சிறுகதைகள்


போகி மேளம்

கூடல்.காம்
பொழுது விடிந்தால் போகிப் பண்டிகை.

"பிசாத்....ஒரு சின்ன மோளம்..... பத்து ரூவா மோளம். இதை வாங்கிக் கொடுக்க முடியாத எனக்குப் பண்டிகை ஏன்.... பாழ் ஏன்?"- ஒரு மூலையில் முடங்கி, ஒடுங்கி அடங்கிக் குத்தங்காலிட்டு அதன்மேல் கைச் சப்பணமிட்டுச் தொங்கிய தலையுடன் குந்திக்கொண்டிருந்த பிச்சாண்டி, இப்படி எத்தனை முறைதான் முனகிக்கொள்வானோ! அவனுக்கெதிரே, அவனுடைய அருமந்தப் புதல்வன்- ஒரே புதல்வன் துரை, அழுகையும்.... அடமுமாகக் குரல் எழுப்பிக்கொண்டு இருந்தான்.

எல்லா வீட்டுப் பிள்ளைகளும் போகி மேளம் வாங்கி வைத்துக்கொண்டு அடிக்கின்றார்களாம். இவனுக்கும் ஒன்று தேவையாம். இவனும் சிறுவன்தானே!

"தொரை! என் பேச்சைக் கேளடா. கண்ணு இல்லே... எப்படியும் சாயங்காலத்துக்குள்ளே மேளம் வாங்கியாந்து தர்றேண்டா கண்ணு."

மகனைப் புகையோடியக் குரலுடன் சமாதானம் செய்தான் பிச்சாண்டி. பகல் உணவு பூரணமாக இருந்தால்தானே குரலில் தெளிவு இருக்க முடியும்?

சிறுவன் துரை கேட்கவில்லை. தகப்பனின் நிலையும், குடும்பத்தின் வறட்சியும் அவனுக்கு எப்படித் தெரியும்? தெரியவும் நியாயமில்லை. அவன் பெயர்தான் துரையாயிற்றே! அப்பா பிச்சாண்டியாக இருந்தாலும், மகனாவது துரையாக இருக்கட்டுமே என்று நினைத்து பெயரிட்டது போலும் பெற்ற மனம்!

தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டு வந்த சங்கடத்துடன், குடிசைக்குள் நுழைந்தாள் கண்ணாத்தாள். மகனுக்கும், தகப்பனுக்கும் இடையே நடக்கும் மேளப் போராட்டத்தைக் கண்டு அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அது பெருமூச்சாகவும் வெளியேறியது. குழாயடியில் ஒரு பானை தண்ணீருக்கு ஒரு மணி நேரமாக நடத்திவிட்டுத் திரும்பிய போராட்டம் போதாதென்று இது வேறு ஒரு குட்டிப் போராட்டமா?

"கண்ணு! இதோ நான் பேய் மேளம் வாங்கியாந்து தர்றேண்டா" என்றான் பிச்சாண்டி.

எப்படி வாங்குவான்...? எங்கு சென்று பணம் புரட்டுவான்?

அவனுக்கு- அவனுடைய மானமுள்ள நெஞ்சுக்கு அது பெரிய தொகையாக இருந்தது.

அப்போதைய வாழ்க்கைக்கு கால் வயிற்றுக் கஞ்சியே உன்னைப் பிடி, என்னைப் பிடி என்றிருந்தது. மனைவியைக் கேட்டுப் பார்த்தான். அவளிடம் இருந்தாலும் இருக்கலாம். ஆனால் அவள்... பத்திரகாளியாக உருவெடுத்துச் சீறினாள்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையை அணைத்து ஆனந்தமாகச் செல்லும் கூவம் ஆறு வளர்த்து வரும் ஆதிவாசிகளுள் பிச்சாண்டியும் ஒருவன். அந்த ஆற்றங்கரையோரத்தில் வீடு என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வரிசை கட்டி நிற்கும் குடிசைகளுக்குச் சொந்தமானவர்களுள் அவனும் ஒருவன். வெயிலோ, மழையோ, வெள்ளமோ, புயலோ அனைத்துக்கும் தங்களை ஈடுகொடுத்துத்தான் அவர்களும் வாழ்கிறார்கள். பிச்சாண்டியின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றி மேலும் சொல்ல ஒன்றுமில்லையானாலும், ஒருசில செய்திகளைத் சொல்லித்தான் தீரவேண்டும்.

அவன் செய்துவரும் தொழில்... சிரிப்புத்தான் வருகிறது. மேளம் அடிப்பதுதான்! அதாவது சற்று புரியும்படிச் சொன்னால் "பறை"யடிப்பது. எவர் இறந்தாலும் அவன்தான் முன்னின்று பறையடித்துக் கவுரவிக்க வேண்டும்.

ஏன்? கோவில் திருவிழாக் காலங்களில் தெய்வம் எழுந்தருளி வீதி உலா வருவதற்கும் அவனுடைய தயவுதான் முன்னதாகத் தேவைப்படும். அப்பேர்ப்பட்ட வாழ்க்கையில் அவனுக்குக் கிடைக்கும் அந்த சில ரூபாய்கள்தாம் வருடத்தை வரவேற்க வேண்டும். ஓட்டவும் வேண்டும். இப்போது போட்டியாக அவனுக்கு அந்த வட்டாரத்தில் மூன்றுபேர்கள் முளைத்துவிட்டனர். அது முதற்கொண்டே அவனுடைய பிழைப்பில் சற்றே மண் விழுந்தது. எப்படியோ இருந்தும், இல்லாமலும் வாழ்ந்து வருகிறான்.

துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வெளியில் சென்றான் பிச்சாண்டி. யாரிடம் சென்று பத்து ரூபாய் கேட்பது? அப்படிக் கேட்டால் மற்றவர்தாம் என்ன நினைப்பர்! போயும், போயும் இவ்வளவா கடனாகக் கேட்பது? பின் நூறு ரூபாய் கேட்பதா? அவ்வளவு பெரிய நீண்ட கைகள் இந்த வரிசையில் இருக்கின்றனவா?

பிச்சாண்டி கொஞ்சம் புத்திசாலி. மானமுள்ளவனுங்கூட! சிந்தனையில் ஒரு பொறி தட்டியது. செங்கேணி இருக்கிறானே...

அந்தப் பகுதி மக்களுள் கொஞ்சம் பசையுள்ளவன் செங்கேணி. எப்படியோ, எந்தவிதத்திலோ கொஞ்சம் பணத்தைச் சேர்த்து வட்டிக்கு விட்டு வந்தான். அவன் எப்படிப் பணத்தைச் சேர்க்கிறான் என்பது பிச்சாண்டிக்குத் தெரியாத ரகசியமல்ல. மார்க்கெட், சினிமா டிக்கெட், இராச் சுற்றுதல்- இத்யாதி... இத்யாதி...

செங்கேணி அந்த வகையில்.... ஒரு விதமான குறுக்கு வழி புத்திசாலி. அவனிடம் நூறு ரூபாய் கேட்டால் இல்லையென்றா சொல்லிவிடப் போகிறான்?

செங்கேணியின் குடிசை சற்று அழகாக இருந்தது. "பசையுள்ளவன் பங்களா" என்றே அந்தப் பகுதி மக்கள் வேடிக்கையாகக் கூறுவர்.

பிச்சாண்டியின் தலையைக் கண்டதும் செங்கேணிக்கு வியப்பாகவே இருந்தது. இவன் ஏன் தன்னை நாடி வரவேண்டும்? ஒருவேளை தன்னுடைய "தொழிலில்" இவனும் அங்கம் வகிக்க ஒப்புக்கொண்டு வருகிறானா? வரமாட்டானே!

இவன் ஒரு மாதிரியாயிற்றே? இந்த வட்டாரத்திலே இவன்தான் ஒழுக்கமுள்ளவன்- நேர்மையுள்ளவன்- "மனிதன்" என்று தன்னை நினைத்துக்கொண்டு வாழ்பவனாயிற்றே!

"வாடா, பிச்சாண்டி! ஏது இம்மாந் தூரம்? சொர்க்கத்துக்கு மேளம் அடிப்பவன் காலு, இந்த நரகத்துக்கு வரச் சம்மதிச்சிட்டதா?"

இளக்காரம் தொனிக்க அலட்சியமுடன் வரவேற்றான் செங்கேணி.

"அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா, செங்கேணி. உன் ஒத்தாசையை நாடித்தான் வந்தேன்"- பிச்சாண்டி கூனிக் குறுகிப் பதில் சொன்னான்.

"இன்னாடா ஒத்தாச? மார்க்கெட் ஆடறியா? இல்லே சினிமா "கியூ"விலே நிக்கறியா? அதுவுமில்லாட்டா... சென்ட்ரல் ஸ்டேஷன்லே இடமுன்பதிவு செய்யறதுக்கு ரெடியா இருக்கிறியா? கடைசியா கோடம்பாக்கம் கிராக்கி அது இதுன்னு..."

"அதுக்கெல்லாம் இல்லேப்பா. வந்து.... வந்து..."- அவன் பேச்சை முடிக்கவில்லை.

"அதுதானே கேட்டேன்! நீ "எலக்ஷன்" காலத்து நந்தனராயிற்றே. இந்தத் திருப்பங்கூர் உனக்குப் புடிக்காதே" என்று இடைமறித்துக் கூறிப் பகபக—ன்று சிரித்தான் செங்கேணி.

"செங்கேணி! போகியும், பொங்கலுமா வருது. பண்டிகை அதுவுமா கையில் பரங்காசு இல்லே... ஒரு நூறு ரூபா கடனா கொடு. இருபது தேதிக்குள்ள திருப்பிக் கொடுத்திடறேன்."

"கைமாத்தாவா?"

பிச்சாண்டி தலையசைத்தான். "வட்டி வேண்டுமானாலும் கொடுத்துடறேன் செங்கேணி" என்றான்.

செங்கேணி கெக்கலிக் கொட்டிச் சிரித்தான். பிறகு சொன்னான். "டேய் பிச்சே, நீயே ஒரு பிச்சாண்டி. உன்னை நம்பி எவன்டா கடன் குடுப்பான்? போ... போ. போய் எதனாச்சும் பண்ட பாத்திரம் இருந்தா கொண்டா, அதுக்கு மேலே தர்றேன்."

பிச்சாண்டியின் கண்கள் கலங்கிவிட்டன. எந்தச் செம்பு, குவளையை அவன் கொண்டு வருவான்? அவனுடைய வீட்டில் இருப்பனவெல்லாம் வெறும் மண் சட்டிகளும், பானைகளும்தானே?

"செங்கேணி, எங்க வீட்லே நீ சொல்ற எதுவுமில்லேப்பா; நான் நூறு ரூபாய்க்குப் பெறமாட்டேனா?"

செங்கேணி மீண்டும் பேயாகச் சிரித்தான். "நீ ஒத்தை ரூபாய்க்கு லாயக்கு இல்லாதவன்னு எங்களுக்கு நல்லாத் தெரியும். எப்போ நியாயம், அநியாயம் பேசத் தொடங்கிட்டியோ, அப்பவே நீ ஒரு அடிமுட்டாள்னு தெரிஞ்சிப் போச்சு. ஏன்? அடிக்கிற "பறை" இருக்குதே... அதைக் கொண்டாந்து அடகு வையேன்.

பிச்சாண்டி வாயடைத்து வழி நடந்தான். வேலங்காட்டுக்குள் நுழைந்தால் காலில் முள் குத்தத்தானே செய்யும்? ஆமாம்... இதில் வேலங்காடு எதைக் குறிக்கிறது.... செங்கேணி போன்றோர் வாழும் பகுதியா? இல்லை ஒழுக்கம், நேர்மை என்று சொல்லக்கூடிய தத்துவப் பகுதியா?

அந்த நிலையிலும் பிச்சாண்டி சிரித்துக் கொண்டான்.

தனக்கென்று... தன்னுடைய நீண்ட வாழ்க்கைக்கென்று வைத்திருந்த "பறை"யை மேல் துண்டால் மூடி- ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லும் குழந்தையைப் போல அதை எடுத்துக்கொண்டு செங்கேணியின் வீட்டை நாடி நடந்தான்.

"நீ, மனுஷண்டா?" என்று குத்தலாகக் கூறி வரவேற்று- பறையைப் பெற்றுக்கொண்ட செங்கேணி, கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் அதன் பேரில் நூறு ரூபாய்கொடுத்தான். அப்படிக்கொடுக்கும் போது பத்து வட்டி என்று அவன் குறிப்பிடவும் தவறவில்லை.

புழுங்கிய மனத்துடன் அந்த ஒற்றை நூறு ரூபாய் நோட்டுடன் நேரே கடை வீதிக்குச் சென்றான் பிச்சாண்டி. கண்ணுக்குக் கண்ணாய்க் காத்து வந்த அந்த "பறை"க்கு ஏற்பட்ட கதியைக் கண்டு அவனுடைய குழிவிழுந்த கண்கள் குளமாயின.

மகன் துரையை நினைத்துப் பார்த்தான். அவனுக்காகத்தானே இந்நிலை ஏற்பட்டுவிட்டது. பத்து ரூபாய்க்கு வக்கில்லாதவனுக்கு மகனாகப் பிறந்துவிட்டானே! அவனை எப்படி முன்னுக்குக் கொண்டுவர முடியும்... மனிதனாக்க முடியும்? கண்ட கனவுகள் எல்லாம் அந்த ஒரு நொடியில் பொடிந்து சிதிலமாகிவிட்டன.

பிச்சாண்டி தனக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டான். கடை வீதியும் அவனுடைய பரந்த கண்களில்பட்டது. நேரே சென்று ஒரு சிறிய போகி மேளத்தை வாங்கிக்கொண்டு, வீடு திரும்பினான்.

வழி நெடுக சின்னஞ் சிறார், விடியப் போகிற போகியை வரவேற்று மேளம் கொட்டி ஆர்ப்பரித்தனர். மேளத்தில் சிறு கயிறு கட்டி- நுனியில் தார் உருண்டை பொருத்தி "டம டம" என்று எழுப்பிய சத்தம் செவிப்பறையைப் பிய்த்தது.

கொஞ்ச தூரம் நடந்து வந்த பிச்சாண்டி, எதிரே ஒரு வீட்டு வாசல் படியில் நடந்த காட்சியைக் கண்டு அப்படியே அசையாது நின்றுவிட்டான். அவனுடைய பரந்த கண்களில் அந்தச் சின்னஞ் சிறுவனுடைய துடிப்பு- பரிதாபத்தை உண்டு பண்ணிவிட்டது. வெறும் கோவணம் கூடச் சரியாகக் கட்டாமல் பரட்டைத் தலையுடன் தன் தாயிடம் அச்சிறுவன் அழுது அடம்பிடித்து அடி வாங்கிக்கொண்டு இருந்தான்.

அந்த ஏழைத் தாயோ, தான் பெற்ற மகன் என்று கூடப் பாராமல் "தொப்பு திப்பு"வென்று ஆவேசம் கொண்டவளாய் இரு கரங்களாலும் முதுகில் சாத்திக்கொண்டிருந்தாள். அடி தாளாத அந்தப் பாலகன், "அம்மா! மேளம், மேளம்" என்று கேவிக் கேவிச் சொன்னான்.

தாயோ, அவனுடைய முதுகை மேளமாக்கி அடித்து ஐந்து விரல்களை "வார் வாராக"ப் பதித்தாள். சிறுவனுக்கு அது பொருட்டாக இல்லை. இந்தக் காட்சி பிச்சாண்டியை உலுக்கிவிட்டது.

"ஏம்மா, பச்சைப்புள்ளை; அதை இப்படியாம்மா அடிக்கிறது?"

"பின்னே, இன்னாய்யா! கையிலே காசு இல்லே... இந்தக் கயிதை மேளம் வாங்கித் தான்னு என் மானத்தை வாங்குது."

ஓகோ... இதுவும் நம்ம "கேஸ்"தான் என்று நினைத்தானோ இல்லையோ, இதயம் நெக்குருகிவிட்டது, பிச்சாண்டிக்கு. உடனே தன் மகனுக்காக வாங்கி எடுத்து வந்த மேளத்தை அந்தச் சிறுவனிடம் நீட்டினான்.

சிறுவன் "திருதிரு"வென்று விழித்தான். "வாங்கிக்கோடா கண்ணு"- பிச்சாண்டி புன்னகையுடன் கூறினான்.

அந்தச் சிறுவனும் தாயை நோக்கியவாறு மேளத்தை வாங்கிக்கொண்டு, வாங்கிய உதைகளையும் மறந்து மகிழ்ச்சித் துள்ளத் தன் சகாக்களுடன் மேளம் கொட்டி விளையாடச் சிட்டாகப் பறந்தான்.

உலகப்ப மேஸ்திரி வீதியும், அருணாசலம் நாயக்கன் தெருவும் சந்திக்கும் இடத்தைத் தாண்டிக்கொண்டிருந்தான் பிச்சாண்டி.

எதிரே மகனைத் தோளில் கிடத்திக்கொண்டு அரக்கப் பரக்கக் கண்ணாத்தாள் ஓடிவரும் காட்சியைக் கண்டு பொறி கலங்கி நின்றுவிட்டான் பிச்சாண்டி. "எங்கே இவள் இந்தப் பக்கம் போய் வருகிறாள்? குழந்தை வேறு தோளில் துவண்டு படுத்திருக்கிறானே!"

கண்ணாத்தாள் எதிரே வந்த புருஷனைக் கண்டுவிட்டாள். "தே...! நீ எங்கே போயிட்டே? புள்ளே நெருப்புலே கையைச் சுட்டுக்கிட்டது. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்டு வர்றேன்."

கண்ணாத்தாள் கூறியதைக் கேட்டுப் பிச்சாண்டிக்கு ஒன்றுமே புரியவில்லை! நெருப்பில் கையைச் சுட்டுக்கொண்டானா? "எப்படிக் கண்ணாத்தா சுட்டுக்கிட்டான்? நீ அதுவரையும் என்ன செஞ்சிக்கிட்டிருந்தே?"

"இந்தப் பெரிய ஆம்புளை, எந்தாப் பெரிய கேள்வியைக் கேட்டுப்புட்டாரு பாரு. அடே ச்சே! நீ ஒண்ணு. காடை விளக்கை வச்சிருக்கிற அட்டைப் பெட்டியை எடுத்து, இது மேளம் அடிக்கத் தொடங்கிடுச்சி. பொறவு... அதைச் சூடேத்தறேன்னு அடுப்புலே காட்டி இருக்கு. மண்ணெண்ணெய் பட்ட பெட்டியாச்சே! குப்புன்னு தீப்பிடிச்சிக்கிட்டது, அவ்வளவுதான். கை வெந்துபோய் இந்தக் கய்தை துடியாய் துடிச்சிப்புட்டான். உடனே தோள்லே போட்டுக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினேன்."

பிச்சாண்டி எதை நினைத்து எதற்காக வருந்துவான்?

கண்ணாத்தாள் கேட்டாள்: "ஆமாம்... நீ எங்கே இப்படிப் போறே?"

"பையனுக்கு மேளம் வாங்கலான்னு கடைக்குப் போனேன் கண்ணாத்தா. நாளைக்குப் போகிப் பண்டிகையாச்சே!"

"ஆமாம்.... இது மேளம் அடிச்சிக் கிழிச்சது. இதுதான் கையைப் பொசுக்கிட்டுக் கட்டுப்போட்டுக்கிட்டு இருக்கே. மேளம்தானா ஒரு கேடு. அந்தத் துட்டை இப்படி எங்கிட்டே கொடு. கடையில நெத்திலிப்பொடி நயமா வந்து விழுந்து கிடக்குதாம். வாங்கியாந்து காரம் போட்டுக்கிண்டினா... "பஸ்டா" இருக்கும்."

பிச்சாண்டி எதை எண்ணி எதற்காக வருந்துவான்.... பிள்ளைக்காக வருந்துவானா- மனைவிக்காக வருந்துவானா?

மீண்டும் கண்ணாத்தாள் வாய் திறந்து ஒரு செய்தியைப் போட்டு உடைத்தாள்.

"ஆமாம்தே...! இன்னொரு விஷயம் தெரியுமா? பால்கார குப்புசாமி பிள்ளைய்யா, மாட்டுப் பொங்கலுக்கு மாட்டையெல்லாம் சிங்காரிச்சுக் கூட்டிக்கிட்டுப் போகப் போறாராம். மேளம் அடிக்க உன்னையே வந்துடச் சொன்னாரு. அச்சாரம் கொடுத்துட்டுப் போனாரு. நாளைய பண்டிகைக்கு அதுலேதான் அரிசிப் பருப்பு வாங்கியாந்து வச்சிருக்கேன்."

நாளைய கழிச்சு மோளம் அடிக்க நான் -

அச்சாரத் துட்டிலே அரிசிப் பருப்பு.... அடக் கடவுளே!

நெட்டி நெடிய பெருமூச்சு!

இப்போது பிச்சாண்டி தன்னைப் படைத்த ஆண்டவனையே எண்ணி வருந்தினான்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link