சிறுகதைகள்


கருக்கல்

கூடல்.காம்
நெய்வேலி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை

அன்று வந்த காலை நாளிதழை மெல்ல மெல்ல ஒவ்வொன்றாக எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டிருந்தார் சதாசிவம். முன் நெற்றி நிறைய பட்டையாய்த் திருநீறு. தெருவில் வருவோர் போவோரையெல்லாம் பயமுறுத்தும் விதமாக குரைத்தபடி- சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த பொமேரேனியன் தன் விசுவாசத்தைப் பறைசாற்றிக்கொண்டிருந்த போதுதான், "பெருசுக்கும் ஒனக்கும் எத்தனவாட்டி சொன்னாலும் புரியறதேயில்ல. சரியான மரமண்டை! நா வடிச்சுக் கொட்டுறதைப் பார்ப்பேனா இல்ல ஒன்னக் கௌப்பி விடுறதைச் செய்வேனா"

அடுப்பங்கரையிலிருந்து புகைந்து வந்த மருமகளது இந்த அர்ச்சனையைத் தொடர்ந்து, தலையைத் தடவிக் கொண்டும் கண்ணைக் கசக்கிக் கொண்டும் சிறு ஊளையிட்டுக் கொண்டே வாசலுக்கு வந்த பேத்தியைப் பதறிப் போய் வாஞ்சையோடு தூக்கிக் கொண்டார் சதா. "பேப்பர்" காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. நாயின் குரைப்பு முன்னைவிட இப்போது அதிகமாகயிருந்தது.

"பச்சை மண்ணை காலாங்காத்தால போட்டு இப்புடியா அடிப்பாங்க என்னத்தப் படிச்சு வேலைக்குப் போயி கிழிச்சி..!"

பல்லை(!) நறநறத்துக் கொண்டார். மெல்ல அங்கு கேட்டிடாதபடி "அது சொன்ன மாதிரியே நானும் சரியான மரமண்டை தான்!" என்று வழுக்கைத் தலையின் வலது ஓரத்தை லேசாக வலிக்குமாறு ஒரு தட்டுத்தட்டிக் கொண்டார்.

மேலும், "என்னோட அம்மால்ல. அழப்படாது."

என்றவாறே தாரைதாரையாக கண்ணீர் மல்கிய பேத்தியை சமாதானப்படுத்தியவாறே வீட்டிற்குள் நுழைந்து தன் மகனைத் தேடினார் சதா. பாசத்தோடு.

காணவில்லை.

"பாத்ரூம்"லிருந்து கேட்டது. துணி துவைக்கும் சப்தம்!

"நல்லவேளை இந்தக் கண்றாவியைக் காணாமலேயே போய்ச் சேர்ந்துட்டா லெட்சுமி. புண்ணியவதி!"

பச்சாதாபப்பட்டுக் கொண்டார் சதா.

"விஜி எல்லாம் ரெடியாய்டுத்தா"

வேலைக்கு இன்று சீக்கிரத்தில் புறப்படும் அவசரத்திலிருந்தான் செல்வம். அலுவலகத்தில் ஆடிட்! துணை மேலாளர் பொறுப்பு வேறு. ஆதலால் முதல் ஆளாக நிற்க வேண்டிய நிர்ப்பந்தம். அவன் இறக்கை இப்போதுதான் தற்காலிக ஓய்வெடுக்க முற்பட்டது.

"எப்போதும் போல குடிக்க தண்ணிய மட்டும் நீங்களே எடுத்துக்கணும்."

"நீயே பாக்குற, காலைலேர்ந்து பம்பரமா சுத்துறேன். இன்னைக்குனு கெடிகாரம் வேற வேகமாக ஓடுது. "அதை"யும் செத்த எடுத்து வச்சிருக்கலாமுல்ல"

பாவமாய்க் கேட்டவனை ஏறிட்ட விஜி பொரிய ஆரம்பித்தாள். அவ்வளவு அவசரத்திலும்.

"எனக்கொண்ணும் பத்துக் கையில்ல. எல்லாம் செஞ்சு வைக்கறதுக்கு கூடமாட ஒண்ணும் செய்யப்படாது. ஆனா வக்கனையா மட்டும் எல்லாம் இருக்கணும்னா எப்படி"

"அப்ப நா ஒண்ணுமே செய்யலங்குறியா"

மூக்கு நுனி விடைத்தான் செல்வம் ருத்ரனாக.

பதிலுக்கு சக்தி அவதாரமெடுத்தாள் விஜியும். திடீரென அங்கு ஓர் இறுக்கமான சூழல் நிலவத் தொடங்கியது. அப்பா தன்னை கூர்ந்து கவனிப்பதை செல்வம் உணர்ந்து கொண்டான்.

"சரி சரி! அப்பா பார்க்குறாரு. பாப்பாவும் ஒரு மாதிரியா இருக்கா. ஆபிஸ்ல எல்லாம் நல்லபடியா முடியணும். நீ உன் கச்சேரியை அப்புறம் வச்சுக்க. இப்ப மொதல்ல போய் குளி. போ!"

தன்நிலை உணர்ந்தவனாக இப்போது பிரளயம் ஏதும் நிகழ்ந்து விடாதிருக்க அவளைத் துரிதமாக அங்கிருந்து அப்புறப்படுத்த முனைந்தான். விஜி தன் வெறுப்பு ரேகைகளை முகத்தில் மேலும் படரவிட்டு "ஹும்" என எரிச்சலை உமிழ்ந்து மாற்றுத் துணியுடன் காற்றை வீசியறைந்து போனதை செல்வத்தால் ஜீரணிக்க முடியவில்லை.

"ஙே" வென்று ஏதும் செய்ய வாளாதவனாக நின்று கொண்டேயிருந்தான். உடம்பு மெல்ல சூடேறியது.

"செல்வம், நீ உன் பொட்டியில எல்லாம் ஒழுங்கா எடுத்து வச்சுருக்கியானு போய் பாருப்பா. நான் சல்தியா இதை எடுத்துர்றேன்."

அடுக்களை இப்போது சதாவை மேய்த்துக் கொண்டிருந்தது.

தாரணிக்கு உடம்பு லேசாக காய ஆரம்பித்தது. வழக்கமாக காணப்படும் குதூகலம் இல்லை. சோர்வுற்றிருந்தாள். காலையில் இட்லியைத் தின்ன பிடிவாதம் செய்தபோதுதான் விஜி அதனைக் கண்டறிந்தாள். அவளுக்கோ பள்ளியில் இன்று ஆண்டாய்வு. விடுப்பு எடுக்க முடியாத நிலை. புழுவாய்த் துடித்தாள். "ஓடியோடி உழைத்து போகும்போது என்னத்தைத்தான் அள்ளிக்கிட்டுப் போகப் போறோமோ தெரியலை" எனத் தன்னையே கடிந்து கொண்டவள் முகம் ஆம்பலாகச் சுருங்கிற்று.

சதா மடியில் சுணங்கிக் கொண்டு தாரணி அப்பாவையும் அம்மாவையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். "ரோபோ" வாக இருவரும். ஒன்று நின்றபடியே சாப்பாட்டை பரபரத்து விழுங்கிக் கொண்டிருக்க, மற்றொன்று இங்குமங்குமாக "சரக் புரக்"கென நடந்து புறப்பட்டுக் கொண்டிருந்தது. சிந்தனை முழுவதிலும் தாரணிதான்!

"அடக் கடவுளே! இருந்த அலைமழுப்புல சுத்தமா மறந்தே போய்ட்டோமே!... தம்பிக்கு பீஸ் கட்டுறதை. இன்னைக்கு தான் லாஸ்ட் டேட் வேற."

பாதி வாயில் பொறி தட்டியவனாக செல்வம் விஜியிடம் கூற, அவள் கை பிதுக்கியவளாக "மகமாயி ஒனக்கு என்மேல கருணையே இல்லியா இப்ப நான் என்ன செய்வேன்" என்று புலம்ப ஆரம்பித்தாள். அழுகையும் ஆத்திரமும் தொண்டையை அடைத்தது. "அடச்சீ!... நாய்ப் பொழப்பை விட கேடு கெட்ட பொழைப்பு இது"வென்று மூக்கை கர்ச்சீப்பால் சிந்திக் கொண்டாள்.

ஆபத்பாந்தவராக சதா இப்போது இருவருக்கும் காட்சி அளிக்கலானார்.

"அப்பா!..."

செல்வம் மெதுவாக பிடில் வாசித்தான். கூடவே மருமகளும் எப்போதும் காட்டும் வேண்டா வெறுப்பைப் புறம்தள்ளியவளாக அபயம் கோரி மௌனமாக நின்றிருந்தாள். கண்களிலிருந்து கருணை பனிப்பதைக் கண்டு பதறியவராக சதா.

"சொல்லும்மா! செய்யறேன்" என்றார். தந்தை உள்ளத்துடன் வலு மிகுதி கொண்டவராக. செல்வம் கத்தையாகப் பணத்தைக் கொடுத்த போதுமட்டும் கை நடுங்கினார் சதா. ஆனாலும் மனத்தை திடப்படுத்திக் கொண்டார்.

டாக்டர் தர்மராஜிடம் குழந்தையைக் காண்பித்து மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொண்டு நேரே செல்லப்பா டிபன் கடைக்குச் சென்றார். எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி ஒரே ஒரு இட்லியை மட்டும் அவளை சாப்பிட வைத்து விட்டார். தனக்கு ஒரு "டீ" போடச் சொல்லிப் பருகினார். அதன்பின் தன் சட்டைப்பையிலிருந்து காசை எடுத்துக் கொடுத்து விட்டு அவளது பிஞ்சுக் கையை சற்று அழுத்திப் பிடித்தவாறு நடைக்கட்ட ஆரம்பித்தார்.

ஆனாலும் அந்த இளங்கன்று அவரிடம் வழிநெடுகிலும் திமிறிக் கொண்டு தான் இருந்தது.

காலையிலேயே அந்த வங்கியை ஒரு பெரும் கூட்டம் மொய்த்துக் கிடந்தது. சதாசிவம் தன் பேத்தியுடனும் பணத்துடனும் ஓர் ஓரமாக சென்று அமர்ந்து கொண்டார். நடந்த களைப்பும் ஓயாது சொல்லிக் கொண்டு வந்த பதிலும், வெய்யிலும் அவரை என்னவோ செய்து கொண்டிருந்தன. கண்ணை லேசாக இருட்ட ஆரம்பித்தது. இரைச்சல் வேறு காதை பிளக்க பக்கத்திலிருந்த கடையில் கொஞ்சம் தண்ணீர் வாங்கித் தொண்டையை நனைத்துக் கொண்டார்.

அதற்குள் வங்கி திறக்கப்பட்டு விட்டது. மொய்த்த அத்தனை கூட்டமும் ஆண், பெண்ணெண்று பார்க்காது ஒருத்தரையொருத்தர் முட்டி இடித்துத் தள்ளி முதலாளாக நிற்க ஓடிக்கொண்டிருந்தது. சதா அப்படி எதுவும் செய்யாது வேடிக்கை மட்டும் பார்த்து கழிவிரக்கம் பட்டுக் கொண்டார். "இந்த வேலை மட்டும் தான் பாக்கி. முடிந்ததும் ஆட்டோவிலாவது வீட்டிற்குச் சென்று விடவேண்டும்" என எண்ணியவரை அனுமார் வாலாக நீண்டுக் கொண்டேயிருக்கும் க்யூ. ஒன்றும் விளங்காத ஃபார்ம்.

எரிந்து விழுந்து புழுவாகப் பார்க்கும் ஆட்கள் எல்லாமுமாக அவரை மேலும் கிலியடையச் செய்தன. பயத்தில் சிறுநீர் முட்டுவது மாதிரியிருந்தது அவருக்கு. எல்லாம் மனப்பிரமையென தான் சதா துதிக்கும் சக்தி வேல் முருகனை மனத்தில் இருத்தியும் அழிச்சாட்டியும் புரிந்த பேத்தியை அமைதிப்படுத்தி தூக்கிக்கொண்டும் பணத்துடன் உள்ளே மெதுவாகப் புகுந்தார் சதா.

சின்னச் சின்ன வாலாக கூட்டம். நின்றபடியே ஓடிக்கொண்டிருந்தது.

ஒவ்வொருவருக்கும் பின்னால் நிற்பவர்கள் தனக்கு முன்னால் நிற்பவர்களை வெறுப்புடன் விரட்டிக் கொண்டே இருந்தனர். முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டும் பாவனை சிரிப்பு சிரித்துக் கொண்டும். அப்பாவியாக சதா அக்கூட்டத்துள் யாரையோ தேடியலைந்தார். ஒரு மனித வாடையும் தட்டுப்படவில்லை. பேத்தியும் பணமுமாக இருந்தவர் கையில் புதிதாக ஃபார்ம் ஒன்று! இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருந்த மனிதர் மத்தியிலிருந்து ஒரு நேயக்குரல் தன்னைத் தட்டுவதாக உணர்ந்தார் அவர்.

"மே ஐ ஹெல்ப் யூ சார்!"

திரும்பினார். உயிர் மீண்டு எழுந்தவராக சதா. உள்ளுக்குள் மகிழ்ச்சி வெள்ளம் ஊற்றெடுத்தது. நெற்றி சுருக்கினார். பெரிய படிப்பு படித்தவன் போலிருந்தான் அந்த டிப்டாப் ஆசாமி இளைஞன் அவருக்கு. முகத்தில் வசீகரப் புன்னகை ஒன்று தவழ்ந்துக் கொண்டிருந்தது.

"தம்பீ! என்னையங்களா" புரியாதவராய் விழித்தார் சதா.

"ஒங்களைத்தான். ரொம்ப நேரமா புள்ளையும் கையுமா அலைஞ்சுகிட்டு இருந்தீங்க. அதான் உதவி செய்யலாமுன்னு...!"

நிம்மதி அடைந்தவரானார் சதா. கை வேறு வலித்தது. தாரணியை இறக்கி விட்டவர், தோளை சற்று அங்குமிங்கும் சிலுப்பி தனது அல்லலை முதலில் தணித்துக் கொண்டார். அவளோ அந்த மந்தை சத்தத்திலிருந்து ஓடி வெளியேறிடவே முனைப்புக் காட்டிக் கொண்டிருந்தாள்.

"என் செல்லம்ல. செத்தப் பொறும்மா!" கெஞ்சினார். இதைக் கேட்டதும் அவர் பிடிக்குள் அவள் அடங்கிப் போனாள். வேண்டா வெறுப்புடன் காய்ச்சல் விட்டிருந்தது.

அவரவர் உலகத்தில் அவரவர் இயங்கிக் கொண்டிருக்க,

"ஐயா!...என்ன உதவின்னு கொஞ்சம் சொன்னீங்கனா ரொம்ப நல்லாயிருக்கும்!" வில்லாக வளைந்தான் அந்த இளைஞன். தோள் குறுக்காக மாட்டியிருந்த பை சற்று இடைஞ்சல் தந்தது. ஆகையால் முழுதாக அவனால் வளைய முடியவில்லை. "மன்னிச்சிடுங்க தம்பி! இதுல ஸ்கூலோட அட்ரஸ் இருக்கு. அனுப்புறவங்க எங்க அட்ரஸ் அதுக்கு பின்னால இருக்கு."

பரபரப்புடன் தன் கையில் வைத்திருந்த பணப்பையினுள் துளாவி ஒரு துண்டுத்தாளை எடுத்து அவனிடம் நீட்டினார். அதற்குள் தாரணி வரிசையை விலக்கி வெளிவர, சதா பதறி ஓடிப்பிடித்துக் கொண்டு வந்தார். முகத்தில் லேசாக கடுகடுப்பு இப்போது அவரிடம் தென்பட்டது. அவளுக்கு அந்த குளீருட்டப்பட்ட இடம், மனித வரிசைகள், அலைந்து திரியும் மனிதர்கள், புழுக்கக் காற்று ஆகியவை சுத்தமாக பிடிக்கவில்லை போலும்!

தொட்டு விடும் தூரத்தில் இப்போது அவள் விளையாடிக் கொண்டிருக்க சதாவுக்கு ஒரு கண் அங்கும் மறுகண் இங்குமாக இருந்தது. இது நாள் வரை அவர் இப்படியொரு நெருக்கடியைத் தன் வாழ்நாளில் சந்தித்ததில்லை. மகனும் மருமகளும் பொறுப்பை போட்டிப் போட்டுக் கொண்டு தட்டிக் கழித்தற்கான பிரதான காரணம் இப்போதுதான் அவர் புத்தியில் உறைத்தது. "சார் டினாமினேஷன் இதுல இல்ல. உங்க கிட்ட இருக்குற அமௌன்ட்ட தந்தீங்கன்னா வேலை ஈஸியா முடிஞ்சிடும் கரெக்ட்டா எழுதறதுக்கு!"

பாதி நிரப்பட்ட "செல்லானை" அவர் முன் காட்டிக் கேட்டதும் சதா அரை மனத்துடனே பணத்தை கையில் அள்ளினார். "தான் பெற்ற பிள்ளையையே இந்தப் பாழாய்ப் போன பணம் நம்ப மறுக்கும். இவன் யார் பெற்ற பிள்ளையோ தெரியவில்லை." தயங்கியவாறே பேத்தியை கண்ணுற்றவர் திடுக்கிட்டுப் போனார். அவள் தொலைந்து போயிருந்தாள்!

"ஐயோ!..."வென்று தலையில் அடித்துக் கொண்டே விரைந்து ஓட முயன்றவர் மீண்டும் திரும்பி வந்து, "இந்தாங்க தம்பீ! கொஞ்சம் சிரமம் பார்க்காம நீங்களே அதை நெரப்பிக் கட்டிடுங்க! புண்ணியமாய் போவும். தம்பி பத்திரம்பா. ஊரான் வூட்டு பணம்." இரந்து சொல்லி பின் படபடத்து வெளியே பறந்துச் சென்றார் சதா. ஏற்கனவே அவருக்கு லோ பிபீ. இப்போது அது அவருக்கு "ஹை"யாக எகிறியது.

ஒரு கிழம் அங்குமிங்கும் அலைந்து தேடுவதை "உச்" கொட்டியபடி சுற்றிக் கொண்டிருந்தது உலகம். வெறுமையாகவும் வேடிக்கையாகவும்.

உச்சி வெய்யிலோ மண்டையைப் பிளந்தது. நாவில் மீண்டும் ஒரே வறட்சி! தேடுதலை மட்டும் சதா கைவிடவில்லை. இறுதியாக-

அதிக தூரம் வந்து விட்டிருந்தவள் வெளிநாட்டுப் பொருள்கள் விற்கும் ஒரு கடைக்கு முன்னால் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த மீன் தொட்டி முன் "ஐய்"யென மெய்மறந்து மகிழ்ச்சிப் பெருக்கெடுத்து நின்றிருந்தாள் தாரணி. நீந்தி நெளியும் மீனில் பதிந்திருந்தன அவளது கயல்விழிகள். இப்போது தான் சதாவிற்கு உயிர் திரும்பியது.

ஒரு நெடுமூச்சு வாங்கிக் கொண்டார். "முருகா!..." நா தழுதழுத்தது. பிறகு மூளையில் பொறி தட்டியவராக வேகவேகமாக தன் பேத்தியை வாரி அள்ளி தோளில் போட்டுக் கொண்டுத் திரும்ப ஓடினார். நாக்கு மீண்டும் வெளியில் தள்ளத் தொடங்கியது அவருக்கு. "கடவுளே!..." உடுக்கை இழந்தவனாக இறைஞ்சத் தொடங்கினார் சதா. முகம் வெருண்டுக் காணப்பட்டது. மேலும் தொப்பலாகியது அவரது கதர் ஜிப்பா.

"பெரியவரே! ஏன் இந்த வேகாத வெயில்ல இப்படிப் பச்சப் புள்ளையோட அல்லாடிக்கிட்டு, பேசாம வூட்லக் கெடக்கக் கூடாது"

முகமறியாத அந்த காய்கறி தள்ளுவண்டிக்காரனது கழிவிரக்கத்திற்குப் பதிலாக, "அடப் போப்பா! நீ வேற!"

ஒதுக்கித் தள்ளியவாறு விரைந்தோடினார் சதா. அந்த வங்கி முன்னை விட இப்போது அதிகம் நிரம்பி வழிந்தது!. பார்த்த முகமாக ஒன்றுமில்லை.

இருட்டிக் கொண்டு வந்த அவரது மங்கிய பார்வை ஒவ்வொருவராக துளைத்தெடுத்தது. நெஞ்சு இலேசாக வலிப்பது போலிருந்தது. சிரமப்பட்டுத் தாங்கிக் கொண்டார் சதா. கால்கள் வலுவிழந்துக் கொண்டிருந்தன. ஆனாலும் விடாது ஒவ்வொரு இடமாக, ஒவ்வொரு நபராக தேடியலைந்தார்-!

அந்த ஆசாமியின் தடயம் ஒன்று கூட கடைசியில் சிக்கவில்லை என்றதும் சதா முற்றுமாக நொறுங்கிப் போனார். இதயம் சுக்குநூறாக வெடிக்கத் தயாராக இருந்தது. சொல்லவொணாத் துயரம் அவருடைய தொண்டையை நெரித்தது. சுளையாக முப்பத்தைந்தாயிரத்து முந்நூற்று ஐம்பது ரூபாய்!

சதாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இவ்வளவு மனிதர்கள் இருந்தும் ஒன்றுக்கும் ஆகாது இப்படி "அம்போ"னு போய்ட்டோமே என்கிற எண்ணமே அவரை கொன்று தின்ன,

"ஐயோ!... நா என்ன செய்வேன் எப்படியாச்சுனு கேக்குறவங்க முகத்துல நா இனி எப்படி முழிப்பேன்!.."

வீட்டில் நடக்கவிருப்பதை நினைத்துப் பார்த்ததும் பயம் ஆழிப்பேரலையாக புறப்பட்டு ஒரேடியாக விழுங்கியதும் ஆந்தையாய் இப்படி அலறி சரிந்து விழுந்தார் சதா. வாழ்க்கையே சூன்யமாகி விட்டாற் போன்று ஒரு பிரமை.

"ஐயோ! என் பணம்...என் பணம்..." பித்துப்பிடித்தவராக அரற்றி ஒப்பாரி வைத்தவர் திடீரென்று பேச்சு மூச்சற்று விழுந்ததும் பதறிய கூட்டம் ஓடிவந்து குழுமிவிட, அங்கு ஒரே களேபரமாகி விட்டது. சற்று நேரத்திற்குள் இழவு வீடானது அந்த இடம்.

"தாத்தா!... தாத்தா!..." பயம் அப்பிப் போன தாரணி அவரைத் தட்டி உலுக்கி அழுதுக் கொண்டிருக்க-

கூட்டத்திலிருந்து ஒருவர் மட்டும் துணிச்சலாக அவர்மேல் இரக்கப்பட்டு நாடி பிடித்து கூர்ந்தார். சுற்றி நின்ற அனைவரது பார்வையும் சதாவின் மீதே குவிய-அந்தக் கணநேர நிசப்பத்திற்கு இடையில் அந்த நபர் கத்த ஆரம்பித்தார்.

"உசுரு இருக்குப்பா"

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link