சிறுகதைகள்


புகலிடம்

கூடல்.காம்
குதிரை நின்றிருந்த இடத்தில் தான் குப்புசாமி நின்று கொண்டிருந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். மூங்கில் படலுக்கு அப்பால் இருட்டுதான் தெரிந்தது. பாவம், குடல் எடுத்த எலியைப் போன்று நின்றிருந்த குதிரைக்குத் தண்ணீர் தாகம் போலும். படலோரம் இருந்த தொட்டியை நோக்கி இழுத்தது.

குப்புசாமிக்கு வலது பக்கத்தில்தான் அந்த ஆள் நின்று கொண்டிருந்தார். குதிரை அந்த தொட்டியில் தண்ணீர் குடிக்க அவருக்கு விருப்பமில்லை போலும், விகுத்தமாய் கடிவாளத்தை பிடித்திருந்தார். எங்கோ பார்த்த முகமாயிருந்த அந்த ஆளை மேலும் கீழுமாகப் பார்த்தான். இறுக்கமாக தலைப்பாகை கட்டியிருந்தார். இடையில் சுற்றியிருந்த வேட்டி அழுக்கேறி முடமுடப்பு பாய்ந்திருந்திருந்தது. குத்து அரிசியைக் கொட்டி மூடலாம் என்கிற மாதிரி கண்கள் குடவு கொண்டிருந்தன. தாது வருட பஞ்சத்தில் சிக்கி பட்டினியில் அடிப்பட்ட மாதிரி குதிரையைப் போலவே இவருக்கும் பழுவு எலும்புகள் திறந்திருந்தன. பாவமாக நின்று கொண்டிருந்தார்.

எதுவோ சிக்கலில் அகப்பட்டு, பிரச்சினையைச் சொல்ல வந்தவர் மாதிரி தெரிந்தது தவிர, வேறெதுவும் வாயைத் திறந்து அவர் சொல்லவில்லை. இவனாகவேதான் கேட்டான். "நீங்க யாருங்க. என்ன சேதி..."

பட்டென்று அவர் முகத்தில் ஒரு மாற்றம். நன்கு பழகிய ஒருவரைப் பார்த்து "யாருங்க நீங்க" என்று கேட்டுவிட்ட மாதிரியான ஒரு ஏமாற்றம், தவிப்பு, கடுமை. இவனே எதிர்பார்க்கவில்லை. "யாருங்க நீங்க... எதுக்கு வந்தீங்க போறீங்க..." கேட்கிறான்.

எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் போய்க் கொண்டிருக்கிறார். இவனுக்கு பட்டென்று விழிப்பு வந்துவிட்டது. இன்னமும் அவரும், அந்த குதிரையும் வாசலில் நிற்பதாகவேபட்டது அவனுக்கு. மறக்காமல் காலையில் அம்மாவிடம் இந்தக் கனவைச் சொல்லி, விளக்கத்தைக் கேட்க வேண்டும்.

விளக்கை அணைத்துவிட்டு உள்ளே வந்து படுத்தான்.

அய்யனாருக்கு வெறுத்துவிட்டது. ஆத்திரமும் அவமானமும் மாறி மாறி அடித்துத் துவைக்க சோர்ந்து போய் பலிபீடக் கல்லில் குந்தியிருந்தார். வேர்வையா, கண்ணீரா என ஈவு பிரித்துப் பார்க்க முடியாமல் முகமும் உடம்பும் நனைந்திருந்தன.

எதிரே, இருட்டோடு இருட்டாய் துறிஞ்சி மரத்தை ஒட்டியபடி நிற்கும் பூரணி, பொற்கலையைப் பார்த்ததும் அவருக்கு பற்றிக் கொண்டு வந்தது. அழுது, அழுது அவரை எந்த வழிக்கும் விடாமல் பிரிக்கட்டி அடித்துக் கொண்டிருப்பவர்கள். கூழில் விழுந்த ஈயாய் தத்தளித்துப் போய் குந்தியிருந்தார்.

வடக்குப் பக்கம் திரும்பினார். கரியை இழைத்துப் பூசியது மாதிரியான இருட்டில் மங்கிய வெள்ளை நிறத்தில் குதிரை. வண்டிப் பாதையில் தேங்கிய சகதியைப் போல் சுருங்கி பாளம் பாளமாய் வெடித்து வண்டலோடி கிடக்கிற குட்டையின் நடுவில் நின்று கொண்டிருக்கிற குதிரை. நட்டத்தலையை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. பூமியைப் பிளந்து கொண்டு, குதிரையாய் உருக்கொண்ட பாறையைப் போல் இறுக்கமாய் நின்று கொண்டிருக்கிறது. அதன் இறுமாப்பிற்கும் ஆங்காரத்திற்கும் ஓங்கி நடுநாந்தில் ஒரே வெட்டாய் வெட்டி பிளந்துவிட வேண்டுமென காந்தாளம் வந்தது. அடக்க பெரும்பாடு பட்டபடி அண்ணாந்து பார்த்தார். தாண்டிய நேரமாய் தெரிந்தது.

தாழ்த்திய அவரின் பார்வையில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை தீவெட்டியை நட்டு வைத்த மாதிரி வயக்காட்டு மோட்டார் கொட்டகைகளில் மின்வெளிச்சங்கள். பகலைப் போல் வெளிச்சம் பாவிய வயக்காடுகளைத் தவிர்த்து பார்வையை இறக்கினார். இருண்டு புறக்கணிக்கப்பட்டு ஒரு வாசலைப் போல் குறுக்கப்பட்ட தன் இருப்பிடத்தைப் பார்த்தார். குதிரைக்குக் கூட பொட்டுத் தண்ணிக்கு வழியில்லாமல் கையகலமாய் காய்ந்து கிடக்கும் குட்டையைப் பார்த்தார். பார்க்கப் பார்க்க பகீர் பகீர் என்றது.

கிழக்கத்தி காற்று வீசியது. பிளந்த புதுமண்ணின் ஈர வாசம் அவரைத் தீயாய் சுட்டது. ஒரு காணி தலைமாட்டிற்கு மேல் மரம் செடி கொடிகளும், முட்புதருமாய் அடைந்திருந்த இடம் அப்புறப்படுத்தப்பட்டு வெட்ட வெளியாய் கிடக்கிறது. வதங்கிக் கொண்டிருக்கும் செடிகொடிகளின் தழைவாசம், அவரும் இப்படி வதங்கிப் போக வேண்டும் என வாசாங்கு விடுவதாய்பட்டது.

அதற்கு மேலும் பார்த்துக் கொண்டு தொடர்ந்து குந்தியிருக்க முடியவில்லை. பலிபீடக்கல் கொதித்தது. எழுந்து குதிரையிடம் வந்தார். வண்டல் வெடிப்புகள் பாதத்தில் முள்ளாய் குத்தி முடமுடத்து நொறுங்கின. குதிரையிடம் நெருங்கி உடம்பெல்லாம் தடவிக்கொடுத்தபடி, பிடறி மயிரில் விரலைக் கொடுத்து ஆய்ந்து வருடினார்.

தாடையில் சொறிந்து கொடுத்தபடி சொன்னார். "சரி கௌம்பு. நீ கௌம்புனாதான் அவளுவோ கௌம்புவாளுவோ..."

குதிரை காதில் விழாதமாதிரி தலையைத் தொங்கப் போட்டிருந்ததும், கடிவாளத்தைப் பிடித்து தலையை உயர்த்தியபடி கொஞ்சம் கடுமையாகக் கேட்டார். "சொல்றது ஒண்ணும் காதுல உழுல. கௌம்பு..."

வெடுக்கென தலையைக் கீழே இழுத்துக் கொண்டது தவிர, வேறெந்த அசைவோ பதிலோ இல்லை. அய்யனாருக்கு பட்டென்று மண்டை வெடித்துவிடுகிறமாதிரி கோபம் அடைத்துக் கொண்டது. வாளை உருவி ஓங்கிவிட்டார். "அம்மாம் இறுமாப்பாப் போச்சா ஒனக்கு. இன்னும் என்னாத்த வாரி அடிச்சிக்கலாம்னு அவளுவோ மாதிரி நீயும் கங்கணம் கட்டிக்கிட்டு நிக்கற. ஒன்னலாம்..."

பட்டென்று குதுஞ்சி மர நிழலில் நின்று கொண்டிருந்த பூரணி வெடித்துச் சிதறினாள். மின்னலாய் இறங்கிய வாள் அந்தரத்தில் தேங்கி நிற்கிறது. அய்யனார் திகைத்துப் போய் நிற்கிறார். குமுறிக்கிடந்த ஆத்திரத்தையெல்லாம் போட்டு உடைத்தெறிகிறாள் பூரணி. "வெட்டிக் கொன்னுடு. குதிரையோட உடாத. எங்களையும் கையோட கையா வெட்டிக் கூறுபோட்டுட்டுப் போயி மகராசனா வாழு. இப்படி ரத்தக்காவு வாங்கறதுக்குத்தான் ஆறேழு நாளா கங்கணம் கட்டிக்கிட்டு நின்னியா. ஒன்னக் கேக்கறதுக்கு யாரு இருக்கா. ஓஞ்சித்தம் போனபடி எல்லாத்தையும் வெட்டிக் கொன்னுடு..."

வெலவெலத்துப் போய்விட்டார் அய்யனார். வாளைப் பிடித்திருந்த கை கலகலத்துப் போய் இறங்குகிறது. ஊனாடி குறி வைத்து வீழ்த்த முடியாத ஒரு வயதான வேட்டுவனைப் போல், தளர்ந்து போய் நடந்து பூரணியிடம் வந்தார். தலையை ஆட்டி, ஆட்டிக் கேட்டார். "நானு ரத்தக்காவு வாங்கறதுக்கு நிக்கிறனா..."

"பின்ன ஒனக்கு இந்த மண்ணு முக்கியமா, மக்க மனுசாலு முக்கியமா, கட்ன பொண்டாட்டி முக்கியமா, கூடவே அண்ணாகவுத்தப் புடிச்சிக்கிட்டு வர்ற இந்த குதிர முக்கியமா? எதுவும் முக்கியமில்லை. கௌரவம், மரியாத இதுதான் முக்கியம். இதுக்கு நாங்க யாரும் ஒத்துவில்லன்னு, வெட்டுக்குத்துன்னு ரத்தத்தப்பாக்க நிக்கிற..."

பூரணி கொட்டி இறைக்கிறாள். மூஞ்சியில் குத்துகிற மாதிரி வார்த்தைகள். முழி பிதுங்கிப் போய் நிற்கிறார் அய்யனார். பூரணி கூட நின்றிருந்த பொற்கலைக்கு தலை சுற்றுவது போல் படபடப்பு வந்துவிட்டது. பூரணி ஒரு நாளும் இப்படி வாக்குத்தத்தம் செய்ததே இல்லை. அய்யனும் இப்படி வெலவெலத்துப் போய் நின்றதாக பார்த்ததேயில்லை. ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிடுமோ என்கிற பயத்தில் அவளுக்கு தலை கிறுகிறுத்தது.

"அப்ப எனக்கு மக்க மனுசாளு, மண்ணு, பொண்டாட்டிவோ எதுவும் முக்கியம் இல்லங்கற..." குரல் இறங்கியிருந்தாலும் தீர்மானமாகக் கேட்டார்.

பூரணியும் விடவில்லை. "ஒரு தடவ இல்லை. ஓராயிரம் தடவைக்கு சொல்றன். இல்ல... இல்ல... அப்பிடி முக்கியம் இல்லாத தொட்டுதான், எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு சூத்து மண்ணத் தட்டிட்டு கௌம்புங்கற..."

அய்யனார் உடைந்து நொறுங்கிவிட்டார். குரல் பிசிறியது. "இங்க இருக்கற மக்க மனுசாளு நம்ப பேர்ல ரொம்ப அக்கறையாவும் முக்கியமாவும் இருக்கறாங்க, கவுனிக்கிறாங்க. இதுல நா, மட்டும் யாரையும் முக்கியமா பாக்குல, நெனைக்கிலங்கற..."

அய்யனின் இந்த கேள்வியில் சூர முள்ளில் சிக்கியது மாதிரிப் போய்விட்டது பூரணிக்கு. வார்த்தைகள் தேங்கி நின்று பதுங்கின. "நம்ப பேர்ல யாருக்கும் முக்கியம் இல்ல..." அதற்கு மேல் அவளை பேச விடாமல் அய்யனார் பேசினார்.

ஆத்திரத்தில் குரல் தத்தளித்துத் துடித்தன. அழுதே விட்டார் "சொல்லு. எல்லாம் நம்ப பேர்ல அக்கறையாவும், முக்கியமாவும் இருக்கறாங்க... நாந்தான் ஒதறித் தள்ளிட்டு எட்டப் போவலாம்ங்கறன்..."

பூரணி உடைந்து சுக்கு சுக்காய் போய்விட்டாள். ஒரு நாளும் அய்யன் அழுது யாரும் பார்த்தது இல்லை. அதற்கு மேலும் அவளால் தாங்க முடியவில்லை. படாரென்று அய்யனின் காலடியில் விழுந்து கதறுகிறாள். சிதறுகிறாள்.

"நம்ப பேர்ல யாருக்கும் முக்கியம் இல்லதாங்க. அக்கற இல்லதாங்க. நல்ல நாளு பெரிய நாளுக்குக் கூட ஏறெடுத்து பாக்குலிங்க. நாம வாழ வைச்ச மனுசாளு இன்னக்கி நம்பள வாழ வைச்சிப் பாக்காம, வேர் வெட்டுதுங்க..."

சொல்லிச் சொல்லிப் புலம்புகிறாள். பொற்கலையும் அய்யனார் காலடியில் விழுந்து கதறுகிறாள். குதிரையும் ஓடிவந்து அய்யனாரை உரசியபடி நின்று கண்களால் கலத்தண்ணீர் விடுகிறது. துறிஞ்சி மரங்களுக்கும் துக்கம் தாங்காமல் இலைகளை உதிர்த்து அழுது வடிக்கிறது.

கனிந்து அழுகிறாள் பூரணி. "இதுக்காக நாம இந்த மண்ண விட்டுப் போவலாமா, சாமீ. இந்த மக்க மனுசாள மறந்துட்டு இருக்க முடியுமா சாமீ. அப்பிடிப் போயிதான் நாம என்னாத்த வாரி அடிச்சிக்கப் போறஞ் சாமீ. வேணாங்க, நம்ப புள்ளிவோ தொடையில கழஞ்சிட்டுதுங்கறதுக்காக, தொடையறுத்தாக் கெடாசிடறம். இல்லிங்க, இன்னக்கி நம்பள வேணான்னு ஒதுக்கி வைச்ச சனம் நாளைக்கி நம்பள தேடி வருங்க. நம்ப காலடியில வந்து உழுங்க. எங்கியும் போவ வேணாங்க. செத்தாலும் இந்த மண்ணுலியே கெடந்து மடிஞ்சிப் போவங்க..."

பூரணி, பொற்கலை, குதிரை எல்லோரையும் கட்டிப் பிடித்துக் கொண்டு அய்யனார் புலம்புகிறார்! இல்லடா சாமீ. திரும்பி நம்பள தேடி வருவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்ல சாமீ. யாருக்கும் நம்ப பேர்ல அக்கறை இல்லன்னாக்கூட பரவாயில்ல... இப்பிடி ஆளாளுக்கு நம் எடத்தப் புடுங்கிகிட்டு, தள்ளறதுக்கு பொடறியில கைய வைச்சா எப்பிடி சாமி இருக்கறது. வாணாம் சாமீ. மானம் போயி சீவனம் போக்கிகிட்டு இனியும் இங்க இருக்கக் கூடாது. நமக்கு இந்த ஊரும் வாணாம். மக்க மனசாலும் வாணாம். கௌம்புங்க போவம். எங்கியாவது போயி பொழைச்சிக்குவம்..."

தெற்கே ஓடையிலிருந்து கோயிலுக்கு வருகிற அகன்ற வண்டிப் பாதை ஒத்தயடிப்பாதையாய் நெருங்கியிருந்தது. பாதையிலிருந்து ஓடையில் இறங்கி கிழக்கே நடந்து கொண்டிருந்தார்கள். கூட தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்த குதிரைக்கு, ஓடையில் கிடந்த பட்டாணி கல்ச்சியில் கால்கள் சறுக்கின.

பொற்கலை தாங்கிப் பிடித்தபடி தேற்றிக் கொண்டே வந்தாலும், பூரணி ஓயாமல் அழுதுகொண்டே வந்தாள். "இந்த நெலைக்கி நாம்பளும் ஒரு காரணமா இருந்துட்டமா. நம்மாலதான் இந்த சனங்களுக்கு குளிர்விட்டுப் போய், துணிச்சலாய் மண், மரமட்டைகள் மீது கைவைத்துவிட்டார்களா..."

காவலில் கறாராய் இருப்பது போன்று, தன் சொந்த விஷயத்திலும் அய்யனார் கோடு கிழித்த மாதிரிதான் இருப்பார். கோயில் எல்லைக்குட்பட்ட அடம்பில் யாராவது கசங்கு கழித்தால் கூட அன்றைய ராத்திரியே குதிரையை அனுப்பி மிரட்ட வேண்டும் எனத் துடிப்பார். பூரணி உடனே ஒரு அணையைப் போடுவாள். "உடுங்க. எதோ வவுத்துப் பாட்டுக்கு வந்து கழிக்கிறாங்க. நம்ப சனங்களோட பசிக்கு ஆவாம, செடி செட்டுன்னு இருந்து என்னா புண்ணியம். உட்டுட்டு வேலைய பாருங்க."

மரமட்டைகளை வெட்டும்போதும் இதையேதான் சொன்னாள். கோயிலை இடித்து ஓடு மரங்களை விற்றுத் தின்னபோதும், குட்டையை வெட்டியபோதும் கடைசியாய் மண்ணைப் பிடுங்கிக் கொண்ட போதும் இதையேதான் சொல்லிக் கொண்டிருந்தாள். யோசித்துப் பார்த்த அய்யனார், பூரணியின் தாராள குணத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அவள் தாயாக நினைத்து எல்லாமும் செய்தாள். அவளின் பாச பலவீனத்தைப் பயன்படுத்தி இந்த நிலைக்குத் தள்ளிவிட்டார்கள். இனியும் இருந்தால் கோவணங்கூட மிஞ்சாது என்று தான் அய்யனார் கிளம்பியது.

சாரைப் பாம்பைப் போல் போய்க் கொண்டிருந்த அய்யனார் ஒப்புக்குக் கூட கோயில் பக்கம் திரும்பிப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் வரவில்லை. "எங்க போறம். இனிமே என்னா செய்றது." பூரணிக்கோ பொற்கலைக்கோ குதிரைக்கோ யாருக்கும் அய்யனைக் கேட்கத் துணிவில்லை. செம்மறி ஆடுகளைப் போல் பின்னால் போய்க் கொண்டிருந்தார்கள். அய்யனார் கிழக்கே போய் வடக்கில் ஏரியின் கோடியில் ஊருக்குப் போகிற பாதையில் திரும்பினார்.

கோடியின் வண்டிப்பாதையில் செம்மண் புழுதி. குதிரையின் கால்கள் இடறி விசிறியது. குதிரைக்கு ஆத்திரத்தில் தொண்டைக்கட்டிக் கொண்டது. இந்தப் புழுதியில் காவலுக்கு எத்தனை தடவை நடந்திருக்கிறோம். ஒவ்வொரு புழுதி பொடியிலும் தன் பாதம் பட்டு நொறுங்கி எழுகிற புழுதிப் படலம் ஒரு செம்மேகம் போல் திரளுமே... இந்த புழுதியை இனி எப்போது மிதிக்கப் போகிறோம்..." குதிரையின் கண்ணீர்துளிகள் செம்மண் புழுதியில் விழுந்து சுருண்டன.

கொல்லை, காடு, ஏரி என எல்லாமும் கடந்து ஊருக்குள் நுழைகிற ஒழுங்கை. எல்லோரும் தயக்கமாய் அடியெடுத்து வைக்கிறார்கள். பூரணிக்கு கால் பாவவில்லை. கூச்சமும், அவமானமுமாய் குன்னிப் போய் திடுமென "ஓ"வென்று உடைந்து பெருங்குரலில் அழுகிறாள். அவளைத் தேற்ற முடியாமல் எல்லோரும் திகைத்து நிற்கிறார்கள். வாழ்க்கைப்பட்ட இவ்வளவு காலத்தில் ஒருநாளும் இப்பிடி ஊருக்குள் அவளும் சரி, பொற்கலையும் சரி நுழைந்ததே இல்லை. ஊர்சேதி எதுவாக இருந்தாலும் குதிரையோடும், அய்யனோடுந்தான். இப்படி ஒரு அவமானம் நேர்ந்துவிட்டதே என கனிந்து கனிந்து அழுகிறாள்.

இவளை இட்டுக் கொண்டு போய் வைத்துக் கொண்டு இனிமேல் எப்படிப் பிழைக்கப் போகிறமோ... அய்யனாருக்கு மலையாய் கனக்க ஆரம்பித்துவிட்டது. அவ்வளவு பாடு கோயிலை விட்டு, அவளை எட்ட இட்டுக்கொண்டு வருவதற்குள் பெரும்பாடாய் போய்விட்டது. துறிஞ்சி மரத்தைப் பற்றியிருந்த அவளின் கையை விடுவிக்கவே முடியவில்லை. வலிந்து பற்றியபடி திரும்பத் திரும்ப கதறுகிறாள். மரத்தை பாதியாய் பிளந்து எடுத்த மாதிரிதான் பூரணியைப் பிடித்து எட்ட இழுத்து வந்தார். அப்படியும் கோயில் வழிப்பாட்டையில் விழுந்து மண்ணில் அணைந்தபடி புரண்டதைப் பார்த்த அவருக்கே, மனசு மாறிவிடுமோ என பயந்துதான் போனார்.

ஒழுங்கையில் கொடி இண்டு கொழுந்துகள் இருளின் குறுக்கே நீட்டி நுனிகளை ஆட்டிக் கொண்டிருந்தன. தன்னையும் தேற்றியபடி, கதறியபடி குந்தியிருந்த பூரணியின் அழுகையைத் துடைத்துவிட்டு எழுப்பி அணைத்தவாறு நடந்து கொண்டிருந்தார். சலங்கையின் நாவுகூட அசையாமல், ஒரு சடலத்தைப் போல மௌனித்து நடந்து கொண்டிருந்தது குதிரை. எதிரே இருண்டு கிடந்தது ஊர்.

தெருவிலேயே முளைக்குச்சிகள் அடித்துக் கட்டப்பட்டிருந்தன, மாடுகள். குச்சியிலோ கயிற்றிலோ கால்கள் தடுக்கி விழாதவாறு சாணியை மிதித்துக் கொண்டு, தரையில் தேய்த்து பூசியபடி நடந்த அய்யனார் பட்டென்று நின்றார். திடுக்கிட்டு திகைத்துப் போய் நின்ற எல்லோர் மனசிலும் ஒரு ஆவல், எதிர்பார்ப்பு. "அய்யனுக்கு மனசுகினசு மாறிப்போச்சா."

திரும்பிப் பார்த்தபடி சொன்னார். "ஊரவிட்டுப் போறதுன்னு முடிவு பண்ணி கௌம்பி வந்துட்டம். திருட்டுப் பய மாதிரி சொல்லாம கொள்ளாம கௌம்பிட்டான்னு நாளைக்கு ஒரு சொல்லுக் குத்தம் வந்துடக் கூடாது. அந்தத் தலைவர் பயகிட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு வந்துவிடுவம்."

சொல்லிவிட்டு நடந்தவர், திரும்பவும் சஞ்சலமாக சொல்லிக் கொண்டார்.

"அவனும் பெரிய சில்லாக் கத்திரிதான். ஏந் நெலவரம் இப்படியிருக்கு, ஏதாவது பண்ணுன்னு கேட்க, போனவாரம் வந்தப்பையே மூஞ்சியில அடிச்சமாதிரி கேட்டான், நீங்க யாரு எங்க வந்தீங்கன்னு..."

வாசலில் வெகு நேரமாய் நின்று கொண்டிருக்கிறார்கள். குப்புசாமிக்கு திரும்பவும் அடையாள சிக்கல். வேலை அலைச்சலில் இதற்கு முன் கனவில் வந்ததை அம்மாவிடம் சொல்ல மறந்துவிட்டான். கேட்க தயக்கமாக இருந்தது. "யார் நீங்க..." என்று கேட்டுவிட்டால் திரும்பவும் கிளம்பி விடுவார்களோ என்கிற பயம். போன முறை போல் அல்லாமல், இப்போது கூட, ரெண்டு பெண்களும் வந்திருந்தார்கள்.

வெகுநேர யோசனைக்குப் பிறகு அவனே கேட்டான். சத்தியமா ஒங்கள எனக்கு அடையாளம் தெரியிலிங்க. போன தடவ வந்தப்பக் கூட ஒண்ணும் சொல்லாம கொள்ளாம பூட்டிங்க. யாருங்க நீங்க. அடிக்கடி இப்பிடி வந்து நிக்கிறீங்க. என்ன வேணும்."

நினைத்த மாதிரியேதான் இருந்தது அய்யனாருக்கு. திரும்பி பூரணி பொற்கலையைப் பார்த்தபடி பெருமூச்சு விட்டார். அவருக்கு குரல் கரைந்து போயிருந்தது. "எங்களுக்கு ஏதாவது சொயிட்டி வைப்பன்னுதான் வந்து வந்து நிக்கிறம். ஒனக்கு அடையாளமே தெரியலங்கற. சரி வுடு. ஏதோ இது காலம் தெரிஞ்சோ தெரியாமலோ, எங்கள வைச்சி காபந்து பண்ணனது வரைக்கும் போதும். நாங்க ஊரை விட்டுப் போறம். எங்கியாவுது வெளியூர் பக்கம் போயி பொழைச்சிக்கறம்..."

சொல்லிவிட்டு அய்யனார் போய்க் கொண்டிருந்தார். நிழலைப் போல பூரணி, பொற்கலை, குதிரை... தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

குப்புசாமி பதறியபடி ஓடுகிறான். "ஏங்க நில்லுங்க. யாருங்க நீங்க. எங்கப் போயி பொழைக்கப் போறீங்க..."

குப்புசாமி மனைவி திடுக்கிட்டு எழுந்து விளக்கைப் போட்டாள். அடித்து எழுப்பினாள். "ஏங்க. என்னா பெணாத்துறீங்க. ஏந்திரிங்க..."

அவன் அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்து குந்தியவன் அலங்க மலங்க பார்க்கிறான். "கெனவு ஒண்ணு கண்டன்..." சொல்லத் தொடங்கினான்.

ஊனாடி கேட்டு முடித்த அவன் மனைவிக்கு மூச்சே நின்று விடும் போலிருந்தது. அதிர்ந்துபோய் சொன்னாள் "அது வேற யாரும் இல்லிங்க. நம்ப அய்யனாருங்க. அந்தக் குதிரை, அவுரு குதிரை. அவுங்க ரெண்டு பேரும் அய்யனாரு பொஞ்சாதிவோ பூரணி, பொற்கலை..."

அதற்கு மேல் அவன் அதிர்ந்து போய்விட்டான். "அய்யனாரா... அப்ப அய்யனாரு நம்ப ஊரவுட்டுப் பூட்டாரா..."

அவள் ஓடி திண்ணெயில் படுத்திருந்த அவனின் அம்மாவை எழுப்பினாள். "அத்த அத்த... மாமங்கெனவுல... குதிர... அய்யனாரு... ஊரவுட்டுப் பூட்டுது." அதிர்ச்சியில் சொற்கள் கோர்வையாக வராமல் சிக்கின.

இவனும் போய் திண்ணையில் குந்திக் கொண்டான். போன வாரம் வந்தது முதல் இப்போதைய வரை விடாமல் ஒரே மூச்சில் சொல்லி முடித்தான்.

வெற்றிலை பாக்கு போட்டபடி கேட்டுக் கொண்டிருந்த அவனின் அம்மா கடைசியில் எச்சிலைத் துப்பிவிட்டுச் சொன்னாள். "நா, நேத்திக்கி நெனைச்சேன். சாமியா இருந்தா மட்டும் என்னா. குந்த குடிசை, இருக்க இடம்னு வேணுமில்ல. அய்யன் ரோஷக்காரன், அதான் கௌம்பிட்டான்"

"என்ன அம்மா சொல்ற..." கேட்டான்.

"அந்த கங்காட்சிய ஏண்டா கேக்கறா முகத்திக்கு ஆடு மேய்க்க அய்னா கோயிலு பக்கந்தான் போயிருந்தன். கோயில பாத்த எனக்கு பகீர்னு பூட்டுது. கெழக்கால பக்கம் வாள்காரம் மொவன் புல்டோசர வைச்சி கோயில் எடத்த நெரவி சுத்தமா நெருக்கி அணைபோட்டுட்டான். புடுங்க முடியாத குத்தத்தால நெரவன கொல்ல நடுவுல அந்த ஆலமரம் நிக்கிது. இல்லன்னா அதியும் புடுங்கியிருப்பானுவோ."

"அங்க யாரும் கேக்குலியா..." பாவமாகக் கேட்டான்.

"அங்க எவன் கேப்பான். அந்த வெளியில கொல்ல இருக்கறவனுவோ தான் கேக்கணும். எப்பிடி கேப்பான். கோயில சுத்தி கொல்ல வைச்சிருக்கறவம் பூரா பங்காளி ஓறம்பறன்னு ஒரு கொத்து ஆளுவோ. வடக்கால இருக்கறவன் அணைய நெட்டி, நடுக்குட்டை வரைக்கும் கொண்டுபோய் வுட்டுட்டான். தெக்கால இருக்கறவன் ஏற்கெனவே உள்ளவந்து திருத்தி மாங்கன்னப் போட்டுட்டான். ஏதோ வேச நாளுல ஆடு மாடு குட்டையில தண்ணி குடிக்கும், அதையும் மேற்கால கொல்லைக்காரன் அணைய பொளந்து வாய்க்கா வெட்டிக்கிட்டுப் போய் பாய்ச்சிட்டு, காயவுட்டுட்டான். கண்டும் காணாததுக்கு நேத்திக்கு வாள்காரம் மொவன் மெனக்கிட்டுட்டான். உள்ளங்கை அளவுக்குதான் இப்ப குட்ட இருக்குது. பாத்துப் பாத்து மங்கிப் போயி, காக்கா கழுவு கழிச்சில மேல ஒழுவ வுட்டுகிட்டு பாவமா துறிஞ்சி மரத்தடியில குந்தியிருக்காறரு அய்யனாரு.

குப்புசாமிக்கு ஒன்றும் சொல்ல இயலவில்லை. அவனுக்கு அய்யனார் கோயில் பக்கம் நிலபுலம் இல்லை என்பதால் அதிக நடமாட்டம் இல்லை. பொங்கலின் போது கரிநாள். அன்று மட்டும் போனன்வந்தன் என்பதாய் ஒரு நடை. ஏற்கெனவே கோயிலை இடித்து தலையில் அடித்தமாதிரி துறிஞ்சி மரநிழலில் குந்த வைக்கப்பட்டிருந்தார். இப்போது மீதி இருக்கிற குட்டையையும், நிலத்தையும் பிடுங்கிக் கொண்டுவிட்டார்கள். மனதிற்குள் அய்யனார் வந்த கோலத்தை நினைத்துப் பார்த்தான். பரிதாபமாக இருந்தது.

"நாளைக்கி அய்னா கோயிலுக்குப் போய்ட்டு வருனும் எம்மா..." விசனமாய் சொன்னான்.

"அங்க எதுக்கு, குடிபோன ஊடாட்டம்தான் இருக்கும் கோயிலு. கேக்க நாதியில்லாத ஊராச்சு, ஒரு தலைவருங்கற மொறையில ஓங்கிட்ட சொல்லிட்டுப் போவ வந்துருக்கறாரு... அய்யனாரு."

சொல்லிவிட்டு கொஞ்சநேரம் மௌனமாக இருந்தாள். வாயைக் கூட்டி வெற்றிலை குதப்பலை கொத்தாய் எக்கி தெருவில் துப்பிவிட்டு திரும்பவும் சொன்னாள். "நீ ஒண்ணும் அந்த வாள்கார மூட்டுப் பயலக்கியல எதுவும் கேக்காத. நீ தலைவருக்கு செயிச்சதிலேர்ந்தே, ஒன்ன வெத்தலையில வைச்சி முழுங்கிடறங்கறானுவோ அவனுவோ. அய்யனாரு கோயில் மண்ண பறிச்சா அத்தனையும் பத்ரகாளிம்பாங்க. ஊரவுட்டுப் போனாலும் உடமாட்டாரு அய்யனாரு."

கொல்லையிலிருந்தோ, முந்திரிக்காட்டிலிருந்தோ வேர்வையும் சோர்வுமாய் வருகிற யாரைப் பார்த்தாலும் அய்யனாராகவே தெரிந்தது குப்புசாமிக்கு. களைவெட்டிவிட்டு, முந்திரிக் கொட்டைப் பொறுக்கிவிட்டு நொறுங்கிப் போய் வருகிற எந்த பெண்களைக் கண்டாலும் பூரணி, பொற்கலையாகவே பட்டது.

முதனைக்கு சேர்மனை பார்க்கப் போயிருந்தான். நெய்வேலியில் இருப்பதாக சொன்னார்கள். இரண்டாம் அனல் மின் நிலையத்தை ஒட்டிய மேலக்குப்பம். யோசனையோடு வண்டியில் போய்க் கொண்டிருந்தவன், ஊரின் ஆலமரத்தடியில் ஏதேச்சையாக பார்த்தான்.

சாமான்களை பரப்பி வைத்துக் கொண்டு ஈயம் பூசிக் கொண்டிருந்தார் ஒருவர். பக்கத்து கரம்பில் குதிரை ஒன்று கரண்டிக் கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டே போகையில் பட்டென்று அவனுக்குள் எதுவோ சொடுக்குப் போட்டது. வண்டியை நிறுத்திவிட்டான்.

தலைப்பாகை கட்டியிருந்த அவரை உற்றுப்பார்த்த அவன் அதிர்ச்சியில் கத்தியே விட்டான். "அய்யனார்..."

வெடுக்கென தலை நிமிர்ந்தார் அவர். குதிரையும் விலுக்கென்று தலையைத் தூக்கிப் பார்த்தது. சந்தேகமேயில்லை, பக்கத்தில் கொண்டைப் பாரை அடித்து யேணங்களுக்கு ஒடுக்கு எடுத்துக் கொண்டிருந்தவர்கள் பூரணியும் பொற்கலையுந்தான்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link