சிறுகதைகள்


நான் அதுவல்ல

கூடல்.காம்
கையில் எழுதுகோலோடு அமர்ந்திருந்த நடேசனுக்கு அத்தனை நேரமாக ஓர் எழுத்துக்கூட ஓடவில்லை. எப்பொழுதுமே மனசு தீர்மானித்து உட்கார்ந்துவிட்டால் வரிகள் தானாக முன்னேறிப் பாய்ந்து கொண்டிருக்கும். ஒரே மூச்சில் எத்தனை பக்கங்கள் கரைந்தன என்று அவருக்கே தெரியாது. அந்த வேகம் இப்போதைக்கு அவரை அழைப்பதில் பலனில்லை என்பதை மனைவி ராஜிக்கு உணர்த்திவிடும். அன்றெல்லாம் அவரை உதவிக்கு அழைப்பதில் பலனில்லை என்று விட்டு விடுவாள். அன்று அவளுக்கு உதவ முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன்தான் அமர்ந்து எழுதிக் கொண்டிருப்பார் இவர்.

ஆனாலும் எழ மனசு வராது. ஒரே மூச்சில் எழுதி முடித்தால்தான் திருப்தி. இல்லையென்றால் அந்த உணர்ச்சிக் களம் சிதைந்து போகும். என்னென்னவற்றையெல்லாம் ஊடாகச் சொல்ல இருந்தாரோ அவை மறந்து போகவும் கூடும். அந்த இடைச் செருகல்கள் விடுபட்டுப் போயின் சுவாரஸ்யம் குன்றிப்போகும் அபாயம் உண்டு. ஒரு புள்ளியை நோக்கி நகர்த்தும் யுக்தி நிச்சயம் தளர்ந்துபோகும். மையமாக நின்று தன் எண்ண அலைகளை இழுத்துக்கொண்டு போகிறதோ அந்தப் புள்ளிக்கான அழுத்தம் குறைந்து போய் சொல்ல வந்த நோக்கம் பாழ்பட்டுப் போகும். சாரி என்று ஒரு வார்த்தைதான் சொல்வார். அதைச் சொல்லாத நாட்களும் உண்டு. புரிந்து நடந்துகொள்வாள் ராஜி.

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல, எதைச் செய்தால் அவர் மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்குமோ, அவரின் நாள் இதமாகக் கழியுமோ, அதை மனமுவந்து செய்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடுவாள். அவரது எழுத்தில் அப்படியாக ஒன்றும் அவளுக்கு ஈடுபாடு இருந்ததில்லைதான். என்ன எழுதுகிறார், எதற்காக எழுதுகிறார், ஏனிப்படி இதைக் கட்டி இழுத்துக்கொண்டிருக்கிறார் என்றெல்லாம்கூட அவள் சிந்தித்ததில்லை. ஏதோ எழுத்துப் பழக்கம். சரி, செய்யட்டும். அவ்வளவுதான்.

"இந்த வாரம் தாய்ல வந்திருக்கே, படிச்சியா?" என்று அவர் எப்போதாவது நீட்டுவதுண்டு.

"குடுங்க படிக்கிறேன்" என்று அங்கேயே உட்கார்ந்து படிக்க ஆரம்பித்துவிடுவாள். கொடுத்தவுடன் அவள் அப்படி வாங்கிப் படிப்பதில் அவருக்கு ஒரு மகிழ்ச்சிதான். மறுக்காமல் மதித்து வாங்கி படிப்பது எவ்வளவு பெரிய பண்பாடு?

"நல்லாயிருக்கு அவ்வளவுதான்" அவள் பதில்.

ஒரு ரசிகனாய் இருந்து சொல்வதாய் இருக்கும். விமர்சகனாய் நின்று சொல்ல வராது. இதை எல்லாரும்தான் சொல்வார்கள். அது பொதுவான ஒரு எதிர்வினை. அதில் என்ன சுவாரஸ்யம்? இப்பொழுதெல்லாம் அவரும் கொடுப்பதில்லை. அவளும் படிப்பதில்லை. அவளாக என்றுதான் எடுத்துப் படித்தாள்? எப்படி எழுத்து என்பது தனக்குள் பூரண சுதந்திர பாத்யதையாய் நின்று திகழ்கிறதோ, அதைப் போல் வெறுமே இருப்பதும் அவளின் பூரண சுதந்திர பாத்தியதைக்கு உட்பட்டது. தன் சுதந்திரத்தை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று தான் நினைப்பது போல், மற்றவர்களின் சுதந்திரத்திலும்தான் தலையிடக் கூடாது. அதுதானே சரி?

எழுத வந்தது ஏதோ ஆத்ம சாந்திக்காக நிகழ்ந்த ஒன்று என்றுதான் இன்றுவரை நினைத்துக் கொண்டிருக்கிறார் இவர். அது ஓர் உந்துதலினால் ஏற்பட்டது. எதையோ கண்டு அல்லது கேட்டு மனசு கொதித்துப் போய், என்ன அநியாயம் இது என்றோ, இது எப்படி நியாயமாகும் என்றோ ஏதோவொரு வகையில் மனதைப் பிசைந்தெடுக்க அதன் வடிகாலாக இறக்கி வைக்கும் மனப் பாரம். தனக்குக் கை வந்த வகை எழுத்தை இது நாள் வரை அவர் அப்படித்தானே பயன்படுத்தியிருக்கிறார்?

எனக்கு இது தோன்றுகிறது. சொல்கிறேன். பிடிப்பவர் எடுத்துக்கொள்ளலாம். பிடிக்காதவர் விட்டுவிடலாம். கட்டாயமில்லை என்ற கருத்துதான். இதே கருத்துக்கள் மற்றவர்களுக்கும் தோன்றாதா என்ன? ஆனால் அதன் அவசியத்தை, அதன் மேன்மையை, அதன் ஜீவிதத்தை உணர்த்தித் தூக்கி நிறுத்துவது யார்? அதுதானே எழுதப் புகுந்தவனின் பணி. தலையாயக் கடமை. விழுமியங்கள் அழியாமல் காப்பாற்றுபவன்தானே படைப்பாளி? அப்படித்தான் அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். இதுநாள் வரை இயங்கியும் வந்திருக்கிறார்.

ஊஹும். தவறு.. தவறு.

ஒரு முறை அவருக்கும் ஒரு தடுமாற்றம் வந்திருக்கிறதே அதைச் சொல்லாமல் போனால் எப்படி? அதிலிருந்து மீள முடியாமல் போய்த்தானே இந்த நிமிடம் தவித்துக் கிடக்கிறார் அவர். எழுத முடியும் என்னாலும் "அப்படி" என்கிற வகையிலான வெறி. எழுதினார். வந்தது. கூடவே இரண்டாயிரம் பணமும் கிடைத்தது. சற்று அசந்துதான் போனார் நடேசன்.

"ரெண்டாயிரமா? அவ்வளவுகூடத் தருவாங்களா?"

"தந்திருக்காங்கல்ல, தருவாங்கன்னுதான் தெரியுது. ஏனிப்படி உற்சாகமில்லாம பதில் சொல்றீங்க? உங்களை மதிச்சுப் போட்டு, இவ்வளவு பெரிய தொகையையும் அனுப்பியிருக்காங்களே தொடர்ந்து எழுத வேண்டிதானே?"

"ம்ம் சொல்லிட்ட இல்ல... செய்துற வேண்டியதுதான்"

அந்தப் பதிலில் என்ன புரிந்து கொண்டாளோ போய்விட்டாள் ராஜி. ஆனால் இவருக்குத்தான் மனதே சரியில்லாமல் போனது. வந்த கண்டனக் கணைகளுக்கு ஓர் அளவே இல்லை. இந்த அளவுக்கா தன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்? ஆச்சரியப்பட்டுப் போனார் நடேசன். சத்ய சாரதி என்ற தன் புனை பெயருக்கு ஏற்ப தன்னை மனதிற்குள் வரித்துக் கொண்டிருக்கிறார்களா? எழுத்துக்கு இவ்வளவு சக்தியா அல்லது ஏதோ தனக்கு மட்டும்தான் இப்படி வாய்த்துள்ளதா? உங்களை நீங்களே ஏனிப்படிக் கழுவிலேற்றிக் கொள்கிறீர்கள்? இந்த ஒரு வாக்கியம் போதாதா? பெயர் சொல்ல விரும்பாத வாசகருக்குத் தன் மீது எத்தனை மதிப்பு? என் பெயர் முக்கியமில்லை. உங்கள் எழுத்துதான் முக்கியம். தனக்கு ஏனிப்படி புத்தி போனது?

இப்படியொரு எழுத்து வந்ததே அதை என்னவென்று சொல்வது? எந்தச் சிரமமும் இல்லாமல் மள மளவென்று கிறுக்கித் தள்ளியதற்கா இந்தப் பண மதிப்பு? அது சரி, கூடக் காசு கிடைத்துவிட்டால் எழுத்து மதிப்பாகிவிட்டது என்று பொருளா?

காசு மதிப்பானதா? எழுத்து மதிப்பானதா? காசு மதிப்பானால் எழுத்து மதிப்பாகுமா? அதுதான் கௌரவம் என்றால் உலகத்தில் காசு அதிகம் வைத்திருப்பவன் எல்லாம் மதிப்பானவன், கௌரவமானவன் என்றுகொள்ள வேண்டி வருமே அது சரியா? சமூக அந்தஸ்து என்று ஒன்று உள்ளதே அது வேண்டாமா? அது காசிலிருந்து விலக்கிப் பார்க்கும் ஒரு தன்மையல்லவா அதைப்பற்றி யாருக்குக் கவலை? காசிருக்கா வா. இல்லையா போ. "கையில் காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடி".

"தொடர்ந்து எழுதுங்க" என்கிறாள் ராஜி. இந்தப் பேச்சு முன்னே வந்ததா.. இப்பொழுது அவள் சொல்வது காசைப் பிரதானமாக வைத்து. என்னவோ எழுதறார் என்று இருந்தவள் இன்று இப்படி இத்தனைக்கும் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று இந்த நிமிடம் வரை அவள் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. ஒன்றுக்கு ரெண்டு புத்தகங்கள் வந்து பிரிக்காமல் அநாதையாகக் கிடக்கின்றன. உண்மையில் சொல்லப் போனால் அது அப்படிக் கிடக்க வேண்டியதுதான். அது என்ன எழுத்து என்பதைப் பற்றிக் கவலையில்லை அவளுக்கு. வந்த பைசாதான் முக்கியம்.

"நிறைய எழுதுங்க. எனக்கொண்ணும் நீங்க ஹெல்ப் பண்ண வேண்டாம். எல்லா வேலையும் நான் பார்த்துக்கிறேன்"

அடிப்பாவி! எதற்கு ரெண்டாயிரம் வந்ததோ அந்த எழுத்தை உன் கையில் பிடித்துப் படிக்க முடியுமா? நீ படித்தாயானால் நீ என்னை மண விலக்கம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையே? ஏதோவொரு அசட்டு உந்துதலில் நான்தான் தவறிழைத்து விட்டேனென்றால் அது என்ன ஏது என்றுகூட அறிந்துகொள்ளாமல், என்னை இப்படியா கண் மூடித்தனமாகத் தூண்டுவது? காசு அத்தனை முக்கியமா உனக்கு? அது வாழ்க்கையின் ஒரு காரணி.

"அதுவேவா வாழ்க்கை? தொடர்ந்து நான் அப்படித்தான் எழுதுவதென்றால், தினமும் வேசியிடம் போவது போல. பரவாயில்லையா அது? உனக்குச் சம்மதமா? அப்படி வரும் காசு பரவாயில்லையா?"

"நாய் வித்த காசு குரைக்கவா செய்யும்? நெருப்புன்னா வாய் வெந்தா போகும்?"

"வேகும்டி வேகும். அதைப் படிக்கிற வாசகனுக்கு வேகும். அவன் மனசும், உடம்பும் சூடு பிடிச்சு வேகும். இல்லைன்னா எழுதுற எனக்கு வேகும். கொதிக்கும். மனசு சாக்கடையானா, அது வேகறதுக்கு சமானம்தானே? உடம்பு, மனசு இப்படி எல்லாத்தையும் கெடுத்துக்கிட்டு ஓர் எழுத்து தேவையா? அதுனால யாருக்கு என்ன லாபம்?"

"உங்க எழுத்துனால மட்டும் பெரிய லாபமா?"

"லாபம்தான்டி. அதிலென்ன சந்தேகம். படிக்கிறவன் மனசைக் கெடுக்காம இருக்கேனே.. அதுவே இந்த சமூகத்துக்கு நான் செய்யுற பெரிய தொண்டு."

"ஆமா. நீங்கதான் மெச்சிக்கணும். படிக்கிற பழக்கமே ரொம்பக் குறைஞ்சு போயிட்டதாத் தெரியுது. வெறும் பொழுது போக்குன்னு ஆயிப்போச்சு எல்லாமும். நீங்க சொல்றமாதிரிக் கருத்தைத் தேடுறவங்க யார் இருக்காங்க இப்போ?"

நடேசன் விக்கித்து நின்றார்.

"இதுவரைக்கும் உங்க எழுத்துக்குச் சன்மானமா வெறும் நூறு, இருநூறுதானே வந்திருக்கு. அதுவும் எப்பவாச்சும். அதுக்கு இந்த எப்பவாச்சும் எவ்வளவோ பரவாயில்லை போலிருக்கே. தொடர்ந்து எழுதினா இந்த எப்பவாச்சும் குறைஞ்சு போகும் போலிருக்கே" இவ்வளவும் சொன்னாளே தவிர, அப்படி என்னதான் எழுதினீங்க என்று எடுத்துப் படிக்கத் துணியவில்லை அவள். அந்த மட்டும் தப்பித்தோம் என்றுதான் நினைத்தார் நடேசன். டேபிளில் கவர் கூடப் பிரிக்காமல் கிடந்தது வந்திருந்த இதழ். கவர் உறையை லேசாகத் தூக்கிப் பார்த்தார். அட்டையில் இருந்த அந்தக் கவர்ச்சி மைதானம் எதையோ தூக்கிப் பார்ப்பது போல் படு கொச்சையாகக் கூசச் செய்தது இவரை.

அட்டையே உள்ளே இருக்கும் விஷயத்தைச் சொல்லாமல் சொல்கிறதோ? தன்னையறியாமல் உடம்பில் ஒரு நடுக்கம் பரவியிருப்பதை அப்போதுதான் உணர்ந்தார் இவர். கையும் பிடித்திருந்த பேனாவும் நடுங்கி, நழுவுவது போன்ற பிரமை.

எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம். எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்... திரும்பத் திரும்பப் பல முறை தனக்குள் அந்த மந்திரத்தை உச்சாடனம் செய்வது போல் தீர்க்கமாய்ச் சொல்லிக் கொண்டார் நடேசன். நாடி நரம்பெல்லாம் புகுந்து பரவி, தன்னை ஒரு மீள் எழுச்சிக்குத் தயார் செய்து கொள்வதுபோல் மனமுவந்து உருகினார். அப்போதைக்கு அவரது எழுதுகோல் மூடப்பட்டது என்னவோ உண்மைதான். விரைவில் அது திறக்கும். பயன்பாடு மிக்க வீரியமுள்ள சிந்தனைகளை நிச்சயம் விதைக்கும். கண்களில் நீர் பனிக்க ஒரு புதிய எழுச்சிக்கு மனமுவந்து காத்திருக்கலானார் சத்யசாரதி என்கிற நடேசன்.

நன்றி: தினமனி கதிர்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link