சிறுகதைகள்


தியாகமும் பரிசும்

கூடல்.காம்
கோவையிலிருந்து நானும் சில நண்பர்களும் சென்னைக்குச் சுற்றுலா சென்றிருந்தோம். அன்று சில இடங்களைப் பார்த்துவிட்டு, இரவு ஒன்பது மணிக்கு மேல் நாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்குச் செல்ல ரயில் ஏற, ரயில் நிலையம் சென்றோம்.

அங்கு சுமார் ஏழு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் கிழிந்து போன துணிகளுடன் காணப்பட்டான். அவன் என்னிடமும், என் நண்பர்களிடமும், அங்கு நின்று கொண்டிருந்த சிலரிடமும் பிச்சை கேட்டான். நானோ, நண்பர்களோ, அங்கு நின்றிருந்த வேறு யாருமோ அவனுக்குக் காசு கொடுக்கவில்லை. நேரம் அதிகம் ஆனதால் பயணிகள் கூட்டம் குறைந்து கொண்டேயிருந்தது.

எல்லோரிடமும் காசு கேட்டுக் கொண்டிருந்த சிறுவன் சில வினாடிகள் தரையைப் பார்த்தான். பின் தரையில் படுத்த அவன் சில வினாடிகளில் தூங்கிவிட்டான்.

இந்த சிறுவனைப் பற்றிய எண்ணம் நான் சென்னையில் இருக்கும் வரையும், ஊருக்கு வந்த பிறகும் என்னை விட்டு அகலாமல் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

நண்பன் ஒருவனிடம் கூறினேன். அவன் தெளிவாகச் சொன்னான். "ஒன்று அவனை மறந்து விடு. இல்லையென்றால் அவனைக் கூட்டிக்கொண்டு வந்து உன்னால் அவன் வாழ்க்கை மேம்பட என்ன செய்ய முடியுமோ அதைச் செய். சும்மா அவனைப்பற்றியே நினைச்சுட்டு இருக்கிறதால அவனுக்கு எந்த நன்மையும் வரப் போறதில்லை."

ஓரிரு வாரங்கள் சென்றன. என்னிடமிருந்து அச்சிறுவன் அகலாமல் என்னைத் தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டே இருந்தான். ஒரு முடிவுக்கு வந்த நான் மீண்டும் சென்னை செல்வதென முடிவெடுத்து சென்னைச் சென்றேன்.

முதலில் நான் அவனை சந்தித்த பிளாட்பாரத்தில் தேடினேன். அவனைக் காணவில்லை. அடுத்த பிளாட்பாரத்தில், அதற்கு அடுத்தது என ஒவ்வொன்றாகத் தேடினேன். நீண்ட நேரத் தேடலுக்குப்பின் அவனைக் கண்டேன்.

அவன் அருகில் சென்றேன். என்னிடம் கையை நீட்டினான். ஒரு ரூபாய் காசை அவன் கையில் வைத்துவிட்டு, "நீ என்னோடு வர்றியா? உன்னை ஸ்கூலுக்கு அனுப்பிப் படிக்க வைக்கிறேன்."

அவன் என்னை கண்டுகொள்ளாமல், அடுத்தவர்களிடம் கையேந்தி பிச்சையெடுப்பதில் குறியாக இருந்தான். மீண்டும் அவனை நெருங்கினேன். என்னை அவன் கண்டு கொள்ளவே இல்லை. மீண்டும் ஒருமுறை, "நீ என்னோடு வா. உன்னைப் படிக்க வச்சு பெரிய ஆளாக ஆக்குகிறேன்."

"போ சார்! இது மாதிரி எத்தனைபேரு என்னைக் கூப்பிட்டு இருப்பாங்க. ஒருத்தருகூட போகவும் செஞ்சேன். அங்க இருக்க பிடிக்காம மீண்டும் இங்கேயே வந்துட்டேன்" பதில் சொல்லிக்கொண்டே அவன் வேலையில் குறியாக இருந்தான்.

அவனையும் அழைத்துக்கொண்டு வீடு திரும்பலாம் என்று இருந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நண்பனுக்குப் போன் செய்தேன்.

"அவன் வரலை நான் என்ன செய்றது?"

"ஒரு சின்னப் பையனை உன்னால் வழிக்குக் கொண்டு வர முடியல. நீ வாழ்க்கையில என்ன கிழிக்கப்போற. முயற்சி செய். இந்தப் பையன் வராம, நான் ஊருக்கு வர்றதில்லைன்னு முடிவெடு. இல்லையா ஒரு மண்ணும் வேண்டாம்ன்னு திரும்பி வந்திடு."

நான் சென்னையிலேயே ஒரு ரூம் எடுத்து தங்கி யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். ஒரு சின்னப் பையனை என் வழிக்கு கொண்டுவர முடியலன்னா, நான் இருந்தா என்ன? செத்தா என்ன? ஊருக்குப் போனா இந்தப் பையனோடுதான் போவேன். இல்லை என்றால் ஊருக்கே போக மாட்டேன் என்ற முடிவுக்கு வந்தேன். அடுத்த நாள், ரயில் நிலையம் சென்று அவனைப் பார்த்தேன். சிரித்தேன். அவனும் பதிலுக்குச் சிரித்துக்கொண்டே கையை நீட்டினான்.

"டீ சாப்பிடுறியா?"

"ஓ! சாப்பிடலாம்"

அருகிலிருந்த கடைக்குச் சென்றோம்.

"டிபன் சாப்பிடுறியா?"

"சாப்பிடுறேன்"

டிபனும், டீயும் வாங்கிக் கொடுத்தேன்.

"நீ ஒரு மணிநேரம் பிச்சை எடுத்தா எவ்வளவு கிடைக்கும்?"

"பத்தும் கெடைக்கும், இருபதும் கெடைக்கும். கெடைக்காமலும் இருக்கும்."

"நீ ஒருமணி நேரம் என்கூட இரு. இருபது ரூபா தர்றேன்."

"சரி. துட்டை எடு சார்."

இருபது ரூபாய் கொடுத்தேன். ஒரு பெஞ்சில் இருவரும் அமர்ந்தோம்.

"உன் பேரு?"

"தெரியாது"

"ஊரு?"

"தெரியாது"

"அம்மா, அப்பா?"

"அப்பன்னு ஒருத்தன் வருவான். அவன் கையில நான் மாட்டினா, என் கையில் இருக்கிற துட்டை எல்லாம் பிடுங்கிக்கிடுவான். அதனால அவனைப் பார்த்தாலே ஓடிடுவேன்." மேலும், அவனிடம் சில கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தேன்.

"ஒரு மணிநேரம் ஆச்சு சார். நான் போறேன்."

"உன் கதையை சினிமா எடுத்தா நீ அதில் நடிப்பியா?"

"சினிமாவா! நான் நல்லா நடிப்பேன் சார்"

சினிமா என்ற தூண்டிலில் சிக்காத மனிதர்களே இல்லை என்பதை உணர்ந்து இவனிடமும் தூண்டில் வீசினேன். அவன் சிக்கிக் கொண்டான். இப்போது அவன் பின்னால் நான் சுற்றும் நிலைமாறி என் பின்னால் அவன் சுற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டான். சினிமா எடுக்கிறவருகிட்ட கேட்டுட்டு சாயங்காலம் வந்து உன்னை கூட்டிட்டுப் போறேன்.

"சரி சார்."

மாலையில் சென்றேன். என்னைப் பார்த்த உடன் அவனே ஓடிவந்தான். சினிமா எடுக்கிறவருகிட்ட கேட்டேன். ஓ.கே. சொல்லிட்டார். அவனுக்கு ஒரே சந்தோஷம்.

"நீ சினிமாவில் நடிக்கணும்னா பிராக்டீஸ் செய்ய வேண்டும். அதுக்கு நீ என்கூட கோயமுத்தூர் வரணும்."

"கோயமுத்தூரா வர்றேன் சார்."

ஊருக்குச் செல்ல எத்தனை நாள் ஆகுமோ என்று எண்ணி இருந்த எனக்கு ஒரே நாளில் ஊருக்குச் செல்வது சந்தோஷத்தை அளித்தது.

இருவரும் கோவையில் எங்கள் வீட்டை அடைந்தோம். என் நண்பனுக்குப் போன் செய்து வீட்டுக்கு வரும்படி கூறி, நீ வந்து சிறுவனிடம் படம் எடுக்கப்போறது நான்தான் என ஒரு பொய்யையும் சொல்லும்படி கூறினேன்.

வீட்டுக்கு வந்த நண்பன், "இவ்வளவு சீக்கிரம் வெற்றியோடு வந்ததற்கு வாழ்த்துகள். இவன்தான் நம்ம படத்தில நடிக்கப் போறவனா அவனுக்குச் சில நாட்கள் நடிக்கிறது எப்படின்னு சொல்லி கொடுத்திட்டுப் படம் எடுக்கலாம்" என்றான். தொடர்ந்து சில நாட்கள் அவனுக்கு நடிக்கச் சொல்லிக் கொடுத்தான் நண்பன்.

சிறுவனிடம், நீ ஓ.கே. இனி படம் எடுக்கிறதற்கான வேறு வேலைகளை முடித்துவிட்டு, உன்னை அழைத்துச் செல்வதாகவும் அதுவரை நான் சொல்வதைக் கேட்டு, நடக்கும்படியும் கூறிச் சென்றான்.

"படம் எடுக்கிறவரைக்கும் உன்னை ஸ்கூல்ல சேர்த்துவிடவா?"

"என்னைக் கூட்டிட்டு வந்த இடத்திலேயே கொண்டுபோய் விடுங்க. படம் எடுக்கிறப்ப என்னைக் கூட்டிட்டு வாங்க"

"இன்னும் கொஞ்சம் நாள்தானே! இங்கேயே இருந்து படம் நடிச்சு முடிச்ச பின்னால உன்னைக் கொண்டுபோய் விடுறேன். அதுவரைக்கும் நீ ஸ்கூலுக்குப் போ"

எப்படியோ கட்டாயப்படுத்தி அவனை சிலநாட்கள் அனுப்பி வைத்தேன். அவனிடமிருந்து தினமும் வரும் ஒரே கேள்வி "எப்ப படம் எடுப்பாங்க? நான் எப்ப சென்னை போவேன்?" இதிலிருந்து அவனுக்குப் படிப்பில் ஆர்வம் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.

இன்று கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும் போலீஸ் கையாள் இல்லாத ஊர் இல்லையே. எங்க ஊர் கை காட்டி மூலமாக சிறுவனை அழைத்து வந்த செய்தி போலீஸ் ஸ்டேஷனை எட்டியது. அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டரும் நல்லதுதானே செய்கிறான் என விட்டுவிட்டார்.

சில நாட்கள் அப்படியே கழிந்தது. ஒருநாள் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ. தனக்கு கீழ் இருக்கும் ஏட்டுவிடம், "நாளைக்குப் பத்தாயிரம் ரூபாய் தேவைப்படுது. பத்துநாளா ஒரு வருமானமும் இல்லாம இருக்கு. வருமானத்துக்கு ஒரு வழி சொல்லு."

"இப்ப எனக்கு தெரிஞ்சு ஓரே வழிதான் இருக்கு. மெட்ராஸ்ல இருந்து ஒரு பையனை கொண்டு வந்து இருக்கானே அவனை குழந்தை கடத்தல் கேசில மாட்டி விட்டுட்டுடோம்ன்னா பத்தோ, இருபதோ வாங்கிடலாம். வேற எதுவும் வழி இருக்கிற மாதிரி தெரியல"

போலீஸ் ஜீப் என் வீட்டுமுன் வந்து நின்றது. "ஏதோ தீவிரவாதியைப் பிடிக்கிற மாதிரி குழந்தைகளைக் கடத்தி விக்கிறீயா?" என என்னைப் பிடிச்சு சில அடிகளும் குடுத்து என்னையும் அந்தப் பையனையும் ஸ்டேஷனுக்கு ஏட்டு அழைத்துச் சென்றார். அங்கும் சில போலீசார் என்னை அடித்தனர்.

இதுவரை என்னை டேய் என்று கூட யாரும் அழைக்காத நிலையில், இந்த சிறுவனுக்கு ஒரு நல்லது செய்ய நினைத்தற்காக நான் கேவலமான வார்த்தைகளால் திட்டும் வாங்கி, அடியும் வாங்கி ஸ்டேஷனில் லாக்கப்பில் அடைக்கப்பட்டேன்.

எனது நண்பன் கேள்விப்பட்டு ஸ்டேஷனுக்கு வந்து சிறுவனைப் பற்றிய விவரத்தை எடுத்துச் சொன்னான்.

"சார் எங்களுக்கு ரிப்போர்ட் வந்திருக்கு. இந்த ஆளு குழந்தைகளைக் கடத்தறதா. அதுக்காகதான் இந்த ஆளைப் பிடிச்சு வந்து விசாரிக்கிறேன்."

"சார்! அவன் எந்த தப்பும் பண்ணாதவன். அவனை விட்டுடுங்க சார்"

"யோவ், இதென்ன சாதாரண கேஸ்ன்னு நினைச்சியா? குழந்தைகள் கடத்தல் கேஸ். இன்னும் எத்தனை குழந்தைகளைக் கடத்தினான் என்று விசாராணைக்குப் பின்தான் தெரியும். இன்னும் நாலு போட்டமின்னா எல்லாத்தையும் சொல்லிவிடுவான்."

"சார் அவனை அடிக்க வேண்டாம். உங்களுக்குப் பணம் வேணும்ன்னா தர்றோம் சார்."

"சரி, ஒரு ஐம்பாதியிரம் கொடு"

"ஐம்பதாயிரமா?"

"கொடுக்க முடியலன்னா நீ போயா. அவன்கிட்ட எப்படி உண்மையை வரவழைக்க முடியுமோ அப்படி வரவழைக்கிறோம்" சிறிது நேரம் நடந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு முப்பதாயிரம் கொடுத்து நண்பன் என்னை அழைத்து வந்தான். ஓரிரு நாட்களுக்குப்பின் நண்பனிடம் அந்தச் சிறுவன் என்ன ஆனான் எனப் பார்த்து வரச் சொன்னேன்.

"நமக்கு இந்த வேலையெல்லாம் வேண்டாம்டா. இங்க நல்லது செய்றதா இருந்தாலும் அதுக்கு ஒரு பேக்ரவுண்டு வேணும். இல்லைன்னா தெரு நாயைப் பிடிக்கிற மாதிரி நல்லது செய்கிறவனையும் பிடிச்சு என்-கவுண்டர்ல போட்டாலும் போட்டுடுவாங்க. நமக்காக யாரு வருவா. அதனால போய் உன் வேலையைப் பாரு."

"அப்படி இல்லைடா. அவன் சினிமாவை நம்பித்தான் என் பின்னால வந்தான். அவனுக்கு இங்க இருக்கிறதோ, ஸ்கூலுக்குப் போறதோ கொஞ்சமும் பிடிக்கலை. நீ போய் அவன் எங்க இருக்கிறான் என்று விசாரிச்சுட்டு வா"

விசாரித்து விட்டு வந்த நண்பன், "சிறுவர் ஜெயில்ல இருக்கிறானாம்"

"ஜாலியா சுத்திட்டு இருந்தவன். அவனுக்கு நல்லது செய்யலாம் என்று கூட்டிட்டு வந்தேன். இப்ப அவன் சிறுவர் ஜெயில்ல இருக்கிறதுக்கு நான் காரணம் ஆயிட்டேன். எப்படியோ அவனை எங்கேயிருந்து கூட்டிட்டு வந்தேனோ, அங்கேயே கொண்டு போய் விடணும். அங்கேயிருந்து கூட்டிட்டு வந்த வேலையை நான் செஞ்சேன். இப்பதான் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அதனால மீண்டும் அவனை கொண்டுபோய் விடுற வேலையை எனக்காக நீ செய்"

மீண்டும் சிறுவனைப்பற்றி விசாரிச்சுவிட்டு, வந்த நண்பன், "5,000 ரூபாய் கொடுத்தா உடனே விடுவாங்களாம். இல்லைன்னா எப்ப விடுவாங்க என்பதை சொல்ல முடியாதாம்."

"இந்தா ஐயாயிரம் ரூபாய். எப்படியாவது அவனைக் கூட்டிட்டு வந்து இன்னைக்கே ரயில்ல மெட்ராஸ்க்கு அனுப்பி வை."

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link