சிறுகதைகள்


மாயமானும் மனிதர்களும்

கூடல்.காம்
ஹரிஹர சர்மா வழக்கத்தைவிட அதிகம் குழம்பிப் போயிருந்தார்.

வீட்டில் யாரும் இல்லாத தனிமை. கூரையை வெறித்தவாறு சாய்வு நாற்காலியில் கிடப்பதில் அது கட்டவிழ்ந்து அலைகிறது.

விளக்குப் போடாமல் அறையில் இருட்டு. சுவரில் பழகிப்போன அந்தக் குரூப் போட்டோ. பழைய அலுவலகத்திலிருந்து மாற்றலாகி வந்தபோது எடுக்கப்பட்டது. நடு மையமாக அவர் நிற்கிறார். ஆறடிக்கு மேல் உயரம். அதை அடர்த்திப்படுத்தும் பருமன். பஞ்சகச்ச வேஷ்டிக்கு மேல் முழுக் கை சட்டையை மூடிக் கொண்டு கோட்டு, நெற்றியின் சந்தனக் கீற்றுகூட பளிச்செனத் தெரிகிறது. ராதாகிருஷ்ணன் டர்பன். பண்பாட்டுக்குப் புராதனம் உண்டு, அதற்கு அழகும் உண்டு. புராதனமாகவே போய்விடுவதும் உண்டு.

ஆபீசில் அவருக்குச் செல்லப் பெயர் ஹெட் மாஸ்டர். ஒவ்வொருவரும் மிக மரியாதையுடன் உச்சரிக்கும் பெயர். அவரது ஒழுக்கம் சார்ந்த கண்ணியமான தோற்றம், பெருந்தன்மையான- அதே சமயம்- பணிவான பழக்கம், பணிகளில் பாரபட்சமற்ற கண்டிப்பு, நேர்மை, அயரா உழைப்பு... எல்லாவற்றுக்குமான இடுகுறிப் பெயர் அது.

மணி என்ன இருக்கும்? கோவில்ல ஏதோ விசேஷம்... காமாட்சி வர நேரமாகும்.

மனசுக்கு மடைமாற்ற ஒரு மாற்று வேண்டும்போல இருந்தது. மெல்ல எழுந்து சுவரோர டீபாயைத் துழாவி ரேடியோவை ஆன் செய்தார். ரொம்பப் பழைய மாடல். கல்யாணமான புதிதில் மாமனார் காமுவுக்கு சீராகத் தந்த மர்பி ரேடியோ. கொஞ்ச நேரம் வழக்கமான கரமுரா... முள்ளை அப்படியும் இப்படியும் நகர்த்தினால் பல பாஷைகளில் இடி இடித்து ஏதோ ஒலிகள் கேட்கும். வேற்றுக்கிரக வாசிகளின் முயற்சி என்னவோ தமிழுக்கு வர இன்னும் முள்ளை நிறுத்தித் தேட வேண்டும். ஒரு கருப்பு வெள்ளை போர்ட்டபிள் டி.வி.கூட என்னால் வாங்க முடியாதது காமுவுக்கும் வருத்தம்தான்.

"ஆல் இந்தியா ரேடியோ.. நிலையத்தில் நேரம் இப்போது சரியாக 9.30 இலக்கியப் பேருரை... தஞ்சாவூர் தம்புசாமி பாகவதர் வழங்கும் மாயமான்..."

கடபுடவென இடிச்சத்தம் தொடர்ந்து ரேடியோ கொஞ்ச நேரம் செத்துப் போய் மறுபடி உயிர் பெற்றது.

"ஸ்ரீராமன் எந்தப் பதிலும் சொல்லவில்லை. அவன் சுயமாகத் தீர்மானிக்கும் விஷயமல்ல அது. எதுவுமே கேட்டிராத சீதாப் பிராட்டியே வாய்விட்டுக் கேட்டு விட்டாளே... அந்தப் பொன்மான் அவளுக்கு விளையாட வேண்டுமாம். ஆ, அது எவ்வளவு அழகாக இருக்கிறது."

சர்மாவுக்கு எரிச்சலாக இருந்தது. ரேடியோவை நிறுத்தினார். இந்த மாயமான் இன்றும் எப்படி தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. யுகம் யுகமாக.. சீதையையும் ராமனையுமே பார்த்தும் எப்படி இந்த மக்கள் அதன் பின் மயங்கிச் சுற்றுகிறார்கள். அதன் மாயத்தன்மை புரியும்போது எல்லாமே முடிந்து போய்விடுவதாலா? எல்லாமும்...

வெளியே ஆளரவம். காமாட்சியும் மற்றவர்களும் திரும்பியாயிற்று. தன் மனபாரத்தை மறைத்துக் கொண்டு எழுந்த சர்மா ஒரு சுமூக சூழ்நிலைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார். "கோயில்ல ரொம்பக் கூட்டம் போல இருக்கு?"

"சாப்பிட்டேளா? கோதாவரி சம்புடத்துல உறைகுத்தி வச்சிருந்ததைத்தானே போட்டுண்டேள்?"

"பசிக்கல காமு. சாப்பாடு வேணாம்"

"இதென்ன மூணுநாளா ராத்திரி விரதம்... ஒரு வாய் தயிர் சாதமாவது?"

"வேணாம் விடு. வயிறு டம்னு இருக்கு"

இருட்டு. பத்துமணிக்கு மேலே இருக்கும். எல்லோரும் படுத்தாயிற்று.

கூடத்து ஊஞ்சல் விட்டுவிட்டு முனகுகிறது. சங்கிலியில் இடுப்பைச் சாய்த்தபடி பலகை ஆட்டத்தோடு அவர் மனமும் அப்படியும் இப்படியுமாக ஆடிக் கொண்டிருக்கிறது. பால் தம்ளரை நீட்டியபடி கணவரின் முகத்தைக் கவலையுடன் ஆராய்கிறாள் காமு. அவளால் படித்துவிட முடியுமே?

"ரகு சாயங்காலம்கூட ஞாபகப்படுத்தினான். அப்பா மறந்திருக்க போறார்ன்னான். ரெண்டு நாள்ளே டெபாசிட் கட்டலேன்னா..."

சர்மா எச்சில் விழுங்கிக் கொள்கிறார். அவராவது மறப்பதாவது. காமு எவ்வளவு நாசூக்காக இதைச் சொல்கிறாள். தனக்கே நினைவுபடுத்திக் கொள்வதுபோல. ஒரு பயத்துடன் திகிலுடன் இருவராலும் முடியாத ஒன்றை எப்படிச் சமாளிப்பது என்ற கவலையுடன் ஓ காமாட்சி நீ மாயமான் இல்லை. சிவதனுசு. வாழ்க்கை என்ன பெரிய போர்க்களம். எனக்கு நீ இருக்கியே ராமபாணம் போல!

"அப்புறம்..." காமாட்சி மறுபடி தயங்குகிறாள்.

"ரெண்டு நாளா அப்புறம் சொல்லலாம்னே இருந்துட்டேன்"

-ஏதோ எதிர்பாராத இன்னொரு தாக்குதல். இப்போது தன்னை அதற்குத் தயார்படுத்திக் கொண்டவராக நிமிர்கிறார். மளிகைக்காரன் வந்து சத்தம் போட்டிருப்பான். மூணுமாசமா பாக்கி நிக்கிறதே.

"வீட்டு ஓனர் வந்திருந்தார். கொஞ்சம் வேகமாக.."

"போனமாச பாக்கி வேற இருக்கே. இதுவரை பொறுமையா இருந்ததே பெருசுதான்"

-நேரங்கெட்ட ஒரு ரசனை சர்மாவுக்கு. வீட்டுக்காரர் என்று எல்லோரும் சொல்வதை எவ்வளவு சுபாவமாகத் தவிர்த்திருக்கிறாள்.... என் காமாட்சி.

"என்னா?" தயங்குகிறாள். குரல் மெலிகிறது. லேசான நடுக்கம் தெரிகிறது. "என் தந்தை வளையலை ஒரு ரெண்டு மாசம்..."

சர்மாவுக்கு மனசு இன்னும் வலிக்கிறது. அவள் அப்பா போட்டதில் ஒரே மிச்சம். தான் எதுவுமே செய்ய முடிந்ததில்லை என்ற குறையோடு "விடுங்கோ... ஏன்னா ஆபிசுல பிராவிடண்ட் ஃபண்டு லோன் போடலாம்னு"

இப்போது அதில் எடுக்க முடியாது என்று அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது இருக்கிற ஒரு சின்ன நம்பிக்கையைக் குலைப்பானேன்... "பாப்போம்... பாப்போம்.. நீ போய்ப் படுத்துக்கோ.. எனக்குக் கொஞ்சம் ஃபைல் பாக்கணும்"

அந்தக் கோப்பு மூன்று நாளைய மாயமான் கோப்பு.

காலை நேர ஆபிஸ் களைகட்டியிருந்தது. வெய்யிலில் நடந்து வந்த வியர்வை வழிய டிபன் பாக்சை மேஜை மூலையில் தள்ளி நிமிர்கையில்-

வேகமாக வந்த பியூன் "ஒங்களை மானேஜர் கூப்பிடறார்.."

அந்தக் கோப்பையும் தானே எடுத்துக் கொண்டு சர்மா உள்ளே நுழைய, மானேஜர் எதிர் சீட்டில் அந்த மூணுநாள் ஆசாமி.

"மிஸ்டர் சர்மா இவரைத் தெரியுமா?"

"தெரியும் சார்... மூணு நாளா என்னை வந்து பாத்துக்கிட்டிருக்காரு... இந்த பைல் சம்பந்தமா"

"இவுரு ஃபைலை நீங்க வேணும்னே டிலே பண்றீங்களாம்... இன்னும் அவர்கிட்டே நீங்க... "சார், நீங்க கொஞ்சம் வெளியிலே வெயிட் பண்ணுங்க அப்புறமா கூப்பிடறேன்"

அவர் எழுந்து சர்மாவை ஒருமுறை முறைத்துவிட்டு வெளியேறியதும்-

"உக்காருங்க மிஸ்டர் சர்மா. இவர் ஃபைல் என்ன ஸ்டேஜ்?"

"இதோ கொண்டாந்திருக்கேன் சார்... என் குறிப்பை விரிவா எழுதியிருக்கேன். இவருக்கு சாதகமா அதுல நான் எழுதணும்னு மூணுநாளா பிரஷர் கொடுத்துக்கிட்டிருக்காரு. செஞ்சா ஒரு பெரிய தொகை தருவதாக சொன்னாரு. பொதுநலனுக்கு ரொம்ப பாதகமான காண்ட்ராக்ட் அது. இவுரு ஆளும் கட்சிக்காரராம். பயமுறுத்துறமாதிரியும் பேசினாரு. அவர் கேக்கிற மாதிரி தர்மத்துக்கு விரோதமா என்னால செய்ய முடியல்லே. நான் சரியான முடிவுதான் எடுக்கிறேன்னு எனக்கு நானே தீர்மானிச்சுக்க ரெண்டு நாள் ஆயிடுச்சி"

-மேலோட்டமாக சர்மாவின் குறிப்புகளைப் படிக்கையிலேயே மானேஜரின் புருவம் உயர்கிறது..

"சர்மாஜி... நியாயங்கிறது வேற, நடக்கிறது வேற. இப்ப என்னாச்சு. மேலிடத்துல எல்லோருமே இவருக்கு ரொம்ப நெருக்கம். உங்களைப் பத்தி ரொம்ப புகார் பண்ணியிருக்கார். நெறைய பணம் கேக்கிறீங்களாம். கொடுத்தாத்தான் வேலை முடிப்பேன்னு சொன்னீங்களாம் இம்மாதிரி வாங்கி வாங்கி பெரிசா சொந்த வீடுகூட வாங்கிட்டீங்களாம். நெறைய நகைங்க, எலக்ட்ரானிக் அயிட்டங்கள் எல்லாம் சேத்துட்டீங்களாம்."

சர்மாவுக்குத் தன் ரேடியோ ஞாபகம் வந்தது. தன் ஒரே நகையான வளையலை காமு அடகு வைக்கச் சொன்னது நினைவு வந்தது. கூடவே சிரிப்பும் வந்தது.

"சர்மாஜி. மேலே உங்களுக்கான ஆர்டரை இவுரு கிட்டயே கொடுத்தனுப்பி இருக்காங்க. ரொம்ப தூரத்துல ஒரு மோசமான ஏரியாவுக்கு உங்களை மாத்தியிருக்காங்க. இன்னைக்கிக் காலையே உங்களை ரிலீவ் பண்ணச் சொல்லி உத்தரவு"

சர்மாவுக்கு வியர்த்துக் கொட்டிற்று. நெஞ்சில் ஏதோ அடைப்பது போல. குடும்பம் இப்போதுள்ள நிலையில் திடீரென்று இவ்வளவு தூரம் மாறிச் செல்வது வெள்ளம் தலைக்கு மேல் போவது போல.

"மானேஜர் சார் ஒரு ஹெல்ப்..."

மானேஜர் எழுந்து கொண்டார் பழக்க தோஷம்...

-கெஞ்சலாக அல்ல, உரிமைக் கண்டிப்புடன் சர்மா பேசினார். "டிரான்ஸ்பர்ல போனா ஒரு மாச சம்பளம் டி.ஏ. அட்வான்ஸ் ரெண்டாயிரம் சேர்த்து கேஷ் இப்பவே தர முடியுமா சார்?"

"இப்பவே வாங்கிக்கங்க... ஆல்த பெஸ்ட்!"

தன் இடத்துக்கு வந்தபோது அந்த ஆசாமி எதிர் சீட்டில் உட்கார்ந்தபடி இவரை எகத்தாளமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். சர்மா புன்னகைக்க அவருக்குத் திகைப்பு.

இரவு. கூடத்து ஊஞ்சல் விட்டுவிட்டு முனகுகிறது. சங்கிலியில் முதுகைச் சாய்த்தபடி சர்மா மெலிதாக ராகம் ஒன்றை மெல்ல இசைத்து அதில் ஆழ்ந்து திளைக்கிறார்.

கோவிலிலிருந்து வரும்போதே காமுவுக்கு குதூகலம். "ரகு கோயில்லயே வந்து சொன்னான். பிராவிடண்ட் ஃபண்டு லோன் இன்னைக்கே கெடைச்சுடுத்தா?"

"பின்னே? நான் ஹெட் கிளார்க் இல்லியோ?"

காமாட்சி மன நிறைவுடன் திரும்பினாள்.

"காமு, சீக்கிரம் தட்டு வை. ரொம்பப் பசிக்கிறது"

"போறது, இப்பவாவது பசிக்க ஆரம்பிச்சிருக்கே. நேத்திக்கி இருந்ததுக்கு இப்ப ஒங்க முகம் தெளிவா இருக்குன்னா?"- குழம்புவதும் தெரியும் தெளிவதும் அவளுக்குத் தெரியும்... அவள் அவரில் பாதியாச்சே!

"காமு, புதுசு புதுசா ஊர்களும் ஜனங்களும் பாக்கணும் போல இருக்கு... போவோமா?"

"ஓ, போவோமே!"

மிச்சத்தை நாளைக்குச் சொல்லலாம்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link