சிறுகதைகள்


கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்...

கூடல்.காம்
"அஞ்சலை, சீக்கிரமா வேலைய முடிச்சுட்டு கிளம்பு தாயி"- பக்கத்து வீட்டு பார்வதி அக்கா குரல் கொடுத்தாள்.

"எதுக்கு அக்கா?"

"என்ன ஒண்ணும் தெரியாத மாதிரி கேட்கற? நம்ம நகராட்சிப் பள்ளிக் கூடத்துல வச்சு நமக்கெல்லாம் இலவச கலர் டிவி பொட்டி தர்றாங்க இல்லை. அதுக்காக மைக்கெலாம் கட்டி காலைல இருந்து பாட்டு போட்டுக்கிட்டு இருக்காங்களே.. நம்ம எம்.எல்.ஏ. வந்து தர்றாரு"

"அடப் போக்கா.. எனக்கு டி.வி.பொட்டியும் வேண்டாம். ஒண்ணும் வேண்டாம். இந்த ஓட்டை வீட்டுக்குள்ள எங்கன கொண்டாந்து வைக்கறது. பொழப்பக் கெடுத்துட்டு அங்கன போயி காத்துக் கிடக்கச் சொல்லுதியா?" இரவில் தண்ணி போட்டுட்டு வந்து புருஷன் முருகேசன் செய்த ராவடியின் தாக்கத்தில் இருந்து விடுபடாமல் சலித்துக் கொண்டாள் அஞ்சலை.

"அடப் போக்கத்தவளே... ஒவ்வொரு கூப்பனுக்கும் ஒரு டி.வி.பொட்டின்னு சொல்லிட்டதால, பணக்காரங்க, ஆபிசர்மாருங்க கூட ஆளுக்கு ஒரு டி.வி.வாங்கியிருக்காங்க. ஓசியில கொடுக்குற டி.வி.யை வாங்க உனக்குக் கசக்குதாக்கும். இவ்வளவு ஏன்? நீ வேலை பாக்குற வீட்டு எசமானியம்மாக்கள் கூட இதுக்குள்ள அங்கன போயி காத்துக்கிட்டு இருப்பாங்க. டி.வி. வாங்கப் போயிருந்தேன். அதனால வீட்டு வேலைக்கு வர முடியலைன்னு சொன்னா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. கூப்பனை எடுத்துக்கிட்டுக் கிளம்பு ஆத்தா"

பார்வதி அக்காவின் அனத்தல் தாங்கமுடியாமல் கிளம்பினாள் அஞ்சலை.

அவளுக்குத் தினப்பாடே பெரும்பாடு. இவ்வளவுக்கும் அவள் பிறந்த வீடு சோத்துக்கும், துணிக்கும் குறைவில்லாதபடி ஓரளவு வசதி கொண்டதுதான். அவளும் பத்தாப்பு வரை படித்திருந்தாள்.

"பிளம்பர் வேலை பார்க்கிறான். வருமானத்துக்குக் குறைவில்லை" என்று கேள்விப்பட்டுத்தான் முருகேசனுக்குக் கட்டிக் கொடுத்தார்கள். வந்தபிறகுதான் தெரிந்தது, அவனுக்குக் குடிப்பழக்கம் உண்டென்று. ஆரம்பத்தில் வாரம் ஒருமுறை, இருமுறையாய் இருந்த பழக்கம், இப்போது வேலை முடிந்ததும் மதுக்கடைதான் என்றாகிவிட்டது.

அவளும் சாம, தான, பேதம் என அனைத்தையும் உபயோகித்துப் பார்த்துவிட்டாள். பலனில்லை. கோபத்தில் அவன் அடிக்கும் அடிகளும், ஒண்ணாப்புப் போகும் கண்ணனும்தான் முருகேசனுக்கு வாக்கப்பட்டு அவள் அடைந்த பரிசுகள்.

அடிப்படையில் முருகேசன் என்னவோ நல்லவன்தான். எத்தனையோ முறை அவள் மீதும், பிள்ளை மீதும், "இனிக் குடிக்கவே மாட்டேன்" எனச் சத்தியம் செய்திருக்கிறான். ஆனால் மதுக் கடையைக் கண்டதும் மனம் மாறி சத்தியத்தை மறந்துவிடுகிறான். அதுதான் தெருவுக்குத் தெரு திறந்து வைத்திருக்கிறார்களே? பள்ளிக்கூடம், கோயில், குடியிருப்பு என எந்த வரைமுறையும் இல்லாமல்.

முருகேசனுக்குத் தினமும் 200-300 கிடைத்தாலும் அஞ்சலையிடம் முழுசாக நூறு ரூபாய் வந்து சேர்ந்தால் அதிசயம்தான். வேலை இல்லாத நாட்களில் இவளை அடித்துப் பிடித்து, இருந்ததைப் பிடுங்கிக் கொண்டு சென்று விடுவான். அஞ்சலை அவனுடைய வருமானத்தை நம்பாமல் நாலைந்து வீடுகளில் வீட்டு வேலை பார்த்து ஒரு வழியாய்க் குடும்பத்தை நடத்தி வருகிறாள்.

நேத்து ராத்திரி தண்ணியப் போட்டுட்டு வந்து, "வெறும் புளிக்குழம்புதானா? கருவாட்டுக் குழம்பு எங்கேடி?" என ஒரே ரகளை.

"ஆமா, ராசா கட்டுக்கட்டா கொண்டு வந்து கொட்டுறார் இல்லே. கண்டிப்பாக் கருவாட்டுக் குழம்பும், கோழிக் கறியும் ஆக்கித்தான் போடணும்" என அஞ்சலை பதில் கொடுக்க, "எதுத்தாடி பேசுற?" என அவன் தலைமுடியைப் பிடித்துச் சுவரில் மோத அதைப் பார்த்து குழந்தை கண்ணன் அலற, அவளுக்கு அடிவாங்குவதைவிட, "அதைப் பார்த்துக் குழந்தை பயந்துவிடக் கூடாதே" என்ற பயம்தான் அதிகமாக இருக்கும். இருந்தாலும் எவ்வளவு நாள்தான் பொறுமையாய் இருப்பது?

"டாக்டரிடம் காட்டித் தண்ணியடிக்கும் பழக்கத்தை மறக்கடிக்கலாம்" என ஒரு எசமானி அம்மா யோசனை சொன்னார்கள். டாக்டரிடம் போகக் காசு வேண்டும் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

"மறக்க வேண்டும்" என்ற நினைப்பு முருகேசனுக்கு வர வேண்டுமே? வீதிக்கு வீதி திறந்திருக்கும் மதுக் கடைகள் மறக்க விட்டுவிடுமா என்ன?

ஒரு வழியாய்க் கூட்டம் நடக்கும் பள்ளிக்கூடத்திற்குப் பார்வதியக்காவுடன் அஞ்சலை வந்துவிட்டாள். ஏற்கனவே அங்கே நிறையப் பேர் வந்து காத்திருந்தனர். அவள் வேலை பார்க்கும் வீடுகளின் எசமானியம்மாக்களையும் பார்க்க முடிந்தது. அவர்கள் வீட்டில் எல்லாம் ஏற்கனவே ஹோம் தியேட்டர் டி.வி.க்களே உண்டு. அப்புறம் ஏன் பராரிகள் போல் இப்படி வந்து காத்துக் கிடக்கிறார்கள்? எது எதற்கோ கௌரவம் பார்ப்பவர்கள் ஏனிப்படிக் காத்துக் கிடக்கிறார்கள்?

மைக் செட்டில் ஆளும் கட்சியின் சாதனைகள் பாடல்களாக ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. இந்த இலவசக் கலர் டி.வி. திட்டமும் அதில் ஒன்று. "மது விற்பனையை ஏன் ஒரு சாதனையாகக் சொல்லிக் கொள்வதில்லை. அதில் தானே அதிக வருமானம் வருகிறது?" என அஞ்சலைக்குச் சந்தேகம் வந்தது. "மது விற்பனை வருமானத்தில்தான் அரசாங்கமும், இதுபோன்ற இலவசத் திட்டங்களும் நடக்கின்றன" என்று அவள் வேலை பார்க்கும் வீடுகளில் பேப்பர் படிக்கும் பெரிய மனிதர்கள் பேசிக் கொள்வதைக் கேட்டிருக்கிறாள்.

மேடையில் திடீரென பரபரப்பு. "எம்.எல்.ஏ. வந்து கொண்டிருக்கிறார். அனைவரும் அவர்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்படி வரிசையாக உட்காருங்கள்" என ஒருவர் அறிவித்தார். எம்.எல்.ஏ. வந்துவிட அரசு அதிகாரிகளும், உள்ளூர் அரசியல்வாதிகளும் வரவேற்று அழைத்துச் சென்று அமர வைத்து அமர்ந்தனர்.

முதலில் சிலர் பேசிய பின் எம்.எல்.ஏ. மைக்கைப் பிடித்தார். சுமார் ஓர் அரைமணி நேரம் பேசினார். காத்திருந்தவர்களுக்கு வெயில் தகித்தது.

பேசி முடித்ததும் கூட்டம் படபடவென கைதட்டியது.

உடன் டி.வி. வழங்கும் வைபவம் துவங்கியது. எம்.எல்.ஏ. தனது சொந்தப் பணத்தில் டி.வி.வாங்கிக் கொடுத்ததைப் போல் புன்னகையோடு போஸ் கொடுத்தார்.

அஞ்சலையின் முறை வந்தது. மேடையேறி எம்.எல்.ஏ.வைக் கும்பிட்டாள். "வாங்கிக்கம்மா" என்ற எம்.எல்.ஏ.விடம், "ஐயா, எங்களை மாதிரி ஏழை பாழைங்களுக்கு இலவச டி.வி.தேவை இல்லை. எங்க குடும்பங்களைச் சீரழிச்சு சின்னாபின்னம் ஆக்கற மதுக் கடைகளை அரசாங்கம் மூடினாலே போதும். நாங்க இத விடவும் பெரிய சைஸ் டி.வி.யை பணம் கொடுத்தே வாங்க முடியும். இந்த மாதிரி இலவசத் திட்டங்களை எல்லாம் மது வருமானத்தில்தான் கொடுக்கறீங்கன்னு எல்லாரும் பேசிக்கிறாங்க. பள்ளிக்கூடத்தில படிக்கைல படிச்ச "கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரியாரோ?" என்ற பாரதியோட பாட்டுத்தான் நினைவுக்கு வருது. எங்களுக்குத் தேவை இலவச டி.வி. இல்லை. நிம்மதியான வாழ்க்கை. இப்ப நான் இந்த டி.வி.யை வாங்கிக்கிட்டேன்னா, அரசாங்கம் மதுக்கடை வருமானத்துல இலவச டி.வி. கொடுக்கறதைச் சரின்னு ஒத்துக்கிட்டதா ஆயிடும். அதனால எனக்கு இந்த இலவச டி.வி. வேண்டாம். மூச்சுவிடாமல் பேசிவிட்டு விடுவிடுவென்று நடக்கத் துவங்கினாள் அஞ்சலை.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link