சிறுகதைகள்


உழுதவன் கணக்கு!

கூடல்.காம்
அந்த மிகப் பெரும் சூப்பர் மார்க்கெட் அஸ்வின், ரம்யா சென்ற நேரம் மிகவும் குறைவான அளவில் கும்பலுடன் இருந்தது. முழுவதும் குளிரூட்டப்பட்ட அந்த அங்காடி ஒரு மேட்டுக்குடி மக்களுக்கு ஏற்ற அளவில் ஆடம்பரமாக இருந்தது.

"என்னங்க எனக்கு தாகமா இருக்கு கூல்ட்ரிங்க்ஸ் வேண்டும்" என்று தன் கணவனிடம் கேட்டாள் ரம்யா.

ஏன் இவ்வளவு பெரிய சூப்பர் மார்க்கெட்ல கூல்ட்ரிங்க்ஸ் இருக்காதா.. போய்ப் பாரு என்று சொல்லிக் கொண்டு அஸ்வின் தனக்குத் தேவையான அழகுசாதனப் பொருட்கள் வாங்க அழகுசாதனப் பொருட்கள் இருக்கும் பகுதிக்கு சென்றான். இருபது நிமிடங்கள் சென்று தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு அஸ்வின், ரம்யா தங்கள் காரை நிறுத்தி இருக்கும் பகுதிக்கு சென்றனர்.

காரில் சென்று கொண்டு இருக்கும் போது ரம்யா தன் கணவனைப் பார்த்து, "என்னங்க உள்ளே எல்லாப் பொருளும் விலை அதிகமா இருக்கு. நீங்கள் அதைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமா பணத்தை அள்ளித் தர்றீங்க இதே பொருட்கள் வெளியே விலை குறைவா இருக்கு. ஆனா நீங்க அங்கே பணம் தர ரொம்ப யோசனை செய்றீங்க" என்று தன் மனதில் இருந்ததை கணவனிடம் கேட்டாள் ரம்யா.

இங்க பாரு இப்படி எல்லாம் நாம் செலவு செய்தாதான் நமக்கு மரியாதை. மாதம் 10 ஆயிரம் சம்பளம் கிடைத்தா போதும் என்று நினைதேன். இன்று நம் நிலைமை அப்படியா லட்சம் ருபாய் சம்பளம். காரணம் என்ன? இதே மாதிரி மற்றவர்கள் செலவு செய்ததால்தான் அதிக அளவில் வருமானம் வந்து நமக்கு இந்த சம்பளம் கிடைக்கிறது.

அதனாலதான் இது மாதிரி ஆடம்பரமான இடங்களில் அதிகமா எதுவும் கேட்காம செலவு செய்கிறேன் என்று சொல்லி தன் மனைவி வாயை மூடினான்.

கொஞ்சம் நேரம் இருவரும் அமைதியாக சென்று கொண்டிருந்தனர். ரோட்டோரத்தில் ஒரு வயதான பெண்மணி வெள்ளரிப் பிஞ்சுகளை விற்றுக் கொண்டிருந்தாள்.

ஏங்க கொஞ்சம் நிப்பாட்டுங்க வெள்ளரி பிஞ்சு வாங்கணும் என்று கணவனிடம் கூறினாள்.

"ஏன்டி உனக்கு புத்தியே இல்லையா"? அங்கே எவ்வளவு ஹைஜீனிக் காய்கறிகள் இருந்துச்சு.. அதை எல்லாம் விட்டுட்டு ரோட்டோரத்தில் இந்த ச்சே உன்னை திருத்தவே முடியாது.. என்று புலம்பிக் கொண்டு வண்டியை ஓரமாக நிறுத்தினான்.

ஏம்மா இந்த வெள்ளரிக்காய் விலை எவ்வளவு? "கூறு" இருபது ருபாய் மட்டும் தான் தாய்! அந்த சூப்பர் மார்க்கெட்டை விட விலை குறைவாக நன்றாக இருப்பது அவளுக்குத் தெரிந்தாலும், அஸ்வின் அதை எல்லாம் சட்டை செய்யாமல் வேண்டா வெறுப்பாக இருபது ரூபாயை நீட்டினான்.

அவர்களுக்கு மிக அருகில் ஒரு விலை உயர்ந்த ஏ.சி. கார் நின்றது. அதில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் ஆடம்பரமான ஒரு தம்பதி தங்கள் குழந்தைகளுடன் இறங்கி வெள்ளரி விற்ற அந்த வயதான பெண்மணியிடம் "பாட்டி அந்த வெள்ளரிப் பிஞ்சைக் கொடு என்று வாங்கிக் கொண்டு அவர்களிடம் இருந்த துணிப்பையில் போட்டனர்".

அப்போது அதை திங்க எடுத்த அந்த அவர் மகனிடம் "டேய் இப்போ வேணாம் வீட்டில் போய் நல்லா கழுவி அப்புறம் சாப்பிடு. ஏன்னா ரோட்டோரம் தூசி எல்லாம் இருக்கும் கழுவி சாப்பிடணும்". பாட்டி எவ்வளவு என்று கேட்ட அவனிடம் இருபது ரூபாய்தான் என்று சொன்ன கிழவியிடம் ஐம்பது ருபாய் கொடுத்து மீதியை நீயே வச்சிக்க என்று சொன்ன அவனை ஒரு மாதிரியாக பார்த்தான் அஸ்வின்.

"ஏங்க எதற்கு அந்த கிழவிக்கு முப்பது ருபாய் அதிகம் கொடுத்தீங்க" என்று கேட்ட அவன் மனைவியை நோக்கி சொன்னான்.. "நீ ஏன் கேட்கிறாய் அப்படின்னு எனக்குத் தெரியும்.. அந்த விரைவு உணவு கடையில் டிப்ஸ் கொடுக்க சொன்ன நான் தரவில்லை இங்கே ஏன் தர்றேன்னு கேட்கிறே"?

நாம அங்கே சாப்பிட்டது ஆடம்பரத்திற்கு. அதனால் ஒரு பயனும் இல்லை; அது மட்டும் இல்லாமல் அங்கே இருப்பவனுக்கு நிலையான சம்பளம் இருக்கு. ஆனா, இந்த பாட்டி இயற்கையைக் காப்பாத்துறது மட்டும் இல்லாம நம்ம எதிர்கால சந்ததிக்கு உதவி செய்றது இந்த விவசாயம் மட்டுமே.

ஆடம்பரம் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஆடம்பர விசயங்களை வேண்டும் என்றால் வளர்க்கலாம். எதிர்காலத்தில் கணக்கு இல்லாம நாம் சம்பாதிக்கிற பணத்தைக் கொண்டு எதை சாப்பிட முடியும், பணத்தை சாப்பிட்டு உயிர் வாழ முடியாது. ஆடம்பரத்திற்கு செய்யும் பத்து ருபாய் செலவை கணக்குப் பார்க்காத நாம, இந்த இயற்கை சார்ந்த விசயத்தில் ஒரு ரூபாய் கூட கணக்கு பார்ப்பதால் நமக்கு நாமே காங்க்ரிட் சமாதி கட்டிக் கொள்கிறோம்.

எதிர்பார்க்காம கிடைக்கிற ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகாமல் கொஞ்சம் பழசையும் மறக்காம இருந்தா நம்மை நாமே காப்பாத்துறது மட்டும் இல்லாம இயற்கையையும் காப்பத்தலாம்".

முன் பின் தெரியாத அவன் பேச்சு அஸ்வின் கன்னத்தில் அறைந்து சொன்னது போல இருந்தது.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link