சிறுகதைகள்


அந்த நெலாவத்தான் கையில புடிச்சேன்..

கூடல்.காம்
ஊர்க் கூட்டம் மொத்தமாகக் கூடியிருந்தது. கூட்டத்தின் நடுவில் ஊர் சாட்டும் வெள்ளையன்.. சாணியில் கோடு போட்ட வட்டத்துக்குள் கதிரழகி நின்று கொண்டிருந்தாள். இன்னொரு சாணி வட்டத்துக்குள் பூவண்டன் கைகளைக் கட்டியவாறு நின்று கொண்டிருந்தான்.

கூட்டம் முடிந்து நாட்டாமையும், ஊரின் முக்கிய பெரிய ஆட்களும் அவர்களை "போகலாம்" என்று சொல்லும்வரை கதிரழகியும், பூவண்டனும் அந்த வட்டத்துக்குள்தான் நிற்க வேண்டும். இது ஊர்க் கட்டுப்பாடு!

கதிரழகியின் நெஞ்சுக்குள் நெருங்கிய சேத்திக்காரி தனம் நேற்று வந்து சொல்லி விட்டுப் போன சேதி, அவளை கத்தி கொண்டு அறுத்தது போல் ரணகளமாக்கிக் கொண்டிருந்தது. அன்று இரவு நேரம் களை வெட்டி விட்டு வந்தவளுக்கு உடம்பு அசதியாக இருந்தது. சாப்பிட உட்கார்ந்தபோது, அவள் அம்மா சொன்னாள்..

"இந்தா கதிரு.. குளிச்சிட்டு சாப்புடு" என்றதும் அவள் சிணுங்கினாள்.. "போத்தா! எனக்கு ஒரே அலுப்பா இருக்கு. இந்த மனைக்கு சாப்பிட்டுப் படுக்கப் போறேன்.. என்ன குளி, கிளின்னு ஒன்னும் சொல்லாத"

"ஏத்தா.. உண்டானவகளுக்கு எண்ணயும் சோறும், இல்லாதவகளுக்கு வென்னியும், சோறுமின்னு சொலவட. ஒரு பான வென்னியப் போட்டு கொல்லையில தூக்கி வச்சிருவேன். மோந்து மோந்து ஊத்தி குளிச்சிட்டு வந்து சாப்பிட்டுட்டுப் படு. உடம்பு பொடச்செடுத்தாப்புல இருக்கும்" என்று சொல்ல, முனங்கிக் கொண்டே கொல்லைப் பக்கம் போனவள், குறுக்கு வழியாக அவள் சேத்திக்காரி தனம் ஓடி வருவதைப் பார்த்தாள்..

"இவ எதுக்கு இப்படி ஓடியாறா" என்று நினைத்தவள் அதைக் கேட்க, "நீ மந்தைக்கு வா! உங்கிட்ட ஒரு விசயம் சொல்லணும்" என்றாள் தனம்.

"இவளுக்கு வேற வேலயில்ல" என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தாள். பௌர்ணமிக்காக வளர்ந்து கொண்டிருந்த நிலா மேகத்தினூடே புகுந்து, புகுந்து வெளிவந்து கொண்டிருந்தது.

விறுவிறுவென்று நடந்த தனத்தைப் பிடித்து நிறுத்தினாள் கதிரழகி. "என்ன தனம் நடந்துக்கிட்டே இருக்கே.. எதுக்காக இப்ப என்னக் கூப்பிட்டே? பூவண்டன் கண்டு வந்துருக்காரா?" என்று கதிரழகி ஆசையாகக் கேட்க, "ஆமா! அவர் வருவாருன்னு நீ நெனச்சுக்கிட்டு இரு. அவனுக்கு வார வெள்ளிக்கெழம கல்யாணம் நடக்கப் போவுதாம்.." என்று தனம் சொன்னதைக் கேட்டு, சாட்டையடி வாங்கியவள் போல் துடித்துப் போனாள் கதிரழகி.

"என்ன சொல்றே தனம்?"

"ஆமா கதிரு! இப்ப பூவண்டன் பாக்குற வேல அதுவா கெடைக்கலயாம். அவனுக்கு மேல ஆபீசரா இருக்குறவரு பொண்ணுக்கு ஒத்தக் காலு ஒச்சமாம். "அவளக் கட்டிக்கிட்டா உனக்கு நானு வேல வாங்கித் தாரேன்"னு அவரு சொல்ல, இவனும் சம்மதிச்சிட்டானாம்" என்று தனம் சொல்ல,

"இருக்காது.. அப்படியெல்லாம் இருக்காது. என் பூவு அப்படியெல்லாம் என்ன ஏமாத்த மாட்டாரு" என்று கதிரழகி அலற, அவளை ஆதரவாகக் கட்டிக் கொண்டாள் தனம்.

"நீ இப்படி அவன் மேல உசுராக் கெடக்கே. ஆனா அவன் ஆத்தாகிட்ட, "எம்மா! நம்ம ஊர்ல வச்சி எங்கல்யாணத்த நடத்தினா கதிரு ஏதாச்சிலும் எடஞ்சலு பண்ணுவா. நம்ம பட்டணத்துல வச்சே கல்யாணத்த நடத்திருவோமி"ன்னு சொல்லியிருக்கான். அவன் ஆத்தா, அய்யாவும் அதுக்கு சம்மதிச்சிட்டாகளாம். நாளைக்குப் புறப்படுதாகளாம்" என்று தனம் சொல்லச் சொல்ல.. கழுத்தறுபட்ட ஆடு போல் துடித்தாள் கதிரழகி.

அடர்ந்திருக்கும் சோளக் காட்டிலும், துவரங் காட்டிலும் தன்னோடு அவன் கொஞ்சியதையும் குலாவியதையும் நினைக்கையில், அவள் நெஞ்சில் ரத்த விளாறுகள் கீறிட்டன. அவன் போய் இன்றோடு ஒரு மாதம்தான் ஆகும் என்று மனதுக்குள்ளே கணக்குப் போட்டாள்.

போகும்போது கூட அவள் கன்னத்தில் பதிய முத்தமிட்டவன், "இன்னும் மூணு மாசம் பொறுத்திரு. நான் அதுக்குள்ள திரும்பி வந்து ஊரார் அறிய உன் கழுத்துல தாலி கட்டுவேன்"னு சொல்லிட்டுப் போனானே.. அந்தக் கன்னத்து ஈரம் உணருமின்னமே இப்பிடியொரு சேதியா?.. நினைக்க நினைக்க ஆறவில்லை கதிருக்கு!

இன்னொரு வட்டத்துக்குள் நின்று கொண்டிருந்த பூவண்டனும் கொதித்துப் போயிருந்தான்.

"ஆளு கொஞ்சம் மூக்கும் முழியுமா, அம்சமா இருக்காளே..னு இவகிட்ட கொஞ்சம் நெருங்கிப் பழகுனது தப்பாவில்ல போச்சி. இப்ப இவ நம்ம எதிர்காலத்தவே இல்ல கெடுத்திருவா பொலுக்கோ!" என்று எண்ணி கொதித்துப் போயிருந்ததோடு, அவளைத் தீப்பார்வையாகப் பார்த்தான்.

ஊர் சனம் மொத்தமும் அங்கே கூடியிருந்ததில், கூச்சத்தில் அடிபட்டவளாய் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டிருந்த கதிரழகியிடம்தான் முதலில் நாட்டாமை விசாரணையை ஆரம்பித்தார்.. "தாயீ கதுரு! உனக்கும் பூவண்டனுக்கும் எப்படி பழக்கமாச்சி? நீங்க என்ன மாதிரி பழவுனீகங்கதயெல்லாம் ஊர்க்காரகளுக்கு தும்பலமா (தெளிவா) எடுத்துச் சொல்லு" என்றார்.

நாலு பக்கமும் திரண்டு இருந்த ஆட்களை ஓரக் கண்ணால் ஒரு பார்வை பார்த்த கதிரழகி, தன்னைத் தானே தெம்புபடுத்திக் கொண்டவளாய், "இந்தா பாரும் தாத்தா! நானும் இவரும் ஆறு மாசமா ஒருத்தரு உசுர, ஒருத்தரு மேல வச்சி, உள்ளங்கையும் பெறங்கையுமா.. ஒன்னா மன்னா பழகிக்கிட்டு இருக்கோம்" என்றதும், நாட்டாமை குறுக்கிட்டார்..

"ஒன்னா மன்னான்னா.. என்ன அருத்தத்தில சொல்லுத?" என்றதும், "அதத்தான சொல்லிக்கிட்டு வாரேன். அதுக்கு முன்ன நீரு குறுக்க வந்தீருன்னா, நானு என்ன செய்யட்டும்?" என்றாள்.

உடனே கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும், "அவள முழுசா சொல்ல விடும். குறுக்க, குறுக்க என்னத்தவும் போயி கேட்டுக்கிட்டு இருக்காதரும்!" என்று மொத்தமாய்க் குரல் எழுப்ப, "சரி.. சரி.. நீ சொல்லு தாயி" என்றார் நாட்டாமை.

"அப்படிக் கேளும்!" என்ற கதிரழகி தொடர்ந்தாள்.. "நானும் இவரும் அப்படி பழகிக்கிட்டு இருக்கையில, ஒருநா.. உச்சி நேரம். வெயிலு அனலா கொளுத்துச்சு. ஒரு தூசி எழுப்புத காத்துகூட இல்ல. நானு வெண்டத் தோட்டத்துல கள பெறக்கினதுல உடம்பெல்லாம் கசகசனு இருந்திச்சு. கெணத்துல விழுந்து ஒரு முங்கு முங்கிட்டு வருவோமின்னு நெனச்சி, அதுப்படியே குளிச்சிட்டு வந்து கல்லக்கா மரத்து மறவில நின்னு, ஈரச் சீலய உணத்திக்கிட்டு இருந்தேன். அப்பத்தேன் மச்சான் பூவண்டன் அங்குட்டுக்கூடி வந்தாரு" என்றதும், கூட்டத்திலிருந்து, "நல்ல நேரத்துலதேன் வந்திருக்கான்" என்று மூலைக்கு ஒரு திக்கமாய் யார் யாரோ குரல் கொடுக்க, நாட்டாமை கோபத்தோடு கத்தினார்..

"யாருடா அந்த படுக்காளி பய புள்ளைக, இப்ப பேசாம இருக்கப் போறீகளா? இல்ல.. உங்களுக்கும் ஒரு கூட்டம் வைக்கட்டுமா?" என்றதும், கசமுசவென்று பேசிய சத்தம்கூட, கப்பென்று அடங்கிப் போனது.

"ம்! நீ சொல்லு.." என்று நாட்டாமை சொல்ல, பெருமூச்சு விட்டாள் கதிரழகி.

"என்னத்த சொல்லச் சொல்லுதீரு? அந்தமான இவரு ஈரச் சீலயோட இருந்த என்னைக் கட்டி....." என்றதும், பூவண்டன் "பொய்யி, பொய்யி! இவ சொல்லது அம்புட்டும் பொய்யி" என்று அலறினான். நாட்டாமை அவனை எரிச்சலோடு பார்த்தார்.

"நம்ம ஊரு கட்டுப்பாடு தெரியுமில்ல. ஒருத்தருகிட்ட கேட்டுக்கிட்டு இருக்கேல, இன்னொருத்தரு பேசக் கூடாது. அவ மொத சொல்லட்டும்" என்றவர், "நீ சொல்லு தாயீ" என்றார்.

கதிரழகி விம்மிக் கொண்டே சொன்னாள்.. "அன்னைக்கே நாங்க புருசன் - பொண்டாட்டி கணக்கா குடும்பமா இருந்துட்டோம்!" என்றதும் மீண்டும் அலறினான் பூவண்டன்.

"இவ சொல்லத யாரும் நம்பாதீக. இவ மேல என் சுண்டு விரல் கூட இதுவரைக்கும் பட்டதில்ல. இந்த ஊரு அம்மன் மேல சத்தியமா சொல்லுதேன்" என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே, "சத்தியம் இவருக்கு சக்கர பொங்கலு! எத்தனையோ தரம் எங்கிட்டயும் இவரு இப்படித்தேன் பேச்சுக்குப் பேச்சு சத்தியம் செஞ்சிருக்காரு" என்றாள் கதிரழகி.

"சரி தாயி! அவனும் நீயும் ஒன்னு மன்னா இருந்ததுக்கு ஏதாச்சிலும் சாக்கி இருக்கா?" என்று நாட்டாமை கேட்க, "என்ன தாத்தா.. இதுக்கெல்லாம் யாராவது சாக்கிய வச்சிக்குவாகளா? மேல இருக்க ஆகாசவாணியும் (ஆகாயம்), கீழ இருக்க பூமாதேவியும் அங்க இருந்த மூங்கில் காடுந்தேன் சாக்கி!" என்றாள் கதிரழகி.

பூவண்டன் பக்கம் திரும்பினார் நாட்டாமை. "சரி பூவு! இப்ப நீ உம்புறத்து நாயத்தச் சொல்லு" என்றார். ஊர் சனம் மொத்தமும் இப்போது அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.

பூவண்டன் கண்களில் சிவப்பேற, ஆத்திரத்தில் துடித்துக் கொண்டிருந்தான். தான் நிற்கும் வட்டத்தை விட்டு வெளியே வந்து கதிரழகியை நாயடி பேயடியாய் அடித்துக் கொன்று விட வேண்டுமென்ற அளவுக்கு அவனுக்கு வெறியேறியிருந்தது.

நாட்டாமை கேட்டதுமே அவன் சீறினான்.. "என்ன சொல்லச் சொல்லுதீரு? இப்ப அவ சொன்னது அம்புட்டும் பொய்யி. நானு அவகூட ஒன்னா மன்னா இருந்தனா, இல்லையாங்கிறத இப்ப பட்டினத்துல இருக்க டாக்டரு அவள சோதிச்சுப் பாத்து ஒரு நிமிசத்துல கண்டுபுடிச்சிருவாக. நீங்க எல்லாரும் எங்கூட வாங்க. போயி டாக்டரப் பாத்து இவ குட்டு நட்டவெல்லாம் நானு வெளியேத்துறேன்" என்றான் ஆவேசமாக!

"இவன் எவன் விருதா கிறுக்குப் பயலாவில்ல இருக்கான்.. நமக்கு மழயக் கொடுத்து செழிக்க வைக்கிற ஆகாசத்தையும், தவசத்த வெளய வச்சி நம்மள வாழ வைக்கிற பூமாதேவியையும் அந்தப் புள்ள சாக்கியா சொல்லியிருக்கா. இதுக்கு மேல ஒரு சாக்கி வேணுமா?

அதோட இல்லாம, ஒரு கொமரிப் புள்ள ஊர்க் கூட்டத்தக் கூட்டி, "நானு இன்னாருகூட குடும்பமா இருந்தேன்"னு சொல்லணுமின்னா, அவ எம்புட்டு தூரத்துக்குத் தன்னோட மானம், ரோசத்தையெல்லாம் விட்டுட்டு வந்துருப்பா. என்ன நானு சொல்லுறது சரிதான?" என்று நாட்டாமை ஊர்க் கூட்டத்தைக் பார்த்துக் கேட்க, "ஆமா, நீரு சொல்றதுதேன் சரி!" என்று ஆள் ஆளுக்குக் கத்தினார்கள். அவர்களை அமர்த்திய நாட்டாமை, "அதனால பூவண்டா.. இம்புட்டுத் தூரம் ஆன பெறவு, உங்க கல்யாணத்தத் தள்ளிப் போடக் கூடாது. வார வெள்ளிக்கெழம உனக்கும், அவளுக்கும் நம்ம ஊரு அம்மன் கோயில்ல வச்சி கல்யாணம் நடத்துறோம். உங்க கல்யாணச் செலவ ஊரு ஏத்துக்கிடுது" என்றதும், நாட்டாமையை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டாள் கதிரழகி.

கூட்டம் முடிந்து வருகிற வழியில் தனம், "ஏன் கதுரு.. நீ அவன விரும்புத.. பழகுதனு நெனைச்சேன். ஆனா, இப்பிடி அவன்கூட இருப்பனு நானு கெனாவுலயும் நெனக்கல! சே... நீயெல்லாம் ஒரு பொம்பள" என்றாள்.

"போடி.. போ! நான் சொன்னத ஊர்க்காரகதேன் நம்புனாகன்னா, நீயுமா நம்பிட்டே?" என்று சோகத்தோடு சிரித்தவள், "மனசு முழுசையும் தூக்கிக் குடுக்குறதும் ஒடம்பைக் குடுக்குறதும் ஒண்ணுதேன் தனம். "அதுக்கு இப்பிடி ஊரைக் கூட்டி சொல்லணுமா"னு நினைக்கிற.. சொன்னாத்தேன் நாயம் கெடைக்கும்னா.. வேறென்ன செய்ய.. சொல்லு.." என்றாள். தனத்துக்கு பதில் சொல்ல வாயில்லை!

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link