சிறுகதைகள்


சங்கிலி

கூடல்.காம்
காலை ஒன்பது மணிக்குள் அந்தச் செய்தி கிராமம் முழுவதும் காட்டுத் தீ போல் பரவி விட்டது.

சரவணனுக்கு வேலை போய்விட்டது. அவன் வேலை பார்த்து வந்த ஓமன் வங்கியில் வேலை நீட்டிப்புச் செய்ய மறுத்து விட்டார்கள். கடந்த ஒரு மாதமாக, வீகேயார் எனப்படும் வி.கே. ராவ் தயவில் கிடைத்த ஒரு வேலையில் ஒட்டிக் கொண்டிருக்கிறான், மஸ்கட்டில்.

இனிமேல், மாதந்தோறும் நூறு ரியால், அப்பாவுக்கு அனுப்ப முடியாது. வங்கியில் பணம் ஏற ஏற, நெஞ்சில் இறுமாப்பும் ஏறிக் கொண்டிருந்த வையாபுரிக்கு ஓர் இடி என்பதோடு தாங்கமுடியாத அவமானம் வேறு.

தண்டாங்கோரை, கொக்காலடி, தோப்புத் துறையிலிருந்து, பெண் கேட்க வரும்படி சொல்லியனுப்பிய பணக்காரக் குடும்பங்களுடன் இனி சம்பந்தம் பேச முடியாது.

முந்தைய நாள் மயிலாடு துறை ஜங்ஷனில் "சோழ"னிலிருந்து இறங்கிய விநாடி முதலே சரவணன் முகத்தில் சோகம் கப்பியிருந்ததைக் கண்டுகொண்டான் கண்ணுசாமி. டாக்ஸியில் ஏறி உட்கார்ந்து, அரைமணி நேரமாகியும் உற்சாகமாகப் பேசவில்லை.

ஆதிச்சபுரம் இன்னும் பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தபோது, காரை நிறுத்தச் சொல்லி, சாலையோரத்திலிருந்த ஓர் அய்யனார் கோயில் மேடைக்கு அழைத்துப் போனான் சரவணன்.

"கண்ணு... ஒரு அதிர்ச்சி செய்தி சொல்லப் போறேன்... நீ தாங்கிக்கணும்..."

கண்ணுசாமி எதிர்பார்த்ததுதான்.

"நான் வேலை பார்த்த ஓமன் வங்கியில், கான்ட்ராக்டை நீட்டிக்கவில்லை. அந்த நாட்டு மக்களுக்கே - ஓமானியர்களுக்கே - முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில், என் இடத்தில் ஓர் ஓமானியனைப் போட்டு விட்டார்கள்..."

"அப்போ ஒருவழியா மூட்டை கட்டிக்கிட்டு வந்துடறதுதானே?"

"அதுக்குத்தாண்டா, மனசு இடங்கொடுக்கலே.. வேற நல்ல வேலை கிடைக்குமோன்னு நப்பாசை..."

நப்பாசைக்கு உரம் போட்டவர், தஞ்சாவூர் மராத்தா அய்யர் வி.கே.ராவ்! கால் நூற்றாண்டுக்கு முன் வளைகுடா நாட்டுக்குச் சென்ற அவர், பஹ்ரைன், துபாய் என்றெல்லாம் சுற்றிவிட்டு, ஓமன் நாட்டுத் தலைநகரமான மஸ்கட்டில் செட்டில் ஆகிவிட்டவர். நாலைந்து கம்பெனிகளுக்கு கன்ஸல்டன்ட். மன்னர் அரண்மனை வரை அவர் செல்வாக்கு பரவியிருந்தது என்று சொல்லிக் கொண்டார்கள்.

பாங்க் வேலையிலிருந்து விடுபட்டு, தற்போது அவன் இருநூறு ரியால் சம்பளத்தில், ஒரு கார் விற்பனை நிறுவனத்தில் வேலை பார்ப்பது கூட, அவர் சிபாரிசில்தானாம்.

"கண்ணு... இந்தச் சம்பளத்திலே அங்கே குடித்தனம் செய்ய முடியாது. அதனாலே, இப்போ கல்யாணம் வேண்டாம்னு எங்க அய்யாகிட்ட நாளைக்கே சொல்லிடு..."

கண்ணுசாமிக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. "உன்னை அறையணும் போலிருக்குடா... உங்க மாமன், கண்ணம்மாளை
எத்தனை நாளைக்குப் பொத்திப் பொத்தி வெச்சுக்கிட்டிருப்பாரு..."

சரவணன் அவலமாகச் சிரித்தான்.

"இப்போ என்னைக் கட்டிக்கிற பொண்ணு மஸ்கட்டிலே, ஒரு பார்ட்-டைம் வேலை பார்த்தாதான், இரண்டு வேளை சாப்பாட்டைக் கண்ணாலே பார்க்கலாம்! நம்ம ஜனங்கள், அதுக்கு ஒத்துக்குவாங்களா...?"

"சரி, கண்ணம்மாவுக்கு என்ன வழி?"

"பெரியவங்களா பார்த்துத் தீர்த்துக்க வேண்டியதுதான்..!"

"கண்ணம்மா மேல உனக்கு ஆசை இல்லையா...? பாவம், அது..."

"ஆசை இருக்கு; பசை இல்லையே...?"

அந்தக் கிராமத்தில், வங்கித் தேர்வு எழுதி, வெற்றி பெற்று, தேசிய உடமையாக்கப்பட்ட வங்கியில் பணியில் சேர்ந்த முதல் நபர் சரவணன்தான். இரண்டு ஆண்டுகளுக்குப் பின், யாரோ ஒரு நண்பனின் தூண்டுதலில், மஸ்கட்டுக்குப் போனான். இரண்டாண்டு கால ஒப்பந்தம் பின்னர், வேலை நீட்டிப்பு.

நான்கு ஆண்டுகளில், அவன் அனுப்பிய பணத்தில் பணக்காரராகி விட்டார், வையாபுரி. வீட்டைச் சீரமைத்தார். தென்னை மரத்தோப்பு விலைக்கு வாங்கினார். மாரியம்மன் திருவிழாவுக்கு, வீட்டுக்கு நூறு ரூபாய் வரி என்று வசூலித்த போது, இவர் ஆயிரம் ரூபாய் கொடுத்தார். எல்லாம் சரவணன் காசு!

"அப்போ... அடுத்த தடவை அவன் வந்துட்டுப் போறபோது, கண்ணம்மாவோடதான் போவான்னு சொல்லுங்க..."

வையாபுரியின் முகம் மாறியது.

"கல்யாணம்கிறது நம்ம கையிலே இல்லீங்க... அவன் தன்னோட கௌரவத்துக்குத் தகுந்த பொண்ணாப் பார்க்கணும்னு சொல்றான்..." துணிச்சலுடன் ஒரு பொய்யைக் கூறினார் வையாபுரி.

சரவணன் வந்திருப்பதை மோப்பம் பிடித்த தண்டாங்கோரை, கொக்காலடி, தோப்புத் துறைப் பெண் வீட்டார்களின் இடைத்தரகர்கள், கிராமத்து எல்லையிலேயே அவனுக்கு வங்கி வேலை போய் விட்ட செய்தியைக் கேள்விப்பட்டு, அப்படியே திரும்பிப் போய்விட்டார்கள்.

வையாபுரிக்கு வாழ்க்கையே நசுங்கிப் போய்விட்டாற்போலிருந்தது. சரவணன் "இப்போது திருமணம் வேண்டாம்" என்று சொல்வதை ஒப்புக்கொண்டால், பக்கத்துத் தெருவிலிருக்கிற முறைப்பெண் கண்ணம்மாளின் கதி என்ன? சரி, அவர்கள் வீட்டுக்குச் சென்று பெண் கேட்கலாம் என்றால், எந்த முகத்தோடு போவது? "வங்கி வேலையில் இருந்தபோது கொக்காலடியை தேடிக் கொண்டு போனார்கள் வேலை போய் விட்டது என்றதும், என் மகள்தான் கிடைத்தாளா?" என்று கேட்க மாட்டாரா, தங்கமுத்து?

ஆமாம். அப்படியே கேட்டுவிட்டார், கண்ணுசாமி நோட்டம் விடப் பார்க்கப் போனபோது.

"சரவணன் லீவு முடிஞ்சு ஊருக்குப் போறதுக்குள்ளே என் மகளுக்குக் கல்யாணம் பண்ணிக் காட்டறேன்டா..."

அதை அப்படியே வையாபுரியிடம் ஒப்புவித்தான் கண்ணுசாமி.

"அத்தனை திமிரா, அவனுக்கு? சொல்லி வை. அவன் மக கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி, என் மகன் கல்யாணம் நடக்கும்...!"

சம்பவங்கள் திசைமாறிப் போவதைக் கண்டு மனம் பதறிப் போனான், கண்ணுசாமி. சரவணன் ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அவனுக்கு எரிச்சல்கூட வந்தது. ஒரு மாத லீவில், ஒரு வாரம் ஓடிப்போய் விட்டது.

பெரியாத்தா, படியேறி வந்தாள்.

"அட! பெரியாத்தாவா! வாங்க... வாங்க... இந்தா, புள்ளே... யார் வந்திருக்காங்க, பாரு..."

தங்கமுத்துவின் மனைவி வெளியே வந்து வரவேற்றாள்.

"உன் மகளைக் கேட்டுத்தான் வையாபுரிக்கு பதில் சொன்னியா...?" - குறி தவறாத அம்பு போல், கேள்வி.

"என் மக நான் சொல்றதைக் கேட்கும்..."

"அதை நானே கேட்டுக்கிறேனே... அட, என் தங்கம்மா பெத்த மகளே... வெளியே வாடி, கண்ணாட்டி..."

கண்ணம்மா வந்தாள்.

"நீ என்ன சொல்றே, செல்லக் கண்ணு..."

"பெரியாத்தா... வௌரம் தெரிஞ்ச நாளிலேர்ந்து அவங்களையே என் மனசிலே சுமந்துக்கிட்டிருக்கேன். இப்ப போயி, அவங்களைத் தூக்கிப் போட்டுட்டு இன்னொரு ஆளை வச்சுக்கன்னா, எப்படி...? நீங்க பெத்த மகளா இருந்தா, சொல்வீங்களா?"

"அடி, என் சிங்கக்குட்டி! என்னமாடி பேசறே...? சரவணனைக் கட்டிக்கிட்டுப் போனா, அங்கே, பக்கத்து வீட்டிலே பாத்திரம் கழுவணும்..."

"கழுவறேன்..."

"சமையல் பண்ணி வைக்கணும்..."

"வைக்கிறேன்..."

"சரி... அவன்தான் இல்லேன்னு ஆயிடுச்சே? இனிமே என்ன பண்ணப் போறே?"

விருட்டென்று எழுந்தாள் கண்ணம்மாள்.

"செல்லக்குட்டி... பதில் சொல்லிட்டுப் போடி"

பாண்டியன் சபையில், கையில் ஒற்றைச் சிலம்புடன் நீதி கேட்டு வாதாடி நின்ற கண்ணகியின் சீற்றப் பார்வை.

ஒற்றைக் கையால், கொல்லைப்புறத்தைக் காட்டினாள், கண்ணம்மாள். "...கெணறு..." - மெல்லிய குரலில் அழுத்தமாகச் சொல்லிவிட்டு, உள்ளே ஓடினாள்.

வேறு வழியில்லை.

சுயகௌரவம் என்று சொல்லிக் கொண்டு, பெற்ற மகளை இழந்து விடக் கூடாது.

எளிமையாக, உள்ளூர் சிவன் கோயிலில் திருமணம். அப்புறம், தத்கால் பாஸ் போர்ட், வயது, படிப்புச் சான்றிதழ், நோட்டரி பப்ளிக் கையெழுத்து என்று ஒரே அலைச்சல். மஸ்கட் பிரபலஸ்தர் வேணு தயவில், விசா கிடைத்தது.

சரவணன் - கண்ணம்மா தம்பதியை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில், "டாடா" காட்டி விட்டு வந்தான், கண்ணுசாமி.

மஸ்கட் விமான நிலையத்தில் வழுக்குப் படிகளில் இறங்கி, சுழல் வட்டத்தில் பெட்டிகளைத் தேடிக் கைப்பற்றி, டிராலியில் வைத்துத் தள்ளிக் கொண்டு வரும்போது, "நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கா கண்ணம்மா?" என்று கேட்டான்.

"இருக்குங்க..."

விமானத்தில் பறக்கும்போதே வேணு தம்பதியைப் பற்றி விஸ்தாரமாகக் கூறிவிட்டிருந்தான். வேணு, மஸ்கட் தமிழ்ச் சங்கத் தலைவர் அவரே ஒரு நாடக ஆசிரியர், வசனகர்த்தா, இயக்குனர்!.. செல்வாக்கு மிக்கவர். எளிமையின் எடுத்துக்காட்டு. அவர் மனைவி நாகலட்சுமிக்கு நாக்கிலும், நெஞ்சிலும் அமிர்தம்.

வெளியே வந்ததும், "வாங்கோ, வாங்கோ" என்று உற்சாகமாக வரவேற்றார்கள்.

அரைமணி ஓட்டத்துக்குப் பிறகு, ரூவி பகுதியில், புர்ஸான் சாலையில், இஸ்லாமியப் பள்ளியின் அருகில், ஒரு காம்பவுண்டுக்குள் கார் நுழைந்து நின்றது.

முதல் தளத்தில், ஜாகை. நாகலட்சுமி முன்னதாகச் சென்று, ஆரத்தித் தட்டுடன் வந்து, தம்பதிகளுக்குச் சுற்றி, "வலது காலை எடுத்து வை" என்று சொல்லி, சிறிது நேரத்தில் வீட்டுக்குப் போனார்கள்.

கண் விழித்ததும், சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள் கண்ணம்மாள். ஏழு முப்பத்தைந்து. சற்று நிதானித்துக் கொண்டு, பக்கத்தில் பார்த்தாள். வெட்கத்துடன் அவன் மேல் ஒரு போர்வையைப் போர்த்தி விட்டு, பல் தேய்க்கச் சென்றாள்.

பால்கனியில் நின்று, எதிரே சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சரவணன் வந்தான்.

"ஊர் எப்படி இருக்கு?"

"சாரி சாரியா கார் போய்க்கிட்டே இருக்குங்க..."

"வீடு?"

"ரொம்ப நல்லாயிருக்கு..."

"இங்கேயே இருந்துடுவோமா?"

"எப்படிங்க...? அட்வான்ஸ் கொடுத்தது இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு. அப்புறம், ஒரு ரூம் பார்த்துக்கிட்டு போகணும்னீங்க.."

சரவணன் ஆழமாகப் பார்த்தான், அவளை.

"ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாமாம். வீகேயார் சொல்லிக் கொடுத்தபடி நான் ஒரே ஒரு பொய் சொன்னேன்...!"

அவள் குழப்பத்துடன் பார்த்தாள்.

"எனக்கு வேலை போகவில்லை..."

"அப்போ... கொக்காலடிப் பெண்ணை கட்டிக்கிட்டிருக்கலாமில்லே? முப்பது பவுன், அம்பதாயிரம் ரூபாய்.."

"ஆனா, நீ பெரியாத்தாகிட்ட பேசின போது, ஒரு வார்த்தை சொல்லி, என் கை-கால்-மனசு எல்லாத்தையும் சங்கிலியால கட்டிப் போட்டுட்டயே!"

அவளுக்குப் புரியவில்லை.

"நான் அனுப்பிய பெரியாத்தாகிட்ட, கொல்லைப்புறத்தைக் காட்டி..."

சட்டென்று அவன் வாயைப் பொத்திய கண்ணம்மாள் இறுகத் தழுவிக் கொண்டு விம்மினாள்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link