சிறுகதைகள்


இதுவல்லவோ!!!

கூடல்.காம்
நந்தினிக்கு தன் கடமையை சரியாக முடித்த திருப்தியும், சந்தோஷமும் ஒரு நிறைவை தந்தது. இருந்தாலும் மனதில் ஒரு வெறுமை படர்வதை அவளால் மறுக்க முடியவில்லை. தன் ஒரே மகன் சுமனுக்கும், சுதாவிற்கும் திருமணம் முடிந்து இன்றுதான் அவர்கள் தங்கள் தேனிலவிற்கு கிளம்பிச் சென்றார்கள். கல்யாண அமக்களத்தில் இருந்த வீடு இன்று மிகவும் அமைதியாக இருந்தது. அதுவே நந்தினிக்கு ஒரு பயம் கலந்த வெறுமையை உணர்த்தியது. இனி தன் வாழ்க்கை பயணம் எப்படித் தொடரும் என்பதை எண்ணி சிறு கவலையும் தயக்கமும் சூழ்ந்தது. எல்லாம் கொஞ்ச நேரம்தான் பின் வழக்கம் போல் வேண்டாத சிந்தனையை ஒதுக்கி விட்டு தைரியமும் சந்தோஷமுமாக வேலைக்கு புறப்படத் தயாரானாள்.

நந்தினிக்கு திருமணமான போது அவளின் கல்லூரித் தேர்வின் முடிவுக்கூட வெளி வரவில்லை. வங்கியில் வேலை, ஒரே பையன் தங்கைக்கும் திருமணம் முடிந்து விட்டது; அம்மா மட்டும்தான். இத்தனை விஷயங்களும் அவள் குடும்பத்திற்கு ஏற்றார் போல் இருக்க, பெற்றோர்கள் நந்தினி திருமணத்தை உடனே நடத்தி விட்டனர். வேலையில் இருந்த ஒரே அண்ணன்கூட ஒரு வருடம் போகட்டும் என்று சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் நவீனுடன் திருமண பந்தத்தில் நுழைந்தாள். பொதுவாக இருக்கும் மாமியார், மருமகள் மாதிரி இல்லாமல், அவருடன் நட்புறவுடன் இருக்கவும் விரும்பினாள்.

ஆனால், நவீனின் தாய் மிகவும் சராசரி மாமியராகதான் இருந்தாள். நவீனும், தாய் சொல்லைத் தட்டாத மகனாகதான் இருந்தான். தாயிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த வித முடிவும் எடுக்க மாட்டான். ஒரு விதத்தில் ஒத்துக் கொண்டாலும், எதற்கும் எல்லை உண்டல்லவா? தன் மனைவிக்கு செய்ய வேண்டியதில்கூட தாயின் அனுமதி இல்லாமல் செய்ய மாட்டான். அவ்வளவு ஏன், தாய் சொன்னதால்தான் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடாமல் ஒரு வருடத்திலேயே சுமனும் பிறந்தான். இப்படி இருப்பவனிடம் தனிப்பட்ட அன்பையும், அரவணைப்பையும் எப்படி எதிர்பார்க்க முடியும்? நந்தினி மண வாழ்க்கை ரொம்பவும் சுவாரசியம் இல்லாமல் மிகவும் சராசரியாகத்தான் இருந்தது.

திருமண வாழ்வின் அர்த்தம் புரியும் முன்பே ஒரு குழந்தைக்குத் தாயாகி விட்டாள். அவளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பிற்கு முக்கியத்துவம் இல்லாமலே வாழ்க்கை சென்றது. சிநேகபாவத்துடன் இருக்க விரும்பிய மாமியார் உறவும் அதன்படி அமையவில்லை. மாமனாரும் இல்லாததால், அவருக்கு உலகமே பிள்ளை நவீன்தான். எப்படியோ, சுமன் பிறந்தவுடன் நந்தனி கவனம் முழுவதும் அவனிடம் திரும்பியது. ஆனால், சுமனுக்கு ஆறு வயது இருக்கும் போது நவீன் காமாலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பலன் இல்லாமல் உயிர் துறந்தான். எதிர்பார்க்காத இந்த சம்பவம் எல்லோரையும் சுனாமியாய் தாக்கியது என்றால் மிகையாகாது. அதிர்ச்சியிலிருந்து மீண்டு ஒரு மாதிரி நவீனின் வங்கி வேலை நந்தினிக்கு கிடைத்து. மாமியார் துணையுடன் தனி ஆளாகவே சுமனை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கினாள். நவீனுடன் ரொம்பவும் அன்னோன்ய வாழ்கை இல்லாததால் என்னவோ அவனின் பிரிவு, நந்தினியை அதிகம் பாதிக்கவில்லை; எளிதில் மீண்டு வரவும் முடிந்தது.

இதோ இப்போ சுமனுக்கும் நல்லபடியாக திருமணம் முடிந்து விட்டது. மாமியார்தான் இருந்து பார்க்க கொடுப்பனை இல்லாமல், போன வருடம் நவீனிடம் போய் சேர்ந்தாள். சுமனும், சுதாவும் தேனிலவு சென்று ஒரு வாரம் முடிந்து இன்று ஊர் திரும்புகிறார்கள். இவர்கள் திருமணம் நிச்சயம் ஆன பின்பு சுதா அடிக்கடி வீட்டிற்கு வந்து நந்தினி உடன் நன்றாக பழக ஆரம்பித்தாள். அப்போதே நந்தினிக்கு தன் மாமியாருடன் இருக்க முடியாத சிநேக உறவை மருமகளுடன் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தாள். எப்பேர்பட்ட நல்ல மாமியாராக இருந்தாலும் அம்மாவின் இடத்தை பிடிக்க முடியாது. இதை அறிந்த நந்தினி, சுதாவிற்கு ஒரு நல்ல சிநேகிதியாக இருக்க விரும்பினாள். சுதாவும் அதே கோணத்தில் இருந்ததால், சந்தோஷப்பட்டாள்.

தேனிலவு முடிந்து, ஊரிலிருந்து வந்த சுதா ரொம்பவும் சந்தோஷமாக நந்தினியோடு எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டாள். சுமன் அவன் அப்பாவைப் போல் இல்லாமல், சுதாவிடம் அன்னோன்யமாக இருப்பதைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தாள். கொஞ்ச நாள் எல்லாம் சந்தோஷமாக அவரவர் வேலையும் பார்த்துக் கொண்டு வாழ்க்கை நல்லபடியாக போனது. அன்று சுமனும், சுதாவும் வேலை முடிந்து வரும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தனர். அலுவலகத்தில் அவனை நான்கு வருடம் வெளி நாடு அனுப்பப் போவதுப் பற்றிக் கேள்விப்பட்ட நந்தினி எல்லையில்லா மகிழ்ச்சிக் கொண்டாள். இருந்தாலும் மீண்டும் தனிமை வாழ்வா என்று நினைத்துக் கலங்கினாள்.

காலைக் குளியலை முடித்து வெளியே நந்தினி வந்தபோது, சுமனும், சுதாவும் தீவிரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருந்தனர். இவளைப் பார்த்ததும் சுதாரித்துக் கொண்டு சாதாரணமாக பேச முயற்சித்தனர். சரி அவர்கள் விஷயத்தில் தலையிடுவது அவ்வளவு சரியில்லை என்று நினைத்து தன் வேலையைக் கவனிக்கச் சென்றாள். ஆனால் வரும் நாட்களில் இதுவே தொடர்ந்தது; கூடிக் கூடிப் பேசுவதும், விவாதம் பண்ணுவதும், தன் தலையைக் கண்டதும் அமைதியாவதும் நந்தினிக்கு ஒரு கலகத்தை உண்டு பண்ணியது. வெளி நாடு போகும் வேளையில் எந்தப் பிரச்சினையும் வரக் கூடாது என்று வேண்டினாள்.

அன்று விடுமுறை தினமானதால் எல்லோரும் நிதானமாக வேலைகளை முடித்து விட்டு, எப்போதும் போல் பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். சுதா, சுமனிடம் ஜாடையாக கேட்க, அவனும் தலை அசைப்பதை நந்தினி கவனித்தாள். சுதாவும் தன்னை தயார் செய்துக் கொண்டு நந்தினியிடம், "அம்மா, நாங்கள் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பற்றிப் பேசவேண்டும் கோவப்படாமல், தப்பாக நினைக்காமல் பொறுமையாக முழுவதையும் கேட்க வேண்டும். இந்த வேளையில் மாமாவும் இருந்தால் நல்லது என்று அவரையும் அழைத்திருக்கோம்." அவள் சொல்லுவதற்கும் மாமா வருவதற்கும் சரியாக இருந்தது. நந்தினிக்கு விஷயம் ரொம்ப தீவிரமோ, என்னவாக இருக்கும் என்று புரியாமல் கலங்கினாள். இருந்தும் கேட்கத் தயார்படுத்தி கொண்டாள்.

சுதா "அம்மா, நிதானமாக யோசித்து நீங்கள் சொல்லும் பதிலில்தான் நாங்கள் வெளி நாடு போவது பற்றி முடிவு எடுப்போம்." நந்தினிக்கு ஒன்றும் புரியவில்லை. சுதா, "அம்மா நாங்கள் போனவுடன் மீண்டும் நீங்கள் தனிமையில் தள்ளப்படுவதை எங்களால் பார்க்க முடியாது; இத்தனை நாள் வாழ்வும், பிறருக்காகவும், சொந்த விருப்பு வெறுப்பை மனதில் புதைத்துக் கொண்டும் காலம் கடத்தி ஆகி விட்டது; இனிமேலாவது உங்கள் சுகத் துக்கங்களை பகிர்ந்துகொள்ளவும், கூடவே இருந்து தேவையும் புரிந்து தோழமையுடன் இருக்க ஒரு துணை அவசியம் எங்கள் இருவருக்குமே நீங்கள் இப்படித் தனியாகவே மீதி காலத்தையும் கழிப்பதில் உடன்பாடு இல்லை; உங்கள் மனதிற்கும், குணத்திற்கும் ஏற்றார் போல் நல்லத் துணையுடன் நிம்மதியாக வாழ எல்லாத் தகுதியும் இருக்கு; நாற்பதுக்குப் பிறகுதான் ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருக்கும்படியான துணை இன்னும் தேவை. எங்களுக்கு உங்கள் பேரில் உண்மையான அன்பும், அக்கறையும் இருப்பதால்தான் இவ்வளவு சொல்கிறோம். இதற்கு நீங்கள் கட்டாயம் சம்மதிக்க வேண்டும். உங்களுக்கு என்று ஒருவர் இருந்தால், எங்களாலும் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வெளி நாடு செல்ல முடியும்." என்றாள்.

நந்தினிக்கு உணர்ச்சி மிகுதியால் பேச்சே வரவில்லை; தன் மேல் அவர்களுக்கு உள்ள அக்கறையைக் கண்டு வியந்தாள். இப்பேர்பட்ட மருமகளையும், மகனையும் பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாள். அவளின் அண்ணனுக்கும் ச்சே! நமக்கு ஏன் இந்த யோசனைத் தோன்றவில்லை என்று வெட்கினான் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் எவ்வளவு உயர்ந்த சிந்தனை என்று பெருமைப்பட்டார். நந்தினியிடம், "இப்படிப்பட்ட குழந்தைகளை அடைந்ததிற்கு நீ உண்மையிலே பெருமைப்பட வேண்டும். அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இனி உன் வாழ்கையை அர்த்தம் உள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் அமைத்து கொள்வது உன் கையில்தான் உள்ளது." என்றார். நந்தினிக்கு மனதில் சொல்ல முடியாத பயம், கலக்கம் சந்தோசம் எல்லாம் போட்டிப் போட்டது. யோசித்து சொல்ல அவகாசம் கேட்டாள். கண்டிப்பாகத் தன்னையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு நல்ல முடிவைத்தான் எடுப்பாள் என்று நம்புவோம்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link