சிறுகதைகள்


ஸ்ருதி லயம்

கூடல்.காம்
கொஞ்ச காலமாகவே இப்படித்தான் மாறிப் போய் விட்டார் வெங்கடேசன். இம்மாதிரி இருப்பதில் ஒரு அதீத சந்தோஷத்தையும் திருப்தியையும் உணர்ந்தார். தெருவில், ஊஹூம் ஹும் அந்த வீதியில், அப்படித்தான் சொல்ல வேண்டும். மிக நீண்டு கிடந்தால் வீதிதானே! பல வீட்டின் வாசலில் நின்ற கண்கள் அவரை நோக்கியே படிந்து கிடந்தன.

அனைவரும் பெண்கள். அதுதான் அங்கே விசேடம். சே நமக்கு இப்டி ஒரு மனுஷன் கிடைக்கலியே என்ற ஏக்கம் எல்லோர் கண்களிலும்.

"திருஷ்டி... திருஷ்டி...சட்டுன்னு உள்ளே வாங்கோ..." திண்ணையில் நின்று கொண்டிருந்த மரகதத்தின் ஆதங்கம் மெலிதாக இவர் காதுகளை உரசியது. அந்த வார்த்தையை அவள் சொன்னதன் மூலமாகவே தனது பணியின் அத்யாய அவசியத்தை உணர்ந்து பெருமைப்பட்டுக் கொண்டார் அவர்.

புழுதி பறக்காமல் இலை தழைகளை மட்டும் எப்படி ஒன்று கூட்டி ஒதுக்க வேண்டும் என்று சமீபமாய்த்தான் கற்றுத் தேர்ந்திருந்தார். அதற்குத்தான் தென்னை விளக்குமாறு வேண்டுமென்பது அவரின் பிடிவாதமாய் இருந்தது.

"இதுக்குத்தான் சொன்னேன்... வேலைக்காரம்மாவை நிறுத்த வேண்டாம்னு... கேட்டீங்களா அந்தம்மா இருந்ததுன்னா படக்குன்னு சந்தைல போய் அதை வாங்கிட்டு வந்திடும்... இப்போ யார் போறது"

"கேட்டுட்டீல்ல... நாந்தான் போகணும்... இந்த வீட்டுல மிச்சம் இருக்கிறது நாந்தானே... பையனா இருக்கான்... இல்ல இருந்தாத்தான் அவன்ட்ட சொல்ல முடியுமா நாந்தான்... நானேதான்... போயிட்டு வர்றேன்... இதிலென்ன கேவலம் இருக்கு. அதெல்லாம் பார்த்தா ஆகுமா. விளக்குமாத்தைக் கட்டித் தூக்கிட்டு வந்தா இளப்பமா, நம்ப வீட்டுக்காகத்தானே செய்யறோம். இதுக்குத்தான் சொல்றது கொல்லைல விழற மட்டையை எடுத்து வெளில போடாதேன்னு. அடையுதேன்னு வெளில தூக்கி வீசினா, சமயத்துக்குப் பயன்படாமப் போறதில்லையா. ஓலையைப் பிச்சுப் பிச்சு ஈர்க்கல்லைச் சேர்த்தா, விளக்குமாறாச்சு... பொறுமையாச் செய்யணும்... அவ்வளவுதான்" சொல்லிவிட்டு அவர்தான் போய் வந்தார்.

"என்ன சார் என்னவோ வாங்கிட்டு வர்றாப்ல இருக்கு" என்றார் எதிர்ப்பட்ட நண்பர் விநாயகம். நிச்சயம் யாரேனும் கண்ணில் படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது வெங்கடேசனிடம். மனசு தக்க பதிலையும் தயார் செய்து வைத்திருந்தது. அதனால் அவர் அதிரவில்லை. இனிமேலெல்லாம் எதற்கும் அதிரத் தயாரில்லை என்பது அவர் ரொம்ப நாளைக்கு முன்பே செய்து கொண்ட முடிவு. இருக்கும் சொச்ச நாட்களை மனைவிக்கென்று வாழ்ந்து கழிப்பது எதுக்கும் அவளை அசைய விடுவதில்லை. அத்தனை மனசாட்சி உறுத்தியது அவரை. உட்கார்ந்து தின்று தின்றே எத்தனை ஆண்டுகள் கழிந்து விட்டன. கொஞ்சமேனும் அவள் பாட்டை எண்ணினோமா தானுண்டு தன் வேலையுண்டு என்றால் வீட்டில் கூடவா அது பொருந்தி வரும். சகதர்மிணி என்றால் வெறும் உடல் சுகத்திற்கும், தனக்கு பொழுது பொழுதாய் வடித்துக் கொட்டுவதற்கும் மட்டும்தானா எல்லாவற்றிற்கும்தானே பங்கு. இப்போதுதான் இது அழுந்த உறைக்கிறது. ஆனால் இத்தனை காலம் வாய் திறந்ததில்லையே அவள்? எத்தனை பக்குவம் இருந்திருந்தால் அவளுக்கு இது சாத்தியம்? இவரா இப்படி? அதிர்ந்துதான் போனாள் மரகதம். அவளை அப்படி அயர வைக்க வேண்டுமென்பதுதானே இவரது நோக்கம். மனதின் ஆதங்கமாய் அல்லவா போய்விட்டது இந்த விஷயம்.

"ஆமா சார்... முன்னெல்லாம் வாசல்ல அடிக்கடி வரும்...இப்போ யார் கொண்டு வர்றா அந்தக் காலமெல்லாம் போச்சு... வீதில வராத சாமானேயில்லைங்கலாம். இந்தப் பலாப் பொடின்னு ஒண்ணு கொண்டு வருவான் பாருங்கோ. கேள்விப்பட்டிருக்கீங்களா? எங்கூர்ல வருமாக்கும். சாப்டிருக்கீங்களா? படி ஒரணா விக்கும். கும்மாச்சியா, கையை அணைச்சு அளந்து போட்டுட்டு ஒரு பிடி வேறே அள்ளிப் போடுவான் அவா மனசு தெரியும் அதுல... இப்போ அதையெல்லாம் கண்ணுலயே பார்க்க முடியல... அதுல கறி பண்ணிச் சாப்பிட்டா தேவாம்ருதமா இருக்கும்..."

"ஆமா சார். உண்மைதான்" என்றார் அவர். அதற்குமேல் என்றால் மனுஷன் பேச்சுக்கு நிப்பாட்டிவிடுவார். படக்கென்று ஒத்துக் கொண்டால் விஷயம் முடிந்து போகிறது பாருங்கள். நழுவப் பார்த்தார் வந்தவர். இவர் விட்டால்தானே "கட்டிப் பெருங்காயம் கேள்விப்பட்டிருக்கேளா... கேரளாலெர்ந்து ஒருத்தர் கொண்டு வருவார். ஊரே மணக்குமாக்கும். பாரதியார் கணக்கா தலைல முண்டாசு கண்டிண்டு நாமம் போட்டிருப்பார். ஒத்தையா, மூணு கோடா ஞாபகம் இல்லை... பெரு... பெரு... பெருங்ஙேயம்ன்னு குரலை நீட்டிண்டு நடுத்தெருவுல ஒரு வீட்டுத் திண்ணைல இறக்குவார். ஊரே கூடிடுமாக்கும்.. பொம்மனாட்டிகள் ஒத்தர் விடாம வந்து நிப்பா... இதுல கடன் வேறே...அதெல்லாம் முடியாதுன்னுதான் சொல்லுவார் முதல்ல... கடைசில கொடுத்துட்டுத்தான் போவார்னு வச்சிக்குங்கோ... ஆறு மாசம் கழிச்சு வந்து வாங்கிக்குவார்...அதுக்குத்தான் முதல்ல மாட்டேன்னு பிடிவாதம்... அந்தளவுக்கு மனுஷா மேலே ஒரு நம்பிக்கை இருந்த காலம்..."

இன்றுவரை மனைவி ஒருத்திதானே துணையிருக்கிறாள். அவளும்கூட இப்போதுதான் உணர்ந்திருக்கிறாளோ சிலதைப்பற்றி தனக்குக் கடைசிவரை இவர்தான் துணையென்று... பையனோடு சேர்ந்து கொண்டு என்ன ஆட்டம் போட்டாள் அவன் பிய்த்துக்கொண்டு ஓடக் காத்திருப்பவன் என்பது அவளுக்கே இப்பொழுதுதான் புரிந்திருக்கிறது போலும் பசங்களைச் சொல்லி என்ன செய்ய? இந்தக் காலத்துப் பெண்டுகளே அப்படித்தான் இருக்கிறதுகள் பையனுக்கு அப்பா அம்மா இருக்கக் கூடாது. இருந்தாங்கன்னா தனியா இருக்கணும். அதுவும் வெளி நாட்டுல... அப்படிப் பையனா பாருங்க எனக்கு... கேட்கிறார்களே கண்டிஷன் போடுகிறார்களே இல்லை என்று மறுக்க முடியுமா?

அவர்களாகவேயல்லவா நிர்ணயம் செய்து கொள்கிறார்கள். சரி என்று தலையாட்டாவிட்டால் யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடி விடுவார்கள் போலல்லவா இருக்கிறது? அதுதான் இந்தச் சினிமா, டி,வி. எல்லாமும் வழிகாட்டுகின்றனவே, நடப்பைப் பார்த்துப் படம் எடுக்கிறார்களா அல்லது படத்தைப் பார்த்து நடப்பு வந்ததா? எது எப்படியானாலும் நிகழ்வது என்னமோ உண்மைதான். இந்தச் சீரழிவிற்கு எங்கு போய் மருந்து தேடுவது? ஆனால் தனக்கு ஒரு பெண் இருந்தால் நிச்சயம் அப்படியெல்லாம் சொல்லாது, செய்யாது. மகளாய், தாயாய் கடைசிவரை தன்னை வைத்துக் காப்பாற்றும். கடைசிவரை தன்னிடம் பாசத்தைப் பொழிந்துகொண்டேயிருக்கும். ஏனோ அவர் மனம் இப்படித்தான் சொல்லியது. அந்த ஏக்கம்தான் வேலைக்காரப் பெண்ணை நிறுத்தியபோது கூட அவரைக் காயப்படுத்தியது.

சாந்திட்டக் கொடுத்து விடு காபியை...நீ ஏன் கொண்டு வர்றே என்பார். அய்யா... என்று கூப்பிட்டுக்கொண்டே அது வந்து நிற்கும். அப்பான்னு கூப்பிடலாமே என்றார் ஒரு நாள். "போதும்" என்று பட்டென்று சத்தம் வந்தது அடுப்படியிலிருந்து. பிறகு இவர் வற்புறுத்தவில்லை. சாந்தியின் முகம் அன்று எப்படிச் சுருங்கிப் போனது. அந்தச் சின்னக் குழந்தையின் மனத்தை அப்படியா காயப்படுத்த வேண்டும். அதுக்குமே கூட அந்த ஆசை இருந்திருக்குமோ என்னவோ ஆனாலும் மரகதத்தின் விருப்பத்தை மீறி எது நடக்கும்? ரொம்ப ஓவர் என்று அவள் முனகுவது தெரிந்தது இவருக்கு. வாயடைத்துப் போனார் அதோடு. நா வீட்டுல சும்மாத்தானே இருக்கேன்...நான் பார்த்துக்கிறேன்...அதுக்கு வேறே மாசம் நானூறு எதுக்கு ரெண்டு பேப்பர்ல ஒண்ணை நிறுத்தியாச்சு...அதான் சதா டி.வி.ல சொல்லிண்டேயிருக்கானே... இப்படியாக மாசம் ஐநூறு மிச்சப்படுத்தி விட்டார். அந்தப் பெண்ணுக்கும் நிறைய வீடுகள் இருந்தன. அதனால் பெரிய பாதிப்பு ஒன்றுமில்லை. ஆனாலும் ஒன்று சொன்னது அன்றொரு நாள்.

முத முதல்ல ஒங்க வீட்டுக்குத்தான் வேலைக்கு வந்தேன். பெறவுதான் இத்தன வீடுக கிடைச்சிச்சு...அதனாலதான் ஒங்ககிட்ட மட்டும் சம்பளத்தக் கூட்டியே கேட்குறதுல்லன்னு இருந்தேன்.. பண்பாட்டின் அடையாளங்கள் அவ்வப்போது எப்படியெல்லாம் வெளிப்படுகின்றன!

எத்தனை வருஷமாய்ச் செய்திருக்கிறாள் மரகதம்? அந்த சாந்தி கூட நாலைந்து வருஷமாய்த்தானே வந்து போகிறது. அதற்கு முன் வரை மரகதம்தானே எல்லாமும். தான் ஏதாச்சும் உதவி செய்திருக்கிறோமா துரும்பைக்கூட நகர்த்தியதில்லையே சே எத்தனை இறுகிய மனதோடு இருந்திருக்கிறோம்? வெறுமே அப்படி இருந்திருந்தால் கூடப் பரவாயில்லை. பொழுது பொழுதாய்ச் சண்டை வேறு ஒன்றுமில்லாத விஷயத்துக்கெல்லாம் எத்தனை கடித்திருக்கிறோம் அவளை... நினைக்கவே வெட்கமாய் இருந்தது அவருக்கு.

இருவருக்கும் ஒரே வயது. அப்படிக் கூடச் சொல்ல முடியாது, ஆறு மாதம் பெரியவள் அவள். இவர் ஓய்வு பெறுவதற்கு முன்பே அவள் ஓய்வு பெற்று விட்டாள். பலரும் பேசிக் கொண்டார்கள். ஆபீசில்கூட எல்லோருக்கும் தெரியும்தான். இருந்தால் என்ன மூன்று நான்கு வயது வித்தியாசமெல்லாம் கூட இருக்கிறதே பார்க்கிறோமே. இவர் ஆபீசிலேயே கூட அக்கௌன்ட்ஸ் ஆபீசரின் சம்சாரம் ஐந்து வயது பெரியவர்கள்தான். அந்தம்மா கலெக்டர் ஆபீசில் வேலை பார்த்தார். ஓய்வு விழாவுக்குக் கூட இவர் போய் வந்தார். எங்கேயாவது பார்த்ததுண்டா என்ன சார், உங்களுக்கெப்போ அடுத்த வருஷமா என்றார்கள் சிலர்.

இன்னைலேர்ந்து கணக்குப் பண்ணிக்குங்க...சரியா 2010 டிசம்பர் என்றார் அவர். இதிலென்ன ஏற்றத்தாழ்வு இத்தனைக்கும் அது லவ் மேரேஜ்...காதலுக்குக் கண்ணில்லை என்பது சரிதானே வயது வித்தியாசம் நிச்சயம் திருமணத்திற்கு முன்பு எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அது ஒரு பொருட்டில்லை என்பதாய் நடந்திருக்கிறதே வாழ்ந்திருக்கிறார்களே மனசு ஒத்துப்போனால் சரி...அவ்வளவுதானே...அது சரி...இதையே எல்லாவற்றிற்கும் பொருத்திப் பார்க்க முடிகிறதா எல்லாமும் நினைப்பதற்கும் சொல்வதற்கும் எளிமையாய்த்தான் இருக்கிறது. ஆனால் தனக்கு ஒத்துப் போனதா ஒரு கணம் ஸ்தம்பித்துத்தான் போனார் வெங்கடேசன்.

"உங்க ரெண்டு பேர் சண்டைய நினைச்சா எனக்கு வீட்டுக்கு வரவே பிடிக்கலைப்பா...இன்னைக்குச் சொல்றேன்...நான் காலேஜ் படிக்கிறதுன்னா நிச்சயம் வெளியூர்தான்...ஹாஸ்டல்ல இருந்தாவது படிப்பனேயொழிய நிச்சயம் உங்ககூட இருக்க மாட்டேன்...முதல்ல நீங்க ரெண்டு பேரும் உங்ககிட்டே இருக்கிற இந்த ஈகோவை விட்டு ஒழிங்க...அப்பத்தான் வீடு உருப்படும்...சின்னப் பையன் நான் சொல்லித்தர வேண்டியிருக்கு...ரொம்பக் கேவலமா இருக்குப்பா..." சொல்லிக் கொண்டே இருந்து விட்டு கடைசியில் சொன்னதுபோலவே வெளியூர் என்று ஓடி விட்டானே படிப்பு முடிந்து வேலை, வெளிநாடு என்று செல்வானேயொழிய வீடு திரும்பல் என்பது உண்டா. இப்போல்லாம் நாங்க சண்டை போடறதேயில்லடா செல்லம்...ரெண்டு பேருமே டையர்ட் ஆயாச்சு...அப்புறம்...இன்னுமென்ன சண்டை எல்லாத்தையும் விட்டாச்சு..

வெறுமேனே தலையாட்டினான் அவன். டையர்ட் ஆனதனால சண்டை போடறதில்லை என்று தான் சொன்னது அவனுக்கு வேறு அர்த்தத்தைக் கொடுத்திருக்குமோ என்று யோசித்தார் இவர். அப்படின்னா அதுவரைக்கும் சண்டைதான் போடணும்னு ஏதாச்சும் சம்பிரதாயமா அல்லது வேண்டுதலா என்னப்பா நீங்க பேசறது பையன் கேட்பது போலவேயிருந்தது இவருக்கு. அதுக்கில்லடா கண்ணா...இப்பல்லாம் சண்டை போடவே தெம்பில்லைன்னு சொல்ல வந்தேன். அதான் நாடி நரம்பெல்லாம் தளர்ந்து போச்சே....தொட்டபின் பாம்பு என்றும், சுட்டபின் நெருப்பு என்றும் பட்டபின் அறிவதை என் பழக்கமென்றான பின்பு.....அப்பொழுதும் தான் சொன்னது சரியில்லையோ அப்போ, தெம்பிருந்தா சண்டை போடுவீங்க அப்படித்தானே-பையன் கேட்பது போலவேயிருக்கிறது இவருக்கு. அவன் முன்னால் தங்கள் இருவரின் ஒற்றுமையை ஆணித்தரமாக நிரூபிக்க இவர் மனம் பெரிதாகத்தான் அவாவியது. அதற்குத்தான் சந்தர்ப்பமே கிடைக்கவில்லையே ஒரு நாள் எப்பொழுதாவது வந்தாலும்,. சதா சர்வ காலமும் அந்தக் கணினி முன்பே உட்கார்ந்து பழியாய்க் கிடக்கிறான். காதில் எதையோ மாட்டிக் கொண்டு, தனக்குத்தானே பேசிக் கொண்டு, என்னவோ கான்பிரன்ஸிங்காம்...கத்தரிக்காயாம்...எல்லாமுமா இப்படி இயந்திர மயமாகிப் போகும் கைக்கு எட்டாமல் இப்படியா சட்டென்று உயரே போய் நிற்கும் மனித வாழ்க்கை இப்படி ஈரமற்றுப் போய் விட்டதே ஏன்னா...என்ன இன்னைக்கு இப்படிப் பெருக்கிண்டேயிருக்கேள் திரும்பத் திரும்ப...என்னாச்சு உங்களுக்குப் போதும் வாங்கோ... திடீரென்று தன் நினைவுக்கு வந்தவராய் நிமிர்ந்தார் வெங்கடேசன். வீட்டிற்குள் வந்தார் வெங்கடேசன். உள்ளே பரவியிருந்த வெளிச்சம், தான் வெகு நேரம் வெளியே இருந்து விட்டதை உணர்த்தியது.

ரொம்பவும் விடிஞ்சு போச்சா...இன்னைக்கு எழுந்ததே லேட்டு...சரி விடு...நீ போய் உட்காரு...நா சமையலைக் கவனிக்கிறேன்... மோர்க் குழம்பு வைக்கிறேன்னேளே...செய்றேளா...

ஓ...தாராளமா...செய்து பார்த்துட்டாப் போச்சு...எங்கே சொல்லு எழுதிக்கிறேன்... "எழுதல்லாம் வேண்டாம்...சொல்லச் சொல்லச் செய்யுங்கோ...அதான் சரி வரும்... "ம்ம்ம்...அது நமக்குச் சரிப்படாது...சொல்லிடு, அப்டியே எழுதிக்கிறேன்...நானா செய்வேன்...குறுக்கே வரப்படாது...அதான்...

கையில் பேப்பரோடும், பேனாவோடும் தயாரானார் வெங்கடேசன்.

ஒரு வட்டைல அரை ஸ்பூன் துவரம் பருப்பு... பரவால்ல...விக்கிற விலைக்கு ஏத்தமாதிதான் சொல்ற.... அப்டியில்லே...அதான் அளவு...அரை ஸ்பூன் மல்லி...துளி வெந்தயம்...துளி சீரகம் போட்டு கொஞ்சம் தண்ணி விட்டு பத்து நிமிஷம் ஊற வைக்கணும் முதல்ல... பத்து நிமிடம் ஊற வைக்கவும்...ம்...

இதுகளோட மூணு பச்ச மிளகா, ஒரு தேங்கா சில்லு சேர்த்து மிக்ஸில அரைச்சுக்குங்கோ... மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்....எழுதியாச்சு...சொல்லு... அப்புறம் ஒன்றரை டம்ளர் அல்லது 2 டம்ளர், பாருங்கோ இதை, தலையைக் குனிஞ்சிண்டேயிருந்தா எப்படி இதான் அளவு டம்ளர்... மோர் அல்லது தயிர் எடுத்துண்டு அதுல கொஞ்சம் மஞ்சப்பொடி, கொஞ்சம் உப்பு, மிக்ஸில அரைச்ச விழுது, எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்து கொதிக்க விட வேண்டிதான்...நுரை பொங்கி வர்ற போது இறக்க வேண்டிதான்...மோர்க் குழம்பு ஆச்சு...

பொறு, பொறு...பேப்பர்லதான ஆகியிருக்கு....செய்து காண்பிக்கிறேன்...பிறகு பாரு... இந்தக் கிண்டலுக்கொண்ணும் குறைச்சலில்லை...பாத்துப் பண்ணுங்கோ...வெண்டைக்காய் ரெண்டை நறுக்கி, வதக்கி, கொதிக்கிற குழம்புல சேர்க்கலாம்...முருங்கக்காய், பூசணி, சௌ சௌ இப்டி எதுவேணாலும் போடலாம்... அப்டியா...எது வேணாலும் சேர்க்கலாமா நா வெண்டைக்காய் மட்டும்தான்னு நினைச்சிண்டிருக்கேன்... நீ மோர்க் குழம்பே வச்சதில்லையா....அதான் சந்தேகம் வந்திடுத்து...

நாக்கு அப்டியே அழுகிப் போயிடுமாக்கும்...பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது...சேப்பங்கிழங்கு போட்டு எத்தன தடவை வச்சிருக்கேன்...நாக்கை சப்புக் கொட்டிண்டு சாப்டதுல்ல ஒண்ணும் குறைச்சலில்லே பேச்சைப் பாரு பேச்சை... அவளின் கோபத்தைப் பார்த்து ரசித்துப் பொதாகச் சிரித்தார் வெங்கடேசன். "நீ போய் உட்கார்ந்துக்கோ...அல்லது படுத்து ரெஸ்ட் எடு...நான் பார்த்துக்கிறேன்..." வெங்கடேசன் மோர்க் குழம்பு செய்தார் அன்று.

சொன்னபடிதான் எல்லாமும் செய்தார். ஆனால் கணக்காக ஒன்றே ஒன்றை மட்டும் மறந்து விட்டார். பொங்கி வரும்போது இறக்கி விட வேண்டும் என்பதுதான் அது. அதுதானே மோர்க் குழம்பின் ஆதார சூட்சுமம். ஆனால் அதை அவர் எழுத மறந்து விட்டதுதான் பாவம். காதில் வாங்கியதோடு சரி. வெண்டைக்காய் வதக்கிப் போட வேண்டும் என்று எழுதிய கைகள் இந்த முதல் வார்த்தையை எழுத மறந்துவிட்டதென்னவோ துரதிருஷ்டம்தான். அடுப்புல வச்சா கொதிக்கத்தானே செய்யும்... கொதிச்சாப் பொங்கத்தானே செய்யும்...இதச் சொல்லணுமா, எழுதணுமா என்று விட்டிருக்கலாம். ஆனால் கொதித்துக் கொண்டேயிருந்தால் மோர்க்குழம்பு நீர்த்துப் போகும் என்பதுதானே சமையல் கலையின் மையக் கரு... மோர்க் குழம்பைச் செய்யத் துணிந்த வெங்கடேசன் அதற்கு முன்பே நீர்த்துப் போய்விட்டாரோ என்னவோ.

"பாவம்... ஒவ்வொண்ணையும் செய்து பார்த்தாதான்யா தெரியும் கஷ்டம்...காலங்காலமா ஒக்கார்ந்து தின்னே பழக்கப் பட்டுட்டு... அதனாலெண்ணன்னா...நன்னாத்தான் இருக்கு உப்பொரப்பா...சும்மா சாப்டுங்கோ..." மரகதம்தான் சொல்கிறாள். மனதுக்குள் சிரிக்கிறார் இவர். செய்ததை வீணாக்குவதா என்று சொல்லாமல் சொல்கிறாளோ சொல்லாமல் பின்னே மனசு ஒன்றிப் போச்சய்யா...ஒன்றிப் போச்சு...அப்புறம் எவன் என்னத்தைக் கேட்குறது.

என்ன பேச்சையே காணோம் ஓ.கே.வா.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link