சிறுகதைகள்


யாசகம்

கூடல்.காம்
"யாருடா பிராண்டுறது..."

பழக்கமானவர்களில் யாரோ ஒருவர் கால் விரலைச் சுரண்டுவது போல் உணர்ந்த முத்து அங்கும் இங்கும் தேடினான். முகத்தில் துண்டைக் கட்டியிருந்த அவன் சத்தமில்லாமல் அறை முழுவதும் பார்வையைச் செலுத்தினான். வெளிச்சம் ரொம்பவும் குறைவாக இருந்தது.

"ஓ...நீயா..." முத்து அந்தப் பக்கம் திரும்பும் பொழுது, "கிரீச்...கிரீச்" என்று அவன் திரும்பிய திசையிலிருந்து சத்தம் வந்தது. சடாரென மீண்டும் இந்தப் பக்கம் திரும்பினான்.

தனியா இருந்த நீ, இப்ப குடும்பத்தோட கும்மாளம் போடுறீயா... பெரிய உருட்டுக்கட்டையை எடுத்துக் கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான்.

"இதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்டே... ராத்திரிக்குப் பொறியில மசால் வடய வச்சு உன்னய பிடிக்கிறேன் பாரு..." புலம்பிக் கொண்டே அருகில் இருந்த மூட்டையின் மீது அமர்ந்தான்.

ஞாயிற்றுக்கிழமைகளில் முத்துவுக்கு இதே வேலைதான். மிளகாய், மல்லி, சர்க்கரை, அரிசி, பருப்பு, புண்ணாக்கு... இப்படி மளிகைச் சாமான்களின் நெடி மூக்கைத் துளைப்பதால் குடோனைச் சுத்தம் செய்வது என்பது அவனைப் பொறுத்தவரை பாவமான காரியத்தில் ஈடுபடுவது போன்றது. எண்ணெய்ப் பிசுக்குடன் நாள் கணக்காக சுத்தம் செய்யப்படாமல், கால்களை வைப்பதற்கே அருவருப்பாக உள்ள தரையைப் பெருக்குவது, சிந்தியிருக்கிற மளிகை உதிரி சாமான்களை எல்லாம் வாரி அள்ளுவது, மூட்டைகளை சரியாக அடுக்குவது, சரக்கு முடிந்த சாக்குப் பைகளை நன்றாக உதறித் தனியாக அடுக்கி வைப்பது, மாவுச் சாக்குகளை உதறும் போது தொடர்ச்சியாக தும்மல் போடுவது இத்யாதி... உலகத்திலேயே மோசமான வேலை எதுவென்று முத்துவிடம் கேட்டால் மளிகைக் கடை குடோனைச் சுத்தப்படுத்துவதுதான் என்பான்.

ஏதோ மாறுவேடத்தில் செல்லும் திருடன் போல முகமூடி அணிந்து முத்து குடோனுக்குள் நுழைந்து விட்டால், அங்கு குடியிருக்கும் எலிகள் அவனுடன் பேசி மகிழ்ந்து விளையாடும்.

அவனுக்குப் பிடிக்காத இந்த வேலையில் எலிகளுடன் பேசுவது மட்டுமே அவனுக்குப் பிடித்த விஷயமாக இருந்தது. இன்று எலி நண்பர்களில் ஒருவன் முத்துவிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டு காலை லேசாகக் கடித்துவிட்டான். அதை அவன் பெரிதுபடுத்தாமல் பொறி வைத்துப் பிடித்து விடுவேன் என்று செல்லமாகக் கடிந்து கொண்டான்.

மளிகைக் குப்பைகளை அள்ளிக்கொண்டு குடோனுக்கு முன்புறமாக உள்ள கடை வாசலுக்கு வந்தான். வாரத்தில் ஒரு நாள் கடை திறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக குடோனுக்கு வந்தாலும் அன்று கடை திறந்தவுடன் மதியம் வரை மளிகைச் சாமானைப் பிரிப்பது என்ற பெயரில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள முத்துவுக்கு வாய்ப்பு கிடைத்தது. குடோனைச் சுத்தம் செய்து பொறுக்கி அள்ளிய மளிகைச் சாமான்களைப் பிரித்து அந்தந்த மூட்டைகளில் சேர்த்து விடவேண்டும் என்பது முதலாளியின் கண்டிப்பான உத்தரவு. எந்த குப்பையையும் கடை ஊழியர்கள் யாரும் அவ்வளவு எளிதில் குப்பைத் தொட்டியில் போட முடியாது. ஓர் அரிசியோ, பருப்போ அந்தந்த மூட்டைக்குச் சென்று சேரவேண்டும் என்பது அந்தக் கடையில் எழுதப்படாத விதியாக இருந்தது.

குப்பையில் போட வேண்டியதை சலித்து காசாக்குகிறானே கஞ்சன் என்று ஆரம்ப நாட்களில் உள்ளுக்குள்ளே பொறுமிக் கொண்டிருந்த முத்துவுக்கு இப்போது பழகிப் போய்விட்டது.

ஐயா... பிச்சை போடுங்க ஐயா... கொலந்த பசியால துடிக்குது பிச்சை போடுங்கய்யா...

உள்ளேயிருந்து ஓடிவந்த முத்து கடை வாசலில் வைக்கப்பட்டிருந்த டப்பாவிலிருந்து சில்லறை காசை எடுத்து பிச்சைக்காரியிடம் கொடுத்தான்.

கோடி கோடியாய்ச் சம்பாதிக்கும் முதலாளிகள் சில சில்லறைக் காசுகளை பிச்சைக்காரர்களுக்குக் கொடுப்பதை பெரும் வள்ளல் தன்மையாக விளம்பரப்படுத்திக் கொண்டார்கள். மக்களை ஏமாற்றி சம்பாதிக்கும் இவர்களில் சிலர் பிச்சைக்காரர்களுக்கு சில சில்லறைகளை விட்டு எறிவதுதான் இந்தப் பாவங்களுக்கு விமோசனம் என்று நம்பினார்கள்.

தர்மம் தலை காக்கும்...

தக்க சமயத்தில் உயிர்காக்கும்...

பாடல் வரிகள் தாளம் தப்பியவாறு ஒலித்து முத்துவை சுயநினைவுக்குத் திருப்பியது. பிச்சை பாத்திரங்களை இசைக் கருவிகளாக்கி பாட்டு பாடிக் கொண்டே ஒவ்வொரு கடையாக யாசகம் கேட்கும் குழுவினர் அவர்கள். ஹெல்ப் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தொப்பியை அணிந்த ஐந்து பேர் கடை வாசலில் நின்று யாசகம் கேட்டனர். தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர்கள் அனைவருக்குமாகச் சேர்த்து, முத்து நிறைய சில்லறைக் காசுகளைக் கொடுத்தான்.

இந்த வேலையையும் முத்துவே செய்து வந்தான். இப்படி யாசகம் கேட்பவர்களுக்கு சில சில்லறைகளைக் கொடுப்பது என்பதில் அவனுக்கு உடன்பாடில்லை. குப்பையை காசாக்கும் முதலாளியின் இந்தச் செயலும் அவனுக்கு அறவே பிடிக்கவில்லை. காரணம் புழக்கத்தில் அவ்வளவாக இல்லாத ஐம்பது பைசா காசுதான் கொடுக்க வேண்டும் அதுவும் ஒருத்தருக்கு ஒரு காசுதான் கொடுக்க வேண்டும் அதிகமாகக் கொடுத்து விடக்கூடாது.

இதற்காக அன்று மாலை பிச்சைக்காரர்களிடம், பிச்சையெடுத்த மொத்த சில்லறைக் காசுகளில் உள்ள ஐம்பது பைசா நாணயங்களை மட்டும் ரூபாயைக் கொடுத்து மாற்றி வாங்கி வைத்துக் கொள்வார்- அடுத்த வாரம் வாரி வழங்குவதற்காக

வழக்கம் போல் இன்றும் முத்துவின் எண்ண அலைகள் பலமாக வீசின. "இதெல்லாம் யாசகர்களுக்குப் போதுமா? கொஞ்சம் கூட்டிக் குறைந்தது ஒரு ரூபாய் நாணயமாவது போடலாம்... இதை முதலாளியிடம் சொல்ல அவனுக்கு ஆசைதான், சொல்ல முடியுமா? சொன்னால்தான் அவர் கேட்பாரா? கடுமையாக உழைக்கும் நமக்கே அவர் ஒழுங்காக சம்பளம் கொடுப்பது கிடையாது... இவராவது... கொடுக்கிறதாவது..." என சிந்தித்துக் கொண்டே குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தான்.

டப டப... டப... டப...

யோசனையில் இருந்த முத்து சுயநினைவுக்குத் திரும்பி அனிச்சையாக வானா முனா பராக் என்று கடை வாசலில் நின்றுக் கொண்டிருந்தவனுக்கு மட்டும் கேட்குமாறு குரல் கொடுத்தான்.

டப டப... டப...டப... சத்தம் அதிர்ந்து ஓய்ந்தது. வானா முனா பராக்... இது கடை வாசலில் நின்றுக் கொண்டிருந்தவனின் குரல். முதலாளி வரும் வரை கல்லாப்பெட்டியில் உட்கார்ந்திருக்கும் கணக்குப் பிள்ளை அந்தக் குரலை வாங்கி, வானா முனா பராக் என்று எதிரொலித்தார். தராசுக்கு அருகில் நின்றிருந்த ஊழியர் மீண்டும் வானா முனா பராக் என்று வழிமொழிய... இப்படியாக கடையின் உள்ளிருக்கும் கடைசி ஊழியர் வரை இந்த முழக்கம் முழங்கப்பட்டதுடன், அனைவரும் "அலர்ட்" ஆனார்கள்.

சமூகத்தில் பெரும்பாலும் புல்லட் வண்டி வைத்திருப்பவர்கள் போல ஆஜானுபாகுவானத் தோற்றம், வீரப்பன் போல முறுக்கு மீசை, போலீஸ் அதிகாரி போல ஹேர் கட்டிங், அரசியல்வாதி போல செயின், பிரேஸ்லெட் சகிதம் என்று எதுவுமே இல்லாமல் காமெடி நடிகர் போல சங்கரலிங்கம் இருப்பார்.

சாமி கும்பிட்டு விட்டு கல்லாவில் உட்கார்ந்த பின்தான் அர்ச்சனையை ஆரம்பிப்பார் சங்கரலிங்கம். கடையில் உள்ள ஒவ்வொரு ஊழியராகப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு ஏதாவது குற்றம் குறை சொல்லி அர்ச்சனை செய்தால்தான் அவருக்குத் திருப்தி. அன்று ஒரு நாள் அப்படித்தான் உடம்பு சரியில்லை என்று அவர் கடைக்கு வரவில்லை. ஆனால் வீட்டிலிருந்து கடைக்கு போன் செய்து அர்ச்சனையை முடித்துக்கொண்டார்.

"ஏலே, பாண்டி எங்கலே?"

"அண்ணாச்சி அவனுக்கு உடம்பு சரியில்லையாம், ரூம்ல படுத்திருக்கான்."

"என்னாலே அவனுக்கு?"

"ஏதோ கால்ல கட்டி கிளம்பியிருக்காம், கடையில நிக்க முடியாதாம்... அதான் உங்ககிட்ட லீவு சொல்லச் சொன்னான்."

"அவர் கலெக்டர் உத்தியோகம் பாக்குறாராக்கும் லீவு கொடுக்குறதுக்கு... நல்லா சட்டி சோத்த தின்னுப்புட்டு உறங்குறாகளோ தொர..."

"கட்டியிலேந்து சீழ் வடியிறதால நோவு ஜாஸ்தியா இருக்காம், அதான் வரலையாம்..."

பாண்டியைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு முத்து பதில் கொடுக்க, ஒவ்வொரு முறை முயலும் போதும், கடலை கந்தசாமி தனது சக ஊழியனுக்காக முதலாளியிடம் விடாப்பிடியாக வாதாடினான். (கடலை என்பது பட்டப் பெயர்)

சென்னையில் ஆள் கிடைப்பதா பஞ்சம் ஏதாவது வேலை கிடைத்தால் போதும் என்று கிராமத்திலிருந்து வரக்கூடிய படிக்காத இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும்போது சங்கரலிங்கங்களுக்கு என்ன கவலை? ஒரு பத்துக்குப் பத்து அறையைப் பிடித்து, ஒரு சமையல்காரனை சமைத்துப் போட வைத்து குறைந்த சம்பளம் கொடுத்தால் போதும்... இப்படித்தான் சங்கரலிங்கம் பணக்காரரானார்.

"ஏலே, என்ன கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சா உனக்கு... எதித்து எதித்து பேசிக்கிட்டுருக்க... அவன் வரலையாம்... நீங்க வக்காலத்து வாங்குறீயலோ... சம்பளம் வாங்குறதுக்கு முன்னாடி கடன் கேட்கத் தெரியுதில்ல... வக்கணையா திங்க தெரியிதில்ல... உழைக்கணும்டா..."

"என்னங்க நீங்கபாட்டு பேசிட்டே போறீங்க... டாக்டர்ட்ட போறதுக்கும் காசு தரமாட்டீங்க... முடியாம இருக்கான் அதான் வரலைன்னு சொன்னா, நீங்க என்னன்னமோ பேசுறீங்க..." - கடலை வெடித்து விட்டான்.

கடை வாசலில் நின்றுக் கொண்டிருந்த முத்துவும் மற்ற கடை ஊழியர்களும் கடலை கந்தசாமி பக்கத்தில் வந்து நின்றனர். நிலைமை மோசமாகி முதலாளிக்கும் ஊழியர்களுக்கும் கைகலப்பு உருவாக இருந்தது. சங்கரலிங்கம் எல்லோரையும் உற்றுப் பார்த்தார். விறுவிறுவென்று கல்லாவிலிருந்து இறங்கிய அவர், எதிரில் உள்ள கீதா கஃபே ஹோட்டலுக்கு காலை சிற்றுண்டி சாப்பிடச் சென்றார்.

முன்பொரு முறை இதே போல் உரசல் முற்றி ஊழியர்கள் சங்கரலிங்கத்தைக் கொலை வெறியோடு தாக்க, பக்கத்துக் கடைக்காரர்கள் வந்து சண்டையை விலக்குமளவுக்குப் போய்விட்டது. அதற்குப் பிறகு இப்படி சண்டை ஏற்பட்டால் சங்கரலிங்கம் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிடுவார். இதை முத்துவும், கடலையும் பஜாரில் உள்ளவர்கள் சொல்லக் கேட்டிருந்தனர்.

"ஓ...ஹோ" முத்துவும், கடலையும் தங்களது கைகளை மாறி மாறித் தட்டிக் கொள்ள, எல்லோரும் "ஓ" போட்டனர். இதைக் கேட்டு கோபமடைந்த சங்கரலிங்கம், தனது காதில் விழாத மாதிரி ஹோட்டலுக்குள் நுழைந்தார்.

"மாப்ள, இப்ப வானா முனா வந்து என்ன பண்ணுவார் தெரியுமா?" கடலை கந்தசாமி கேட்டான்.

"என்ன பண்ணுவார்? எல்லோருக்கும் கீதா கஃபேயில சூடா காப்பி வாங்கிக் கொடுத்து நம்மள கூல் பண்ணுவாரு..."

- முத்துவிடம் பதிலை எதிர்பார்த்த அவனுக்குக் கடை உள்ளேயிருந்து பதில் வந்தது.

சண்டை நடந்தா இதத்தான அவரு வழக்கமாப் பண்ணுவாரு...

"இல்ல முத்து, இப்ப வந்து உன்னய பயங்கரமா கவனிப்பாரு பாரு..."

"பயங்கரமானா..." முத்து தயங்கிவாறே கேட்டான்.

"அவர் வீடு காலி பண்றதுக்கு நீதான் எல்லா சாமானையும் புது வீட்டுக்குக் கொண்டு போய் சேர்த்தல்ல... டெம்போ கூட பிடிக்காம மீன்பாடி வண்டியிலேயே கொண்டு போனல்ல...

"அதுக்கு..."

"மூணாவது மாடியிலர்ந்து இறக்கி புது வீட்டு ரெண்டாவது மாடிக்கு ஏத்தி... கூலிக்கு ஆள் வச்சா கூட நாலாயிரம் செலவாயிருக்கும், நம்மாளு உனக்கு அவ்வளவுத் தரமாட்டாரு... ரெண்டாயிரமாவது கொடுப்பாரு..."

முத்துவின் முகத்தில் திடீர் வெளிச்சம் ஏற்பட்டது. இரண்டாயிரம் ரூபாய் என்றால் இந்த மாதம் எவ்வளவு வசதியா இருக்கும்... முதலாளியின் வீடு மாத்தறதுக்குக் கஷ்டப்பட்டு உழைச்சது எல்லாம் அவனுக்கு சுகமாகப்பட்டது. இரண்டாயிரம் ரூபாயில் வீட்டுக்கு எவ்வளவு அனுப்பலாம்... அம்மாவின் மருத்துவச் செலவு, தங்கையின் படிப்பு... ஐய்யய்யோ இத மறந்துட்டோமே... கணுக்கால் அளவுக்கு மேல் சின்னதாகிப் போன ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி எடுத்த பேன்ட்டுக்குப் பதிலா புதுசா ஒரு பேன்ட்டு வாங்கணும்... இந்த வாரம் சினிமாவுக்குப் போகணும்... முத்து விதவிதமாக கனவு காண ஆரம்பித்தான்.

"என்ன முத்து வீட்டு வேல எல்லாம் முடிஞ்சதில்ல..." முதலாளி கல்லாவில் வந்து அமர்ந்தது கூடத் தெரியாமல் முத்து கனவில் மிதந்தான்.

"ஆ... முடிஞ்சது அண்ணாச்சி!"

"இந்தா... இத வச்சுக்க..."

கல்லாவிலிருந்து பணத்தை எடுத்தார் சங்கரலிங்கம். முத்துவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. இருப்புக் கொள்ளாமல் கல்லாப்பெட்டி அருகில் போய் நின்றான். மற்ற கடை ஊழியர்களைத் திரும்பிப் பார்த்து ஏதோ பெரிதாகச் சாதித்து விட்டதைப் போல புன்னகைத்தான். மற்றவர்களும் லேசாக சிரித்தனர். கடலை "ம்.. ம்..." என்று உற்சாகப்படுத்தினான்.

முதலாளி பணத்தை நீட்டியவுடன் முத்துவுக்கு தூக்கி வாரிப்போட்டது. ஒரு நூறு ரூபாய் நோட்டை கையில் திணித்து, "வச்சுக்க முத்து" என்றார். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காததால் அதிர்ச்சி அடைந்த முத்துவை, "அய்யா பிச்சை போடுங்க..." என்ற குரல் அவனை சகஜ நிலைக்குத் திருப்பியது.

ஊழியர்கள் அனைவரும் கனல் தெறிக்கும் கண்களுடன் முதலாளியையும் முத்துவையும் பார்க்கும் போது, கல்லாவிலிருந்து சடுதியில் திரும்பிய அவன், கடைக்கு வெளியே நின்றிருந்த பிச்சைக்காரியின் தட்டில் அந்த நூறு ரூபாயை முதலாளி பார்க்கும் விதமாகப் போட்டான்.

நன்றி: தினமணி கதிர்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link