, 219) செய்லரின் விவரணையைச் சுருக்கியிருக்கிறேன்.

"இந்தப் படுகை மலை விளிம்பில் இருந்து நானூறு அடி ஆழத்தில் இருக்கிறது. இது நீளமான ஒரு பச்சை ரிப்பன் போன்றது. இங்கு கருங்காணிகள் (கிராங்கைன்ஸ் - Crankines - என்று செய்லர் கூறுகிறார்) எனும் ஆதிவாசிகள் வாழ்கிறார்கள். இந்தப் படுகையின் மிக விசேஷமான அமைப்பு, இங்கு வீசும் காற்றாகும். சராசரி புயல் ஒன்றின் வேகத்தில், இடைவெளியே இல்லாமல் சீராக, ஒரு திசை நோக்கி சென்றபடியே இருக்கிறது காற்று, கண்காணா நதி ஒன்று பீறிட்டோடுவது போல, நதி போலவே இதற்கும் விளிம்பு உண்டு. காற்றாலான நதி; அவ்வளவுதான்! நதியின் விளிம்பை நாம் தாண்டினால், ஓட்டம் நம்மைத் தூக்கி விசிறிவிடும். நதிக்குள் வளரும் நாணல்களைப் போல் சகல தாவரங்களும் ஒரு திசை நோக்கி வளைந்து காணப்படுகின்றன. சீப்பால் வாரப்பட்ட தலைமயிர் போல் தெரிகிறது இது. இங்குதான் கருங்காணிகள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இப்படிக் காற்று வீசுவதையே அறிவதில்லை.

அவர்கள் அதற்கு மாறானதும், இயல்பானதுமான காற்று நிலையை அறிந்ததே இல்லை. பற்பல தலைமுறைகள் வழியாக அவர்கள் காற்றை எதிர்த்து வாழும் உடலமைப்பை அடைந்திருக்கலாம். அவர்களுடைய உடலின் தசைகள் எலும்புகள் அனைத்துமே இதற்கேற்ப உருவாகியிருக்கலாம். வெளியுலகத் தொடர்பே அவர்களுக்கு இல்லை. இயல்பான மானுட ஜீவன் ஒன்று இந்த நதிக்கு உள்ளே இறங்குவது சாத்தியமே அல்ல. இவர்களை ஓடும் நதியில் ஒரே இடத்தில் நிலைத்து நின்று வாழும் மீன்களுடன் ஒப்பிடலாம். அசாதாரணமான பலசாலிகள் இவர்கள். சர்வ சகஜமாய் பெரிய பாறைகளைத் தூக்குகிறார்கள். ஒரு வேளை காற்றின் வேகம் எவ்வகையிலாவது இதற்கு இவர்களுக்குப் பயன்படுகிறதோ? தரையிலிருந்து குதித்து மரங்களின் உச்சிகளை அடைவது நிச்சயமாக காற்றோட்டத்தின் வலிமையினால்தான். தாங்கள் கவனிக்கப்படுவது அவர்களுக்குத் தெரியாது. அத்தனை அடர்த்தியான காற்றை ஊடுருவி அவர்களால் மேலே பார்க்க இயலாது."

செய்லர் தொடர்ந்து இந்த விசித்திரமான காற்றமைப்பு எப்படி ஏற்பட்டது என்பது பற்றி ஊகிக்கிறார். "மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரம்மாண்டமான சுவர் இதற்கு சற்று அப்பால் ஒரு கிண்ணம் போல வளைகிறது. அந்தச் சுவருக்கு அப்பாலிருக்கிறது அரபிக்கடல். இந்தச் சுவர்தான் கடலில் இருந்து பொங்கி வரும் பருவக் காற்றைத் தடுத்து, பலவிதமாக சிதறடித்து வருகிறது. இப்பகுதியில் பருவமழையின் பல்வேறு தனித்தன்மைகளை முழுக்க தீர்மானிப்பது இந்தச் சுவரேயாகும். கேரளக் கடலோரம் இந்தச் சுவரில் ஏற்படும் கிண்ணமானது காற்று அங்கு மோதி அதிக அழுத்தத்தில் குவிய ஏதுவாகிறது. அந்தக் கிண்ணத்தின் நடுவில் விழுந்த சிறு ஓட்டை என்று நீலிமலைக்கும் ஆதிமலைக்கும் இடையேயான சிறு இடைவெளியைக் குறிப்பிடலாம். (நைலே மலை - Mountain Naile, ஏடி முனை - Peak Adie என்கிறார் செய்லர்) அணையின் மதகு வழியாக தண்ணீர் பீறிடுவது போல கிண்ணத்தில் தேங்கும் காற்று இவ்வழியாக பீறிட்டு வருகிறது" என்று செய்லர் விளக்குகிறார்.

3

செய்லரின் புத்தகத்துடனும் என் கதைகளுடனும் நான் அணுகிய பேராசிரியர்கள் குழம்பினார்கள். ஒருவர் என்னிடம் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். நானா செய்லரா பெரிய பைத்தியம் என்று சந்தேகமாக இருக்கிறது என்று. இதன்பிறகு என் ஆராய்ச்சி பற்றி அதிகம் பேசுவதைத் தவிர்க்க ஆரம்பித்தேன். செய்லர் கூறிய காரணங்கள் உண்மை என்றால் அந்தக் கிண்ணப் பகுதியும் காற்றுநதியும் இன்றுமிருக்க வேண்டும். எனவே எனது கவனம் நில அமைப்பியலுக்குத் திரும்பியது. எனக்கு கிடைத்த தகவல்கள் வியப்பூட்டுமளவு சாதகமாகவும், பித்துப் பிடிக்குமளவு குழப்படியாகவும் இருந்தன. முதலில் மேற்கு மலைத் தொடரின் சுவர் சரியாக தடிக்காரன் கோணம் - நெடுமங்காடு பகுதியில் கிண்ணம் போல வளைவது தெரிய வந்தது. இது எனக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் வனத்துறை தகவல் ஒன்று இரு மலைகளுக்கும் இடையே இடைவெளி ஏதும் இல்லை என்று தெரிவித்தது. இதை வைத்துக் கொண்டு நான் ஆறு மாதம் குழம்பினேன். பிறகுதான் அந்த தகவல் 1920ம் வருடத்திய சர்வேயை அடிப்படையாகக் கொண்டது என்றும்; 1932-ஆம் வருடத்திய சர்வேயின்படி, எவ்வகையிலும் போக்குவரத்திற்கோ மற்ற வியாபார நோக்கங்களுக்கோ பயன்படாததான மிகச்சிறிய இடைவெளி ஒன்று அந்த மலைகளுக்கு இடையயே உண்டு என்றும் உறுதியாகத் தெரிய வந்தது. அதை என் வரைபடத்தில் துல்லியமாகக் குறித்தேன். பிறகு அங்கிருந்து திற்பரப்பு, களியல், ஆலஞ்சோலை முதலிய ஊர்களுக்கான தூரங்களைக் கணக்கிட்டபோது சிங்கி சொன்ன இடம்தான் அது என்று உறுதிப்பட்டது.

ஆனால் காற்று பற்றிய தகவல்தான் என்னைக் குப்புற வீழ்த்தியது. அரசாங்க குறிப்புகள் மற்றும் அறிக்கைகளைப் பெற நான் பட்ட கஷ்டங்கள் இவ்வளவு அவ்வளவு அல்ல. அவற்றைப் புரிந்து கொள்வதும் பெரிய சிக்கல். திருவனந்தபுரம் நாகர்கோவில் கலெக்டர் ஆபீஸ்களிலும், வானிலை மையங்களிலும் நண்பர்கள் உண்டு பண்ணி புகுந்து புறப்பட்டேன். பதிவு செய்யப்பட்ட தகவல்களின்படி எங்குமே அசாதாரணமான காற்று வேகம் ஏதும் இல்லை. அளவு மீறியமழையும் இல்லை. அதே சமயம் அவற்றைப் பூரணமாக நம்பவும் முடியவில்லை. அதாவது காற்று வேகம், திசை மற்றும் மழைக்கனம் பற்றிய தகவல்கள் பரஸ்பரம் பெரிதும் முரண்பட்டவையாக இருந்தன. 1820-ஆம் வருடத்திய அறிக்கையில் கடும் காற்று வீசிய பகுதியில் 1834-இல் காற்றுக்கு மிதமான வேகம்தான் இருந்தது. 1828-இல் கனமழை பெய்த பகுதியில் 1840-இல் மழையே இல்லை. ஒவ்வொரு அறிக்கையும் மற்றவற்றை மறுத்தது. இவை அனைத்துமே தண்டச் சம்பளம் பெறும் அதிகாரிகள் அரசாங்கத்தின் தலையில் மிளகாய் அரைக்க பண்ணிய விகடங்கள் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

ஆதிமலையின் மிக அருகே திருத்துவவிளை என்று கூறப்பட்ட கிராமம் ஒன்று இருந்தது. ஏழெட்டு பெரிய எஸ்டேட்டுகளும், அவற்றின் கூலிகளும், ஒரு பெரிய சர்ச்சும், மற்றும் அதைச் சார்ந்த சில நிறுவனங்களும் அங்கிருந்தன. வாரச்சந்தைக்கு ஆலஞ்சோலை வர வேண்டும். சினிமா பார்க்க அருமனைக்குத்தான் வர வேண்டும். அந்த கிறிஸ்துவ நிறுவனம் ஆதிவாசிகளுக்கு கணிசமான அளவு சேவை செய்திருப்பதாகக் கூறினார்கள். நண்பன் ஒருவனின் அண்ணாவான ஜோசப் தினகரன் அங்கு போதகராக இருப்பதாக அறிந்தேன். ஒருநாள் அங்கு சென்று அவரைச் சந்தித்தேன். சர்ச் செய்யும் சமூக சேவைகளைப் பற்றி விரிவாகச் சொன்னார். ஆதிவாசிகளுக்கான பிரம்மாண்டமான ஆஸ்பத்திரி ஒன்று அங்கிருந்தது. அது மேலும் விஸ்தரிக்கப்பட்டு, மருத்துவ ஆராய்சிசி மையமாக மாற்றப்பட விருப்பதாகவும் ஸ்வீடன் தேசத்து கிறிஸ்தவ சேவை நிறுவனமொன்று மூன்று கோடி ரூபாய் நிதியுதவி செய்ய இசைந்துள்ளதாகவும் கூறினார். எதற்கு அத்தனை பெரிய தொகை என்று விசாரித்தேன். அவர் சொன்ன தகவல்கள் மனசைப் பிசைபவையாக இருந்தன.

ஆதிவாசிகளுக்கு வெளியுலகு சாராத வாழ்வு அவர்களில் கடுமையான பாரம்பரிய நோய்களை உண்டு பண்ணியிருந்தது. பரம்பரை நோய்களில் பலவற்றுக்கு எவ்வித சிகிச்சை முறைகளும் இல்லை. ஆஸ்பத்திரியில் பலவிதமான உடற்குறைகளும், வக்கிரத் தோற்றங்களும் கொண்ட நோயாளிகளைப் பார்த்தேன். அனேகமாய் ஒவ்வொரு ஆதிவாசிக்கும் குணப்படுத்த முடியாத எதாவது ஒரு நோய் இருப்பதாக ஜோசப் தினகரன் கூறினார். உண்மையில் அங்கு ஆராய்ச்சிதான் முக்கியமாகச் செய்யப் படுகிறதாம். பராமரிப்பும் ஆறுதலும் தவிர வேறெதுவும் செய்யும் நிலையில் ஆஸ்பத்திரி இல்லையாம். அவர்களுக்கு கிறிஸ்துதான் விடிமோட்சம் என்றார். அப்பகுதி பற்றி அவரிடம் விரிவாக விசாரித்தேன். அசாதாரணமாக காற்று வீசும் இடங்களோ, அதீத பலசாலிகளான பழங்குடியினரோ இல்லை என்று திட்டவட்டமாக —திரிவித்தார்

ஏமாற்றத்துடனும், குழப்பத்துடனும் திரும்பினேன். திருத்துவ விளைவை ஸ்தாவித்த ரெவரென்ட் ஃபாதர் ஃபிரான்ஸில் கல்லன் அவர்களின் வரலாறு, மற்றும் அவர் எழுதிய கடிதங்களின் தொகுப்பாகிய சிலுவையுடன் கிழக்கு நோக்கி என்ற நூலையும் தினகரன் தந்திருந்தார். (Rev.Francis Kallan Eastward with Cross Lettters by a missionary:; Complied and Edited by Tom FranK ) நாகர் கோவில் எவாஞ்சலிகல் பப்ளிஷர்ஸ் மறு பிரசுரம் செய்த இந்தப் புஸ்தகம் மிக அபூர்வமான ஒரு மானுடசாசனம் என்று என்று எனக்குத் தோன்றியது. ரெவரென்ட் ஃபாதர் கல்லன் 1890-களில் முதன் முறையாக குமரி மாவட்டத்துக்கு வந்தார் குலசேகரம் மிஷன் ஆஸ்பத்திரியில் சில காலம் வேலை செய்தார். அங்கு வந்த சில அபூர்வ நோயாளிகள் அவருடைய கவனத்தை ஈர்த்தனர். பலருக்கு கடுமையான தொழுநோய் என்று சிகிச்சை தரப்பட்டது. ஆனால் அது தொழுநோய் அல்ல என்று கல்லன் துரை கண்டார். அது பரம்பரை உடலூனம் என்று கண்ட துரை அவர்களைப் பற்றி மேலும் விசாரித்தார். காணிக்காரர்களான அவர்களுடன் அவர் கொண்ட நெருக்கம், அவரை காட்டுக்கு இட்டு வந்தது. அடர்ந்த வனங்களில் கடும் உடற்கோளாறுகளினால் புழுக்கள் போல நெளிந்து செத்துக் கொண்டிருந்த பழங்குடிகளின் பயங்கர இம்சையை அவர் கண்டார். அங்கிருந்து சிறு செம்மண் குன்றின் மீது குடிசை ஒன்றை தன் கையாலேயே கட்டி, அதில் மரச்சிலுவை ஒன்றை நாட்டி, முதல் சர்ச்சை நிறுவினார். அதற்கு டிரினிடிக் குன்று என்று அவர் பெயரிட்டாலும், அதை ஜனங்கள் திருத்துவக்குன்று என்று ஆக்கிவிட்டார்கள்.

மனிதாபிமானத்தினாலும் தியாகத்தினாலும் சரித்திரத்தில் ஒளிரும் அபூர்வப் பெயர்களுள் ஒன்று கல்லன் துரையுடையது. அவருடைய ஈடிணையற்ற உழைப்பும், ஆதீவாசிகளை அழிவிலிருந்து மீட்டு, தொகுத்து, மருந்தளித்து, பாரமரித்து இம்சையிலிருந்தும் மரணத்திலிருந்தும் காப்பாற்ற அவர் பட்ட கஷ்டமும் எளிய மனிதர்களாகிய நம்மால் நினைத்துக்கூட பார்க்க இயலாதவை. துரையின் கடிதங்களில் உருக்கமான சொற்களில் அவருடைய அசையாத பக்தியும், எழுதப்படுபவரை தன் லட்சியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் உத்வேகமும் தெரிந்தது. ஆதிவாசிகளின் துயரங்களை எளிய சொற்களில் அவர் எழுதியது மனசை உலுக்குவதாக இருந்தது. துரையின் கடிதங்களுள் ஒன்றில் என் தேடலுக்கு ஒரு புதுப் பரிணாமம் தரும் தகவல்கள் இருந்தன.

மேரி ஃப்ளாரென்ட் கிரவுட்ஸ் (Mary Florrend Grey Woods) எனும் லண்டன் சீமாட்டிக்கு ரெவரென்ட் கல்லன் எழுதியிருந்த கடிதத்திலிருந்து சில பகுதிகள் : (பக்கம் 127 - 129) ".... கர்த்தருக்குப் பிரியமான சீமாட்டியே, அந்தக் காட்சியின் அளவு தீவிரமான ஒன்றை எப்படி நான் வார்த்தைகளால் கூறமுடியும்? அந்தப் படுகை இரு மலைகளுக்கு இடையே இருந்தது. அங்கு சென்றடைவது சுலபமல்ல. அங்கு மரங்களே இல்லை. பெரியதோர் சதுப்புக் குழி அது. சதுப்புத் தாவரங்கள் அடர்ந்து மண்டியது. அங்கு செல்ல நான் முயன்றபோது என் பிள்ளைகள் தடுத்தார்கள். சாத்தான் ஆளும் இடம் அது என்றார்கள். என் அன்பான சீமாட்டியே, நான் என்ன சொல்வேன்? என் கையிலிருக்கும் சிலுவையுடன் நான் நரகத்திற்கும் போகத் தயார் என்று சொன்னேன். அந்தப் படுகையில் இறங்கிய பிறகுதான், அந்தச் சதுப்பில் ஏராளமான பெரிய மரங்களின் அடித் தண்டுகள் மட்கிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அந்தச் சதுப்பு பெரிய காடக இருந்திருக்க வேண்டும். எப்படியோ அது அழிந்து விட்டது. ஆனால் அங்கு வாழ்ந்த பழங்குடிகள் வேறு எங்கும் போகாமல் அங்கேயே தங்கிவிட்டார்கள். சாத்தானின் மாயை மிகவும் வல்லமை வாய்ந்தது என் இனிய சீமாட்டியே. கர்த்தரில் மீட்பு பெற்ற நம்மையே அது ஆட்டிப் படைக்கிறது எனும்போது அஞ்ஞானிகளைப் பற்றி என்ன சொல்ல? அப்பழங்குடியினருக்கு கருங்காணிகள் (கிராங்கைன்கள் - Crankines - என்றே இவரும் குறிப்பிடுகிறார். உச்சரிப்பு விஷயத்தில் வெள்ளை நாவுகளுக்கு இருக்கும் ஒற்றுமை வியப்பிற்க்குரியது) என்று பெயர்.

உருவமோ அதி பயங்கரம். அவர்களால் நிமிர இயலாது. மிருகங்கள் போல கைகளையும் தரையில் ஊன்றியபடி தவழ்கிறார்கள். அவர்களுடைய முதுகெலும்பு அப்படி வளைந்து இறுகிப் போயிருக்கிறது. அவர்கள் ஆடுகள் போல இலைகள் தளிர்களை உண்டு வாழ்கிறார்கள். பிசாசு பாஷையில் உரையாடுகிறார்கள். உடையணிவதில்லை என்று சொல்லத் தேவையில்லை அல்லவா? பிறக்கும் குழந்தைகளின் முதுகே அப்படித்தான் உள்ளது. அது சாத்தானின் விளையாட்டன்றி வேறென்ன? அவர்கள் என்னைத் தாக்க வரவில்லை. ஆனால் என்னைக் கண்டு மிகவும் பயந்து விட்டார்கள். விளையாட்டுப் பொருட்கள் தந்தும், ஜெபம் செய்தும் அவர்களுடன் நான் சிநேகமானேன். சீமாட்டியே, கிறிஸ்துவின் நாமம் மனித மனங்களில் உண்டு பண்ணும் பிரசாசம் அற்புதகரமானதல்லவா? அவர்களுக்குப் பிரியமானவனாக நான் ஆனேன். அவர்கள் பாஷையைக் கற்று அவர்களிடம் பேசினேன். அவர்கள் பக்கத்திலிருந்த மலையின் உருண்டையான முகடை கடவுள் என்கிறார்கள். அவர்களை அது சபித்து விட்டதாம். அதற்கு முன் அவர்கள் மகா பலவான்களாகவும், நிமிர்ந்த உடம்பு உடையவர்களாகவும் இருந்தனராம். அவர்கள் நம்பிக்கைகளை மாற்றுவது எளிதல்ல.........."(16.7.1923 தேதியிடப்பட்ட கடிதம்)

என்னுடைய தேடல் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை நெருங்கியது. படுகையின் காற்று நதியில் கடும் வேகத்தை எதிர்த்து தலைமுறைகளாக வாழ்ந்து வந்த கருங்காணிகள், அது திடீரென்று நின்றுவிட்டமையினால் பரிணாமச் சமநிலை குலைந்து, எலும்பு அமைப்புகள் சீர்குலைந்து, குறைவடிவங்களாகி விட்டிருக்கிறார்கள். அந்தக் காற்று நதி எப்படி நின்றது?

தட்பவெப்ப நிலை விஞ்ஞானியான பிரபாகர மேனனை திருவனந்தபுரத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தபோது பழைய காற்று வேகப் பதிவுகளில் தெரியும் பெரிய முரண்களைப் பற்றி விசரித்தேன். அவை தவறான தகவல்கள் அல்ல என்றும், நேர்மையான பிரிட்டிஷ் அதிகாரிகளினால் முடிந்தவரை கச்சிதமாகப் பதிவு செய்யப்பட்டவையே என்றும் கூறினார். அந்தப் பெரும் திருப்பங்கள் உண்மையிலேயே ஏற்பட்டவைதாம். அதற்குக் காரணம் கேரளக் கடற்கரையிலும், தமிழ்நாட்டிலும் காடுகள் விரிவான அளவில் நாசம் பண்ணப்பட்டமைதான் என்றார். குறிப்பாக திருவனந்தபுரம் நகரின் வளர்ச்சிதான் காரணம் என்றார். முதலில் அரச குடும்பமும் நாயர் குடும்பமும் வசித்த சிறு ஊராகவே அது இருந்து வந்தது. திடீரென்று அது நகரமாக ஆயிற்று. மார்த்தாண்டவர்மா மகாராஜா அனந்த பத்மநாபசாமியின் கோயிலை பெரிதாகக் கட்டியதும்தான் இது தொடங்கியது.

பலவிதமான வியாபார சமூகங்கள் குடியேற்றப்பட்டன. தொழில்கள் பெருகின. வியாபாரமையமாக அது விரைவிலேயே ஆயிற்று. அபபேர்ப்பட்ட ஒரு நகரை நிர்மாணிக்கவும் அதை தொடர்ந்து வளர்க்கவும் அதைச் சுற்றி விசாலமான ஒரு கிராமங்களின் வளையம் தேவையாக ஆகிறது. எனவே புதுப்புது கிராமங்கள் சகட்டு மேனிக்கு முளைத்தன. நூறு வருஷத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள், பல கிராமங்கள் காட்டில் சிறு கோயில் ஒன்றை நிர்மாணித்து, பிராமண சமூகத்தையும் அடியார்களையும் குடியேற்றுவதன் மூலம் மகாராஜாவாலேயே உருவாக்கப்பட்டவை. பற்பல கிராமங்கள் தன்னிச்சையாக உருவானவை. விவசாயத்திற்கும் மேய்ச்சலுக்குமாகக் காடுகள் அழிக்கப்பட்டன. விளைவாக மேற்குத் தொடர்ச்சி மலையின் அமைப்பு தொடர்ந்து மாறியது. காற்றின் திசைகளும் வேகமும் பலவிதமாக மாறின. "அனந்த பத்மநாபன் படுத்திருந்தபடியே காலைச் சற்று நீட்டி வைத்தார். அவ்வளவுதான்" என்று சிரித்தார் மேனோன்.

4

கல்லன் துரை குறிப்பிட்டது போன்ற ஆதிவாசிகள் யாராவது காட்டில் இருக்கிறார்களா என்று கேட்டு தினகரனுக்கு எழுதினேன். அவருடைய பதிலில் அந்த ஆதிவாசி வம்சம் இப்போதும் இருப்பதாகவும், 16 குடும்பஙகளாக கிட்டத்தட்ட 81 பேர் இருக்கிறார்கள் என்றும் சொல்லியிருந்தார். அனைவருமே மிக விசித்திரமான உடலமைப்பு உடையவர்களாம். அடுத்தவாரம் ஆதிவாசி மேம்பாட்டுத் துறையின் பெரியதொரு கண்காட்சியும், கலாச்சார விழாவும் ஆலஞ்சோலையில் நடக்கவிருப்பதாகவும், அதற்கு கலெக்டர் வருவதாகவும் அப்போது சென்றால் அவர்களைப் பார்க்கலாம் என்றும் எழுதியிருந்தார்.

ஆலஞ்சோலை சந்தை மைதானத்தில்தான் விழா நடந்தது. காகிதத் தோரணங்கள், தென்னை ஓலையினாலான ஸ்டால்கள், சிறு வியாபாரிகள், பிச்சைக் காரர்கள் என்று வழக்கமான கிராமியப் பொருட்காட்சி சாலையின் களை இருந்தது. ஆனால் நகர்ப்புறத்திலிருந்து கணிசமான அளவு பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். காமிராவைத் தொங்கவிட்டபடி சில வெள்ளையர்களும் தென்பட்டனர். மதிய வெயில். ஆனால் வெப்பம் உறைக்காத மலைக் குளிர் காற்று. மைதானத்தின் மையத்தில் தற்காலிகக் கொடிக்கம்பத்தில் கலெக்டர் காலையில் ஏற்றிய தேசியக் கொடி சோம்பியபடி படபடத்தது. சாயங்காலம் ஆதிவாசிகளின் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகியிருப்பதாக நோட்டீஸில் இருந்தது. ஸ்டால்களில் ஆதிவாசிகளின் கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. களங்கமற்ற ஆதிக்கற்பனைகளும், தீவிரமும், தேர்ச்சியற்ற கைலிரல்களும் இணையும்போது பிறக்கும் வினோதமான வடிவங்கள். லோ ஹிப் பெண்களும், பான்ட் மடிப்பு கலையாத ஆண்களும் பரிசோதித்து விலை பேசிக் கொண்டிருந்தனர். ஒரு வெள்ளைமாது பிரம்மாண்டமான குறியுடன் கூடிய பெரிய மரச்சிற்பமொன்றை சுமந்து செல்வதைப் பார்த்தேன். அதி நவீன வரவேற்பறையை அது சட்டென்று மாற்றியமைத்து விடும். பழமையின் ஒரு துளி போதும், புதுமையின் மாற்று பல மடங்கு அதிகரிக்கும் என்பார்கள் அறையலங்கார நிபுணர்கள்.

தினகரன் ஒரு நண்பருடன் வந்து கைகுலுக்கினார். "இவர் குமாரசாமி. கருங்காணிகளைப் பற்றி நிறைய தெரிந்தவர்" என்றார்.

குமாரசாமி வியர்வையில் குளிர்ந்த, மெலிந்த கரத்தால் என் கைகளை பலவீனமாகப் பற்றி குலுக்கினான். மெலிந்த முகத்தில் தாடி, மூக்குக்கண்ணாடி, ஜிப்பா ஹாங்கரில் மாட்டப்பட்டிருப்பது போலிருந்தது உடம்பு.

"நீங்கள் ஆண்ட்ரபாலஜியில் ரிசர்ச் செய்கிறீர்களா?" என்றேன்.

"எப்படித் தெரியும்" என்றான்.

"யூனிவர்சிடி மணம் வீசுகிறது" என்றேன். தினகரன் உரக்கச் சிரித்தார்.

கருங்காணிகள்தான் பொருட்காட்சியின் முக்கியமான கவர்ச்சி என்று பட்டது. பெரிய பலகையில் "கிரங்கைன்ஸ்" என்றது கொட்டை எழுத்து. உலகின் மிக அபூர்வமான மானுட இனம். அதைப் பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்ளே நுழைய முடியாதபடி ஏகக்கூட்டம். முகங்களில் பரபரப்பும், அதிர்ச்சியும் கலந்த வினோதமான உத்வேகம். நிச்சயமாக அது ஒருவகை சந்தோஷமே.

ஜோசஃப் உள்ளே இட்டுச்சென்றார். அந்த உருவங்கள் என்னை ஒரு கணம் நடுங்க வைத்தன.

மனித ஆமைகள். முதுகு செதில்களடர்ந்து குவிந்து எழுந்து நின்றது. நாலு திசைகளிலாக வளைந்து நின்றிருந்த ஒரே அளவிலான கை கால்கள். ஆமையைப் போல தலையைத் தூக்கிய ஒருவன் தினகரிடம் "ஸ்தோத்திரம் பாஸ்டர்" என்றான்.

"ஸ்தோத்திரம் இமானுவேல்" என்றார். சிலுவை போட்ட தினகரன் என்னிடம் "இமானுவேல் மரத்தில் நன்றாக சிற்பங்கள் செய்வார்" என்றார். "எங்கே சாருக்கு ஒண்ணு காட்டு பார்ப்போம்."

அப்போதுதான் செதுக்கி முடித்த, மாமரத்தின் அரக்கு வீச்சம் எழுந்த, சிற்பம் ஒன்றை இமானுவேல் என்னிடம் தந்தான். அவன் முகத்தில் வெட்கமும் எதிர்பார்ப்பும் கலந்த புன்னகை.

பெரிய பாறையொன்றை தலைமீது தூக்கி நிற்கும் ஒரு மனித வடிவம். அதன் கைகளும் கால்களும் மட்டும் சற்றும் பொருத்தமின்றி மிகவும் பெரியவையாக இருந்தன.

"ரொம்ப பிரமாதமா இருக்கு இமானுவேல்" என்றேன். "எவ்வளவு ரூபா இதுக்கு?"

இம்மானுவேல் முகம் மலர்ந்தான். "ரூபா வேண்டாம்."

நான் இருபது ரூபாயை அவன் கையில் திணித்தேன். அவன் தயங்கி தினகரனைப் பார்த்தான். "வாங்கு" என்றார். அவன் வாங்கிவிட்டு மற்றவர்களை சந்தோஷமாகப் பார்த்தான். அதுவரை மவுனமாக குறுகுறுப்புடன் பார்த்திருந்த அனைவரும் சிரித்தனர். அந்தச் சிரிப்பு ஒருசில நொடிகளில் அவர்களையும் மானுடப் பிறவிகளாக ஆக்கிவிட்ட விந்தையை வியந்தேன் உள்ளூர.

திரும்பும்போது குமாரசாமி என் கையிலிருந்த சிற்பத்தை வாங்கிப் பார்த்தான். ஆங்கிலத்தில் "விந்தைதான் இல்லை?" என்றான். "கருங்காணிகள் தங்கள் மூதாதையர்கள் மகா பலசாலிகளாக இருந்ததாக நம்புகிறார்கள். இம்மானுவேல் தன் மூதாதையரைத்தான் சிற்பமாக வடித்திருக்கிறான்."

நான் தலையசைத்தேன்.

"உலகெங்கும் ஆதிவாசிகள் தங்கள் மூதாதையர்களைப் பற்றி இப்படித்தான் சொல்கிறார்கள். அவர்கள் தங்களைவிட மேலான கலாச்சாரம் மிகுந்த வாழ்வு வாழ்ந்தார்கள் என்றும், அமானுடமான வலிமைகள் உள்ளவர்களாக இருந்தார்கள் என்றும் நம்புகிறார்கள். உண்மையில் அது அவர்கள் ஆக விரும்புகிற, ஆக முடியாத, ஒரு நிலைதான். இந்த லட்சிய வடிவை அவர்கள் ஏன் எதிர்காலத்தில் காணாமல், இறந்த காலத்தில் காண்கிறார்கள் என்பது பெரிய புதிர்தான். குளோட் லெவிஸ்ட்ராஸ் இதுபற்றி சொல்லியிருக்கிறார்...."

"ஆனால் அவர்கள் ஒரு காலத்தில் ஆரோக்கியமாக இருந்திருக்கத்தானே வேண்டும்."

"இருக்கலாம். இவர்கள் வாழ்ந்த படுகையின் அன்றைய காலநிலை அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். மனிதன் இன்றுள்ள நிமிர்ந்த முதுகுள்ள வடிவத்தை அடைவதற்கு முன்பு, பரிணாமத்தின் முந்தைய கட்டத்தில், இப்படி இருந்திருக்கலாம். மாற்றமற்ற காலநிலை, வெளியுலகத் தொடர்பற்ற நிலை முதலியவை காரணமாக இவர்கள் மட்டும் மாறாமல் அப்படியே நின்று விட்டிருக்கலாம். உங்களுக்குத் தெரியுமே இயற்கையின் சவால்களைத் தொடர்ந்து சந்தித்தபடியே இருப்பதன் மூலமே பரிணமான வளர்ச்சி சாத்தியமாகிறது. இவர்கள் வாழ்ந்த படுகையில் அத்தகைய சவால்களே இல்லாமலிருக்கலாம். அந்தப் படுகை பெரிய காடாக இருந்திருக்கிறது. முன்பு அங்கு பூமியின் ஆதிகாலத்தில் வீசிய அளவு அதிக வேகம் கொண்ட காற்று அடித்திருக்கிறது. அதாவது சமீப காலம்வரை அங்கு லட்சம் வருடங்களுக்கு முன்பு நிலவிய பருவநிலை நிலவியிருக்கிறது. இவர்கள் இப்படியே பரிணாமமின்றி தங்கிவிட்டதற்கு அது தான் காரணமாக இருக்கலாம். இதை நான் விரிவாக ஆராய்ச்சி செய்து வருகிறேன்." குமாரசாமி சிகரெட் பற்ற வைத்தான். "ஆராய்ச்சியின் மிக முக்கியமான தடயங்கள் இவர்கள். மனித உடலின் முந்தைய பரிணாம கட்டத்தின் உயிருள்ள உதாரணங்கள். எனவே முடிந்தவரை இவர்கள் வாழ்வை நீடிக்கச் செய்ய அரசாங்கம் முயல்கிறது. கலெக்டர் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார். ஏன் சிரிக்கிறீர்கள்?"

"இல்லை; ரொம்ப சுவாரஸியமாக இருக்கிறது" என்றேன். என்னுடைய தேடல் எனக்கு கற்பித்தது ஒன்றுதான். உண்மை என்பது காலத்தின் தேவைக்கு ஏற்ப தகவல்கள் போடும் வேரெம் மட்டுமே. நான் என்ன சொல்ல முடியும்? இன்று என் கையிலிருப்பவை எல்லாமே பொய்கள்.

நன்றி: மண்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link