சிறுகதைகள்


முன்னும், பின்னும்...

கூடல்.காம்
இயல்பாகவே தோற்றமளித்த அந்தக் கிழவிக்குள் இப்படி ஒரு குரங்கு புத்தி குடியிருக்கும் என்பதை ஆரம்பத்தில் ஊரார் யாருமே அறிந்திருக்கவில்லை. இரண்டு மூன்று மாதங்களாய்த்தான் அவள் இந்தப் பகுதியில் தென்படுகிறாள்.

அகவை எழுபதைக் கடந்திருந்தாலும் திடகாத்திரமான நடை, தெளிவான உச்சரிப்பு இன்னும் அவளிடம் இருந்ததுதான் ஆச்சர்யம்.

கூட்டமாய் நின்றிருப்பவர்களின் இடையே இடித்துப் பிடித்து உள்ளே நுழைந்து உரிமையாய்ப் பிச்சை கேட்பாள். போடாதவர்களை, கேட்கக் கூசுகிற வார்த்தைகளில் நாராசமாய் ஏசுவாள் - அம்பது பைசா போட வக்கில்லாத நீயெல்லாம் எதுக்குய்யா பேண்ட் - சட்டை போட்டுகிட்டு வெளியே வர்றே -என்று ஆரம்பித்துக் கேட்பவர்கள் தெறித்து ஓடுகிற அளவுக்குக் கெட்ட வார்த்தைகளை வீசுவாள்.

இந்த ஏச்சுக்கும் ஏகடியத்துக்கும் பயந்து பிச்சை போடுபவர்களும் உண்டு. கோபம் தலைக்கேறி அவளை அடித்துப் போட்டவர்களும் உண்டு.

எனக்கு அவள் மீது இரக்கம் வந்தது. இதே வயதுதான் என் அம்மாவுக்கும் என்பது காரணமா என்று தெளிவாய் உணர முடியவில்லை என்னால். அவளின் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம். இப்படி அவள் குரங்காய் மாறுகிற அளவுக்கு அவளுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என்கிற ரீதியில் என் யோசனை சென்றது.

அவளை அணுகிப் பேச வேண்டுமென்று நான் கூறியபோது நண்பர்கள் சிரித்தார்கள்.

எங்களின் அலுவலகத்துக்கு எதிரே இருந்த தேநீர்க் கடையில் நாங்கள் நின்றிருந்த போது அந்தக் கிழவியிடம் மாட்டிக் கொண்டோம். பெரும்பாலும் ஓசித் தேநீரிலேயே மீசை முறுக்கிக் கொண்டிருந்த வாசு வசமாகச் சிக்கிக் கொண்டான். அவனை மடக்கிய கிழவி காசு கேட்க அவன் முழித்த முழிப்பில் கிழவி சொல்லக் கூசும் வார்த்தைகளை அவன் மீது விசிறியடிக்க... அதன்பிறகு கிழவியின் வெள்ளித் தலை தெருமுனையில் நெரிந்தாலே, தேநீர் கூடக் குடிக்காமல் அலுவலகத்துக்குள் ஓட்டம் பிடித்து விடுவான்.

"ஏண்டா, நான் வாங்கிக் கட்டுனதைப் பார்த்தும் உனக்குப் புத்தி வரலையா... நீ அவகிட்ட நெருங்கினாலே உன்னைக் கெட்ட வார்த்தைகளில் திட்டுவாள்!" என்றான் வாசு.

"என்னை அவள் திட்ட மாட்டாள்... அவள் யாரு -ஏன் இப்படி மாறினாள்னு அவள் வாயாலேயே சொல்ல வைக்கிறேன் பாரு!"

"சில பேருக்கு பட்டால்தான் புத்தி வரும்..."

அன்று மாடியில் உலரப் போட்டிருந்த துணிகளை எடுக்கப் போன என் தம்பியின் அலறல் சத்தம் கேட்டு எல்லோரும் ஓடிப் போய்ப் பார்த்தோம். துணியின் ஒரு முனையை இவன் பிடித்திருக்க, மறுமுனையை ஒரு குரங்கு பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது. எங்களைக் கூட்டமாய்ப் பார்த்தும் "ஈ ஈ ஈ ஈ" என்று இளித்துத் தன் கோபத்தை காட்டியது குரங்கு.

குரங்கைக் விரட்டுவதற்கு கம்பு - கற்கள் பொறுக்கிக் கொண்டு வந்த அம்மா, மானசா (என் மனைவி) இருவரையும் பார்வையாலேயே அதட்டிக் கீழே போடச் சொன்னானே. அதைக் குரங்கு கவனித்தது.

"ஒரு மாசமா இந்தக் குரங்கோட அட்டகாசம் தாங்கலை... எங்கேர்ந்து வந்துச்சின்னு தெரியலை.. மாடியில் எதையுமே காயவைக்க முடியலை... அன்னிக்கு கறிவடாம் போட்டுக் காய வச்சிருந்தேன்... அப்படியே கொண்டு போய்டுச்சி குரங்கு..." என்று கோபமாய்க் குறிப்பிட்டபோது என் மனைவி சிரித்து விட்டாள்-" ஏங்க, குதியாட்டம் போடுற மனுசனை குரங்குன்னு திட்டுவோம்... குரங்கை எப்படித் திட்டுறது?"

"மனுசன்னு திட்டு!" -எனக்கும் சிரிப்பு வந்தது.

"அங்க ஒருத்தன் குரங்கோட போராடிக்கிட்டிருக்கான்... இங்க புருசனும் பொஞ்சாதியும் வியாக்கனம் பேசுறீங்க... முதல்ல அவனைக் காப்பாத்துற வழியைப் பாருடா தாமு.." அம்மா கோபமாய்க் கத்தினாள்.

"உன் பிள்ளையை உனக்குத் தெரியாதா... அவன்கிட்டேர்ந்துதான் குரங்கைக் காப்பாற்றணும்..." -என்றேன்.

"அண்ணே, கிண்டல் பண்ணாதே... எனக்கு ஒரு யோசனை சொல்லு."- குரங்கை விட்டுப் பார்வை அகற்றாமல் கேட்டான் சீனு.

"சீனு, அந்தத் துண்டை விட்டுரு. குரங்கு எடுத்துட்டுப் போகட்டும். பாவம்." என்றேன்.

இழுத்துப் பிடித்திருந்த பிடியை சீனு விடவும் ஓரடி பின்னால்சென்று தடுமாறிய குரங்கு. என்னை நிமிர்ந்து பார்த்தது. பிறகு தவ்வி ஓடிப் பக்கத்துக் கொல்லையில் நின்ற வேப்பிலை மரத்தில் ஏறி மறைந்து போனது.

"ஏங்க, முனிசிபல்ல உங்க நண்பர் யாரோ இருக்காருன்னு சொன்னீங்களே.. அவர்கிட்ட சொல்லி இந்தக் குரங்கைப் பிடிக்க ஏற்பாடு பண்ணுங்க." என்றாள் மானசா.

"ஆமாடா தாமு... ஆனா ஒண்ணு, இந்தக் குரங்கு தன்கிட்ட வம்பு பண்றவங்கள்ட்டதான் சேட்டை பண்ணுது... அன்னிக்கு நான் தனியா மாடிக்கு வந்தப்போ அந்தக் குரங்கும் வந்திடுச்சி.. எனக்குப் பயமாய்ட்டுது... ஆனா என்னை ஒண்ணும் பண்ணாம அது பாட்டுக்குப் போய்டுச்சி..." "இப்பதாம்மா நீ சரியா பேசுறே... சீனுவைப் புரிஞ்சுக்க உனக்கு இத்தனை வருசம் ஆயிருக்கு பாரு!"

"போண்ணே" -என்று சீனு சிணுங்க, மற்றவர்கள் சிரித்தார்கள்.

அந்த முன்னிரவு நேரம் அடைக்கப்பட்டிருந்த ஒரு கடைக்கு முன்னால் அந்தக் கிழவியைப் பார்த்தேன். வாங்கி வந்திருந்த தேநீரை அலுமினியத் தட்டில் ஊற்றி, அதில் பன்-ரொட்டியை நனைத்துப் பசியாறிக் கொண்டிருந்தாள்.

இப்படி அவளை நான் அமைதியான முகத்தோடு பார்த்ததில்லை. இப்போது அவளிடம் பேசினால் என்ன?

உடனே முடிவெடுத்து அவளை நெருங்கிச் சென்று மிதிவண்டியை நிறுத்தினேன். நிறைந்த வாயோடு என்னை நிமிர்ந்து பார்த்தாள். உடனே அவள் முகம் கோணியது. ஏதாவது பேசிவிடுவாளோ என்று பயம் வந்தது. நானே முந்திக் கொண்டேன்...

"ஒண்ணுமில்ல பாட்டி, உன் கூடக் கொஞ்சம் பேசணும்..."

அவள் விழிகள் விகாரமாக மாறிவிட, பார்வை என்னை ஊடுருவியது. "என்கிட்ட உனக்கு என்னடா பேசவேண்டியிருக்கு?" -என்று அவள் கேட்பது போலிருந்தது.

"பாட்டி நீ யாரு, எங்கிருந்து வந்தே... உனக்கு உறவுக்காரங்க யாருமில்லையானு கேட்க நெனைச்சேன்..."

வாயிலிருந்ததைக் கஷ்டப்பட்டு விழுங்கின கிழவி, "ஏண்டா, என்னை நீ கூத்தியாளா வச்சுக்கப் போறியா?" -என்று மாராப்பை உதறிவிட்டு எழுந்தாள்.

கூடை நெருப்பை என் முகத்தில் கொட்டியது போல உணர்ந்தேன். இவள் பெண் ஜென்மம்தானா? உடம்போடு மனதும் பற்றி எரியத் தொடங்க, சட்டென்று மிதிவண்டியை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றேன்.

அப்போது போக்குவரத்தை சரி செய்யும் காவல்காரர், "சார்...அந்தக்குரங்கை பிடிங்க, விடாதீங்க! என்னோட விசிலை எடுத்திட்டு ஓடி வந்திடுச்சி!" சொன்னபடியே குரங்கை விரட்டி வந்தார்.

சார்.. இது நல்ல குரங்கு. கொடுத்திடும் பாருங்களேன்... நான் சொல்லி முடிக்கவில்லை. குரங்கு என்ன நினைத்ததோ... விசிலை காவலரிடம் வீசிவிட்டு ஓடி மறைந்தது.

"என்ன தம்பி, ஆச்சரியமா இருக்கு... உங்களைப் பார்த்ததும் குரங்கோட குணமே மாறிடுச்சி... உங்கள்ட்ட ஏதோ மந்திர சக்தி இருக்கு..." என்று காவலர் குறிப்பிட, நான் ஒரு விரக்தி சிரிப்பை மட்டும் பதிலாக்கிவிட்டு கிளம்பினேன்.

என்னிடம் மந்திர சக்தி இருக்கிறதா? எனில் அந்த கிழவியிடம் மட்டும் அது ஏன் செல்லுபடி ஆகவில்லை?

இரவு முழுக்க உறக்கம் பிடிக்காது என் மனது புழுவாய்த் துடித்தது. அந்தக் கிழவி நிஜமாகவே மனநிலை பிறழ்ந்தவளா?

மறுநாள் அலுவலகத்தில் இயல்பாய் பணியாற்ற முடியவில்லை என்னால். முகம் பார்த்து வாசு மட்டும் கேட்டு விட்டான். கிழவியினால் நேர்ந்த அவமானம் சொன்னேன்.

"ஏண்டா, இதுக்குப் போய் இவ்வளவு வருத்தப்படறே... அவள் மனித ஜென்மமே கிடையாது... நான்தான் அன்னிக்கே வேண்டாம்னு சொன்னேனே...

கிழவியைத் திட்டி எனக்கு ஆறுதல் சொல்லப் பார்த்தான்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அதிகாலை நேரம். நான் வீட்டு வாசலில் இருந்த தொட்டிச் செடிகளுக்கு நீர் வார்த்துக் கொண்டிருந்தபோது கிட்டத்தில் அந்த அலறல் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டேன்...

"காப்பாத்துங்க... காப்பாத்துங்க... சீக்கிரம் ஓடி வாங்க..! -ஏதோ ஒரு பெண்ணின் குரல் எதிர் வீட்டுத் திண்ணையிலிருந்து கேட்கவே, தண்ணீர் செம்பை அப்படியே போட்டுவிட்டு ஓடினேன்...

என் கண்ணில் விரிந்த காட்சியில் உறைந்து போனேன்...

அந்தப் பிச்சைக்கார கிழவியின் கையிலிருந்த சுருக்குப்பையைக் குரங்கு இழுத்துப் பிடித்திருக்க, கீழே சில்லறைக் காசுகள் சிதறிக் கிடந்தன! "காப்பாத்துங்க தம்பி... பிச்சையெடுத்து நான் சேர்த்து வச்ச காசைப் பூரா இந்தக் குரங்கு பிடுங்குது... கிழவி என்னிடம் இறைஞ்சினாள்.

அவள் தெளிவாய்ப் பேசியது எனக்கு வியப்பாய் இருந்தது.

குரங்கு என்னையும் கிழவியையும் மாறிப் மாறிப் பார்த்துவிட்டு, "ப்ளிர்ர்ர்ர்"- என்றது. அந்த மொழியில் எனக்குப் புரிந்தது, "மரியாதையா உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போ" -என்பதுதான்.

கிழவி என்னைத் திட்டினாள் என்பதற்காக அவளை நிர்க்கதியாய் விட்டுப் போக முடியுமா என்ன?

கிழவியின் சுருக்குப்பை பப்பாதியாய் இருவர் கையிலும் சிக்கியிருந்தது.

என்ன செய்வதெனத் தெரியாமல் கீழே குனிந்து கல்லை நான் தேடுவதைக் கவனித்து விட்ட குரங்கு மறுபடியும், "ப்ளிர்ர்ர்ர்" என்றது.

இதன் அர்த்தம் எனக்கு தெளிவாய்ப் புரிந்தது- "நீயும் மிருகமா மாறிடாதடா!"

நான் நிமிர்ந்து முகத்தில் கருணை வரவழைத்துக் கொண்டு, "விட்ரு" என்றேன்.

ஆச்சர்யமாய்க் குரங்கு பிடியை விட்டுத் தவ்வி ஏறி மாடி கட்டைச் சுவர் விளிம்பில் நின்று எங்களை நோக்கியது.

கிழவி சட்டென்று என் காலில் விழுந்தாள்- "ரொம்ப நன்றி தம்பி, என்னை மன்னிச்சிடுப்பா.."

என்ன செய்வதெனத் தெரியாமல் மாடியை அண்ணாந்து பார்த்தேன். குரங்கு என்னைப் பார்த்து ஒரு "ஈ..." காட்டிவிட்டு ஓடிப்போனது...

கிழவியின் குரங்குக் குணத்தை மாற்றிய அந்த "வால் பையனை" மனதார நேசிக்கத் தொடங்கினேன்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link