சிறுகதைகள்


விடியும் நாள் பார்த்து...

கூடல்.காம்
நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை.

"என்னம்மா யோசனை... காசு போடுங்கம்மா... எங்களுக்கு செஞ்சா சாமிக்கு செஞ்ச மாதிரி..." என்று நாங்கள் கைதட்டி எலக்ட்ரிக் டிரைய்னில் காசு வாங்கிக் கொண்டிருந்தோம். பிச்சைதான். அந்தம்மாவுக்கு மனசு இறங்கியது. ஐந்து ரூபாயைத் தந்தார்கள். சாந்திக்கும் ஐந்து ரூபாய் தந்தார்கள். அந்தம்மாவை நெத்தியில் நெட்டை எடுத்து மனசார வாழ்த்திவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.

சைதாப்பேட்டை ஸ்டேஷனில் ஏறின சித்ராதான் அந்த அற்புத செய்தியை எனக்குச் சொல்லிவிட்டுப் போனாள். அவள் அதை சொன்ன போது அது எனக்கு ஒரு கனவு மாதிரி இருந்தது. அது என் தூக்கத்தில் வருகிற கனவல்ல. அது நான் அடிக்கடி நினைக்கிற கனவு. என் ஆசை. ஆனால் என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு நானே கிள்ளிப்பார்த்துக் கொண்டேன். ஆமாம் வலிக்கிறது. ஆனால் இத்தனை நாள் வலியை விடவும் இந்த வலி சுகமாய், ஆனந்தமாய் இருந்தது. சாந்தி ஆர்வம் தாங்காமல் என்னடி சொல்லு என்றாள். நான் சொல்ல முற்பட, ஒரு தடியன் என்னை வேண்டுமென்றே இடித்து விட்டுப் போனான். எனக்கு கோபம் மண்டைக்குள் ஏறியது. உஷ்ணம் காதுகளில் பரவியது.

"டேய்... நில்லுடா..." என்றேன்.

"போடா.. ஒம்போது..." என்றபடி நடந்தான்.

நான் கைகளை அடிக்க மடக்கிக் கொண்டேன். "அவன விடுடீ... எதுக்கு நீயே கிள்ளிகிட்ட சொல்லு நித்யா..." என்றாள்.

எனக்கு கோபம் குறையவில்லை. இந்த சமயத்தில் வேண்டாம். இந்த சந்தோசமான நேரத்தில் அவனை அடித்து அதை குழப்பிக் கொள்ள வேண்டாம் என மனசு சொன்னது. கொஞ்சம் அமைதியானேன்.

"சொல்லுடீ..." சாந்தி என் கையை மீண்டும் அழுத்திக் கேட்டாள்.

"அப்பாகிட்டேயிருந்து போன். என்னை வீட்டுக்கு வரச்சொன்னாராம்... இல்லைன்னா வந்து கூட்டிட்டுப் போகட்டுமான்னாராம்..."

சொன்னதும் சாந்தி என்னை கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

"ஆமா... நீ இங்க இருக்கறது எப்படி தெரிஞ்சது..."

"எங்க ஊருக்காரனை அன்னைக்கு பார்த்தேன்ல அவன்கிட்ட எதுக்கும் இருக்கட்டும்னு சித்ரா போன் நம்பர குடுத்திருந்தேன்..."

"சரி அத விடு.. நீ வேண்டின வடபழனி முருகன் உன்னை கைவிடல.. போ.. போய் உடனே கிளம்பு.. எவ்வளவு பணம் வேணுமோ நான் தர்றேன்... கிளம்பு.. கிளம்பு.." என்றாள் சந்தோசமாய்.

ஆமாம் என் வேண்டுதல் பலித்திருக்கிறது. என் வீட்டோடு இருக்க நினைத்த வேண்டுதல். மறுபடியும் என் அப்பா, அண்ணன், அண்ணி, தங்கையுடன் இருக்க நினைத்த வேண்டுதல். நினைத்தாலே நெஞ்சிற்குள் சந்தோசம் ஒரு பறவை போல் பறந்தது.

எங்கள் வீட்டில் என் அண்ணனுக்குப் பிறகு நான் பிறந்தேன். இரண்டாவது ஆணாய் பிறந்தது தெரிந்து அம்மா அழுதாள். இது பெண்ணாய் இருந்திருந்தால் சந்தோசமாய் இருந்திருக்குமே என்று அப்பாவிடம் சொன்னாளாம். "நித்யானந்த்" எனக்கு வீட்டில் வைத்த பெயர். அதற்கு இரண்டு வருடத்திற்குப் பின் பிறந்தாள் என் தங்கை. அம்மாவுக்குச் சந்தோசம் தாங்க முடியவில்லை. நாங்கள் இருந்தது எங்கள் தாத்தா வீடு. மேலே கீழே என பத்துக்கும் மேற்பட்ட அறைகள். பழையதாக இருந்தாலும் அதன் பிரம்மாண்டம் எனக்கு பிடிக்கும். என் அண்ணன் மற்றும் தங்கையுடன் ஓடி விளையாட அது மிக வசதியாக இருந்தது. அவ்வப்போது விளையாட்டில் எங்கள் அப்பாவும் சேர்ந்து கொள்வார். அவருக்கும் கண்ணைக் கட்டி எங்களைத் தேடச் சொல்வோம். அப்பாவும் இருக்கிற தூண்களில் மோதி எங்களைத் தேடுவது சிரிப்பாய் இருக்கும். அம்மா இந்த விளையாட்டைப் பார்த்து தலையில் அடித்துக் கொள்வாள். எங்கள் வீட்டை எனக்கு குழந்தையிலிருந்தே பிடிக்கும். எங்கள் வீடுதான் எனக்கு எல்லாமே.

கோயமுத்தூர் நகராட்சி பள்ளியில் என் பள்ளிப் படிப்பு. பள்ளிக்கூடத்தில் எனக்கு மாணிக்கமும் வெங்கட்டும் நண்பர்களாக இருந்தாலும் எனக்கு கலாவுடனும் மேனகாவுடனும் இருப்பதுதான் பிடித்திருந்தது. அவர்களுடன்தான் விளையாடுவேன். ஒரு வயதிற்கு மேல் என் நடை, என் பேச்சின் தொனி எல்லாம் மாறிக் கொண்டேயிருந்தது.? "டே பொம்பளசட்டி"ன்னு கணேசன்தான் என்னை அடிக்கடி கிண்டலடிப்பான். அப்போது எனக்கு அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. நான் ஆறாவது படிக்கறபோது எனக்குள் ஓர் உணர்வு புதியதாக தோன்றி நான் யாரென எனக்கு மட்டும் சொல்லிக் கொண்டிருந்தது. அந்த உணர்வு மாணிக்கத்துடன் கூட பாத்ரூம் போகக்கூட தடுத்துக் கொண்டிருந்தது. நித்யானந்த் என்று கூப்பிடுவதை விட "நித்யா" என்று கூப்பிடுவது எனக்குப் பிடிக்க ஆரம்பித்திருந்தது. எனக்குள் நான் முழுமையாய்ப் பெண்ணென உணர்ந்த போது நான் விடிய விடிய அழுதேன். எனக்கு மட்டும் ஏன் இந்த நிலை? என்ன பாவம் செய்தேன்? நான் மட்டும் ஏன் இப்படி படைக்கப்பட்டேன்? விடை கிடைக்கவேயில்லை. கடவுளை இரவெல்லாம் திட்டித் தீர்த்தேன்.

சாந்தியும் என்னுடன் பல்லாவரத்தில் இறங்கிக் கொண்டாள். நான் சொல்லியும் "கடை" கேட்க அவள் போக மறுத்தாள். ஊருக்கு நான் போகும்வரை அவளுக்கு என்னுடனேயே இருப்பதாக உச்தேசமாம். நான் மறுக்கவில்லை. மறுபடியும் கோடம்பாக்கத்திற்கு ரயில் டிக்கெட் எடுத்து நாங்கள் இருக்கிற இடத்திற்கு போவதாக உத்தேசம். டிக்கெட் எடுத்து மீண்டும் ரயிலில் பயணமானோம். உட்காரவில்லை. நின்றபடியே பயணித்தோம்.

"போய் என்ன பண்ணப் போற.. நித்யா?" என்றாள் சாந்தி.

"போய் படிக்கணும். கரஸ்பாண்ட்டிங் கோர்ஸ்லயாவது ஒரு டிகிரி வாங்கணும்... எங்கப்பா நல்லவரு. இவ்வளவு மனசு மாறியிருக்காருன்னா நான் ஆசைப்படறதையும் நிச்சயம் செய்வாரு. நல்லா படிச்சு நம்மள மாதிரியான அரவாணிகளுக்கு நல்லது செய்யணும் சாந்தி... நிச்சயம் செய்வேன்.." என்றபோது சாந்தியின் கண்கள் கலங்கியிருந்தன.

பத்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் முதல் முதலாய் வீட்டில் மாட்டினேன். கதவைச் சாத்திக் கொண்டு என் தங்கையின் பாவாடை தாவணியை அணிந்து கொண்டேன். முகத்தில் பவுடர் அடித்து அழுத்தமாய் லிப்ஸ்டிக் பூசிக் கொண்டேன். இருந்த முல்லைப்பூவை தலையில் வைத்து கண்ணாடியில் அழகு பார்த்தபோது ஜன்னலில் அம்மா பார்த்து விட்டாள்.

"நித்யா இது என்னடா கன்றாவி..." என்று கத்தினார்கள்.

"ஐய்யோ கத்தாதேம்மா எங்க ஸ்கூல் ஆண்டு விழாவில நான் பொம்பள வேஷத்தில நடிக்கறேன்... அதுக்கு ரிகர்சல் பார்த்துட்டிருக்கேன்..." என்று அம்மாவிடம் ஒரு பொய் சொல்லி அன்று சமாளித்தேன். ஆனால் மனதின் ரகசியத்தை சுமக்க சுமக்க அதன் கனம் அதிகமாகிக் கொண்டே போனது. எதற்கு இந்த அவஸ்தை? இப்படி இருந்து என்ன சாதிக்க போகிறேன்? எங்காவது விழுந்தோ ஏதாவது குடித்தோ தற்கொலை செய்து கொள்ள தோன்றிக் கொண்டே இருந்தது. ஆனால் அதற்கும் தைரியம் வரவில்லை. தாங்க முடியாமல் அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு ஒருநாள் கதறி அழுதேன்.

"நான் பொம்பளதாம்மா. உன்னை மாதிரி ஒரு பொம்பளதாம்மா... ஆம்பிள்ளைக்கான எந்த உணர்வும் எனக்கு இல்லம்மா.. என்னை என்னை புரிஞ்சுக்கம்மா.. நம்ம வீட்டுல பூனை கோழியெல்லாம் வளர்க்கறீங்கல்ல அதுல ஒண்ணா என்னை நினைச்சுக்கம்மா. அதுக்கு காட்டற அன்புல கொஞ்சம் எனக்கு காட்டுங்கம்மா..." என்று நான் அழ அம்மா ஒன்றும் புரியாமல் பார்த்தாள். அவள் கண்களில் நிற்காமல் கண்ணீர் வந்தது. நான் பெண்ணாய் பிறக்காததற்கு வருத்தப்பட்ட அம்மா இன்று நான் ஒரு பெண்தான் என்றதும் ஏன் அழுகிறாள்?

"யாராவது கேட்டா என்னடா சொல்றது.." என்றாள்.

ஆம்பளைன்னு சொல்வதா இல்லை பொம்பளைன்னு சொல்வதா என அம்மாவுக்குள் குழப்பம்.

"நானும் ஒரு மனிதன்னு சொன்னா போதும்மா.." என்றேன்.

வீட்டில் அனைவருக்கும் விஷயம் தெரிந்தது. அப்பா அதிர்ச்சியில் அடித்து தீர்த்தார். ப்ளஸ்டூ படிக்கற என் அண்ணன் வெறுப்பாய் ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனான். அந்தப் பார்வை நான் அந்த வீட்டில் இருந்தவரை மாறவேயில்லை. தங்கை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பா, "விஷயம் வெளிய தெரிஞ்சா மானம் போயிடுமேடா" என்றார். என்னை குற்றம் சொல்லாதீர்கள் அப்பா. இது நான் விரும்பி ஏற்ற வேஷம் அல்ல. இது ஜீனின் குற்றம். நான் முளைத்த நிலத்தின் குற்றம். என்னைப் படைத்த இயற்கையின் குற்றம். அந்த இறைவனின் குற்றம் என்றேன். அப்பா பதில் எதுவும் சொல்லவில்லை. அதற்குப் பிறகான என் வீட்டின் மாற்றங்கள் வாழ்க்கையை இன்னும் வெறுக்க வைத்தது.

அதற்குப் பிறகு அம்மா மட்டுமே ஓரளவு எனக்கு அணுசரனையாய் இருந்தாள். ஆனால் அண்ணன் என்னுடன் பேசுவதைத் தவிர்த்தான். தன் நண்பர்களுடன் அவன் என்னை அறிமுகப்படுத்துவதை நிறுத்திக் கொண்டான். தங்கையென்று சொல்ல வேண்டாம்... தம்பி என்று சொல்வதைக் கூட நிறுத்திக் கொண்டான். என் தங்கை என் பக்கத்தில் வரவே பயப்பட்டாள். பயந்து பயந்தேதான் பேசினாள். வீட்டில் அனைவரும் ஒன்றாய் தூங்கியது போக என் அருகில் வர அருவருப்பாய் நினைத்து ஆளாளுக்கு தனித்தனியே படுத்துக் கொள்ளத் தொடங்கி என்னை தனி அறையில் விட்டார்கள். அண்ணன் டிகிரி வாங்கி ஒரு அரைகுறை வேலையை ஒத்துக்கொண்டு மதுரைக்கு ஓடிப்போனான். எல்லாம் வெறுத்திருந்த நேரத்தில் இன்னொரு அதிர்ச்சி நடந்தது. இலேசான நெஞ்சு வலி என்று இரவில் தண்ணீர் கேட்ட அம்மா விடியும் போது பிணமாக இருந்தாள். சாவிற்கு வந்த போதுகூட அண்ணன் என்னுடன் பேசவில்லை. இத்தனை வெறுத்தும் என் வீட்டின் மீது எனக்கு வெறுப்பு வரவில்லை. ஊருக்கு விஷயம் தெரிந்தது. பள்ளிக்கும் விஷயம் பரவ கிண்டலும் கேலியும் அளவில்லாமல் போனது. பையன்கள் மட்டுமல்ல பெண்களும் என்னுடன் பேச யோசித்தார்கள். நான் ஸ்கூலுக்குப் போக மறுத்தேன். அப்போது அண்ணனுக்கு வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். இரண்டு மூன்று இடங்கள் தட்டிப் போனது. காரணம் நான்தான் என்ற போதுதான் வீட்டை விட்டுப் போகத் தீர்மானித்தேன். அண்ணன் நல்லா இருக்கட்டும். வீட்டில் கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டு ரயிலேறி சென்னை வந்தேன்.

கோடம்பாக்கத்தில் நாங்கள் ஐந்து பேர் சேர்ந்து எடுத்திருந்த குடிசைக்குள் நானும் சாந்தியும் வந்து சேர்ந்தோம். ராத்திரி ரயில் பிடித்து கோவை போவதாகத் திட்டம். நான் துணிகளை எடுத்து பேக்கில் வைத்துக் கொண்டிருந்தேன். சாந்தி சோகமாய் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஊருக்குப் போய் என்னை மறந்திட மாட்டாயே..." என்றாள்.

"பைத்தியம் மாதிரி பேசாதே.. நான் என்னையே முழுமையா வெளிப்படுத்திகிட்ட இடமே இதுதான்... எப்படி மறப்பேன்.? அடிக்கடி வந்து பார்த்துப் போவேன் ஓகே... அதுமட்டுமல்ல.. என் அண்ணன் ஃபிரண்ட்ஸ் வீட்டுக்கு வர்றமாதிரி... என் தங்கச்சி ஃபிரண்ட்ஸ் வீட்டுக்கு வர்ற மாதிரி, உன்ன மாதிரி என் ஃபிரண்ட்ஸூகளை வீட்டுக்கு வர வைப்பேன்... ஒகேவா.." என்றபோது என்னாலும் அழுகையை அடக்க முடியவில்லை.

சென்னை வந்து கடற்கரையை பார்த்துக் கொண்டு நான் அமர்ந்திருந்த போது தற்கொலையைத் தவிர மனதில் வேறு எண்ணம் வரவில்லை. "என்னடீ நல்லாயிருக்கியா?" என்று ஒரு குரல் வந்து என் பக்கத்தில் அமர்ந்த போதுதான், அவளும் என்னை மாதிரி ஒரு அரவாணி என்று புரிந்தது. என் வாழ்க்கையின் திசை மாற்றிய சந்திப்பு அது. அவள் பெயர் திவ்யா என்றாள். சைதாப்பேட்டைக்கு என்னை கூட்டிப் போனாள். அங்கே என்னை மாதிரி நிறைய பேர் இருந்தார்கள். அவர்களின் தொழிலும் நடவடிக்கையும் வேறு மாதிரி இருக்க அங்கிருந்து தப்பிப்பதற்குள் என் பாதி உயிர் போயிருந்தது. அதற்குப் பிறகு ஓட்டம் ஓட்டம்தான். ஓய்வேயில்லாத ஓட்டம். பம்பாயில் சில மாதங்கள். பூனாவில் ஒரு வருடம். சென்னைக்கு வந்து இந்த இரண்டு வருடங்கள் என ஓட்டத்திற்கு அளவே இல்லை. இளைப்பாற ஒரு இடம் கிடைக்காதா என்று ஏக்கத்துடன் ஓடிய ஓட்டங்கள். மனரீதியாய் உடல் ரீதியாய் எத்தனை காயங்கள் எத்தனை வலிகள்.

வேலை கிடைக்காத வேதனை வேறு. ஒரு நாளைக்கு ஒரு வேலை சாப்பாடு என்பதே பெரிய விஷயமாகிப் போனது. அவ்வப்போது வேறு வழியில்லாமல் போன பாலியல் தொழில் என் பசியைப் போக்கிக் கொண்டிருந்தது. ஒருமுறை எங்கள் ஊரைச் சேர்ந்தவரை பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன். வீட்டைப் பற்றி விசாரித்தேன். அண்ணனுக்கு கல்யாணம் ஆன விஷயத்தை அவர்தான் சொன்னார். ஒரு ஆண் குழந்தை இருக்கிறதாம். அவரிடம் சித்ராவின் போன் நம்பரை கொடுத்தேன். அவர் அதை வாங்கிக் கொண்டு பயந்தபடி விலகி வேகமாய் நடந்தார். எனக்கு அவருடனேயே போய் அண்ணன் குழந்தையைப் பார்க்கும் ஆசை வந்தது.

மொத்தத்தில் பெருமூச்சில் தொலைந்து கொண்டிருந்தது என் வாழ்க்கை. சாந்தியை சந்தித்த பிறகுதான் இந்த வாழ்க்கை மீது ஓரளவு பிடிப்பு வந்தது. நம்பிக்கை வந்தது. அவள் மற்றும் நாங்கள் நான்கு பேர் சேர்ந்து கோடம்பாக்கத்தில் ஒரு குடிசைப் பகுதியில் ஒரு வீடு எடுத்துக் கொண்டிருந்தோம். இது ஒரு வாழ்க்கை. ஒருவகையான சந்தோசம். கூட்டாய் இருப்பதால் ரவுடிகளின் தொல்லைகளிலிருந்து ஓரளவு தப்பிக்க முடிகிறது. பகலெல்லாம் ரயிலில் பிச்சை எடுப்பது. இரவில் அதைக் கொண்டு நாங்களாகவே சமைத்து ஆட்டம் பாட்டம் என சந்தோசமாக சாப்பிடுவது என என் நாட்கள் போய்க் கொண்டிருந்தாலும் இந்த நிலமில்லாத அகதி வாழ்க்கை வெறுத்துப் போனது. எங்கள் வீட்டில் யாராவது வந்து கூப்பிட மாட்டார்களா என்று மனசு சதா வேண்டிக் கொண்டேதான் இருந்தது. எனக்கிருந்த ஒரே பிரார்த்தனையும் அதுதான். அது நடந்தே விட்டது. நான் என் வீட்டின் பழைய சந்தோச ஜோதியில் கலக்கப் போகிறேன். கடவுளே உனக்கு நன்றி.

நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் என் மண்ணை மிதித்தேன். காலையில் ரயிலில் வந்து இறங்கிக் கொண்டேன். சேலைதான் கட்டியிருந்தேன். உலகிற்கே தெரிந்த பிறகு எதற்கு முக்காடு. நான் சேர்த்திருந்த பணம் என் பேக்கில் இருந்தது. தங்கையின் கல்யாணத்திற்கு அதைத் தந்துவிடவேண்டும். அது ஒரு அக்காவாக என் கடமை. நான் யாரெனத் தெரியாமல் வீதியே என்னைப் பார்த்தது. நான் எங்கள் வீட்டிற்குள் நுழைந்தேன். தங்கைதான் முதலில் தென்பட்டாள். நான் சந்தோசமாய் கூப்பிடுவதற்குள் மாறாத அந்தப் பழைய பயத்துடன் சட்டென உள் அறைக்குள் ஓடி மறைந்தாள். அதற்குப் பிறகு அண்ணன் வந்தான்.? "வாடா" என்று ஒரு வார்த்தைதான். அண்ணி அதுவும் பேசவில்லை. கையில் குழந்தை. வினோதமாகப் பார்த்தார்கள். என்னாச்சு இவர்களுக்கு? அப்பா எங்கே? அவருக்கு உடம்பு எதுவும் முடியலையா? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

"வா... நித்யா.." என்று அப்பாவின் குரல் கேட்டபோதுதான் எனக்கு மூச்சு வந்தது. அப்பாவிடம் எந்த மாற்றமும் பெரியதாகத் தெரியவில்லை. தலையில் மட்டும் கூடுதலாகக் கொஞ்சம் நரை.

அப்பாவின் அறையில் எல்லோரும் கூடியிருந்தோம். என்னை நிமிர்ந்து ஒருவர் கூட பார்ப்பதாகத் தெரியவில்லை. என்ன நடக்கிறது இங்கே? பழைய பேப்பர் கத்தையை என் முன்னால் வைத்து அப்பா பேச ஆரம்பித்தார்.

"உன்னை இங்க வரச்சொன்னதுக்கு காரணம் இருக்கு நித்யா. உங்க அண்ணன் ஒரு பிஸினஸ் பண்ணிட்டு இருந்தான். அதில ஏகப்பட்ட நஷ்டம். அந்த கடனையெல்லாம் அடைக்கணும்ன்னா இந்த வீட்டை வித்தாகணும். இது தாத்தா சொத்து. அத விக்கணும்ன்னா உன் கையெழுத்து வேணும். அதுக்குத்தான் வரச்சொன்னேன். ஒரு கையெழுத்து போட்டுட்டு உனக்குச் சேர வேண்டிய பங்கை எடுத்துட்டு எங்காவது போய் நல்லாயிரு. அவ்வளவுதான் நித்யா..."

எங்காவது போய் நல்லாயிரு..! அவ்வளவுதானா அப்பா? என் மனசு உடைந்து சிதற, எனக்கு முன்னால் இருந்த அந்த பத்திர பேப்பரை சட்டென கையில் எடுத்தேன்.

"கையெழுத்து போட்டு தர்றேன். எல்லாத்தையும் நீங்களே எடுத்துக்குங்க... எனக்கு சொத்தில ஒரு பைசாக் கூட வேண்டாம்ப்பா.." என்று நான் கதறி அழுதபடி என் பேக்கில் இருந்த பணத்தையும் அவர்கள் முன் எறிந்தபோது அவர்கள் எப்பொழுதும் போல் என்னை புரிந்துக் கொள்ளாமலே பார்த்தார்கள்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link