சிறுகதைகள்


பிழைப்பு

கூடல்.காம்
வெகுதூரத்தில் யாரோ திட்டிக் கொண்டிருந்தார்கள். குரலுக்குச் சொந்தக்காரி அவன் மனைவிதான் என்பது தூக்கம் கலைந்த பிறகுதான் கபாலிக்குப் புரிந்தது. அவள் திட்டியது அவனைத்தான். வெட்டி வெசனமில்லாமல் தூங்குகிறானாம். பனிக்காலம் என்பதால் இன்னும் கொஞ்சநேரம் போர்த்திக் கொண்டு கிடக்கலாம் என்று ஆசைப்பட்டதற்கு நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டான். அவள் கோபத்துக்குப் பயந்து எழுந்து உட்கார்ந்தான். அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே பயமாக இருந்தது. அவளின் அருகாமை பதற்றமும், பயமும் ஏற்படுத்தியது. அவன் வீட்டுச் செலவிற்குப் பணம் கொடுத்து ஆறுமாசமாகிறது. அந்தக் கடுப்பில்தான் கரித்துக் கொட்டுகிறாள். பாவம் அவள் மட்டும் என்ன செய்வாள். புருஷனுக்கு வருமானமில்லையென்றால் குடும்பத்தேர் எப்படிச் சீராக ஓடும்? வீட்டில் ஒரு கறவை மாடு இருப்பதால் பிள்ளைகளுக்குக் கஞ்சியாவது ஊற்ற முடிகிறது. அதுவும் இல்லையென்றால் என்ன பண்ணியிருப்போம்... அவளால் அந்தப் பயங்கரத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. தன் அடங்காத கோபத்தை குழந்தைகளிடம் திருப்பினாள். சுருண்டு படுத்திருந்த பெரியவன் முதுகில் பளீரென வைத்தாள். கர்ண கடூரமான குரலெடுத்து அழுதான் பையன். கபாலி எரிச்சலடைந்தான். கோபம் சுரீரென்று உச்சிக்கு ஏறியது. அவளை இழுத்துப் போட்டு அடித்துக் குமுறணும் போல் தோன்றியது. அவளைப் பார்த்து ஆக்ரோஷமாகக் கேட்டான்.,

"ஏன்டி... மிருகம் மாதிரி நடந்துக்கிற... காலங்காத்தால கொழந்தையைப் போட்டு அடிக்கிற.. ம்..."

"பத்து வயசாவுது தடிமாட்டுக்கு... படுக்கையில் மூத்திரம் பெய்யுது... சூடு சொரணை இல்லாதவனை அடிச்சுத்தான் திருத்தணும் "

அவன் மீதிருந்த கோபத்தைத்தான் அவள் வேறுவிதத்தில் காட்டுகிறாள். இடத்தைக் காலி செய்யாமல் உட்கார்ந்திருந்தால் ஜாடை மாடையாக என்னென்ன பேசுவாளோ என்று பயந்து எழுந்து வெளியேறினான் கபாலி. புழக்கடைக்குப் போய் வேப்பங் குச்சியை ஒடித்துப் பல் தேய்த்தான். தலைக்குப் பச்சைத் தண்ணீர் ஊற்றிக்கொள்ளத் தயக்கமாக இருந்தது. அவன் மனைவி அவனுக்காக வெந்நீர் போட்டு வைத்திருந்ததும், தொணதொணவென பேசிக் கொண்டு முதுகு தேய்த்துவிட்ட காலமும் ஒன்று உண்டு. அப்போது அவனுக்கு வருமானம் இருந்தது. எல்லாம் அவன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நின்றது. ஒரு வருஷமா சரியா பிசினஸ் இல்லை. எல்லாம் தலைகீழா மாறிடுச்சு. பணத்தை வச்சுத்தான் எல்லாமே...

பெரியதாக ஒரு பிசினஸ் முடிந்தால் எல்லாவற்றையும் சரியாக்கிவிடலாம். இவனும் நாலுபேரைப் பார்ப்பதும் அலைவதுமாகத்தான் இருக்கின்றான். ஒன்றும் படியவில்லை. மேலும் இடங்கள் குறைந்து கொண்டே வந்தன. அதாவது பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிய அளவில் ஐநூறு, ஆயிரம் ஏக்கரில் வளைத்துப் போடுவதால் சாதாரண சிறிய ரியல் எஸ்டேட்காரர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. வேறு வழியில்லை. இதுபோன்ற நெருக்கடியில் போராடித்தான் கரை சேர வேண்டியிருக்கின்றது.

கற்பகம் வேட்டி சட்டை வெளுத்து வைத்திருந்தாள். தொழிலுக்கான சீருடை அது. கையில் டைரி, பாலித்தின் பையில் லே அவுட்களின் படங்கள். புறப்பட்டான். அவன் போவதைக் கவலையோடு பார்த்து நின்றாள் கற்பகம். ரொம்பவும் மூஞ்சியைக் காட்டிவிட்டோமோ என்று வருந்தினாள். அவளும்தான் என்ன செய்வாள்? அவன் விடிந்ததும் புறப்பட்டானென்றால் திரும்பவும் நேரம் சொல்ல முடியாது. பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்திப்பது அவள்தான். வாங்கின கடனுக்குப் பதில் சொல்வதும், அரிசி பருப்புக்கு அல்லல் படுவதும் அவள்தானே? ஒரு கறவை மாட்டில் என்ன பெரிதாக கிடைத்துவிடும்?

நிறையத் தொழில்கள் செய்து அலுத்தபின்தான் கபாலி ரியல் எஸ்டேட் புரோக்கராக மாறினான். பெட்டிக் கடை, விறகு தொட்டி, பேக்கரிகளுக்கு ஜாம், எஸன்ஸ் தயாரித்து விற்றது என்று நீள்கிறது பட்டியல். எல்லாம் கொஞ்சநாள் ஓடும். பிறகு படுத்துவிடும். காரணம் புரியாது. எல்லாம் தோல்விதான். கடன்கள்தான் மிஞ்சின. மூச்சுத் திணறி ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் ஏறக்கட்டினான். அவனிடம் கைத் தொழிலும் இல்லை. முதலீடும் இல்லை. அதனால் ரியல் எஸ்டேட் புரோக்கராக மாறிவிட்டான். ஆரம்பம் நன்றாகவே இருந்தது. மாதத்தில் ஒன்று ரிஜிஸ்தர் ஆகும். இடையிடையே வாடகை வீடும் பார்த்துக் கொடுப்பான். குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால் இப்போது? எல்லாம் தலைகீழ். தெருவுக்கு இரண்டு புரோக்கர்கள். வேலை வெட்டி இல்லாதவர்கள் செய்து வந்த தொழிலில் இன்று அரசாங்க உத்தியோகஸ்தர்கள், வாத்தியார், வக்கீல் என்று பெரிய ஆசாமிகள் நுழைந்துவிட்டதால் போட்டி அதிகமாகிவிட்டது. வாடகை வீடு கேட்டுக் கூட யாரும் வருவதில்லை. வெட்டு வெட்டென்று ஊரைச் சுற்றி வருவதும், புலம்புவதும், பெருமூச்சுவிடுவதுமாக நாட்கள் கழிகின்றன. இவனைப் போன்ற தரகர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடுமோ என்று கூட பயந்தான் கபாலி. டீ குடிக்க, புகைக்க யாரையாவது எதிர்பார்க்க ஆரம்பித்தான். ஏதாவது வேலைக்குப் போகலாமென்றால் எந்த வேலைக்குப் போவது? நாற்பதைத் தாண்டிய, அதிகம் படிப்போ, தொழிலோ தெரியாதவனுக்கு எங்கு வேலை கிடைக்கும்? செக்யூரிட்டி வேலைக்காவது போயா என்றாள் அவன் மனைவி. கொசுக்கடியிலும், குளிரிலும் தூங்காமல் கொட்ட கொட்ட விழித்திருக்க அவனால் இயலாது. மேலும் அதில் உடல் பாழாவதைத் தவிர, பெரிசா என்ன முன்னேற்றம் வந்திருக்கும்?

கபாலி பலவாறு யோசித்துக் கொண்டே கலசத்தம்மன் கோயில் வந்தடைந்தான். தெருவில் நின்றவாறு கன்னத்தில் போட்டுக் கொண்டான். அம்மன் ஒரு காட்டுத் தேவதை. முப்பது வருஷத்துக்கு முன் இவன் சிறுவனாக இருந்தபோது இந்தப் பக்கமெல்லாம் மனித நடமாட்டமே இருக்காது. சுற்றிலும் புதர்கள் மண்டிக் கிடக்கும். ஒத்தையில் இந்தப் பக்கம் வர யாருக்குமே தைரியமிருக்காது. முனீஸ்வரன்கள் உலாத்திய இடம். சொன்னால் யாரும் இதை நம்ப மாட்டார்கள். கான்கிரிட் கட்டிடங்கள் பெருகிவிட்டன. தற்போது மிஞ்சியிருப்பது ஆலமரமும், அம்மன் கோயிலும் மட்டும்தான். கோயிலின் பின்புறம் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கின்றது. அடுக்குமாடி குடியிருப்புகள். இதற்கு முன் அந்த இடம் பெரிய பள்ளமாகக் கிடந்தது. அந்தப் பள்ளத்தை மூன்று கோடிக்குப் பார்ட்டி கேட்டது. இவன்தான் மீடியேட்டர். இரண்டு பக்கமும் கமிஷன் கிடைக்கும். வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று கனவில் மிதந்தான். நிலத்துக்காரன் கொடுத்த தாய்ப் பத்திரத்தில் லிங்க் டாக்குமென்ட் சரியாக இல்லை. கேட்டதற்குத் தேடித் தருவதாக இழுத்தடித்தான். அவன் இரண்டு பேரிடம் பேசிக் கொண்டிருந்தது அதன் பிறகுதான் புரிந்தது. ஐந்து லட்சம் மேல் வைத்து வேறொரு பார்ட்டி முடித்துவிட்டது. அவனுக்குப் பெருத்த ஏமாற்றம். ஏறக்குறைய ஒரு வருஷ அலைச்சல். பெட்ரோல் செலவு, காத்திருப்பு எல்லாம் வீணாய்ப் போனது. ஆட்டோ பாய் இடையில் புகுந்து அடித்துக் கொண்டு போனான். பாய் இவனுக்குப் பின்னாடி ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வந்தவன், அரச மரத்தடியில் இருக்கும் ஸ்டாண்டில்தான் கிடப்பான். ரியல் எஸ்டேட் தொழில் அவனைப் பல கோடிகளுக்குச் சொந்தக்காரனாக்கியது. அவ்வளவு ஏன்? நம்ம சண்முகம். பிக்பாக்கெட் சண்முகம் என்றால்தான் தெரியும். இன்று பென்ஸ் காரில் போகிறான். ரியல் எஸ்டேட் ஒண்ணுமில்லாதவனையெல்லாம் உயரத்திற்குக் கொண்டு போயிருக்கு. யாரையும் குறை சொல்வதற்கில்லை. இவனுக்கு அதிர்ஷ்டமில்லை அவ்வளவுதான்.

விதியை நொந்தபடியே அவன் அரசமரத்தடிக்கு வந்தான். அங்குதான் எல்லா மீடியேட்டர்களும் கலந்து போனார்கள். டீக்கடைப் பெஞ்சில் குருசாமி உட்கார்ந்திருந்தார். கடை அவரோடதுதான். தெற்கத்திக்காரர். ஊரில் ஒன்றும் சரி வராததால் மெட்ராஸூக்கு வண்டியேறியவர். சர்வர். கிளி ஜோசியர். டீக்கடைக்காரர். இறுதியில் ரியல் எஸ்டேட் புரோக்கராக இன்று உட்கார்ந்து சாப்பிடுகிறார். வீட்டு வாடகையே இருபதாயிரம் வருகிறது. இவனை வரவேற்றார்.

"வாய்யா... கபாலி... ஏதாவது முடிச்சியா?"

இவன் உதட்டைப் பிதுக்கினான்.

பகல் பொழுது நாலு பேரோடு பேசிக் கொண்டிருப்பதில் கழிந்து விடுகிறது. ஓசியில் வயிற்றுப் பாட்டைக் கூட கவனித்துக்கொள்கிறான். பொழுது சாய்ந்து வீடு திரும்பும்போதுதான் மனம் பதற்றப்பட ஆரம்பித்துவிடுகிறது. பற்றாக்குறை கற்பகத்தைக் கொடிய மிருகமாக மாற்றிவிட்டது. அவளுடைய முறைப்பும், அழுத்தமான மௌனமும் ஆளைக் கொன்றுவிடக் கூடியது. அவன் சொல்லும் காரணம், சமாதானம் எதுவும் அவள் காதுகளில் ஏறுவதில்லை. அவளுக்குத் தேவை குடித்தனம் நடத்தப் பணம். அது கிடைக்காதபட்சத்தில் வெடிக்கத்தான் செய்வாள். சம்பாதிக்க வக்கில்லாத இவன் அவளை நிந்திப்பதில் அர்த்தமில்லை. அவள் காதில், மூக்கில் ஏதாவது விட்டு வைத்திருக்கின்றானா?

நடுத்தர வயது மனிதன் இவனை நெருங்கினான்.

"சார்... வாடகைக்கு வீடு வேணும். கிடைக்குமா" கபாலி பர பரப்பானான்.

பெஞ்சிலிருந்து எழுந்து நின்றான்.

"எவ்வளவு வாடகையில் எதிர்பார்க்கிறீங்க?"

"ஐயாயிரம்"

"மாடி போர்ஷன் சரிவருமா?"

"பரவாயில்லை"

கபாலி குருசாமியிடம் சொன்னான்.

"அஞ்சாவது தெரு வீடு இருக்கான்னு போன் பண்ணிக் கேளுங்க."

குருசாமி வீட்டு உரிமையாளருக்குப் போன் போட்டு விசாரித்தார்.

"இருக்காம்.... போய்க்காட்டு"

கபாலி வீடு கேட்டு வந்தவரின் பைக்கில் ஏறிக் கொண்டான். போகும்போது ஒரு மாத வாடகை கமிஷனாகத் தர வேண்டும் என்பதை அவர் காதில் போட்டான். அவரும் சரியென்று தலையசைத்தார்.

கபாலிக்கு வாழ்க்கை ரொம்பவும் மகிழ்ச்சியாகப் பட்டது. ஒரு மாச சோற்றுப் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம். குறிப்பிட்ட இடம் வந்ததும் வண்டியை நிறுத்தச் சொன்னான். கீழ் போர்ஷனில் வீட்டு உரிமையாளர் குடியிருந்தார். காலிங் பெல்லை அடித்ததும் கதவைத் திறந்து விசாரித்தவர் வீட்டுச் சாவியைக் கபாலியிடம் கொடுத்தார். அவன் கஸ்டமரை அழைத்துக் கொண்டு மாடியேறினான்.

"சார். சூப்பர் இடம். அருமையான தண்ணீர். காசு கொடுத்துத் தண்ணீர் வாங்க வேண்டாம். சுற்றுவட்டாரத்தில் மூன்று பெரிய ஸ்கூல் இருக்கு. சூப்பர் மார்க்கெட் ஆஸ்பிட்டல் எல்லாம் பக்கத்திலேயே இருக்கு".

வந்தவர் வீட்டை ஆராய்ந்தார்.

"எல்லாம் வாஸ்துப்படிதான் இருக்கு. இங்கு இருந்தவங்க எல்லாரும் சொந்தவீடு வாங்கிக்கினு போயிருக்காங்க. ராசியான வீடு".

எவ்வித ரியாக்ஷனும் காட்டாமல் "ஓ.கே. எதற்கும் மனைவியைக் கூட்டியாந்து காட்டிட்டுச் சொல்றேன்" என்றார்.

கபாலிக்குச் சப்பென்றிந்தது.

"சார், ஏதாவது டோக்கன் அட்வான்ஸ் தந்திடுங்க. இல்லேன்னா வீட்டை வேறு யாருக்காவது விட்டுடுவாங்க. இந்த ஏரியாவுல வீடு கெடைக்கிறது ரொம்ப கஷ்டம்."

"புரியுது. எனக்குப் பிடிச்சிருக்கு. இருந்தும் மனைவியைக் கேட்கணும். குடித்தனம் செய்யப் போறது அவங்கதானே? இன்னிக்கு சாயந்திரத்துக்குள்ள அவங்கள கூட்டியாந்து காட்டிடுவேன். சாயந்திரம் உங்களுக்குப் போன் பண்றேன். உங்க செல் நம்பரைக் கொடுங்க".

நம்பரைக் கொடுத்தான். அவர் வண்டியிலேயே அரசமரத்தடிக்குத் திரும்பினான். இரவு ஒன்பது மணி வரை அங்கேயே கிடந்தான். வீட்டு ஞாபகம் வயிற்றில் கலவரத்தை உண்டாக்கியது. தற்கொலை செய்து கொள்ளலாமா என்று நினைத்தான். சோர்ந்து போய் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். வீடு இருள் சூழ்ந்து காணப்பட்டது. பசு எழுந்து நின்று வாலை நிமிர்த்திச் சாணமிட்டது. நன்றியோடு அதைத் தடவிக் கொடுத்தான். வாயில்லா அந்த ஜீவன்தான் குடும்பத்திற்குக் கஞ்சியாவது ஊற்றுகிறது.

ஒருக்கலித்திருந்த கதவைத் திறந்தான். பிள்ளைகள் தாறுமாறாகப் படுத்திருந்தனர். கற்பகம் விழித்திருந்தும் கண்களை மூடியிருந்தாள். அவன் வெறுங்கையோடு திரும்புவதை அவள் எப்படியோ உணர்ந்துகொள்கிறாள். அவனை நுட்பமாக அறிந்து வைத்துள்ளாள். அவள் எழுந்துகொள்ளாமல் இருந்தால் போதும். மெதுவாக மூச்சுவிட்டபடி அடுப்படிக்குப் போனான் கபாலி. பசி. சோறும் ரசமும் இருந்தது. கருவாட்டுத் துண்டை நெருப்பில் வாட்டி வைத்திருந்தாள். அள்ளிப் போட்டுக் கொண்டு கபக்கபக்கென்று விழுங்கினான். சொந்த வீட்டில் திருடனைப் போல் நடந்துகொள்வது அவனுக்கு அவமானமாகத் தோன்றியது. சாப்பிட்டுவிட்டுப் படுத்தான்.

அன்று வீடு பார்த்துவிட்டுப் போன மனிதன் அதன் பிறகு ஆளையே காணோம். ஒருவாரம் ஓடியது.

தற்செயலாக அந்த வீட்டுப் பக்கம் போனான். கண்கள் தாமாகவே மாடி வீட்டுப் போர்ஷனைப் பார்த்தன. மாடிப் போர்ஷனிலிருந்து இறங்கியவரைப் பார்த்ததும் திடுக்கிட்டான். மனைவியிடம் வீடு பிடித்திருக்கிறதா? என்று கேட்டுவிட்டுச் சொல்கிறேன் என்று போன அதே மனிதர். இவனுக்குக் கமிஷன் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டுக் குடி வந்திருக்கிறார்.

மாடிப் போர்ஷனிலிருந்து இறங்கியவரைப் பார்த்துக் கேட்டான்.

"ஹலோ ஏங்கிட்டச் சொல்லாமக் குடி வந்திருக்கீங்க. நான்தானே உங்களுக்கு வீடு காட்டினேன். ஏங்கிட்ட சொல்லியிருக்கணும். கமிஷன் எங்கே?"

"இன்னா மொறைக்கிறீங்க. மரியாதையாப் பேசு "

"இன்னா மரியாதை வேண்டி கெடக்கு. ஒரு வார்த்தை சொல்லாம நைசாக் குடிவந்துட்டு... கமிஷன் குடுங்க... ஒரு மாசத்து வாடகை."

"ஒரு மாசம் வாடகையெல்லாம் தர முடியாது. ஐந்நூறு ரூபாய் தர்றேன். வாங்கிக்கினு போ. கத்தாதே."

கபாலிக்கு அவமானமாக இருந்தது. கோபம் உச்சந்தலைக்கு ஏறியது.

"பிச்சையா குடுக்கிற. எல்லா இடத்திலும் கொடுக்கிறதுதான். மரியாதையா ஒரு மாசத்து வாடகையைக் கொடு. இல்லேன்னா கதையே வேற."

"இன்னா பண்ணுவ.. தலையைச் சீவிடுவியா... ரவுடியா நீ.. உள்ளே தள்ளிடுவேன்."

ஒரு கட்டத்தில் கபாலியால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. முஷ்டியை மடக்கி ஒங்கி ஒரு பஞ்ச் வைத்தான். அவ்வளவுதான் அந்த ஆள் தடாலென கீழே சாய்ந்தான். மாடியிலிருந்து அவனுடைய மனைவியும் பிள்ளைகளும் கத்திக் கொண்டு ஓடி வந்தார்கள். சுற்றிலும் வீடுகளிலிருந்து எட்டிப் பார்த்தார்கள்.

கபாலி அந்த இடத்தைவிட்டு அகன்றான். ஓடினான் என்றுதான் சொல்ல வேண்டும். அரச மரத்தடிக்கு வந்து ஆசுவாசப்படுத்தினான்.

ஏன் உணர்ச்சி வசப்பட்டோம். ஒரு மனிதனை அடிக்கிற வேகம் எங்கிருந்து வந்தது. குத்துப்பட்டவனின் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தது ஞாபகத்திற்கு வந்தது. ஏன் எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது. அவன் ஏன் என்னை ஏமாற்ற வேண்டும். நான் இருக்கப்பட்டவனில்லை. எனக்கும் குடும்பம், பிள்ளைகள் இருக்கின்றன. நியாயமாக அவன் எனக்குக் கமிஷன் கொடுத்திருக்கணுமில்லையா? ஏமாற்றலாமா? கபாலி தனக்குள்ளேயே பிரச்சினைகளைப் போட்டு அலசிக் கொண்டிருந்தான்.

போலீஸ் ஜீப் அவன் அருகே வந்து நின்றது.

நன்றி: தினமணி கதிர்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link