சிறுகதைகள்


ஒரு குழந்தை தாயானது!

கூடல்.காம்
வழக்கம் போல் இரவு 10 மணிக்கு கணினி முன் அமர்ந்தான் ரவி. சூடாக பாலை கொண்டு வந்து கொடுத்தாள் அவன் அம்மா. திருமணமே வேண்டாம் என்று ஒற்றைக்காலில் நிற்கும் மகனைப்பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு நகர்ந்த போது, அம்மா இங்கே வாயேன் என்று கையைப் பிடித்து இழுத்தான் ரவி.

"என்னடா?"

"நெட்டில் இந்தப் படத்தைப் பாரேன்" என்று காண்பித்தான். அது ஒரு அழகான பெண்ணின் படம். மணமகன் தேவை அட்டவணையில் இடம் பெற்றிருந்தது.

வயது 24. கணவனை இழந்தவள். ஒரு வயதில் அழகான ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தையைப் பெண்ணின் பெற்றோர் வளர்த்து கொள்வர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைப் பார்த்து விட்டு மகனின் முகத்தைப் பார்த்தாள். அவன் முகத்தில் ஒரு வகையான புன்னகை கலந்த திருப்தி காணப்பட்டது.

"ரவி உனக்குப் பிடித்திருக்கிறதா?" என்றாள்.

"ம் பார்க்கலாம்" என்றான்.

ரவியின் அம்மாவுக்கோ ஒரே சந்தோஷம்.

"இரு அப்பாவையும் கூப்பிடலாம்" என்றாள். எத்தனையோ பெண்களின் படத்தைப் பார்த்து முகம் சுளித்த ரவி, திருமணம் ஆகி ஆறே மாதத்தில் மண முறிவு ஏற்பட்டு நீதி மன்றம் மூலம் விவாகரத்து பெற்றவன். தன் மீது தவறான புகார்களைக் கூறி அவதூறாகப் பேசி அவன் மனதை நோகடித்தவள் கலா. அதனால் ஏற்பட்ட மன விரக்தியில் இருந்தான் ரவி.

பெற்றோர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் மறுமணத்திற்கு சம்மதிக்கவில்லை ரவி. அதே சமயம் அவனின் ஒரே அக்கா, அமெரிக்காவிலிருந்து கடந்த மாதம் வந்திருந்த போது, அவனிடம் பேசி பேசி சம்மதிக்க வைத்திருந்தாள். அதன் பலன்தான் கணினியில் மணமகள் தேவை விளம்பரங்களைப் பார்க்கச் செய்தது அவனை.

அவன் அம்மா லீலாவதி அவன் அப்பாவையும் அழைத்து வந்து காண்பித்தார். இருவருக்குமே திருப்தி ஏற்பட்டது. முகவரியைக் குறித்துக் கொண்டு பெண் வீட்டாருடன் தொடர்பு கொண்டார்கள். பெண்ணின் பெயர் ஷாந்தினி. அழகான பெயர். அவளும் திருமணமாகி ஆறே மாதத்தில் விபத்து ஒன்றில் தனது அன்பான கணவனைப் பறிகொடுத்தவள். வயிற்றில் வளர்ந்த குழந்தையைப் பெற்றெடுத்து, தகப்பன் முகத்தைக்கூட பார்க்காத தன் அழகான மகளைப் பார்த்து பார்த்து அழுது தீர்த்தாள். ஷாந்தினி பெற்றோருக்கு ஒரே மகள். சகல வசதிகளும் உள்ளது. அம்மா டீச்சர், அப்பா வங்கியில் ஆபீசர். மகளின் பரிதாப நிலையைக் கண்ட அவள் அம்மா ஜெயா தன் பணிக்கு விருப்ப ஓய்வு பெற்று மகளின் மகளைத் தன் மகளாகவே பாவித்து நேசித்து வளர்த்தாள். ஜெயந்தினி என்று தன் பேத்திக்குப் பெயர் வைத்தாள். தன்னை அம்மா என்றும் தன் கணவரை அப்பா என்றும் பேத்தியை அழைக்கச் செய்திருந்தாள். மகளிடம் அதிகம் ஒட்ட விடாமல் பேத்தியைப் பார்த்துக் கொண்டார். அதற்குக் காரணம் மகளுக்கு மீண்டும் ஒரு மண வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற அவளது ஆசைதான். ஆரம்பத்திலிருந்தே அந்த நோக்கத்திலேயே செயல்பட்டாள். தாயின் உள்ளத்தைப் புரிந்து கொள்ளாத ஷாந்தினி பலமுறை அவளிடம் கோபப்பட்டது உண்டு.

"அம்மா. நீங்கள் செய்வது சரியல்ல. என் மகளை என்னிடமிருந்து பிரித்துவிட்டீர்கள். அவள் என்னுடன் படுப்பதே இல்லை. உங்களுடன்தான் படுக்கிறாள். நீங்கள் ஊட்டினால் தான் சாப்பிடுகிறாள்" என்பாள்.

அம்மா எதையுமே காதில் வாங்குவதில்லை. மகளுக்குப் பலமுறை எடுத்துக் கூறியும், அவள் மறுமணத்திற்கு சம்மதிக்கவே இல்லை. குடும்ப நண்பரான மனநல மருத்துவர் மூலம் கவுன்சலிங் கொடுத்து படாதபாடுபட்டு ஷாந்தினியை மறுமணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தனர் அவளது பெற்றோர்.

ஷாந்தினியின் நிலையை அறிந்து ரவியின் பெற்றோர் தங்கள் மகனின் நிலையையும் எடுத்துக் கூறினர். ரவி ஒரு கணிணி பொறியாளர். அவனிடம் எந்த குற்றமும் கிடையாது. நீங்கள் அக்கம் பக்கம் வீட்டாருடன் விசாரித்துக் கொள்ளலாம். நீங்கள் விரும்பினால் என் மகன் உங்கள் மகளுக்கு மறு வாழ்வு கொடுப்பான் என்று தங்கள் விருப்பத்தை தெரிவித்தார் ரவியின் தந்தை.

இரு வீட்டாரும் சம்மதிக்கவே திருமணத்திற்கு நாளும் குறித்தாகி விட்டது. ஷாந்தினியின் மனநிலையை மாற்றவே அவளை ஒரு மெட்ரிக் பள்ளிக்கு கணிணி ஆசிரியையாக பணியாற்ற அனுப்பி இருந்தார் அவள் தந்தை.

திருமண நாள் குறித்த பின் ஷாந்தினிக்கு ஒரே மனப் போராட்டமாகவே இருந்தது. அவள் மனம் எதிலும் ஈடுபடவே இல்லை. வேலையையும் விட்டு விட செய்தார்கள் அவள் பெற்றோர். காரணம் ரவி வேலை பார்ப்பதோ பெங்களூரில். இவர்கள் இருப்பதோ சென்னையில். ஷாந்தினி தன் மகளைப் பார்த்து கண்ணீர் விட்டாள். அம்மா ஜெயந்தினியைப் பார்க்காமல் என்னால் வாழவே முடியாது என்று கண்ணீர் விட்டாள். தாய் அவளை தேற்றினாள். ஷாந்தினியை அவளது மகள் "சாந்திமா" என்று அழகான மழலை மொழியில் அழைப்பாள். தன் மகளை விட்டு பிரிந்து தனக்கு ஒரு வாழ்க்கை தேவையா என்று சிந்தித்தாள். அம்மா வேண்டாம்மா இந்த கல்யாணம். நான் காலம் முழுவதும் உங்களுடனே இருந்து விடுகிறேன் என்றாள். நான் இருப்பது உங்களுக்குப் பாரமாக இருந்தால் தனியாக என் மகளுடன் வாழ்ந்து கொள்கிறேன் என்றாள்.

மகள் ஜெயந்தினிக்கோ அம்மா தேவையே இல்லை. பாட்டி தாத்தா இருந்தால் போதும். அவர்களைத்தான் அம்மா அப்பாவாக நினைத்து ஒட்டிக் கொண்டாள். பாட்டியும் அப்படித்தான் அவளை, தாயைப் போல் பாசத்தை ஊட்டி வளர்த்திருந்தாள்.

திருமண நாளும் வந்தது. ரவி- ஷாந்தினி திருமணமும் முடிந்து நான்கே நாட்களில் இருவரும் பெங்களூருக்குக் கிளம்ப வேண்டியிருந்தது. கணவர் ரவி குழந்தையைப் பற்றி ஏதாவது கேட்பாரோ என்று ஷாந்தினி எதிர்பார்த்தாள். ரவி குழந்தையை தூக்கிக் கொஞ்சினான். விளையாடினான். குழந்தையை மணமகளின் பெற்றோர் வளர்த்துக் கொள்வர் என்று அறிவித்துவிட்டதால் ரவியிடம் மீண்டும் குழந்தையை வளர்ப்பது பற்றி பேச்செடுக்கத் தயங்கினாள். அதைப்பற்றி எதுவுமே கேட்கவில்லை. ரவியும் குழந்தையைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை. உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தாள்.

தாய் லீலாவதியோ பேத்தியிடம், "சாந்திமா ஊருக்குப் போகப் போகிறாள். நீ டாடா கூறுவாயாம்" என்று கூறி அவளையும் பக்குவப்படுத்திவிட்டாள்.

ரவி, ஷாந்தினியும் ரவியின் பெற்றோருடன் காரில் கிளம்பத் தயாராயினர். ரவி, மனைவி ஷாந்தினியின் முகத்தைப் பார்த்தான். வாட்டமுடன் காணப்பட்டாள். ரவியின் மனதிற்கும் மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்தக் குழந்தை என்ன பாவம் செய்தது தன் தகப்பன் முகத்தைக்கூட பார்க்கவில்லை. தாயையும் விட்டுப் பிரிய வேண்டுமா என்று தோன்றியது.

"ரவி, வா இந்த சூட்கேசை எடுத்துக் காரில் வை" என்றார் அவன் தந்தை.

"சாந்திமா உன் சூட்கேசையும் எடுத்து மாப்பிள்ளையிடம் கொடு" என்றார் ஷாந்தினியின் தந்தை. குழந்தை ஜெயந்தினியோ எதையுமே அறியாமல் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது.

ஷாந்தினி கிளம்புவதைக் கவனித்த குழந்தை, திடீரென்று ஓடி போய் ஷாந்தினியின கைப் பையை எடுத்து வந்து "சாந்திமா இந்தா உன் ஹாண்ட் பேகை மறந்துட்டியே" என்று அவளிடம் கொடுத்தது. அவள் பள்ளிக்குப் போகும்போது ஹேண்ட் பேகை மறந்துவிட்டுச் செல்லும் அம்மாவுக்கு அதைக் கொண்டுவந்து கொடுக்கிற வழக்கம்.

ரவியும் ஷாந்தினியும் சேர்ந்து பேக்கை கொடுத்த குழந்தையை வாரி எடுத்தனர். ஷாந்தினி, ஜெயந்தினியை கன்னத்தில் முத்தமிட்டு இறுக அணைத்தாள். ஆனால், குழந்தையோ திமிறிக் கொண்டு கீழே இறங்கி, பாட்டியை நோக்கி "அம்மா" என்று ஓடியது. அவள் கால்களை கட்டிக் கொண்டு பின்புறம் ஒளிந்து கொண்டு தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்து, "சாந்திமா டாடா" என்றது மழலை மொழியில். தன் தாயை புகுந்த வீட்டிற்கு வாழ்த்தி அனுப்பிவிட்டு சிரித்து நின்றது அந்தக் குழந்தை, தாயாகி.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link