சிறுகதைகள்


நன்கொடை

கூடல்.காம்
ஏமூர் என்ற ஊரில் ராமசாமி என்ற விறகுவெட்டி இருந்தான். நல்ல ஊழைப்பாளி. அவனுக்கு அன்பு என்ற பையன் இருந்தான். அவன் அரசு பள்ளியில் எட்டாவது வகுப்பு படித்துக் கொண்டு இருந்தான். அவன் நன்றாக படிக்கக் கூடியவன்.

அன்பு பேருக்குத் தகுந்தாற் போல் அனைவரிடத்திலும், அன்பாகவும், பணிவாகவும் இருப்பான். படிப்பை தவிர மற்றவர்களுக்கு என்ன தேவையோ உதவி செய்வான்.

அன்பு பள்ளிவிட்டு வந்தவுடன், அம்மாவிற்குத் தேவையான உதவி செய்துவிட்டு, பின்னர் இரவு பத்து மணி வரை தெருவிளக்கில் படித்துவிட்டு, தூங்கச்செல்வான். அவன் படிப்பில் முதல் மாணவனாக திகழ்ந்தான். அவன் அம்மா அவனிடம் அடிக்கடி நமக்கு பணவசதி கிடையாது, நன்றாக உழைத்துப் படித்தால் பிற்காலத்தில் நல்ல வசதியுடன் வாழலாம் என்று சொல்லுவார்.

அவன் அப்பா பள்ளி விடுமுறை நாட்களில் அவனுக்கு நீதி போதனைக் கதைகளைக் கூறுவார். இவனுடன் படிக்கும் மாணவர்கள் எல்லாம் நல்ல வசதியுடன் இருந்தனர்.

இவனுடைய ஊருக்கு ஒரு மருத்துவமனை கட்டுவதற்கும், பழைய கோவிலைப் புதுப்பிக்கவும், இவனுடைய பள்ளி மேல்நிலைப் பள்ளியாக மாறுவதற்கும் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அந்த விழாவிற்கு அடிக்கல் நாட்ட ஒரு மகானை அழைத்து வருவதாக செய்தி வந்தது.

அந்த மகான் வந்தால் ஊருக்கு நல்ல அதிர்ஷ்டம் வரும் என்று மக்கள் நம்பினர்.

யாராருக்கு எவ்வளவு நன்கொடைகள் கொடுக்க முடியுமோ அவர்கள் எல்லாம் அந்த ஊர் தலைமையாளிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மக்களும் அவரவர் சக்திக்குத் தகுந்த நன்கொடைகளைக் கொடுத்தனர்.

ஆனால் அன்பு அப்பா ஒரு விறகுவெட்டி என்பதால், ஒருநாள் சாப்பாடு சாப்பிடுவதே பெரிய கஷ்டம். இதில் நன்கொடை எங்கே கொடுப்பது என்று மிகவும் கவலைப்பட்டார்.

அன்புக்கு நம்மால் பணம்கொடுக்க இயலாது. ஆனால் பணத்தைதவிர வேறு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்தான்.

நாட்களும் கடந்தன. இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், ஊரில் மகானை வரவேற்பதற்காக எல்லாரும் ஒற்றுமையாக வேலை செய்து கொண்டு இருந்தனர்.

அவனுடைய கிராமத்தில் பழைய கோவிலைச் சுற்றி புதுப்பிக்கப்பட்டது. அன்பு நினைத்தான், பெரியவர் வருவதற்கு ஒற்றையடிப் பாதை மட்டும் சுத்தம் செய்யப்பட்டது. மீதியுள்ள இடங்களில் தேவையில்லாத செடி, கொடிகள் படர்ந்து இருந்தன. இவற்றை நாம் சுத்தம் செய்தால் என்ன என்று தோன்றிற்று.

அதனால் இரவு பகல் பார்க்காமல் மும்முரமாக அவன் நெருஞ்சி முட்கள் நிறைந்த பகுதி எல்லாம் அழகாக சுத்தம் செய்து, ஒருவழிப் பாதையாக அல்லாமல், எந்தப்பக்கம் வந்தாலும், மக்கள் வருவதற்கு அழகானப் பாதையை ஏற்படுத்தி இருந்தான்.

இவன் இவ்வளவு சுத்தமாக செய்ததைப் பற்றி யாரும் புகழ்ந்து சொல்லவில்லை. ஏன் என்றால், மகான் வருவதற்கு யார் யாரோ என்னவெல்லாம் செய்யும் பொழுது, இந்த வேலை மற்றவர்களுக்கு ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை.

மகானும் வந்தார். கோவிலை அழகாகப் புதுப்பிக்க ஏற்பாடு செய்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் பார்த்தார். மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

கடைசியாகப் பள்ளிக்கு வந்தார்.

அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் அருள் என்ற வியாபாரி அன்னதானம் அளிக்க முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டதால் அனைவருக்கும் சாப்பாடு போடப்பட்டது.

அனைவரும் சாப்பிட்ட பிறகு பள்ளி மைதானத்தில் கூடினர்.

மகான் சொன்னார், எந்த ஒரு விஷயத்திற்கும் ஊர் கூடி செய்யும் பொழுது, அதன் பலன் பலமடங்கு அதிகமாகும். இந்த ஏமூர் மக்கள் இவ்வளவு ஒற்றுமையாக செய்தது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

அந்த ஊர் மக்களுக்கு நல்ல அறிவுரை வழங்கினார். அப்பொழுது அந்த ஊர் தலைவர் யார் யார் அதிக தொகை கொடுத்துள்ளார்களோ, அவர்கள் பெயர்களை வாசித்தார். அவர்களுக்கு எல்லாம், அந்த மகான் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தார்.

இந்த பொன்னாடை போர்த்திய போது, அன்புவிற்கு, மனதில் சிறிது வருத்தம் இருந்தது. அவனுடன் கூடப்படிக்கின்ற பையன்களின் பெற்றோர்கள் எல்லாம், அந்த மகானிடம் ஆசி வாங்கினர்.

நம்மால் இந்தக் கிராமத்திற்கு சிறிய நன்கொடையைக் கூடக் கொடுக்க முடியவில்லையே என்று மனதில் ஆதங்கம் எழுந்தது.

இதனிடையில் அனைவரது பெயரும் வாசித்து முடிந்த போது, மகான் அவர்கள் ஒரு காசோலையை இந்தக் கிராமத்திற்காக வழங்கினார். இந்த ஏமூர் கிராம் நல்ல செல்வச் செழிப்போடும், மனநிம்மதியோடும் மக்கள் வாழ வேண்டும் என இறைவனை ப்ரார்த்திக்கின்றேன் என்று சொன்னார்.

கோவில், மருத்துவமனை, பள்ளி ஆகிய மூன்று இடத்திற்கும் பணம் கொடுத்தாகி விட்டது. இன்னும் ஒரு காசோலை இருக்கிறது. அது தகுந்த இடத்திற்கு செல்ல வேண்டும். எந்த இடம் என்று மக்களால் யூகிக்கமுடிகிறதா என்று ஒரு கேள்வி கேட்டார்.

மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு விழித்தனர்.

அப்பொழுது அந்த மகான், மைக்கில் அன்பு என்ற பையன் யார்?. அவன் எங்கு இருந்தாலும், உடனே வரவேண்டும் என்று கூறினார். அன்பிற்கும், அவன் பெற்றோருக்கும் ஒன்றுமே புரியவில்லை.

ஒரு வழியாக அன்பு அவர் இருக்கும் இடத்திற்குச் சென்றான். அவரை விழுந்து வணங்கினான்.

அப்பொழுது அந்த மகான் சொன்னார். இரண்டு நாட்கள் முன்பு என்னுடைய சீடனை இந்தக் கிராமத்தின் நிலவரத்தைப் பற்றி அறிய அனுப்பி வைத்தேன். இந்த அன்பு என்ற மாணவன் தனி ஒரு ஆளாக அனைத்து நெருஞ்சி முட்களையும் வெட்டி, பாதையை அழகாக சரி செய்து கொண்டு இருந்தான். இவ்வளவு சிறிய வயதில், தன்னம்பிக்கையுடன் அந்த வேலையை முடித்து இருப்பதாக என் சீடன் சொன்னான்.

இந்தச் சிறுவனிடம் இருந்து நாம் ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தன்னால் பணத்தால் முடியாததை, தன் மன பலத்தால் உடல் உழைப்பால் செய்துள்ளான். இது மிகப்பெரிய நன்கொடை. வழியில் ஒரு சிறு முள் இருப்பதைப் பார்த்து அதை எடுத்து ஒரு ஓரமாகப் போடாமல், அப்படியே விட்டு விட்டால், யார் காலிலாவது குத்திப் புண்ணாக்கி விடும். என்று தெரிந்த போதும் அந்த முள்ளை எடுத்து ஓரமாகப் போட விரும்பாமல் பார்த்துக் கொண்டே செல்லும் நிலையில்தான் பலர் இருக்கின்றனர். ஆனால் இந்த ஊரில் உள்ள தேவை இல்லாத முட்கள் அனைத்தையும் இந்தச் சிறுவன் அகற்றி விட்டான். இது பணத்தால் செய்த நன்கொடைக்கு மேலானது. நல்மனத்தால் செய்த இந்தச் செயல் சிறப்பானது.

இந்தக் காசோலையை இந்த அன்பின் படிப்புச் செலவிற்காக நன்கொடையாக அளிக்கிறேன்.

அன்புக்கும், அவனது பெற்றோருக்கும், மனது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link