தாராபுரம் அருகே பயங்கர விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காரும், பெட்ரோல் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தாராபுரம் நோக்கி காரில் ஒரு குடும்பத்தினர் வந்து கொண்டிருந்தனர். இதில் 5 பேர் பயணம் செய்தனர். அப்போது, கோவையில் இருந்து பெட்ரோல் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று பழனி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் டேங்கர் லாரியும், காரும் தாராபுரம்-பழனி சாலையில் மனக்கடவு என்ற பகுதி அருகே எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இன்று (நவ.16) மாலை சுமார் 4.30 மணியளவில் நிகழந்த இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்கியம் போலீசார் உயிரிழந்தோரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து அலங்கியம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலுக்குச் சென்று திரும்பிய நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தாராபுரம் சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு நிவாரணமாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மணக்கடவு கிராமம், லங்காட்டுப்பிரிவு என்ற இடத்தில் இன்று (நவ. 16) மாலை டேங்கர் லாரியும், நான்கு சக்கர வானமும் நேருக்குநேர் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். பாலகிருஷ்ணன், மனைவி செல்வி, தமிழ்மணி, சித்ரா, கலாராணி உள்ளிட்ட 5 பேர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.