மங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளி வெடிகுண்டுடன் எடுத்துக்கொண்ட படம்!

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியாக கருதப்படும் ஷெரீக், கடைசியாக குக்கர் வெடிகுண்டுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரில் சனிக்கிழமை ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோவில் இருந்த பயணி மற்றும் ஓட்டுநர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் என்று கர்நாடக மாநில காவல்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கம்பளம் பகுதியில் விடுதியில் தங்கி இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அஜீம்ரகுமான் என்ற இளைஞரை கோட்டாறு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மங்களூா் குக்கா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவா் கா்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், தீா்த்தஹள்ளி பகுதியைச் சோ்ந்த முகமது ஷெரீக் (24) என்பது தெரியவந்துள்ளது. அவா் தனது பெயரில் சிம் காா்டு வாங்காமல் உதகையைச் சோ்ந்த ஆசிரியா் சுரேந்தரின் ஆவணங்களைக் கொண்டு கோவையில் சிம் காா்டுகளை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்தச் சம்பவத்துக்கு முன் முகமது ஷெரீக் கோவை சிங்காநல்லூா் பகுதியிலுள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து பல நாள்கள் தங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால், கோவை காா் வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான ஜமேஷா முபீனுக்கும், இவருக்கும் ஏற்கெனவே தொடா்பு இருந்ததா என்பது குறித்தும், ஐஎஸ் உடனான தொடா்புகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஷெரீக் வீட்டில் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. குற்றவாளியாக கருதப்படும் ஷாரிக், கடைசியாக குக்கர் வெடிகுண்டுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மாா்க்கெட்டுகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.