சிறுகதைகள்


தரிசனம்

கூடல்.காம்
மரணம் என்னைத் தொட்டபோது அதன் கைகள் சில்லிட்டிருந்தன. விரல்கள் நடுங்குவது போலிருந்தது.

"மரணம் நடுங்கலாமா?" என்றேன்.

பதிலுக்கு எப்போதும் போல் மௌனமாக சிரித்து வைத்தது மரணம்.

"இன்று உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும். எப்போதுமே நீ பிடி கொடுத்துப் பேசுவதில்லை" கடிந்து கொள்வது போலச் சொன்ன போதும் தசைச் சுருக்கங்கள் கூடி மிருதுவடைந்திருந்த அதன் விரல்களைப் பிடித்து ஆதூரேமாகத் தடவினேன்.

"எதைப் பற்றி?"

"எல்லாம் உன்னைப் பற்றித்தான்."

"என்னைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது?" சத்தமின்றி மெதுவாகச் சிரித்தது மரணம். பருத்து தளர்ந்து தொங்கிய அதன் கன்னக் கதுப்புகளிலும் ஒளி குன்றாத கண்களிலும் ஒரு கணம் விளையாட்டுத்தனமும் குறும்பும் தோன்றி மறைந்தன.

"அதிகம் கற்ற பேரறிவாளர்களும் தத்துவஞானிகளும் உன்னை இதுதான் என்று வரையறுத்துவிட ஓயாது முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். எந்த வரையறைக்குள்ளும் பதியாமல் நீ போக்குக் காட்டியபடியே இருக்கிறாய். நீ யார், அல்லது என்னவாக இருக்கிறாய்? எனக்கு மட்டுமாவது சொல்லேன்."

சற்று நேரம் மௌனமாக இருந்துவிட்டு மரணம் சொன்னது "நான் நான்தான்!"

"இந்த இடக்குத்தானே வேண்டாமென்கிறது" என்றபடி மரணத்தின் இடது மோதிர விரலுக்கு வேண்டுமென்றே சற்று வலுவாக சொடக்கு எடுத்தேன்.

"ஸ்ஸ்ஸ்..." வலியில் கையை உதறியது மரணம்.

"உனக்குக் கூட வலிக்குமா?" என்றேன் ஒன்றும் அறியாதது போல.

"வலிக்காமல் பின்னே...."

நான் பதிலேதும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தேன். இடது கைமேல் வலது கையை பரத்தி வைத்தபடி மரணம் பேச ஆரம்பித்தது.

"ஆல்ஃபா என்ற ஒன்று உண்டென்றால் ஒமேகா என்ற ஒன்றும் இருந்தாக வேண்டும். இயற்கை தன்னகத்தே மாபெரும் ஒழுங்கைக் கொண்டு இயங்குவதை நீ அறிவாய். அந்த ஒழுங்கு ஒரு துல்லியமான வட்டம். அந்த வட்டத்தின் கடைசிப் புள்ளி நான்."

"புரியவில்லை...." என உதட்டைப் பிதுக்கினேன் நான்.

"இவ்வுலகில் ஒவ்வொரு உயிரியக்கமும் சூல் கொள்வதில் தொடங்கி தனக்கேயான ஒரு ஜீவிதப் பாதையில் பயணம் மேற்கொள்கிறது. அந்தப் பாதை முடியுமிடத்தில் பயணத்தை முடித்து வைப்பவன் நான்."

"அப்படியானால் நீ இறப்பு?"

"அல்ல. இறப்பு என்பது நீங்கள் அறிந்த வாழ்வின் கடைசிப்படி. அந்தப் படியில் வந்து நீங்கள் நின்றதும் அதையும் தாண்டிய ஒரு நிலைக்கு அழைத்துச் செல்லும் ஒரு பணியாளன் நான் என்று வேண்டுமானால் சொல்லலாம்."

"அந்த அடுத்த நிலை என்பது சொர்க்கம், நரகம் தானே?"

"உங்களது சமய சித்தாந்தங்களின் அபிமானி நானென்று எப்படிச் சொல்ல முடியும்?"

"பிறகு நீ சொல்லும் அந்த அடுத்த நிலையென்பது....?"

"அதைப் புரிந்து கொள்ளுமளவுக்கு நீங்கள் இன்னும் பக்குவப்படவில்லை."

இதைக் கேட்டதும் என் ஆர்வமெல்லாம் வற்றிப் போய்விட்டது. இடியாப்பச் சிக்கலின் கடைசி முனை இன்னொரு இடியாப்பத்துக்குள் போய் முடிந்தது போல ஆனது. அதே நேரம் மரணம் மழுப்பப் பார்க்கிறதோ என்ற சந்தேகமும் எழுந்தது. இந்த எண்ணம் மனதில் ஓடிய மாத்திரத்தில் மரணத்தின் மீது கடுமையாகக் கோபம் ஏற்பட்டது. தாங்க முடியாமல் கேட்டுவிட்டேன்.

"நீ பூசி மெழுகப் பார்க்கிறாய். எங்களுக்குப் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லையென்பதைவிட உனக்கு விளங்கவைக்கும் திராணியில்லை என்பதுதான் உண்மையாக இருக்கும்."

மரணத்தின் முகபாவம் சட்டென மாறியது. இதுவரை அதன் முகத்திலிருந்து வாஞ்சை அகன்று துக்கம் கலந்த கோபம் குடிகொண்டது. மௌனமாக என்னையே உற்றுப் பார்த்தது.

"நீ என்னைப் புரிந்துகொண்டது அவ்வளவுதான்." அதன் குரலில் நிஜமாகவே வருத்தமிருந்தது.

"அவசரப்பட்டு அதன்மீது கோபத்தைக் காட்டியிருக்கக்கூடாது. அதன் மனம் புண்படும்படி பேசி விட்டோமே" என்னையே நான் கடிந்து கொண்டேன்.

மெதுவாக இருக்கையிலிருந்து எழுந்த மரணம் ஜன்னல் அருகே சென்று கைகளைப் பின்புறமாகக் கட்டியபடி வெளியே உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தது.

மன்னிப்புக் கேட்கலாம் என எழுந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். சொல்லப் போனால் இப்போது மரணத்திடம் பேச நா எழவில்லை. மரணம் நின்ற தோரணையிலிருந்து மௌனம் ஊற்றுப் போல் பெருகி அறையை நிறைக்க ஆரம்பித்தது. அம் மௌனம் என் வாய்க்குள் புகுந்து தொண்டை நாண்களை உறையச் செய்து நாவையும் அசையாமல் கட்டிப் போட்டது.

வெகு நேரம் கழித்து மெதுவாக என்னை நோக்கித் திரும்பியது மரணம்.

"ஆதி தொடங்கி காலத்தின் விசுவாசமான ஊழியன் நான். நரைத்த என் கேசங்களிலும் தளர்ந்த தசைகளிலும் சுருங்கிய தோல் மடிப்புகளிலும் பல நூறு யுகங்கள் புதைந்திருப்பதைப் பார். பிரபஞ்சங்களனைத்தின் நட்சத்திரங்கள் கூடிப் பிரகாசித்தாலும் ஈடாக முடியா என் ஞானம் உள்ளே எந்நேரமும் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது. பல்லாயிரம் பிரபஞ்சங்களை உருவாக்கி அழித்து, மறுபடி உருவாக்கி மறுபடி அழித்து கமலம் புரிந்து கொண்டிருக்கும் தீராத விளையாட்டின் பங்கெடுப்பாளனும் பார்வையாளனும் நான். என்னிடம் போய்....." மேற் கொண்டு பேச இயலாது மரணம் மௌனமாகிவிட்டது. துக்கம் தொண்டையை அடைத்திருக்க வேண்டும்.

நான் பதைபதைத்துப் போனேன். இப்பேர்ப்பட்ட மரணத்தை கேவலம் ஒரு சிறு மானுடன் நான்..... அது என்னிடம் காட்டிய வாஞ்சையை தவறாகக் கணித்து அதனிடம் அற்பமாக நடந்துகொண்டு விட்டேனே. எப்படிப்பட்டவொரு அறிவிலி நான்.

அதன் காலடியில் விழுந்து மன்னிப்பு வேண்டினால்தான் செய்த தவறுக்கு சற்றேனும் பரிகாரம் கிடைக்கும். மரணம் என்னை மன்னிக்குமா? என் எண்ண ஓட்டத்தைக் கலைக்கும் விதமாக மரணமே பேசியது.

"இறப்புக்குப் பிறகு என்ன நிகழ்கிறதென்று உனக்குத் தெரிய வேண்டும், அவ்வளவுதானே?"

நான் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக நின்றேன்.

"இந்த வினாடி வரை உலகில் ஜீவித்திருக்கும் வேறெந்த உயிரும் அறியாத அந்த உண்மையை உனக்குப் புரிய வைக்கிறேன். வா....."

ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனேன். இதை நான் எதிர்பார்க்கவில்லை. மரணத்துக்குத்தான் எவ்வளவு பெருந்தன்மை. அந்த உண்மை மட்டும் தெரிந்துவிட்டால், மனிதனது கற்பனைகளுக்கு மிஞ்சிய ஒன்றாக அது இருந்துவிடும் பட்சத்தில் உலகின் வேத சித்தாந்தங்கள் அனைத்தையும் திருத்தி எழுதவைக்கப் போகும் அந்தப் பேருண்மையை உலகத்தின் கூரைமீதிருந்தபடி பறைசாற்றலாம்.

"ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது...." தாழ்ந்த குரலில் ஆனால் எச்சரிப்பது போன்ற தொனியில் சொன்னது மரணம். "இதுவரை இறந்தவர்கள் மட்டுமே உணர்ந்தறிந்த அந்த உண்மையை முதன் முதலாக உயிரோடுள்ள நீ அறியப் போகிறாய். அறிந்த அந்த உண்மையை நான் சொல்லும் வழிமுறையைப் பின்பற்றி உன் நினைவிலிருந்தும் நீக்கிவிட வேண்டும். அப்படிச் செய்தாலொழிய நீ தொடர்ந்து உயிரோடு ஜீவிக்க முடியாது".

எனக்கு திக்கென்றது. அறிந்ததை மறந்துவிடும் பட்சத்தில் அதனால் என்ன பயன்? மெதுவாக மரணத்திடம் கேட்டேன்.

"இறப்புக்குப் பிறகு மனிதன் அடையும் நிலையை அறிந்து கொண்டு பிறகு மறந்து விடுகிறேன் எனில் என்னுள் இப்போது கிடந்து அலைபாயும் இந்தக் கேள்வி, இறப்புக்குப் பின் மனிதன் என்ன நிலையை அடைகிறான் என்ற கேள்வி திரும்பவும் குடைய ஆரம்பித்து விடாதா?"

"நன்றாகக் கேட்டாய்." மரணம் என் அறிவை மெச்சியது போலிருந்தது. "நீ உண்மையை அறியும் அந்த கணப்பொழுதில் உன் அந்தராத்மாவில் கிடந்து அலையும் ஓயாத அக்கேள்வியின் ஊற்றுக் கண்கள் என்றென்றைக்குமாக அடைந்துவிடும். அப்பேருண்மையை உன்னால் விளக்கிக் கூறமுடியாதே தவிர அவ்வுண்மையின் நிழல் உன் ஆத்மாவுள் படிந்து ஆயுள் பரியந்தம் உனக்கு அமைதியைத் தந்து கொண்டிருக்கும்."

இது போதும் என்று பட்டது. பேருண்மையை தரிசிக்கும் அந்த கணப் பொழுது போதும். மரணத்திடம் உடன் வர சம்மதித்தேன்.

மரணம் என் கையைப் பற்றி அழைத்துச் சென்றது. ஏதோ அந்தரத்தில் படியேறுவது போன்ற பிரமை. படிகளின் முடிவில் இருந்த கதவைத் தள்ளித் திறந்தது மரணம். இருவரும் உள்ளே நுழைந்ததும் கதவு மூடிக் கொண்டது.

இருளும் ஒளியும் கலந்து மயங்கிய அந்திப் பொழுதையொத்த சூழல் அது. ஒரு பசிய புல்வெளி. மரமோ செடியோ ஒன்று கூட இல்லை. எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்று புற்கள். நடுவே ஒரு குளம். அதில் பளிங்கு போன்று தெளிந்த நீர் அசைவற்றிருந்தது.

புல்வெளியின் மையத்துக்கு அழைத்துச் சென்ற மரணம் என்னை அந்தக் குளத்தினோரம் நிற்கச் செய்தது. தன் கண்களை மூடி கைகளை விரித்தது. திடீரென பிரகாசமான வெள்ளொளி அவ்விடத்தை சூழ்ந்தது.

"பார்" என்றது மரணம். அக்குரல் மரணத்தின் குரலாக இல்லாமல் எனக்குள்ளேயே கேட்டது போலவும் இருந்தது.

என் கண்முன்னே அப்பேருண்மை ஒரு பூவென விரிந்தது. அதை உணர்ந்தபோது மனம் ஆனந்தக் கூத்தாடியது. உடல் பூரித்தது. என்னவொரு திவ்யதரிசனம். வாழ்வின் முடிவில் நிகழ்வது இதுதானா? மானுடருக்குப் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லையென மரணம் சொன்னது சரிதான். அட, நான் எப்படிப் புரிந்து கொண்டேன்? நான் சாதாரணமானவனாக இல்லை என்பதை உணர்ந்தேன். உடனே ஒளியாகிப் போன மாதிரி அல்லது காற்றுப் பையாகிப் போன மாதிரி இருந்தது. இந்த உண்மையை உலகறியக் கூறவேண்டும். இல்லையேல் என் கபாலம் வெடித்துவிடும்.

"ஆயிற்றா?" மரணத்தின் குரல் என்னைக் கலைத்தது.

"ஆம்" என்றேன் பரவச நிலையிலிருந்து விடுபடாமலே.

"சொன்னது நினைவிருக்கிறது இல்லையா? இப்போது இந்தப் பேருண்மையை அறிந்த நிலையில் நீ உன் பூர்வ நிலைக்குத் திரும்ப முடியாது. இதோ இந்தக் குளத்தில் இறங்கி மூழ்கி வெளியே வா. உன் நினைவிலிருந்து பேருண்மை அகன்று மறுபடி நீ மானுட நிலைக்குத் திரும்பலாம்."

"என்ன, இப்பேருண்மையை மனதிலிருந்து அகற்றி விடுவதா, முடியாது. என்ன விலை கொடுத்தாகிலும் இதை சக மானிடருக்கு பறை சாற்றியே தீருவேன்". மனதிற்குள் கங்கணம் கட்டியபடி மெதுவாக குளத்தை நெருங்கினேன். என் மனதை ஒருவித உன்மத்தம் பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருந்தது.

குளத்தை நெருங்கியதும் உள்ளே இறங்காமல் வெறிபிடித்தவன் போல ஓட ஆரம்பித்தேன். புல்வெளியில் கால்களைப் பதித்து வேகமாக ஓடினேன். காற்றில் பறந்து போவது போல இருந்தது.

"ஓடாதே, நான் சொல்வதைக் கேள். ஆபத்தில் சிக்கிக் கொள்ளாதே!" மரணத்தின் குரல் பின்னால் கேட்டது. அதை சட்டை செய்யாமல் ஓடிக் கொண்டேயிருந்தேன். திடீரென்று புல்வெளி முடிந்து எதனுள்ளோ விழுந்தேன், அது ஒரு குளம். இல்லை, வெற்றுவெளி. இல்லையில்லை, இரண்டும் போல இருந்த ஒரு புது வெளி. நீருக்கடியிலிருந்து மேலே வருவது போலவும் வெளியில் குதித்து கீழே மிதந்து இறங்குவது போலவும் உணர்ந்தேன். சற்று நேரத்தில் எனக்கு நினைவு தப்பியது.

உணர்வு வந்தபோது நீண்ட நேரம் கடந்து விட்டது போலிருந்தது. கண்களை பிரயாசைப்பட்டுத் திறந்தேன். மேலே கனமாக எதுவோ போர்த்தப்பட்டிருந்தது. எண்ணெய் விளக்கு வாசமும் ஊதுவத்திப் புகை மணமும் கலந்து வீசியது. சுற்றிலும் உறவினர்கள் கூடி அழுது கொண்டிருந்தனர்.

என்னவாயிற்று எனக்கு? ஏன் இவர்கள் அழுகிறார்கள்? நானறிந்த பேருண்மை இன்னும் நினைவில் இருந்தது. "அழாதீர்கள், நிறுத்துங்கள் உங்களுக்கெல்லாம் ஒரு பேருண்மையை சொல்லப் போகிறேன்." என் குரல் எனக்குள்ளேயே எதிரொலித்து அடங்கியது. என் அசைவுகள் காற்றின் அசைவுகள் போலிருந்தன. அவை என் உடலில் பிரதிபலிக்கவில்லை. தொடர்ந்த என் கூக்குரலோ உடலை அசைக்க முயலும் பிரயத்தனங்களோ எவராலும் கவனிக்கப்படவில்லை. பீதியோடு மெதுவாகவே அதைப் புரிந்து கொண்டேன். நான் இறந்து விட்டிருந்தேன்.

அதே நேரம் அங்கு நின்றிருந்த மக்கள் கூட்டத்தினிடேயேயும், அந்தரத்திலும், ஜன்னல் திரைச்சீலைகள் மீதும், மின்விசிறி மீதும், கூரையடியிலும் வெற்றாகக் கிடந்த இடங்கள் யாவிலும் புகையுருவங்கள் போல நூற்றுக்கணக்கானவர்கள் நின்றபடியும் அமர்ந்தபடியும் படுத்தபடியும் ஓயாது எதையோ உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த மனிதர் காதுகளில் விழாத அந்தக் குரல்கள் எனக்குத் துல்லியமாகக் கேட்டன. அவர்கள் மரணம் பற்றிய பேருண்மையை சத்தம் போட்டு சொல்லிக் கொண்டிருந்தனர்.

நன்றி: வார்த்தைப்பாடு

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link