முதல் பக்கம் » பெண்கள் » குழந்தை வளர்ப்பு » தேர்வுக்கு செல்லுமுன்...

Exam Tips & Study Tips

-

தேர்வுக்கு செல்லுமுன்...

குழந்தை வளர்ப்பு:தேர்வுக்கு செல்லுமுன்...

கூடல்.காம் - Wednesday, April 09, 2008
Exam Tips & Study Tips - Child Care Tips and Informations in Tamil

ஊக்கப்படுத்துங்க

* "எப்படி எழுதினே.... எந்த விடை தப்பு?" என்று தேர்வு முடிந்து வந்த பிள்ளையை அடுத்த பரீட்சையைப் பற்றி சிந்திக்க விடாமல் தொந்தரவு பண்ணாதீர்கள். அடுத்த தேர்வுக்கு ரெடியாக்குங்கள்.

* "அதிக மதிப்பெண் வாங்கினால் பரிசு தருவேன்" என்று உற்சாகப் படுத்தலாம். சொன்னபடி வாங்கித் தருவது முக்கியம். "விடுமுறையில் ஜாலியாக டூர் போகலாம்" என்று சொல்லுங்கள்.

* அதிக மதிப்பெண் வாங்கினால் உயர்பதவியை அடைய முடியும் என்பதை உணர்த்துங்கள். அன்பான வார்த்தைகளாலும், தட்டிக் கொடுப்பதாலும் படிப்பில் ஆர்வத்தை தூண்டலாம்.

சாப்பிட வையுங்க

* தேர்வு பற்றிய அச்சத்தில் இருக்கும் குழந்தைகளிடம் கண்டதையும் பேசி கோபப்படுதலோ கண்டிப்போ கூடாது. பயத்தை இன்னும் அதிகரிக்கும்.

* வெயில் காலங்களில்தான் தேர்வு வருகிறது என்பதால் அதிகமாக தண்ணீர், இளநீர் குடிக்கச் சொல்லுங்கள். குளிர்ந்த நீரில் கண்களை அடிக்கடி கழுவுவது நல்லது.

* மண்டையை உடைக்கும் வெயிலில் செல்லும்போது குடை அல்லது தலையில் தொப்பி வைத்து செல்லச் சொல்லுங்கள். அதிக வெயில் குழந்தைகளை சோர்வாக்கலாம்.

* வைட்டமின்கள் உடலுக்கு வலிமை அளிக்கும். தினமும் ஆரஞ்சு பழச்சாறு குடிக்க வைக்கவும். அதிலுள்ள வைட்டமின் சி அறிவுத்திறனை வளர்க்கும்.

* சில குழந்தைகள் சாப்பிடாமலே தேர்வுக்கு ஓடி விடுவார்கள். உடல் சோர்வாகி தேர்வில் முழுக் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். பால், ஜூஸ் போன்ற பானங்களையாவது சாப்பிட்டு விட்டு போகச் சொல்லுங்கள்.

* சிறு உடல்நலக் குறைவு என்றாலும் கை வைத்தியம் பார்த்து உடல் நலக் குறைவை அதிகப்படுத்தாமல் டாக்டரிடம் காட்டுங்கள். கொதிக்க வைத்து ஆறிய நீரை குடிக்க கொடுங்கள்.

* ஒரு போதும் தொடர்ந்து சிரியலைப் பார்க்க அனுமதிக்காதீர்கள். அப்புறம் ஒரு நாள்கூட அவர்கள் அதை மிஸ் பண்ண முடியாது. பரீட்சை நேரத்திலும் "பார்க்கிறேன்" என்று அடம்பிடிப்பார்கள்.

* விளையாட்டில் ஆர்வமாக இருப்பது தவறில்லை. தினமும் பிராக்டிஸ் பண்ண வேண்டி வந்தாலும் அன்றைய பாடங்களை அன்றைக்கே படித்து விட்டால் எல்லா நாட்களும் விளையாடப் போகலாம்.

மாத்தாதீங்க

* அப்பாவின் வேலை காரணமாக அடிக்கடி குழந்தைகளின் பள்ளிக்கூடங்கள் மாற்ற வேண்டி வரலாம். இத்தகைய குழந்தைகள் அங்கங்கே நண்பர்களை விட்டு பிரிகிறோமே என்ற வருத்தத்தோடும் புதுச்சூழல் பிடிக்கமாலும் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். பெற்றோர்கள் எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும். பரீட்சை நேரங்களில் பள்ளிக்கூடத்தை மாற்றாமல் இருப்பது அவசியம்.

* திடீரென்று குழந்தைகளிடம் படிப்பில் கவனம் இல்லாமல் போகிறது என்றால் உடனடியாக கவனியுங்கள். உடல், மனக் கோளாறுகள் இருக்கலாம் பக்குவமாக பேசி என்ன என்பதை பெற்றோர்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

* சத்தான உணவு இல்லையென்றால், ஞாபகசக்தி, ஈடுபாடு, கவனம் குறையும். சத்துள்ள சரிவிகித உணவு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். பச்சை காய்கறிகள், வேர்க்கடலை, முட்டை தரவேண்டும்.

* வீட்டில் பாடப்புத்தகங்கள், நோட்டுகளை வைக்க தனி அலமாரி ஒதுக்குங்கள். இல்லையென்றால் கண்ட இடத்தில் வைத்து விட்டு தேடிக் கொண்டிருக்க வேண்டும்.

* நம் பிள்ளைகள் என்னென்ன பாடத்தை எவ்வளவு நாட்களுக்குள் ரிவிஷன் செய்யப் போகிறார்கள் என்று அமர்ந்து டைம்டேபிள் போட நாம் ஆர்வம் காட்டுவதுடன், "சபாஷ்... அல்ஜீப்ராவை ஒரு வாரத்தில் முடித்துவிடுவாயா? குட்" என்று பாராட்டுங்கள். குறிப்பாக பெண் குழந்தைகள் இந்த விஷயத்தில் தாயின் ஆதரவை நாடுவார்கள்.

ரிவிஷன் அவசியம்

* அவர்களது சப்ஜெக்டில் சுவாரஸ்யம் காட்டுங்கள். என்னென்ன தேதியில் என்னென்ன பரீட்சை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். "அட கெமிஸ்ட்ரி பரீட்சைக்கு முன்னால் நாலு நாள் லீவு வருதே!" என்று ஆர்வமாகப் பேசுங்கள்.

* பரீட்சையை எண்ணி குழந்தைகள் மலைத்துப் போய் நின்றால், "முதலில் ஒருமுறைக்கூடத் தொடாத பாடம் இருந்தால் படித்துவிடு. பிறகு பழையதை ரிவிஷன் செய்யலாம்" என்று கூறுங்கள்.

* "முந்தைய தேர்வுகளில் எந்த விதத்தில் கேள்விகள் வருகின்றன பார்" என்பதில் தொடங்கி அதில் வந்துள்ள கேள்விகளை தொகுத்து படிக்க சொல்லுங்கள்.

* தினமும் இரவில் "டைம்டேபிளில் எழுதியபடி படித்து முடித்து விட்டாயா?" என்று அக்கறையுடன் கேளுங்கள். முடிக்கவில்லை என்றால், "அதனாலென்ன, நாளைக்கு கொஞ்சம் சிக்கிரம் ஆரம்பித்துவிடலாம்" என்று கூறி அவர்களது குற்ற உணர்ச்சியைப் போக்குங்கள்.

* "என்னால் சிரியஸாக படிக்க முடியல" என்று மகன் சோகத்தைக் கொட்டினால் "நீ எவ்வளவு உண்மையா உழைச்சுப் படிக்கிறே என்கிறதுதான் முக்கியம். மற்றவர்களைப் பார்த்து நாம் ஏன் கவலைப்பவேண்டும்?" என்று தன்னம்பிக்கை ஊட்டுங்கள்.

* பிள்ளைகளை அவர்களது தோழர், தோழியருடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.

* விருந்தினர் எதிரில் "பரீட்சை வருதுங்கிற கவலையே இல்லாமல் ஊர் சுத்தறான் பாருங்க" என்று மட்டம் தட்டிப் பேசாதீர்கள்.

* உங்களுக்குத் தெரிந்த சப்ஜெக்டானால், குட்டி குவிஸ் நடத்தலாம். உங்கள் பிள்ளைகளையும் அவர்கள் உங்களையும் மாறி மாறிக் கேள்வி கேட்டு சுவாரஸ்யமான விளையாட்டைப் போல படிக்க வையுங்கள். அந்தப் பாடத்தில் உங்கள் ஞாபக சக்தியும் கூர்மை பெறும்.

* வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தால் படித்த பாடத்தை பாயிண்ட் பாயிண்டாக கம்ப்யூட்டரில் டைப் செய்யச் சொல்லுங்கள். பிரிண்டர் இருந்தால் பிரிண்ட் போட்டு எடுத்து அடுக்கி ஒரு ஃபைலில் போட்டு வையுங்கள். பரீட்சை சமயம் ரிவிஷன் செய்ய உதவியாக இருக்கும்.

* குழந்தைகள் தொடர்ந்து நாலைந்து மணி நேரம் படித்துக் கொண்டே இருந்தால் "ஒரு ஷார்ட் ப்ரேக்" என்று சொல்லி, அவர்களை அழைத்து சிற்றுண்டி, குளிர்பானம், க்ளூக்கோஸ், பழரசங்கள், வெள்ளரித்துண்டுகள், நீர் மோர் முதலியன கொடுத்து நீங்களும் அவர்களுடன் அமர்ந்து ஜோக்குகள் சொல்லி அவர்கள் மன இறுக்கத்தைப் போக்குங்கள்.

கேலி பண்ணாதீங்க

* தேர்வுக்கு படிக்கும்போது உடம்புக்கு இதமான காட்டன் உடைகள், நைட்டி, பெர்முடாஸ் போன்ற எளிய உடைகளை தேர்ந்தெடுத்துக் கொடுங்கள். கோடை காலத்துக்கு சவுகர்யமாக இருக்கும்.

* குழந்தைகள் இந்த சமயத்தில் மட்டும் கடவுள் பக்தி காட்டினால், "என்ன சாமியைக் காக்காய் பிடிக்கிறாயா?" என்று கேலி செய்யாதீர்கள். அதேபோல, அவர்களுக்கு விருப்பமில்லாதபோது "குங்குமம், திருநீறு பூசிக்கொள். கோவிலுக்குப் போ." என்றெல்லாம் நிர்ப்பந்தப்படுத்தாதீர்கள்.

* சில குழந்தைகள் பரீட்சை சமயத்தில் நிறைய சென்டிமென்ட் பார்ப்பார்கள். உடுக்கும் உடை, மோதிரம், தோடு, செருப்பு போன்றவை கிளம்பும் நேரம், எழுதும் பேனா இப்படிப் பல பொருட்களை அதிர்ஷ்டம் தரும் எனக் கருதுவார்கள். அவர்கள் உணர்வை மதியுங்கள். "ஏண்டா, ஒரே ஷர்ட்டை தினமும் போடுகிறாய்?" என்று திட்டாமல், அதைத் தோய்த்து சுத்தமாக்கிக் கொடுங்கள்.

குழந்தை வளர்ப்பு

Site Meter